சிலம்புகழீஇ நோன்பு
பண்டைத் தமிழர் திருமணங்களில் ‘சிலம்புகழீஇ நோன்பு’ என்ற ஒரு சடங்குமுறை நடைபெற்றதாகத்
தமிழ் இலக்கியங்களில் குறிப்புக் காணப்பட்டாலும், இந்நோன்பினைப் பற்றித் தெளிவான விளக்கங்கள்
கிட்டவில்லை. சிலம்பு என்பது காலில் அணியும் ஓரணியாகும். இதனை, ‘அஞ்செஞ் சிலம்பு’ எனச்
சிலப்பதிகாரமும், ‘தொடியோள், மெல்லடி மேலவும் சிலம்பே’ எனக் குறுந்தொகையும் குறிப்பதைக்
காணலாம். தலைவியின் காலிலுள்ள சிலம்பை நீக்குதலாகிய சடங்கே சிலம்புகழீஇ நோன்பாகும்.
‘சிலம்புகழீஇ’ என்பதற்குச் சிலம்பினை நீக்குதல்
என்று பொருள் கொள்ளலே பொருந்துவதாகும். நற்றிணையில் தன் உடன் போக்கினைத் தாய் அறிய
ஏதுவாகும் என எண்ணிய தலைவி தன்காற் சிலம்பினைக் கழற்றி வைத்துச் செல்வதனை,
”வைகுபுலர் விடியல் மெய்கரந்து தன்கால்
அறியமை
சிலம்பு கழீஇ”
எனவரும் தொடர்கள்
கொண்டு அறிய முடிகிறது. ஆங்கும் ‘சிலம்புகழீஇ’ என்பது சிலம்பினை நீக்குதல் என்ற பொருளில்
வந்துள்ளது.
‘சிலம்புகழீஇ நோன்பு’ என்பது திருமணத்திற்கு
முன்னர் தலைவியின் இல்லத்தில் நிகழ்வதென்பதும், ஒரோவழி உடன்போக்கு நிகழின் தலைவன் மனைக்கண்
நிகழ்த்தப் பெறுதலுண்டு என்பதும் அறிதற்குரியது. இதனை,
”நும்மனைச் சிலம்பு கழீஇ யயரினும்
எம்மனை
வதுவை நன்மணம் கழிகெனச்
சொல்லின்
எவனோ மற்றே வென்வேல்
மையற
விளங்கிய கழலடிப்
பொய்வல்
காளையை யீன்ற தாய்க்கே”
எனவரும் ஐங்குறுநூற்றுப்
பாடலால் அறியத்தகும்.
உடன்போக்கில் கொண்டு சென்ற தலைவியைத் தலைவன்
தனது இல்லத்தில் மணம் செய்து கொள்கின்றான். அம்மணவினைக்கு முன்னர் தலைவனின் தாய், தலைவியின்
காலில் அவளது பெற்றோர் முன்னர் அணிவித்திருந்த சிலம்பினை நீக்குதலாகிய சடங்கினைச் செய்கின்றான்.
திருமணம் என்பது சங்ககால முறைப்படித் தலைவி வீட்டில் நடப்பதாகும். மேலும், அம்மணவினைக்கு
முன்னர் தலைவியின் சிலம்பினை நீக்குதலாகிய சடங்கினைச் செய்து மகிழக் கூடியவள் தலைவியின்
தாய், இதனை ”இதுகாறும் கூந்தல் வாரி, நுசுப்பிவர்ந் தோம்பியும் சிலம்புகழீஇ நோன்பு
யான் காணுமாறு நோற்றிலேன் என்பாள் பிறருணக் கழிந்தனள் என்று இரங்கினாளாயிற்று” எனவரும்
நற்றிணையின் உரைப் பகுதியால் அறிய முடிகின்றது.
”சிலம்புகழிஇ நோன்பினைத் தான் நான் பார்க்க
முடியவில்லை; வதுவைச் சடங்காவது எம் மனையில் நிகழ்வதற்குத் தலைவன் தாயிடத்துக் கூறி
வந்தீர்களா? என்று கேட்குமுகமாகத் தலைவியை ஈன்ற தாயின் ஏக்க உணர்வு வெளிப்படுவதனை அறியலாம்.
இதனால் சிலம்பு கழித்தலாகிய அவ்வனை திருமணத்திற்கு முன்னர், தலைவியின் இல்லத்தில் நிகழ்வதே
அக்கால வழக்கம் என்பதனை அறிய முடிகின்றது.
சங்க காலத்தில் மகளிர் இளமைப் பருவந் தொட்டுச்
சிலம்பினை அணிந்திருந்தமையும், திருமணத்திற்கு முன்பு சிலம்பினைக் கழித்தமையும் அறிய
முடிகின்றது. ஆனால், திருமணத்திற்குப் பின்னரும் மகளிர் சிலம்பை அணிந்திருந்தனர் என்பதும்
குறிப்பிடத்தக்கது. இதனை,
”மாலை யணிய விலைதந்தான் மாதர்நின்
காலச்
சிலம்பும் கழற்றுவான் சால
அதிரலங் கண்ணிநீ யன்பனெற் கன்பன்”
எனவரும் பரிபாடல்
கொண்டு அறியத்தகும். அவ்வாறாயின் மணத்திற்கு முன்னர் கழற்றிய சிலம்பினை மணத்திற்குப்
பின்னர் மீண்டும் அணிந்து கொண்டனரா என்பதும், அணிந்திருப்பின் எப்போது அணிந்தார்கள்
என்பதும் அறிதற்குரியன.
கண்ணகி, கோவலன் பிரிந்த காலத்து ‘கல கல’
என்று ஒலியைப் பிறப்பிக்கும் சிலம்பினை நீக்கி வாழ்ந்தாள் என்பதனை, ”அஞ்செஞ் சீரடி
யணிசிலம் பொழிய” என்பார் இளங்கோவடிகள்.
எனவே, அக்கால மகளிர் மணச் சடங்காகத் திருமணத்திற்கு
முன்னர் சிலம்பினைக் கழற்றி, மணவினை முடிந்த பின்னர் மீண்டும் அணிந்து கொண்டனர் எனக்
கொள்வதே பொருந்துவதாகும்.
பார்வை நூல்
1.
ஐம்பெருங்காப்பியங்களில்
சடங்குகளும் நம்பிக்கைகளும் – முனைவர் இரா. இரகோத்தமன், தமிழ்த்துறைத் தலைவர், தேசியக்
கல்லூரி, குகன் பதிப்பகம், திருவாரூர் மாவட்டம்.
Comments
Post a Comment