Skip to main content

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக….

 "பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்" என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ”கந்த சஷ்டி கவசம்” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38 அதிகாரங்கள், பொருட்பால் 70 அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது.

”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்”

காக்க காக்க அறத்தைக் காக்க (1)
காக்க காக்கக் குறளைக் காக்க
உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம்,
நோக்க நோக்க பெயா்த்து நோக்க
மனிதன் கற்று மனிதம் காக்க
ஐம்பொறி உணா்வை காக்க காக்க
புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க
அறநெறி வாழ்வை இறைவழி காக்க
வானம் பொய்யா வளத்தைக் காக்க
பசிப்பிணி யில்லா உலகைக் காக்க
பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க

அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2)
குறையிலா வாழ்வை குணமுடன் காக்க
இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க
பண்பொடு பயனும் அறத்துடன் காக்க
வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க
வாழ்க வாழ்க நலமுடன் வாழ்க
வாழ்க்கை துணையுடன் வாழ்க வாழ்க
நன் மக்களொடு இனிதே வாழ்க
விருந்து போற்றி விருப்புடன் வாழ்க
அரும்பெரும் வாழ்வை அன்புடன் காக்க

காயை விடுத்து கனியைக் காக்க (3)
நன்றி மறவா நன்னெறி காக்க
அடக்கம் கொண்டு அமரருள் வாழ்க
பொறையைக் காக்க புகழைக் காக்க
இசைபட வாழும் ஈதல் காக்க
அகழ்வார் தாங்கும் நிலத்தைக் காக்க
புறங்கூறும் வாழ்வை புறத்தே தள்ளி
பயனுள சொல்லை காக்க காக்க
தீவினை யில்லா நல்வினை காக்க
வாழ்க வாழ்க தீதின்றி வாழ்க
பழுமரம் போல செல்வம் பெறுக

ஈடிலா நெறியுடன் ஒழுக்கம் காக்க (4)
அல்லல் அழித்து அருள்நெறி காக்க
உயிரைக் காக்க உணா்வைக் காக்க
தவத்தைக் காக்க நெறியுடன் காக்க
கூடா ஒழுக்கம் நீக்குக நீக்குக
வாய்மை தவறா வாழ்வைக் காக்க
நீக்குக நீக்குக அறவே நீக்குக
சிறப்பைக் கெடுக்கும் சினத்தை நீக்குக
உயிர்படும் துன்பத்தை உணா்வுடன் நீக்குக
அறனைக் காக்க அன்புடன் காக்க

பகுத்துண்டு வாழும் பண்பினைக் காக்க (5)
நிலையிலா வாழ்வை நிறைவுடன் காக்க
புகழுடன் வாழ்வை பொறையுடன் காக்க
விருப்பு வெறுப்பு அறியாமை யில்லா
துன்பம் யில்லா துயரம் யில்லா
வளமுடன் வாழ்வை சிறப்புடன் காக்க
அழியா இன்பத்தைக் காக்க காக்க
காக்க காக்க இயற்கை காக்க
இனியது கொண்டு எழிலுடன் காக்க
இயற்றல் ஈட்டல் காத்தல் கொண்ட
காக்க காக்க அரசைக் காக்க
மக்கள் போற்றும் அரசைக் காக்க
காக்க காக்க மகிழ்வுடன் காக்க பொருட்பால்

கேடில்லா கல்வி குறைவின்றி காக்க (6)
கற்றனைத் தூறும் அறிவைக் காக்க
கற்றில னாயினும் கேட்டு ஓங்குக
அறிவை கொண்டு ஆக்கம் காக்க
குற்றம் நீக்கி சுற்றம் நீக்க
செருக்கு இல்லா செம்மை காக்க
பெரியோர் கொண்டு பொருண்மை காக்க
சிற்றினம் சேரா சிறுமை காக்க
சீரிய வாழ்வை சிறப்புடன் காக்க
எள்ள லில்லா எழிலைக் காக்க

வளமுடன் வாழ துணிவைக் காக்க (7)
காலம் அறிந்து கடமை காக்க
சிறுமை அழித்து பெருமை காக்க
அற்றம் நீக்கி சுற்றம் காக்க
பண்புடை வாழ்வை பரிவுடன் காக்க
குடிகளைக் காக்க கோலைக் காக்க
ஒப்பிலா பணிசெயும் ஒற்றரைக் காக்க
இணையிலா புகழுடன் இரக்கம் காக்க
ஈடில்லா மாண்புடன் ஈகை காக்க
ஊக்கம் உடையார் ஆக்கம் காக்க

