மனுநீதி
சோழன்
மனுநீதி கண்ட சோழன் பழமொழி இலக்கியத்தில்
கூறப்படுகின்றது. குற்றவாளிக்கு மன்னிப்பில்லை. அவன் மீதுள்ள வழக்கிற்குக் காலக் கெடு
கிடையாது.குற்றவாளியின் மேல் குற்றம் எவ்வளவு காலம் கழித்து வெளிப்பட்டாலும் அவனைத்
தண்டிக்கலாம். இதற்கு உதாரணமாக மனுநீதி சோழன் வரலாறு சொல்லப்படுகிறது. பெரியபுராணத்தில்
கூறப்படும் மனுநீதி சோழன் வரலாற்றுக்கும் பழமொழியில் சொல்லப்படும் இவ்வரலாற்றுக்கும்
மிகுந்த வேறுபாடு காணப்படுகின்றது.
பெரியபுராணத்தில்
கூறப்படும் மனுநீதி சோழன் வரலாறு
மனுநீதி சோழன் திருவாரூரிலே அரசாட்சி செய்தவன்.
அவன் மகன் வீதிவிடங்கன் ஒரு நாள் தேரில் ஏறிக் கொண்டு போனான். அப்போது ஒரு பசுங்கன்று
துள்ளி ஓடிவந்து அவனுடைய தேர்ச்சக்கரத்திலே மாட்டிக்கொண்டு மாண்டது. அதைக் கண்ட தாய்ப்பசு
துக்கந் தாங்க முடியாமல் அரண்மனை வாயிலை யடைந்தது. ஆராய்ச்சி மணியைக் கொம்பினால் ஆட்டியது.
அந்த மணியோசை கேட்ட மன்னவன் வெளியில் வந்தான். பசுவின் துயரைக் கண்டான். உடனே மந்திரிகளை
அழைத்து உண்மையைத் தெரிந்து கொண்டான். இப் பசுவைப் போலவே நானும் என் மகனை இழந்து வருந்துவேன்
என்று முடிவு செய்தான். மந்திரிகள் எவ்வளவு தடுத்தும் கேட்கவில்லை. தன் மகனைக் கிடத்தி
அவன்மீது தேரையேற்றிக் கொன்றான். இது தான் பெரியபுராண வரலாறு.
பழமொழியில்
மனுநீதி சோழன் வரலாறு
சோழன் மகன் தன் தேர்ச்சக்கரத்தால் ஒரு பசுங்கன்றைக்
கொன்றுவிட்டான். அமைச்சர்களும் மற்றவர்களும் சேர்ந்து இச்செய்தியை அரசனுக்குத் தெரியாமல்
மறைத்து விட்டனர். பல்லாண்டுகள் கடந்தபின் எப்படியோ மன்னவனுக்குத் தெரிந்து விட்டது.
உடனே அவன் தன் மகன்மீது தேர்ச்சக்கரத்தை யேற்றிக் கொன்றான். நீதி செய்வதற்குக் காலக்கெடு
இல்லை என்பதை மெய்பிக்கவே செய்தான். இது பழமொழியில் கூறப்படும் வரலாறு.
”சால மறைத்துஓம்பிச் சான்றவர் கைகரப்பக்
காலை
கழிந்ததன் பின்றையும் – மேலைக்
கறவைக்
கன்று ஊர்ந்தானைத் தந்தையும் ஊர்ந்தான்
முறைமைக்கு
மூப்புஇளமை இல்”
மிகவும் பாதுகாத்து
அறிவுள்ள மந்திரிகள் ஒளித்து விட்டதனால், அதிக நாள் கடந்த பிறகும், முன்பு பசுவின்
கன்றின் மேல் தேரைச் செலுத்திக் கொன்ற தன் மகனைத் தந்தையும் தேரை ஓட்டிக் கொன்றான்.
(ஆகையால்) நீதிக்கு அதிக நாள் குறைந்த நாள் என்ற எல்லையில்லை.
பார்வை நூல்
1.
பதினெண் கீழ்க்கணக்கும்
தமிழர் வாழ்வும் - தமிழறிஞர் சாமி. சிதம்பரனார், இலக்கிய நிலையம், சென்னை 600 094.
Comments
Post a Comment