தொல்தமிழர் உணவுமுறைகள் தமிழ் மக்கள் அனைவரும் ஒரே வகையான உணவை உண்டார்கள் என்பதற்கு எவ்விதச் சான்றுகளும் இல்லை . இயற்கையாக அமைந்த நிலப்பாகுபாடுகளில் ஆங்காங்குக் கிடைத்தப் பொருள்களையும் , தங்கள் முயற்சியால் தட்பவெப்ப நிலைக்கேற்ப உற்பத்தி செய்தப் பொருள்களையும் கொண்டு தங்கள் உணவு வகைகளைத் தயாரித்துக் கொண்டார்கள் என்பதற்கும் பல சான்றுகள் உள்ளன . உணவுப் பொருள்களை அப்படியே உண்ணாமல் நல்ல முறையில் பக்குவம் செய்து சுவையேற்றி உண்டு மகிழ்ந்திருக்கிறார்கள் . குறிஞ்சி நில மக்களின் உணவுமுறைகள் சோழநாட்டுக் குறிஞ்சி நில மக்கள் கிழங்கையும் தேனையும் மகிழ்ந்து உண்டார்கள் . இவ்விரண்டு பொருள்களையும் பிறருக்கு விற்று அவற்றிற்குப் பதிலாக மீன் , நெய்யையும் நறவையும் வாங்கிப் போய் உண்டுள்ளார்கள் . சில சிறப்பான நாள்களில் நெய் மிகுதியாகப் பெய்த உணவு அவர்களால் உண்ணப்பட்டது . மலை அடிவாரத்தில் வாழ்ந்த சிற்றூர் மக்கள் தினைச் சோறு சமைத்து நெய்யில் இறைச்சியை வேகவைத்து இரண்டையும் சேர்த்து உண்டார்கள் . ...
அறிவைப் பகிர்ந்து கொள்வோம்!