கவியரசர் கண்ணதாசன் திரைப்படப் பாடல்களில்
இறையிசைப் பாடல்கள்
ஆய்வுச் சுருக்கம்
பக்தியையும் பக்தியின் பயன்களையும்
இனிமையாகவும் எளிமையாகவும் எடுத்துத் தந்த பாங்கிளைக் கவியரசர் கண்ணதாசனின் திரையிசைப் பாடல்களில் காணலாம். ஆழ்வார்களும் நாயன்மார்களும், வேதாந்திகளும்,
சித்தாந்திகளும், ஞானிகளும், சான்றோர்களும் ஆற்றிய சமயப் பணியைக் கவியரசர் தன் தனிப் பாடல்கள் மூலமாகவும்,
திரையிசைப் பாடல்கள் மூலமாகவும் செய்துள்ளார் என்றால் மிகையில்லை.
இறையிசைப் பாடல்கள் வழி உலக மக்களை ஒரு குலமாகக் கருதி ஒருதாய் மக்களாகச்
சமரச சகவாழ்வு வாழ்வதற்குத் தாய்மொழிப் பற்றும், தாய்நாட்டுப்
பற்றும் தடையில்லை என்ற அரிய செய்தியை அற்புதமாகப் பாடுகின்றார். திரைப்படப் பாடல்கள் பக்தி பாடலாக உயரும் தகுதியை ஊட்டியவர் கவியரசர் என்றால்
மிகையில்லை.
குறிப்புச் சொற்கள்
அணு,
சமயம், சமரசம், சித்தாந்தம்,
தத்துவம், ஆணவம், கலைகள்,
இயக்கம், வேதம், சத்தியம்,
அடியவன், மதம், சமுதாய புரட்சி
முன்னுரை
இறைவனின் ஒருமையை வலியுறுத்தி மனிதகுல ஒருமைப்பாட்டை
உருவாக்க நினைப்பது போலவே,
இறைவனின் தன்மைகளை விளக்கி மனிதப் பண்பாட்டை உயர்த்துவதும் பக்திப் பாடல்களின்
இயல்பும் பயனுமாகும். கவியரசர் கண்ணதாசன் தன் தனிப் பாடல்கள்
மூலமாகவும் திரைஇசைப் பாடல்கள் மூலமாகவும் அந்த அரிய பணியைச் சுவைக் கூட்டி எளிமையும் இனிமையும் கொண்டு
படைத்துள்ளார். தெய்வத் தன்மைகளையும் திருவிளையாடல்களையும்,
வரலாறுகளையும் புராணங்களையும் மையமாக வைத்து உருவாக்கப்பட்ட திருவிளையாடல்,
கந்தன் கருணை, சரஸ்வதி சபதம், திருவருட் செல்வர், ஞான ஒளி முதலான மிகப் பல படங்களுக்கு
எழுதிய பாடல்களில் மட்டுமன்றி மற்ற ஆயிரக்கணக்கான
பாடல்களை, பாடிக் குவித்துத் திரைப்படங்களின் மூலம் ஒரு பெரிய
பக்தி இயக்கத்தையே நடத்தியுள்ளார்.
மறைபொருளாக விளங்கும் இறைவன்!
மெய் ஞானியர் எல்லாம் அரிய தத்துவங்கள் மூலம் விளக்கிய பெரிய உண்மையைப் பாமரனும்
சிந்திக்கும் வகையில் சிறப்பாகப் பாடியுள்ளார். அனைத்துப் பொருள்களிலும்
உயிராக விளங்கி, உள்ளே உறைந்து, அவற்றை இயக்குகின்ற மறைபொருளாக இறைவன்
விளங்குகின்றான். சாட்டை இல்லாப் பம்பரம் போல் அனைத்தையும் ஆட்டிப்
படைக்கின்ற ஆற்றல் மிக்கவன் அவனே. அவனின்றி ஓர் அணுவும் அசைவதில்லை.
அவன் ஆணைப்படியே விண்ணில் மண்ணில் அனைத்துப் பொருள்களும் இயங்குகின்றன.
இத்தகைய உத்திகளைச் சமய வேறுபாடின்றி அவற்றைத் திரைப்பாடல்களில் உரிய
இடத்தில் எளிதாக நுழைத்து விடும் உத்தியில் வல்லவராகத் திகழ்கின்றார் கவிஞர் கண்ணதாசன்,
”பாட்டும் நானே பாவமும் நானே
பாடும் உன்னைநான் பாட வைத்தேனே!
