பெண்ணின் பெருமை
அல்லது வாழ்க்கைத் துணை என்னும்
நூலில் பெண்ணியச்
சிந்தனைகள்
ஆண், பெண் என்ற இருவரில்
உயர்வு தாழ்வு இல்லை. பெண்களுக்கு முதன்மை வழங்கவேண்டும் என்பது அறிவும் அன்பும்
வாய்ந்தோர் கருத்து. பெண்களுக்கு இயல்பாக அமைந்துள்ள குணம், தொண்டு, கடமை முதலியவற்றை
நோக்கும் போது முதன்மை பெற்று விளங்குவது நன்கு புலனாகும். ஆண்களின் பேற்றிற்கும், வளத்துக்கும், நலத்துக்கும், பிற ஆக்கத்திற்கும்
நிலைக்களனாயிருப்பது பெண்ணுலகம் என்பது எவரும் அறிந்த ஒன்று. ஆகையால் முதன்மை
வழங்கினால் நேரும் இழுக்கென்ன?
நமது நாடும்
பெண்மையும்
நம் முன்னோர்கள் கல்வியைக் ‘கலைமகள்’ என்றும், திருவைத் ‘திருமகள்’ என்றும், ஞானத்தைப் ‘பரை’ என்றும் கொண்டது
ஆராயத்தக்கது. நாட்டைப் பலவழிகளிலும்
காட்டைக் காக்கும் காட்டுக் கன்னியை ‘வனதேவதை’ என்று வாழ்த்துவதும், பல்லுயிர்களைத்
தாங்கும் நாட்டைத் ‘தாய் நாடு’ என்றும் வாழ்த்துவதும்
எண்ணவேண்டும். மாணிக்கவாசகரும்
‘மூவேள் உலகுக்குத்
தாயே’ என்றும், ‘அம்மை எனக்கு அருளியவா றார்பெறுவார் அச்சோவே’ என்று பாடியுள்ளார். உலகில் உயரிய
அன்புப் பொருளெல்லாம் பெண்ணாகவே பேசப்படல் எவரும் அறிந்ததொன்று. இத்தகைய சிறப்பு
வாய்ந்த பெண்மையின் பெருமையாம் பெண்ணின் முதன்மையை விளக்கவும் வேண்டுமா? என்கிறார் நூலாசிரியர்
அவர்கள்.
பெண்ணுரிமை
பெண்ணிற்கு உரிமை வழங்க வேண்டுமா? வேண்டாமா? என்னும் ஆராய்ச்சியில்
இவ்வுலகில் சில இடங்களில் நடைபெற்று வருகிறது. உரிமை என்பது ஒருவர் கொடுப்பதுமன்று; மற்றொருவர்
வாங்குவதுமன்று; அஃது எவரிடத்தும்
எல்லாவிடத்தும் இயல்பாய் அமைந்து கிடப்பது. சிலர் தமக்குள்ள வன்மையால் பிறர் உரிமையை மறித்தும் பறித்தும்
வருகின்றனர். ஒருவர் உரிமைக்கு
மற்றொருவர் கேடு செய்வதிலும் கொடிய பாவம் பிறிதொன்றுமில்லை. உரிமையாவது
உயிர்கட்குக் கடவுளால் அளிக்கப்பட்ட ஒரு பெரும் இயற்கை பெருங்கொடை. தன்னைப் போலவே
உயிர்களும் எவ்விதக் கட்டுப்பாடுமின்றி உலகில் வாழவேண்டும் என்பது கடவுளின் நோக்கம். எவ்வுயிர் உரிமைக்கும்
எவரும் கேடு நிகழ்த்துதல் கூடாதென்பது பொது அறம். இயற்கை நியதிக்கு முரண் நின்று, பெண்ணுரிமையைக் கடிந்து ‘பெண்ணுக்கு எவ்வளவில் வழங்கல் கூடாது. என்னும் ஆராய்ச்சியில்
தலைப்படல் எத்தகைய அறியாமை! பெண்ணின் உரிமையைக் கெடுக்கவும் வழங்கவும் முயல்வோருக்குக்
கழுவாய் தேட வேண்டுவது இவன் கடமை என்று யான் கூறுவேன் என்று திரு.வி.க கூறியுள்ளார்.
பெண்ணுரிமையுள்ள
நாடு
பெண்ணுரிமை பொதுவாக உலகில் பல இடங்களிலும், சிறப்பாகச் சில இடங்களிலும் பின்னை நாளில் கடியப்பட்டது. பெண்ணுரிமையுள்ள
நாடுகள் செழுமையுற்றிருப்பதும், அவ்வுரிமை இல்லாத நாடுகள் செழுமை அற்றிருப்பதும் கண்கூடு. பெண் நாட்டின்
தாய். எனவே அவள் அடிமைப்படும்
இடம் அடிமைப்படல் இயல்பு என்று கூறியுள்ளார்.
