கோயில்
கோ என்பதற்கு அரசன் என்பது பொருள். கோயில் என்பது அரசனது இல்லம் அல்லது அரண்மனை
என்ற பொருளைத் தரும். எனவே, முதலில் அரண்மனையைக் குறித்த இச்சொற்றொடர் பின்னர் உலகத்தார்
அண்டத்திற்கே அரசன் எனக்கருதிய கடவுளின் ஆலயத்தைக் குறிக்கவந்தது. பிற்கால இலக்கண விதிப்படி
ஓ என்ற உயிரெடுத்தின் பின் உயிரெழுத்து வருமாயின் வகரமே உடம்படுமெய்யாக வரும். இதற்கேற்பக்
கோயில் என்ற வடிவமும் வந்தது. கோயில் என்றது மிகப் பழைய சொல்லின் வடிவமாகும்.
கோயில் என்பது அரண்மனை என்ற பொருளில் சிலப்பதிகார
காலத்திலும் வழங்கியது. பதிற்றுப்பத்தின் இறுதிப பதிகமும் பட்டத்தரசியைக் கோயிலாள்
என்றே வழங்குகிறது. பரிபாடலின் இரண்டாவது செய்யுளில் வரும் கோயில் என்ற சொல்லுக்கு
ஆலயம் என்று உரையாசிரியர் பொருள் கொண்டிருந்தாலும் அரண்மனை அகநகராக அமைவது வழக்கமாதலின்
அங்கேயும் கோயில் என்பதற்கு அரண்மனை என்றே பொருள் கொள்வது பொருந்தும். மதுரையின் நடுவிடத்தில்
நிழல் ஒரு புறமும் வீழாத நிலையில் நடுப்பகலில் கணக்கிட்டு அரண்மனை கட்டினார்கள் என்று
நெடுநல்வாடையிலிருந்து அறிகிறோம்.
தேவரா காலத்தில் பெருங்கோயில், இளங்கோயில்
முதலிய கோயில் வகைகளும், ஆலய வகைகளைக் குறிப்பனவாக வழங்கத் தொடங்கிவிட்டன. நம்மாழ்வார்
ஆண்டவன் நமக்காக ஆலயங்களில் கோயில் கொள்வதைப் பாடுகிறார். கோயில் என்றால் சைவர்களுக்குச்
சிதம்பரம் என்பதும் வைணவர்களுக்குத் திருவரங்கம் என்பதும் நினைவுக்கு வரலாயின. பெரியாழ்வார்,
”கோயில் பிள்ளாய் இங்கே போதாயே” என்று பாடுகிறார். ஸ்ரீ கோயில் என்று ஆலயங்களையும்,
ஸ்ரீகோயில் வாரியம் என்பது அதைப் புறங்காத்து வரும் செயற்குழுவினையும் பல்லவர் காலத்தில்
கல்வெட்டுக்கள் பேசலாயின.
அரசர்கள் பெரிய ஆலயங்களைத் தங்களுடைய கோயில்களைப்
போலவே அகநகரும் புறநகரும் அகழியும் மதிலுமாக எழுப்பி வந்தார்கள். அரசனைக் கடவுளின்
பிரதிநிதியாகக் கொண்டு ”திருவுடை மன்னரைக் காணின் திருமாலைக் கண்டேனே” என்று பேசுகின்ற
நிலை பரவியபோது பிரநிதியின் அரண்மனைக்கு மேலாக அல்லவா உண்மைத் தலைவனின் கோயில் அமையவேண்டும்?
கோச்செங்கணான் சிவபெருமானுக்கு 70 பெருங்கோயில்கள் (மாடக்கோயில்) எழுப்பினான் என்று
பாடுகிறார் திருமங்கை மன்னன்.
கோட்டை என்பதன் மற்றொரு வடிவமே கோட்டம் எனலாம்.
ஐ என்ற சொல்லுறுப்பும், அம் என்ற சொல்லுறுப்பும் சுற்றில் மாறாடி வரும். அதனால் கோயில்
என்ற வழக்குக்கு முன் ஆலயத்தைக் கோட்டம் என்று வழங்கும் வழக்கம் மிகப் பழையது எனலாம்.
சிலப்பதிகாரத்தில் ”கோழிச் சேவற்கொடியோன் கோட்டம்” முதலாகப் பாடுகிறார் இளங்கோவடிகள்.
அதறகு முன்பு ஆலயத்திற்கு அம்பலம் என்றே பெயர் வழங்குகிறது. ‘தில்லைச் சிற்றம்பலம்’
என்ற பெயரில் அந்த அம்பலம் இன்றும் நிலைபெற்றிருக்கக் காண்கிறோம். அம்பலத்திற்குப்
பொது இல் என்பது மற்றொரு பெயர். இதுவே பொதுயில் என்பதற்கு எல்லோரும் பொதுவாகக் கூடுமிடம்
என்பது பொருளானாலும் அவ்வாறு கூடி வழபாடுகிற ஆலயத்தையே குறித்தது.
இந்த வழிபாடு தீ வளர்த்துச் செய்கின்ற வேள்வி
வழிபாட்டினும் வேறானது. பலி என்ற சொல் வந்தாலும், பூ முதலியன தூவி வழிபடுவதையே இங்கே
காண்கிறோம். எனவே, பூப்பலி என்ற வழக்கும் உண்டு. மதுரைக்காஞ்சியில்,
”நீரும் நிலனும் தீயும் வளியும்
மாக
விசும்போ டைந்துடன் இயற்றிய
மழுவாள்
நெடியோன் தலைவனாக
மாசற
விளங்கிய யாக்கையர் சூழ்சுடர்
வாடாப்
பூவின் இடையா நாட்டத்து
நாற்ற
உணவின் உருகெழு பெரியோர்க்கு
மாற்றரு
மரபின் உயிர்பலி கொடுமார்
அந்தி
விழவிற் றூரியங் கறங்க”
என்று பாடுகிறது.
பூவினைக் கொண்டு வழிபாடு (பூ +செய்) பூஜை என வடமொழியில் மாறிவிட்டதென கூறுவோரும் உண்டு.
கடவுள் பெருந் தலைவராதலின் நீராட்டல், உடையுடுத்தல், உண்டாட்டல் முதலியவற்றோடு நில்லாமல்
குதிரையேற்றம், யானை ஏற்றம், கவரி வீசுதல் முதலிய அரச வழியாடுகளை எல்லாம் செய்வதும்
வழிபாட்டு முறையில் அடங்கிற்று.
பல்லவர் காலத்திலும், சோழர் காலத்திலும்
இவை படிப்படியாக சுற்றளவிலும், உயரத்திலும் வளர்ந்து அரண்மனையைவிடச் சிறந்தன ஆயின.
அரண்மனைகள் எல்லாம் செங்கல்லால் அமைய ஆலயங்கள் கற்றளிகளாக ஓங்கின. அதனால் கடவுளுக்குக்
‘கல்வீட்டுக்காரன்’ என்ற பெயர் பொதுமக்களிடத்தில் வழங்குகிறது. இவ்வாறு வளர்த்தக் கோயில்களின்
ஒப்பற்ற நிலையைக் கீழைக்கடல் தீவுகளில் காணலாம். இவ்வாறு வேத வழிபாட்டிலும், ஆகம வழிபாடும்
வேறாகி வளர்ந்தாலும் இந்திய நாட்டின் பண்பாட்டிற்கேற்ப ஒருமைப்பாடு தோன்றியது.
பார்வை நூல்
1.
தமிழும் பிற
பண்பாடும் – டாக்டர்.தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட்
லிட், சென்னை – 2.
Comments
Post a Comment