கூட்டும் இசையும் கூத்தின் முறையும்
காட்டும் என்னிடம் கதைசொல்ல வந்தாயோ? (பாட்டும்)
அசையும் பொருளில் இசையும் நானே
ஆடும் கலையின் நாயகம் நானே
எதிலும் இயங்கும் இயக்கம் நானே
என்னிசை நின்றா அடங்கும் உலகே!
(பாட்டும்) 1
என்ற அடிகளில் ஆணவம் மிக்க மனிதனை நோக்கி இறைவனே தன் ஆற்றலை
அறிவுறுத்துவதாகப் பாடுகின்றார். இயலும் இசையும் கூத்தும் ஆகிய முத்தமிழும் மூன்று கூறுகளாகவும்
தானே விளங்குவதாக இறைவன் கூறுகின்றார்.
கலைகளின் நாயகன்
இறைவனுடைய படைப்பாற்றலை அவன் அருளாலே பெற்றுக் கொண்டக் கவிஞர்கள் மனிதனுக்கு
உணர்த்துவதாகக் கற்பனையாக இப்படிப் பாடுவதுண்டு. அந்த வகையில்
இறைவன் மனிதனை நோக்கிக் கூறுகின்றன.
”ஆடும் கலையின் நாயகன் நானே
எதிலும் இயங்கும் இயக்கம் நானே
என்னிசை நின்றால் அடங்கும் உலகே”
2 (தொகுதி ஒன்று பக், 18)
என்று இசையாகவும், ஓசையாகவும் இறைவனே இருப்பதாகவும் கோயில் மணி
ஓசையில், இறைவன் அருள் இருப்பதாகவும் உணர்ந்து கூறும் கவிஞர்,
மேலும் நுட்பமாகப் பொருள் அசைகின்ற போது உருவாகும் ஒசையும் நான்தான்
என்கின்றான். தில்லையில் திருநடனம் புரிந்து கொண்டிருக்கின்ற
நடராசப் பெருமானின் திருவிளையாடல்களை விளக்கி அமைகின்ற இத்திரைப்படத்தில், கலைவல்ல தில்லை நாயகனே, இசைக்கு மட்டுமல்ல, ஆடற்கலைக்கும் நானே நாயகன் என்கின்றான். இறைவனின் நாட்டம்
இல்லையென்றால் பொருள்களின் இயக்கமே நின்றுவிடும் என்ற உண்மையை மேலும் வெளிப்படையாக,
என் இசை நின்றால் உலகம் அடங்கி விடும் என்கின்றான். இங்கு இசை என்பது ஓங்கார நாதமாகும். கடல் அலைகளில் எழுகின்ற
ஓசையை இறைவன் எழுப்பும் நாதமாக உணர்ந்தார்கள் ஞானிகள்.
சஞ்சலங்கள் தீர்க்கும் இறைப்பாடல்கள்
‘மாலையிட்ட மங்கை’ என்ற பக்திப் படத்தில் இடம்பெறுகின்ற ஒரு திரைப்பாடல்
நான்கு பத்திகளைக் கொண்டு அமைந்துள்ளது. அப்பாடலின் அடிதோறும்
பக்திச் சிந்தனைகளும் இறை உண்மைகளும் நிறைந்து கிடக்கின்றன. இப்பாடல்
இரண்டாம் தொகுதியில் தத்துவம் என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளது. அடிதோறும் இறைத் தத்துவங்களின் பிழிவாக அமைந்திருக்கும் இப்பாடலின் இறுதியில்
இறைவனிடம் முழுமையும் தன்னை ஒப்படைத்துத் தஞ்சமடைந்து விடுகிறபோது சஞ்சலங்கள் பறந்து
விடுகின்றன என முடிகின்றது. மனதிற்கு நிம்மதி இறைவன் தருகின்ற
அருள். அவன் நாமத்தைச் சொல்லுவதும் அவன் பாதத்தைச் சரணடைவதும்
தவிரச் சஞ்சலங்கள் தீர வழிவகைகள் ஏதுமில்லை என்பதை இறைவேதங்களும் இறைஞானிகளும் ஒரு
சீராக உணர்த்தி நிற்கின்றார்கள். அவை அனைத்தையும் குழைத்தெடுத்து
நான்கே தொடர்களில் நலம்பெறக் கூறி விடுகின்றார்.
