Skip to main content

‘தலைவிதி’ – தமிழர்களின் நம்பிக்கைகளும் சீரழிவுகளும்

 

‘தலைவிதி’ – தமிழர்களின் நம்பிக்கைகளும் சீரழிவுகளும்

 

        இன்றும் தலைவிதி நம்பிக்கையே பெரும் ஆட்சி செலுத்துகிறது. தலைவிதி பற்றிய நம்பிக்கையை மூடநம்பிக்கை என்று எளிதாக ஒதுக்கி விட முடியாது. ஏனென்றால் தமிழனின் அக, புற வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் ஊடுருவி இருக்கிறது. அரசியல், சமுதாய, பொருளாதார, சமயத்துறைகளில் தமிழனின் இன்றைய நிலைக்கும் இந்த நம்பிக்கைக்கும் பெரிதும் தொடர்பு இருக்கிறது.

தலைவிதிசொற்பொருள் விளக்கம்

     தலைவிதி என்பதற்கு விதி, வினை, ஊழ், பாழ் போன்ற அனைத்துச் சொற்களும் தலைவிதி என்ற ஒரே பொருளையே தருகின்றன. தலைவிதியைக் குறிக்கும் `Fate’ என்பதற்கு, ஊழாற்றல், விதி, நேர்வு, நிகழ்வு, கரணத்தின் எல்லையில் வகுப்பமைப்பு, கால இறுதி, வாழ்க்கை முடிவு, சாவு, அழிவு, இறுதி விளைவு, கேடு காலம், என்றும் பொருளைத் தருகின்றன.

தலைவிதி – சான்றோர்களின் எண்ணங்கள்

         விதி பற்றிய கொள்கைகளை அறிஞர்களும், சான்றோர்களும் கூறியுள்ளனர். அது போல சமய நெறிக்கேற்ப தலைவிதிக்கு விளக்கம் தந்துள்ளனர். வினையை சஞ்சித வினை, பிராபத வினை, ஆகாமிய வினை என்று மூன்றாக வட நூலார் கூறுவர். இதனை,

”கடந்த பிறப்புக்களுள் ஒருவன் செய்த வினைகளின் பயன் ஊழ்ந்து அல்லது முதிர்ந்து அவனை வந்தடைவதே ஊழ் எனப்படும். சஞ்கிதம், பிராப்தம், ஆகாமியம் என மூன்றாக வினைப் பயன்களை வழங்குவர் வடநூலார். கடந்த பிறப்புக்கள் பலவற்றுள் செய்த வினைகளின் பயன் மலை போல் குவிந்திருப்பதே சஞ்சிதம் எனப்படும். இதைப் பழவினைப் பயன் எனலாம். இதிலிருந்து இப்பிறப்பில் நுகர்வதற்கு என கொண்ட வினைப்பயன் பிராப்தம் ஆகும். இதனை நுகர்வினைப் பயன் எனலாம். இப்பிறப்பில் புதுவதாகச் செய்யும் வினை இனிமேல் பயன் தர நிற்பது ஆகாமியம் ஆகும். இதனை வருவினைப் பயன் அல்லது எதிர்வினைப்பயன் எனலாம்.”

        என்னும் வரிகளில் விளக்கியுரைப்பர். எனவே தலைவிதி என்ற கருத்துக்கள் இந்திய தத்துவ ஞானத்தில் தொடர்ந்து நிலவி வருகிறது.

    விதி வலிமையானது என்றும், எவ்வளவு மனபலம் இருந்தாலும் அவை அனைத்தும் விதியில் தோற்றுவிடும் என்றும், சமய அறிஞர் கிருபானந்தவாரியார், ”யானைகள், பாம்புகள், பறவைகள் இவைகள் கட்டுப்படுவதையும், சந்திர சூரியர், ராகு கேது வாய் பீடிக்கப்படுவதையும், புத்திமார்களுடைய வறுமையைப் பார்க்கும் போதும் விதி வலியது என்பதும் மற்ற பலங்கள் எத்தனையிருந்தாலும் அவை நிஷ்பலமே என்பதும் உண்மைதான்” என்னும் வரிகளில் எடுத்துரைக்கிறார்.

தலைவிதி – மதம் சார்ந்த வெளிப்பாடுகள்

   தலைவிதி என்பதை எல்லா சமயங்களும் ஏற்றுக் கொண்டுள்ளன. இக்கொள்கைகளே சமயங்களின் முதுகெலும்பாகவும், உயிர்நாடியாகவும் உள்ளது.

