வெள்ளணி
நாள்
பிறந்த நாளை வெள்ளணி என்பதற்குப் பல காரணங்கள்
உண்டு. பிறந்த நாளன்று வெள்ளணி அணிவதே வழக்காகக் காணமுடிகின்றது. வெள்ளணி என்பதற்குப்
‘பிறந்த நாளொப்பனை’ என அரும்பத உரையாசிரியர் பொருள் குறிப்பார். சிலப்பதிகாரத்தில்,
மன்னன் சேரன் செங்குட்டுவன் வினை முடித்து வருங்காலத்துத் தோழியர் தேவியிடத்துச் சென்று,
தேவியின் கூந்தல் நாட்காலத்திலே செய்கின்ற ஒப்பனையைப் பெறுவதாக என்று போது ‘நாளணி பெறுக’
எனக் குறிப்பிடுகின்றனர். ஆண்டு வினை முடித்து வருகின்ற மன்னனை வரவேற்பதற்குரிய மகிழ்ச்சிக்
கோலாமாகிய மங்கலக்கோலம், பிறந்த நாளின் போது செய்யப்படுகின்ற ஒப்பனையையே குறித்து நின்றது
என்பது பெறப்படும். இதனை ”சிறந்த நாளணி செற்ற நீக்கிப், பிறந்த நாள்” எனவரும் தொல்காப்பியத்திலும்
அறியலாம்.
ஈண்டுக் குறிக்கப்படுகின்ற நாளணி என்பதும்
பிறந்த நாளையே குறித்து நாளையே குறித்து நிற்கக் காணலாம். மேலும் இதனை, ”நாடொறுந் தான்
மேற்கொள்கின்ற செற்றங்களைக் கைவிட்டுச் சிறந்த தொழில்கள் பிறத்தற்குக் காரணமான நாளிடத்து
நிகழும் வெள்ளணி” எனவரும் நச்சினார்க்கினியர் உரையாலும் தெளியலாம். நாள்தோறும் தான்
மேற்கொள்கின்ற செற்றம் என நச்சினார்க்கினியர் கூறியமை,
”விழுப்புண் படாதநா ளெல்லாம் வழுக்கினுள்
வைக்குந்தன் னாளை யெடுத்து”
என்ற குறளை
உள்ளத்தில் அடக்கியதாகும். விழுப்புண் படாத நாளெல்லாம் வழுவில் வைக்கப்படும் நாளாதலின்,
பிறந்த நாளும் வழுவில் வைக்கப்படும் நாள் ஆகுமே என்று கருதாது, அன்று செற்றம் நீக்கி
விழவு அயர்தல் வேண்டும் என்ற குறிப்பில் நச்சியார்க்கினியர் உரை எழுதியமை இங்கு அறிதற்குரியது.
சிந்தாமணியில், ”வெள்ளணி யணிந்த ஞான்றே
....” எனவரும் தொடருக்குப் ‘பிறந்த நாளில் ஒப்பனை’ என நச்சினார்க்கினியரும், ‘பிறந்த
நாளில் வெள்ளணி அணிதல் மரபாதலின், வெள்ளணியணிந்த ஞான்றே’ என்பது பிறந்த நாளைப் புலப்படுத்தி
நின்றது’ என் உ.வே.சாமிநாதையரும் குறிப்பது இங்கு அறிதற்குரியது.
இலக்கியத்தை நோக்குங்கால் வெள்ளணி என்பது
வெள்ளாடையைக் குறிப்பதாகக் கொள்ளலாம். ஆடையும்
அணியில் ஒன்றாகும். ஈரணி என்பது ஈர ஆடையைக் குறித்து நின்றாற் போல வெள்ளணி என்பது வெள்ளாடையைக்
குறித்து நின்றது எனலாம். தலைவி பூப்பெய்தியதனைத் தோழி, செம்பூச்சூடி, செஞ்சாந்து மெய்பூசி,
செவ்வாடை அணிந்து தலைவனுக்கு உணர்த்தியமை செவ்வணி” எனப் பெற்றமைபோல, வெண்பூச்சூடி,
வெண்சாந்து மெய்பூசி, வெள்ளாடை அணிந்து பிறந்த நாளாகிய வெள்ளணியை உணர்த்தினர் எனக்
கொள்வது பொருந்துவதாகும். இவற்றால் வெள்ளணி என்பது பிறந்த நாளையும், பிறந்த நாள் ஒப்பனையையும்,
ஆண்டு மங்கலங் கருதி வெள்ளாடை அணிந்து கொள்வதனையும் உணர்த்தும்.
பார்வை நூல்
1. ஐம்பெருங்காப்பியங்களில் சடங்குகளும் நம்பிக்கைகளும்- முனைவர் இரா.இரகோத்தமன்,குகன் பதிப்பகம், 5,வி.கே.கே.பில்டிங், திருவாரூர் மாவட்டம்.
Comments
Post a Comment