”தஞ்சமவன் பாதமடா
சஞ்சலங்கள் தீருமடா!
என்ற பாடல்வரிகள் மனத்துயர் நீக்கும் அருமருந்தாக அமைந்துவிடுகின்றன.
சாட்டை யில்லாப் பம்பரம்போல்
ஆட்டு விக்கும் ஆண்டவனே
தாரணியில் ஏழைகளை
வாழவைப்பான் ஈஸ்வரனே!
அன்புவடி வானவனே
அறம் வளர்த்த இறையவனே
துன்பமெனும் கடலினிலே
தோணி என்னும் துணையவனே!
கண்டவர்கள் சொன்னதில்லை
சொன்னவர்கள் கண்டதில்லை
விண்டுரைக்க எவருமில்லை
விந்தையிலும் விந்தையடா!
சாவதிலே வீரமில்லை
தர்மமில்லை இன்பமில்லை
தஞ்சமுன் பாதமடா
சஞ்சலங்கள் தீருமடா! 3 (தொகுதி இரண்டு பக்,
317,319)
இறைப்பாடல்களில் நேர்மையும் உழைப்பும்
பக்தியின் பயன் நல்ல பண்புகளும் நல்ல ஒழுக்கமும்
ஆகும். இவற்றைப் போற்றாத அல்லது ஊட்டி வளர்க்காத பக்தி போலித்தனமானது; புண்ணியமற்றது. மனிதனின் உள்ளத்திலும் செயல்களிலும் இறைவனைக்
காண்கின்ற உண்மை பக்தி ஒழுக்கத்தை உயர்த்துவதாகும். நாவால் இறைவனை
உச்சரித்துக் கொண்டு
கோலத்தால் பழுத்த சமயவாதியாகக் காட்டிக் கொண்டு, உள்ளத்தில் ஊரைக்
கெடுக்கும் சிந்தனைகளை வளர்த்துக் கொண்டிருக்கின்ற போலி பக்தர்களைக் கவிஞர் கண்ணதாசன்
இனங்காட்டிக் கடுமையாகச் சாடுகின்றார். அவரது வேதனைகளை அழகாக
அம்பலப்படுத்துகிறார். ‘கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம்
வரும்’ 6 என உண்மை பக்தியை உள்ளபடி உணர்த்திக் காட்டுகிறார்.
பக்தி கோயில்களிலும் பூசைகளையும் இல்லை. உள்ளத்தில்
உள்ள அன்பிலும் பண்பிலும் இருக்கிறது என விளக்கிக் காட்டுகிறார். இறைவன் மீது ஆணையிட்டுச் சத்தியம் செய்து ஓர் உண்மைகளை உரைக்கின்றார்.
”எல்லா வல்ல இறைவனின்
ஆணை
சொல்ல போவது யாவையும் உண்மை
சத்தியம் – இது சத்தியம்” 4 (தொகுதி இரண்டு பக்.325)
எனப்பாடல் தொடங்குகிறது. பல அருமையான தத்துவங்களை அற்புதமாகப் பேசும் இப்பாடல் பணத்தை
இறைத்துப் பாவத்தைத் தீர்க்க நினைக்கின்ற பயித்தியக்காரனை இகழ்ந்து அவனைப் பச்சை மடையன்
என ஏசுகின்றது. காசைக் கொண்டு உலகை விலைக்கு வாங்க முடிந்தாலும்
கடவுளை ஏமாற்ற முடியாது என்கிறார்.
அருளாளனும் அறிவாளனும்
‘கல்யாணியின் கணவன்’
என்ற படத்தில் பக்தியில் கலந்துவிட்ட ஒரு மனிதனின் நெஞ்சத்தை உள்ளபடி
உணர்த்திக் காட்டும் ஒரு பாடல் இடம் பெறுகின்றது. முந்தைய பாடலில்
அடிமைக்குரல் எழுப்பிய அடியவனின் ஏக்கத்திற்கு இறைவனின் ஆறுதல் மருந்து கிடைத்து விடுகின்றது.