·        தமிழகத்திற்கு ஊழ்வினை என்னும் கோட்பாட்டை முதன்முதலில் கொண்டு வந்தவர்கள் சமணர்கள். ”சமணர்க்கு முழுமுதற் கடவுள் உடன்பாடில்லை யாதலின், ஊழ்வினை தானே உரு எடுத்துக் கருத்தாவைப் பயன் நுகரச் செய்யும் என்றும் எண்ணினர்” என்னும் வரிகளில் சமணர்களின் ஊழ்வினைக் கோட்பாட்டை அறிஞர்கள் விளக்குவர்.

·        உலகில் உள்ள வேறுபாடுகள் அவரவர் செய்த வினையின் பயனாக ஏற்படுகிறது. இதற்கு, கடவுள் காரணம் இல்லை என்று பௌத்த மதம் கூறுகின்றது. ”தாம் தாம் செய்யும் வினைகளின் பலன்களை அனுபவியாமல் எவனாலும் வாழ்க்கைச் சுழலிருந்து தப்ப முடியாது. பெரியோராய் இருப்பவர்கள் தீவினைப் பயன்களிலிருந்து விடுபட வழிகளைத்தான் காட்ட முடியுமேயன்றி, தீவினையின் பலன்களை அவர்களின் அருள் நோக்கினால் கூட போக்கி விட முடியாது. இது பௌத்த சமயத்தின் அடிப்படை உண்மைகளின் ஒன்று” என்னும் வரிகளில் புத்த சமயத்தின் வினைக் கொள்கையை விளக்குவர்.

·        இந்து சமயத்தின் மிக முக்கியக் கொள்கையாக வினையும், மறுபிறப்பும் விளக்குகின்றன. ”துன்பத்திற்குக் காரணம் முன்வினைப் பயன் என்பது கர்ம சித்தாந்தம். இதுதான் இந்து மதத்தின் அடிப்படை” இந்து மதத்தில் விதியை அழிக்க முடியாது. வினைக்கொள்கையை முதன்முதலில் ஆய்ந்து வெளிப்படுத்தியவர் தமிழ் மக்களே என்று மறைமலை அடிகள் கூறுகின்றார்.

இசுலாமிய மதத்திலும் மனிதர்கள் இறந்தபின் அவரவர் செய்த வினைக்கேற்ப இன்ப உலகாயினும், துன்ப உலகாயினும் செல்வர் என்ற நம்பிக்கை இன்றும் நிலவி வருகின்றது.

தலைவிதி – என்ற கருத்தினால் சமூக சீரழிவுகள்

  தலைவிதி என்ற நம்பிக்கை இயல்பானது இல்லை என்று மறுத்துரைக்கின்றார்கள். இந்நம்பிக்கையினால் ஏற்பட்டுள்ள சமுதாயச் சீரழிவை, “இயற்கை வளங்களும், மனித ஆற்றலும் நிறைந்திருந்தும் இந்தியா முன்னேற முடியாமல் இருப்பதற்குக் காரணமே நாம் அளவிற்கு அதிகமாக முன்வினைப் பயனில் நம்பிக்கை வைத்திருப்பதுதான்” என்று வே. தமைந்திரன் சுட்டிக் காட்டுகிறார்.

      அளவுக்கு அதிகமான குழந்தைகளைப் பெற்று துன்புறுவதற்கும், நல்ல நேரம் கெட்ட நேரம் பார்ப்பதற்கும், திருமணப் பொருத்தம் பார்ப்பதற்கும், சோதிடம் பார்ப்பதற்கும், மறுப்பிறப்பை நம்புவதற்கும் அடிப்படை மூல காரணம் விதி என்னும் இந்நம்பிக்கையே ஆகும்.

தலைவிதி – விளைவித்தத் தீய விளைவுகள்

          ஆட்சியாளர்களும், நிலவுடைமையாளர்களும் தலைவிதித் தத்துவத்தை, சுரண்டலை நியாயப்படுத்துவதற்குப் பயன்படுத்திக் கொண்டனர். சமுதாயத்தில் ஏழைகளாக இருப்பவர்கள் வறுமையையும், துன்பத்தையும் அனுபவித்தே ஆக வேண்டும். ஏனென்றால் அது அவர்களுடைய தலைவிதி. போன பிறவியின் பாவம். எனவே துன்பத்தைப் பொறுத்துக் கொள், சகித்துக் கொள், உன்னுடைய துன்பத்திற்கு நீதான் காரணம். இன்று வசதியாக இருப்பவர்கள் போன பிறவியில் புண்ணியம் செயதவர்கள். ஆகவே நீயும் பொறுமையாக இருப்பதால் அடுத்தப் பிறவியில் இவர்களைப் போல வசதியோடு வாழ்வாய் என்று நம்பிக்கை ஊட்டப்பட்டது. இருப்பவனைக் கண்டு இல்லாதவனாகிய நீ கோபப்படாதே, எதிர்க்காதே, பேராசைப்படாதே என்பன போன்ற கொள்கைகளைத் தலைவிதிக் கொள்கை கற்றுத்தந்தது.