நாகரிகத்தின்
அறிகுறி
ஒரு நாட்டின் நாகரிகம் அந்நாட்டின் பெண்மக்கள் நிலையைப் பொறுத்து அமையும் என்பதை
எவரும் ஏற்கத்தக்க உண்மை. பெண் மக்கள் எவ்விதக் கட்டுப்பாடின்றி, இடுக்கணுமின்றிப்
பிறப்புரிமை இன்பத்தை எங்கே நுகர்கிறார்களோ, அங்கேயுள்ள ஆண்மக்கள் நாகரிக நுட்பம் உணர்ந்தவர்களாக இருக்கிறார்கள். அந்நாடே நாகரிகம்
பெற்றதாகும்.
இந்திய நாட்டின்
பெண்களின் நிலை
பண்டைய நாளில் இந்திய நாட்டுப் பெண்மக்கள் கல்வியாளர்களாய், வீரத்தாய்மார்களாய், அரசிகளாய், எவ்வினையும்
ஆற்ற வல்லவர்களாக இருந்தார்கள். அந்நாளில் நாடு உற்றிருந்த செழுமைக்கோர் அளவில்லை. இந்திய நாட்டின்
செழுமையும், பெருமையும், பிறவும் நூல்களில்
பேசப்படுகின்றன. அந்நாள் பெண்ணுரிமை
பெற்றிருந்த நாள் என்று தயங்காது சொல்லலாம். பெண்ணுரிமை பறிக்கப் பெற்ற நாள் தொட்டு, நாடும் உரிமை
இழந்து, அடிமைக் குழியில்
வீழ்ந்து வருந்துகிறது.
நமது நாட்டின் சிறுமைக்குக் காரணம் பெண்ணுரிமை, பிறப்பால் வேறுபாடு, மக்களுள் தீண்டாமை என்ற மூன்றனுள் பெண்ணுரிமை தலையாயக் காரணமாகச்
சொல்லலாம்.
பழந்தமிழ்பெண்களின்
வீரம்
ஒத்தக் கல்வி என்ற குறிப்பு அக்கால பெண் கல்விச் சிறப்பை உணர்த்துகிறது. வெள்ளிவீதியார், ஔவையார், பெருங்கோப்பெண்டு, பாரி மகளிர், எயினிமார், முதலியோர் அந்நாளில்
தமிழ்வளர்த்த பெண்மணிகள். இவர்களின் பாடல்களைப் புறநானூற்றில் காணலாம்.
”அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவின்
எந்தையும் உடையேம் எங்குன்றும் பிறர்கொளார்
இற்றைத் திங்கள் இவ்வெண்ணிலவின்
வென்றெறி முரசின் வேந்தரெங்
குன்றும் கொண்டார் யாம் எந்தையும் இலமே” –பாரிமகளிர்
இப்பாடல் பேச்சு போலிருத்தல்
கவனிக்கத்த்து. பழந்தமிழ் பெண்மக்கள்
பேச்சே பாடலாக உள்ளது.
பெண் வளர்ப்பு
”இன்சொல் விளைநிலனாய் ஈதலே வித்தாக
வன்சொற் களைகட்டி வாய்மை எருவட்டி
அன்புநீர்ப்பாய்ச்சி அறக்கதிர் ஈனவோர்
பைங்கூழ் சிறுகாலைச் செய்’ –
அற்நெறிச்சாரம்
நில விதைகளுக்கேற்ப வண்ணமன்றோ பயிரின் இயல்பிருக்கும்? தாய் தந்தையர்
உடலும் இயல்பும், பிள்ளையின் வளர்ப்பிற்கு நீரும் ஒளியும் போன்றன. தாய் தந்தையர்
நன்னடை, பிள்ளைகட்குப்
பெருந்துணை செய்யும்.
பிள்ளைகளை நல்வழியில் வளர்க்க முனையாத பெற்றோர், பின்னை உலகத்துக்குக் கேடு சூழ்ந்தவராவர். எத்தனையோ பாவங்கட்கு
விதையிட்டவராவர். பிள்ளைகளை சிறப்பாகப் பெண் பிள்ளைகளை வளர்ப்பதில் தாய் தந்தையர்
பெருங்கவலை செலுத்தவேண்டும். ஒரு பெண்ணின் வாழ்வு அவளோடு நிற்பதில்லை. அஃது அவள் வழித்தோன்றும்
உலகையும் தொடர்ந்து நிற்பது ‘தொட்டியில் பழக்கம் சுடுகாடு மட்டும்’ என்பது முதுமொழி. பெண்ணின் தாய்மைக்குரிய வித்து அவளது இளமை வளர்ப்பாகலின்
அவளது இளமை நல்வழியில் அரும்புமாறு பெற்றோர் உழைத்தல் வேண்டும்.
1.
பெண்ணின் பெருமை
அல்லது வாழ்க்கைத் துணை – திரு.வி.கல்யாணசுந்தரனார்
Comments
Post a Comment