நிம்மதியடைந்து நெஞ்சத்தின் நிறைவை இப்பாடலில் கண்டுகளிக்கின்றோம்.
கருணை வேண்டிக் கடைந்த அடியவனின் நெஞ்சம் இறைவனின் கருணை அளவற்றதென்று
அறிந்து நிம்மதி அடைகின்றது.
”ஐயா நின்கருணை அளவற்ற
தென்று
அறிகின்ற தெந்தன் நெஞ்சமே
…”
”நெய்யாக்கி என்னை நின்தீப
மாக்கி
நின்பாதம் கொள்வேன் தஞ்சமே!”
5 (தொகுதி இரண்டு பக்.16)
இறைவனின் இணையற்ற கருணையை உளமாற உணர்ந்து நன்றிப் பெருக்கோடு பேசுகின்ற ஒரு
நம்பிக்கையாளனாகக் கல்யாணியின் கணவனைக் காட்டுகின்றது. இறைவன் கருணை அளவற்றதென்று அவன்
நெஞ்கம் நினைப்பதாகக் கவிஞர் பாடவில்லை. இஃது அவன் உணர்வு அன்று.
அவன் அறிந்த அறிவு. அறிவுக்கும் பக்தி உலகிற்கும்
தொடர்பில்லை என்ற பொய்க்கூற்றை மறுத்து ‘அறிகின்றது எந்தன் நெஞ்சமே’
என இறைவனைத் தஞ்சமடைந்தவன் பாடுகின்றான். இறைவன்
உறைகின்ற இடத்தை வியந்து பாடும்போது, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
”செழுங்கருணை ஓடிப்பெருகும் அறிவாளர் நெஞ்சு” என அறிந்து காட்டுவார். இறைவன் கருணை வடிவாக இருப்பது
போலவே அறிவு வடிவாகவும் இருக்கின்றான். அருளாளனாகவும் அறிவாளானாகவும்
இருக்கின்ற இறைவன் மனிதனும் அவ்வாறே இருக்க வேண்டும் என விரும்புகின்றான். அறிவுக்கும் அருளுக்கும் உள்ள உறவையும் பொருத்தத்தையும் காட்ட விரும்பிய கவியரசர்
கண்ணதாசன் இறையருளை மனிதன் அறிவு அறிந்து போற்றுவதாகப் பாடிக் காட்டுகின்றார்.
பக்திப்பாடல்களில் சமத்துவம்
சமரச வாழ்வில் திளைத்துச்
சமத்துவ இன்பத்தில் துய்த்து வாழும் பக்தி வாழ்க்கையைப் பொதுவில் காட்டும் கவிஞர் கண்ணதாசன்,
சிறப்பாகக் கண்ணன், இராமன், திருமால் என்ற தெய்வப் பெயர்களாலே வைணவத் திருப்பாடல்களையும் பாடிக் குவித்துள்ளார்.
அல்லாஹ் அக்பர் என்று தொடங்கும் பாடலும் ஏசுநாதர் பேசினால் எனத் தொடங்கும்
பாடலும் அன்னை மேரி மாதா பற்றிய பாடலும் உண்டு. இராமன்,
அல்லா, ஏசு மூவரையும் இணைத்துப் பாடும் பாடலும்
உண்டு. கண்ணன் பால் எண்ணத்தைப் பறிகொடுத்துக் கண்ணதாசனாக மாறிய கவிஞர் கண்ணனைத் துதித்துப்
பாடியப் பாடல்கள் மிகப் பலவாகும்.
ராமஜெயப் பாடல்களிலும் கவிஞர்
கண்ணதாசன் சமய சமரசத்தை மறக்கவில்லை. மதங்களை இணைப்பவன் சிவராமன்
என இராமபிரானின் உயர்வுமிகு கோட்பாடுகளில் சமரசமும் ஒன்று எனக் காட்டியுள்ளார்.
சிவம் பெரிதா? விஷ்ணு பெரிதா? என நெடுங்காலப் போராட்டத்திற்கு முடிவு கட்ட நினைக்கின்றார் கவிஞர்.
அவ்வளவு எளிதில் அது முடியுமா? கம்பனும் வரிந்து
கட்டிப் போராடித் தோற்றவனல்லவா? அரி அதிகம் சிவன் அதிகம் எனப்
போராடுவோரை அறிவில்லார் என ஏசுவான் கம்பன். கங்கையில் குளித்தெழுந்து
கதிரவன் பொன்னொளிகளில் பூத்து நின்றபோது, கருநிற வண்ணன் பொன்னார்
மேனியனாகப் பொலிந்தான் என்பது கம்பன் கண்ட சமரச நோக்கமாகும்.