          தலைவிதி என்னும் நம்பிக்கை தமிழ் சமுதாயத்தில் ஏற்படுத்திய தீய விளைவுகளாக,

·        தன்னம்பிக்கையைப் போக்கியது.

·        துன்பத்தைப் பொறுத்துக் கொள்ளச் செய்தது.

·        தீமையை எதிர்க்கக் கூடாது.

·        வறுமைக்குக் காரணம் பிறர் இல்லை.

·        ஏழ்மை இயல்பானது.

·        சாதி வேறுபாடு தேவை.

·        பொருளாதார வேறுபாடு நியாயமானது.

·        சுரண்டல் நியாயமானது.

·        மனிதனால் எதுவும் முடியாது.

வர்க்கத்தினரை ஆயுதம் இன்றி, அடிதடி இன்றி அடக்குவதற்குத் தலைவிதி என்னும் கொள்கைக் கேடயத்தைப் பயன்படுத்தியது. இந்தப் பண்பாட்டு அடிமைத்தனத்தின் வாயிலாகவே ஏழைகளை எதிர்ப்பு உணர்ச்சியை மழுங்கடித்தது. வர்க்கத்தாரும், மதமும் தங்கள் சுரண்டலை பாதுகாத்துக் கொள்ள ஏற்படுத்தப்பட்டக் கொள்கைதான் தலைவிதி என்றாலும் இக்கொள்கை இன்றும் மக்கள் மனதில் மாறாமல் இருக்கிறது.

நிறைவாக,

          சமுதாய அமைப்பின் காரணமாக எதிர்பாராத இழப்புகளும், இன்னல்களும், மனிதனுக்கு ஏற்படுகின்றது. இதற்குக் காரணம் தெரிந்தாலும், எதிர்த்து நின்று போராட முடியாமல் வேதனைகளும், விரக்திகளும் ஏற்படுத்துகிறது. இதனால் பட்டுப்போன மனித மனத்திற்கு ஆறுதலாக ‘தலைவிதி’ எனும் நம்பிக்கைத் தருகிறது. உளவியல் அடிப்படையில் தற்காலிகமாக துன்பத்தை மறந்து இன்பத்தைத் தரும் போதைப் பொருளாக தலைவிதிக் கொள்கை செயல்படுகிறது. மனிதின் துன்பம் இருக்கும் வரை இக்கொள்கைகளும் இருக்கும்.

   தமிழர்களிடமிருந்து தலைவிதி நம்பிக்கைப் போக வேண்டுமானால் அவனுடைய துன்பங்கள் போக வேண்டும். அவனுடைய துன்பங்கள் போக வேண்டுமானால் சமுதாயம் நேர்மையானதாக அமையவேண்டும். சமுதாயம்  நேர்மையாக இருக்க வேண்டுமானால் ஆண்டான் அடிமை, சாதி பாகுபாடு, ஏழை பணக்காரன், மேலோர் கீழோர் என்ற பாகுபாடு இருக்கக் கூடாது. ஆனால் இவைகள் ஒருபோதும் இச் சமுதாயத்தில் நடக்கப் போவதில்லை. எனவே, இன்று மட்டுமல்ல, என்றுமே ‘தலைவிதி’ நோய் தமிழ் சமுதாயத்தைப் பிடித்தே இருக்கும் என்பதில் ஐயமில்லை.

           

Comments

Popular posts from this blog

எண்ணம் போல் வாழ்வு

                                                                        எண்ணம் போல் வாழ்வு             நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·      மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·         வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·   ...

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·         பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·         பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல். ·         உண்மைக்குப் புறம்பானவற்றைச் செய்யாதிருத்தல். ·         நண்பர்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·         மனத்திடத்தோடு வாழ்தல். ·         ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·         மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·         எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.      யாரையும் வெறுக்காதே ...