குன்றா விளக்கம் குடியைக் காக்க (8)
முயற்சி கொண்டு திருவினை காக்க
இடுக்கண் வருங்கால் நகுதல் காக்க
வறுமை ஒழிக்கும் வல்லமை காக்க
மதிநுட்பம் கொண்ட அமைச்சரைக் காக்க
பயனுள சொல்லை பாங்குடன் காக்க
காக்க காக்க நல்வினை காக்க
ஈன்றாள் பசியை இனிதுடன் போக்குக
சான்றோர் கூற்றை சால்புடன் காக்க
எண்ணிய மனதுடன் திண்மை காக்க

பகைமை யில்லா நட்பைக் காக்க (9)
தக்கார் தகவுடை தலைவனைக் காக்க
முகத்தைக் காட்டும் ஆடியைப் போல
அகத்தைக் காட்டும் நெறியைக் காக்க
கற்ப தனைத்தும் தெளிந்து கற்க
காக்க காக்க அடக்கம் காக்க
ஆன்றோர் அவையில் அடக்கம் காக்க
காக்க காக்க வளத்தைக் காக்க
நிலவளம் காக்க நீா்வளம் காக்க
மலைவளம் காக்க மண்வளம் காக்க
பகைவா் நெருங்கா அரணைக் காக்க

அறவழி நின்று அறநெறி காக்க (10)
அரணை காக்கும் தலைமை காக்க
மறத்தைக் காக்க மாண்புடன் காக்க
நல்லோர் நட்பை நாளும் காக்க
பழைமை மாறாப் பண்பைக் காக்க
தீயோர் நட்பை அறவே நீக்குக
பேதைமை யில்லா வாழ்வை காக்க
பகைமை நீக்கி பண்பை காக்க
பெரியோர் போற்றும் பேராண்மை காக்க
இகழ்தல் இல்லா வாழ்வு காக்க

காக்க காக்க பெண்மை காக்க (11)
மாண்புறு மனைவியைக் காக்க காக்க
பேதைமை யில்லா பெருமை காக்க
குடியை நீக்கி குடிகளைக் காக்க
சீருடன் வாழ்க சிறப்புடன் வாழ்க
வளமான வாழ்வை வனப்புடன் வாழ்க
நிலையிலா வாழ்வு நிலைபெற காக்க
ஏளனம் நீக்கி ஏழ்மை காக்க
மானம் போற்றும் மனிதம் காக்க
வறுமை யில்லா வாழ்வு காக்க

வேற்றுமை யில்லா உலகு காக்க (12)
குற்றம் நீக்கி சுற்றம் காக்க
சான்றோர் போற்றும் சால்பு காக்க
பாரோர் போற்றும் பண்பைக் காக்க
உயிரினும் மேலாம் ஒழுக்கம் காக்க
உயா்வை கொடுக்கும் செல்வம் காக்க
வறுமையில் செம்மை வளமுடன் காக்க
உழுதுண்டு வாழும் தொழிலைக் காக்க
உழவோர் போற்றி உவப்புடன் காக்க
கொடிது கொடிது வறுமை கொடிது
கடியது கடியது துன்பம் கடியது
பெரிது பெரிது நிறைவான வாழ்வு

காக்க காக்க இன்முகம் காக்க (13)
காக்க காக்க நேயம் காக்க
இரத்தல் இல்லா நிலையைக் காக்க
இடும்பை யில்லா இன்பம் காக்க
பொய்மை யில்லா வாழ்வு காக்க
வஞ்சக மில்லா வாழ்வைக் காக்க
கயமை யில்லா குணத்தைக் காக்க
அடிமை யில்லா வாழ்வு காக்க
இல்லா நிலையை இல்லாது காக்க
மனிதம் காக்க மனிதன் காக்க
காக்க காக்க தமிழ்மறை காக்க
வாழ்க வள்ளுவம், வாழ்க வையகம்

வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க

Comments

Post a Comment

Popular posts from this blog

எண்ணம் போல் வாழ்வு

                                                                        எண்ணம் போல் வாழ்வு             நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·      மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·         வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·   ...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·         பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·         பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல். ·         உண்மைக்குப் புறம்பானவற்றைச் செய்யாதிருத்தல். ·         நண்பர்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·         மனத்திடத்தோடு வாழ்தல். ·         ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·         மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·         எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.      யாரையும் வெறுக்காதே ...