தூதர்
ஒரு வேந்தனின் சார்பாளாராக மற்றொரு வேந்தனின் அரசிலோ அவனது நாட்டின் பகுதிகளிலோ, நேரடியாவோ மறைமுகமாகவோ செயல்பட்டவர்கள் தூதர் என்று அழைக்கப்பெற்றனர். சங்ககாலத்த அரசர்கள் தூதர்களை ஏவல் கொண்டனர்.
தொல்காப்பியம்
”ஓதல் பகையே தூதிவை பிரிவே”
என்று தூது பற்றிக் குறிப்பிடுகின்றது.
”ஓதலும், தூதும் உயர்ந்தோர் மேன”
என்று தொல்காப்பியம் குறிப்பிடுவதன் மூலம் சமூகத்தில் உயர்நிலையில் இருந்தவர்களே தூது செல்ல முடியும் என்று தெரிகிறது.
சங்க இலக்கியங்களில் தூதர் பற்றிக் கூறப்படுகிறது. ஆனால், அவர்கள் சமூகத்தில் உயர்ந்தோர்கள்தானா என்பதை அறிய முடியவில்லை. போருக்கு ஆயத்த நிலையிலிருந்த வேந்தனொருவன் பார்ப்பான் சொன்ன செய்தியைக் கேட்டவுடன் ஏணியும் சீப்பும் யானையின் மணையும் களையப்பட்டன” என்று புறநானூறு குறிப்பிடுவதன் மூலமும், ”அகநானூறு, பார்ப்பான் ஒருவன் தூது சென்ற போது, அவனை வழியில் ஆறலைக்கள்வர்கள் அவனிடம் பொருள் இருக்கும் என்று எண்ணி அடித்துக் கொன்றதையும்” குறிப்பிடுகின்றது. இவற்றின் மூலம் பார்ப்பனர்கள் தூது சென்றமையை அறிய முடிகின்றது.
சேரன் செங்குட்டுவன், சஞ்சயன் தலைமையில் தூதுவர்களை நியமித்தான் என்பது,
”சஞ்சயன்முதலாத் தலைக்கீடு பெற்ற
கஞ்சுக முதல்வரி ரைந்நூற் றுவரும்”
எனும் சிலப்பதிகார அடிகளின் வழி அறியப்படுகிறது.
ஔவையார் அதியமானுக்காகத் தொண்டைமானிடம் தூது சென்று அவர்கள் இருவரிடையே நிகழவிருந்த போரை நிறுத்தினார். என்பதிலிருந்து புலவர்களும் தூது சென்றமையை அறியமுடிகின்றது.
புலவர் கோவூர் கிழார் தூது சென்றதாகப் புறநானூற்றில் 44,45,46,47 ஆகிய பாடல்கள் குறிக்கின்றன. ஆனால், முறைப்படி நோக்கினால் அப்பாடல்களில் அமைந்திருந்த கோவூர்கிழார் பற்றிய செய்திகள் எனக் கருதப்படமாட்டாது. அவர் ஓர் அரசனிடமிருந்து இன்னொரு அரசனிடம் தூது செல்லவில்லை. தம்மைத்தாமே பகைத்துக் கொண்ட இருவரிடையே நடுவரைப் போலச் செயல்ப்பட்டிருக்கிறார் என்றுதான் கொள்ள வேண்டும்.
வள்ளுவர் தூதுக்கெனத் தனி அதிகாரம் அமைத்து, அதில் தூது செல்வோரின் பண்புகள், அவர்களது கடமைகள் ஆகியவற்றை வரையறுத்து உரைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தூது செல்பவர்கள் பெரும்பாலும் ஏழ்மையாளாராகவும், வருத்தம் தோய்ந்த நடையுடையவராகவும் இருப்பர் என்பதைப் புறம் 350, அகம் 37 ஆகிய பாடல்களிலிருந்து அறிய முடிகின்றது.
தூதர்கள் சட்டை அணிந்திருந்தனர். பெரும்பாலானவர்கள் விரைந்து செல்லும் திறனுடையவர்கள். மாற்று வேந்தனிடம் தூது சென்றதோடன்றித் தன் வேந்தனுக்கும் கருத்துரை வழங்கினர். இவர்களை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காக அவர்களுக்கு ஆடை வழங்கப்பட்டது. தனிப்பட்ட ஆடைகளை வழங்கும் கிரேக்க, ரோமானியரிடமிருந்து வந்திருக்கலாம்.
மேற்கூறப்பெற்ற செய்திகளிலிருந்து சங்ககால ஆட்சியாளர்களாகிய வேந்தர்கள் தம்முடைய ஆட்சி சிறக்க வேண்டி நல்ல தூதர்களை நியமித்திருந்தனர் என்பதும், மற்ற நாட்டு வேந்தர்களோடு நல்லுறவு கொள்ள விரும்பினர் என்பதும் தெரிய வருகின்றன.
பார்வை நூல்
1. சங்கப் புற இலக்கியங்களில் சமூகச் சித்திரிப்புகள் – முனைவர் நா. பழனிவேலு, மனோன்மணீயம் பதிப்பகம், கிருட்டினகிரி -635 001.
Comments
Post a Comment