Skip to main content

கருவிளம், கூவிளம்

 

கருவிளம், கூவிளம்

 

          கருவிளம் என்ற மரத்தைப் பற்றியும் கூவிளம் என்ற மரத்தைப் பற்றியும் சங்க நூல்களில் சில செய்திகளே வருகின்றன. விளாமரம் என்பதே சங்க நூல்களில் விளவு, விளம் என்றும், வெள்ளில் என்றும் அழைக்கப்படுகின்றது. விளவிற்குப் பந்துபோல் உருண்ட பழம் உண்டு. விளவ மரத்தை எளிதில் கண்டுணர இதன் பழம் உதவுகிறது.

          பொரியரை விளவின் புன்புற விளைபுழல்

         அழலெறி கோடை தாக்கலிற் கோவலர்

         குழலென நினையும் நீரில் நீளிடை” (அகம், 219)

 

        பார்பக வீழ்ந்த வேருடை விடுக்கோட்டு

         உடும்படைந் தன்ன நெடும்பொரி விளவின்

         ஆட்டொழி பந்திற் கோட்டுமூக் கிறுபு

         கம்பலத் தன்ன பைம்பயிர்த் தாஅம்

         வெள்ளில் வல்சி வேற்றுநாட் டாரிடை” (நற், 24)

 

        விளம்பழங் கமழுங் கமஞ்சூற் குழிசிப்

         பாசந் தின்ற தேய்கான் மத்த

         நெய்தெரி யியக்கம் வெளில்முதன் முழங்கும்”(நற்,12)

கம்பலத்தை விரித்தாலொத்த பசிய பயிரின்கண் ஆடுதலொழிந்து பந்து கிடப்பது விளாம்பழம் பரவியிருக்குமென்று நற்றிணை கூறுவதைக் கவனிக்க வேண்டும். விளாம்பழம் உருண்டு திரண்டிருப்பதை  விளங்காய் திரட்டினார் இல்லை என்று நாலடியார் (107) கூறுகிறது. விளம்பழத்தின் இனிய புளிச்சுவையைப் பழந்தமிழர் விரும்பினர். தயிரில் காணும் முடைதீர தயிர்த்தாழியில் விளம்பழத்தை இட்டு வைத்தனர் என்று நற்றிணை (12) கூறுவதைக் காணலாம். விளம்பழம் பழுக்கும் காலத்தைக் கவனித்து வைத்திருந்தனர். களவும் புளித்தன, விளவும் பழுநின என்று அகநானூறு (294) வழி அறியலாம்.

          சிறுகாலை யேதமக்குச் செல்வுழி வல்சி

         இறுகிறுகத் தோட்கோப்புக் கொள்ளார்இறுகிறுகிப்

         பின்னறிவாம் என்றிருக்கும் பேதையார் கைகாட்டும்

         பொன்னும் புளிவிளங்காய் ஆம்” (நாலடியார்,328)

சாகுங்காலத்தில் ஒருவன் சேர்த்து வைத்த பணத்தை அறஞ்செய்யச் செலவழிக்கச் சொல்வதற்காகப் பேச முயல்கிறான். நாவெழாமையால் கையால் குவித்துக் குறிப்புக் காட்ட அதைப் புரிந்தும் புரியாதது போல் விளம்பழம் தின்பதற்கு இது பருவமன்று என்று மனைவி கூறுகின்றாள்.

          நாலடியார் கூறிய கதையிலிருந்து சாகுங்காலத்தில் ‘செல்வுழி வல்சி’ யாக ‘வெள்ளில் வல்சியைக்’ கொடுக்கும் பழக்கம் இருந்ததாகத் தெரிகின்றது. இன்றும் இறந்தவர்களுக்குச் சாந்தியாக இடும் விருந்தில் விளம்பழத்தைப் பயன்படுத்துவண்டு. விளம்பழம் திரண்டிருப்பதைக் கண்டு அதேபோல் திரட்டிச் செய்யும் பொரியுருண்டையைப் ‘பொரி விளங்காய் உருண்டை’ என்று இன்றும் வழங்குவர். நாலடியார் ‘புளி விளங்காய்’ என்று கூறுகின்றது.

          ”வேழம் உண்ட விளம்பழம்” என்பதற்குச் சிலர் வேழம் என்பது ஒரு நோய் என்றும், அது விளாம்பழத்தின் உள் சதையை உண்டுவிட்டு ஓடாக விட்டுவிடும் என்றும் கூறுவர். விளாம்பழத்தை நோய் தாக்குவதுண்டு. அதனால் உள்ளீடற்றதாக விளாம் பழம் காணப்படுவதுண்டு. அகநானூற்றுப் பாடலில் (219) விளாமரத்தின் புல்லிய புறத்தையுடைய பழம் புழலையுடையதாய்க் கோடை காற்று வீசும்போது குழல்போல் ஓசையிட்டதாகக் கூறுவதைக் காணலாம்.

        ”மன்ற விளவின் மனைவீழ் வெள்ளில்

         கருங்க ணெயிற்றி காதன் மகனொடு

         கான விரும்பிடிக் கன்றுதலைக் கொள்ளும்

         பெருங்குறும் புடுத்த வன்புல விருக்கை” (புறம்,181)

மரத்தின்கண் இருந்த விளாமரத்தின் பழம் மனையிடத்தே வீழ்ந்து கிடக்க அதைக் கரிய பிடியினது கன்று வந்து எடுத்ததாகப் புறப்பாடல் கூறுகின்றது. யானை விளவினது பழத்தை உண்பதுண்டு என்பதைச் சங்கப் புலவர்கள் தெரிந்திருந்தனர். விளாமரத்தை மன்றத்திலும் வீட்டு முற்றத்திலும் வளர்த்தரெனத் தெரிகின்றது.

          ”பார்வை யாத்த பறைதாள் விளவின்

              நீழன் முன்றி னிலவுரற் பெய்து” (பெரும்பாண்,95)

        ”புள்ளிறை கூரும் வெள்ளின் மன்றமும்” (மணிமேகலை,6,85)

வீட்டு விலங்குகளை மன்றத்தில் வளர்ந்த விளாமரத்தின் கட்டுவதைப் புறம் கூறுகின்றது.

          ”அருகாது ஆகிப் பலபழுத்தக் கண்ணும்

           பொரிதாள் விளவினை வாவல் குறுகா”  (நாலடியார்,261)

வௌவால் விளாமரத்தைக் குறுகாமைக்குக் காரணம் ஓடும் முள்ளும் இருப்பதால் பயன்படாமை என்று உரை கூறியிருப்பதைக் கவனிக்கவேண்டும். விளாமரத்திற்கு முள் இருப்பதால் விளாமரத்தில் பல பழங்கள் இருந்தாலும் வௌவால் அதை நாடுவதில்லை என்று கூறியிருப்பது உண்மையான செய்தியேயாகும்.

கூவிளம்

        கூவிளத்தைக் கூவிரம் என்று குறிஞ்சிப்பாட்டுக் கூறுகின்றது. கூவிளத்தின் பூவை நற்றிணையில்,

          ”பெருவரை நீழல் வருகுவன் குளவியொடு

         கூவிளந் ததைந்த கண்ணியன் யாவதும்” (நற்றிணை,119)

        ”ஊரா தேந்திய குதிரைக் கூர்வேற்

         கூவிளங் கண்ணிக் கொடும்பூ ணெழினியும்” (புறம்,158)

கூவிளம் பூவை மாலையாகக் கட்டி அணிந்ததைக் குறிப்பிடுகின்றது. எழினி எனும் தலைவன் ‘கூவிளங்கண்ணி’ அணிந்ததைப் புறம் கூறுகின்றது.

          ”கூவிள விறகி னாக்குவரி நுடங்கல்” (புறம்,372)

கூவிள மரத்தின் விறகை எரிக்கப் பயன்படுத்தியதாகப் புறம் கூறுகின்றது. சங்க நூல்களில் கூவிளத்தைப் பற்றி வேறு குறிப்புகள் இல்லை.

நிறைவாக,

          சங்க நூல்களில் கருவிளத்தை ‘வெள்ளில்’ என்று குறிப்பிட்டுள்ளனர். வெண்மையற்றது என்ற பொருளில் வெள்ளில் என்ற பெயர் தோன்றியதாகத் தெரிகின்றது. கருவிளத்திற்கு அரிய அடிமரம் உண்டு.

          தமிழ் இலக்கணத்தில் செய்யுளியலில் கருவிளம், கூவிளம் என்ற பெயர்கள் வழங்குகின்றன. கருவிளமும், கூவிளமும் ஒரே இனத்தைச் சார்ந்தவை. இரண்டும் புளிப்பான திரண்ட பழம் உண்ட. இதன் காரணமாகப் பழந்தமிழர் இரண்டையும்  ‘விளம்’ என்று அழைத்து, கருவிளம் என்றும் கூவிளம் என்றும் பிரித்துக் காட்டிரெனத் தோன்றுகிறது.

          கூவிளத்தைப் பிற்காலத்தில் ‘வில்வம்’ என்று அழைக்கின்றனர். ஆனால் மலையாளத்தில் இன்றும் தமிழ்ப் பெயரான கூவிளம் என்று அழைக்கின்றனர். கூவிளத்தைச் சிவனுக்குரிய மரமாகவும், அதன் இலையைப் பூசைக்குரிய பூவாகவும் கருதுவர்.

பார்வை நூல்

1.  சங்க இலக்கியத்தில் செடி கொடி விளக்கம்திரு.பி.எல் சாமி, திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி -6.

 

Comments

Popular posts from this blog

எண்ணம் போல் வாழ்வு

                                                                        எண்ணம் போல் வாழ்வு             நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·      மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·         வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·   ...

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·         பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·         பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல். ·         உண்மைக்குப் புறம்பானவற்றைச் செய்யாதிருத்தல். ·         நண்பர்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·         மனத்திடத்தோடு வாழ்தல். ·         ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·         மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·         எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.      யாரையும் வெறுக்காதே ...