திரைப்படப் பாடல்களில் சமுதாயப் புரட்சி
கவலை இல்லாத மனிதன் என்ற
படத்தில் குறத்தியர் கூடிப் பாடும் ஒரு காட்சியில் கவிஞர் கண்ணதாசன் முருகளைப் போற்றும்
பாடல் ஒரு புதிய முறையில் அமைந்து கருத்தின்பம் தருகின்றது. வள்ளியை முருகனுக்குத்
தந்த குறவர் குலம் விடுவிக்கும் வேண்டுகோளாகப் பாடல் தொடங்குகிறது. குறவர் நிலைகளும் செயல்களும் பொருத்தமாகக் காட்டப்படுகின்றன. குறவர் குலக் கொடியை மனைவியாக ஏற்றுக் கொண்டு முருகன் செய்த சமுதாயப் புரட்சியை
இங்குக் காட்டுகின்றார். கவிஞர்,
”ஜாதிவிட்டு ஜாதிகொண்டாய்
பொருப்ப தில்லைபூமி
சமூகப் பழக்கத்தை நீ
மாத்திப்புட்டே சாமி
– பலர்
பேசுவாங்க செய்வதில்லை
பேசாமெ நீ செய்து
முடித்தாய சாமி! 6 (தொகுதி இரண்டு பக், 384)
ஜாதிவிட்டு ஜாதி மாறித் திருமணம் செய்யாத சமுதாயப் பழக்கத்தை மாற்றித் தெய்வ
ஜாதிக்கும் குறவர் ஜாதிக்கும் கொடுக்கல் வாங்கல் ஏற்படுத்திவிட்ட மாற்றத்தை மகிழ்ந்து
பாடுகிறார்கள் குறவர்கள்.
மேலும் வாய்ச் சொல் வீரனாக இல்லாமல், சொல்லாமல்
செய்து முடிக்கும் செயல் வீரான முருகனைக் காட்டும் விதம் அருமையாக அமைந்திருக்கிறது.
இறைவன் எப்போதும் பேசியதில்லை. எப்போதும் செயல்
இழந்ததும் இல்லை என்ற இறைத் தத்துவத்தையும் மறுப் பொருளாக உள்ளடக்கிச் சிலேடைநயம் மிக்க
சிறந்த திரைப்பாடலாக இப்பாடல் விளங்குகிறது.
ஆணவம் அழிக்கும் பரம்பொருள்
மனித முன்னேற்றத்திற்குப்
பெருந்துணைப் புரியும் வகையில், ஆதிபராசக்தி என்ற மற்றொரு படத்தில்
பரம்பொருளுக்கு வரவேற்புப் பாடும் கவிஞர், மனிதர் ‘ஆணவம் அழியவே அரிய சக்தியோடு வருகவே’ எனப் பாடுகிறார்.
”கருணையின் திருமுகம்
வருகவே!
காலத்தின் நாயகன் வருகவே!
பெருகிய வலிவொடு வருகவே!
பெரும்பொருள் பரம்பொருள் வருகவே!”
7
இப்பாடலில் முகவரி இல்லா இறைவனுக்குக் கருணையின் திருமுகம் எனவும் காலத்தின்
நாயகன் எனவும் முகவரி காட்டுகின்றார். பெரும் பொருளும் பரம்பொருளும் கொண்ட இறைவன்
பெருகிய வலிவோடு மனிதர் ஆணவத்தை அழிக்க வேண்டும் என்கின்றார். இங்கு எல்லாம் அவன் செயல் என்ற முதுமொழிக்கு உரிய விளக்கம் தந்து பாடும் கவிஞரின்
தனிப் பாடலும் ஒப்பு நோக்கியுள்ளார்.
”எல்லாம் அவன்செயலே என்பதற்கு
என்ன பொருள்?
உன்னால் முடிந்ததெலாம் ஓரளவே என்று
பொருள்! 8(தொகுதி ஆறு, பக்,
84,90)
மனிதச் செயல்களுக்கு மூலமாகவும், பயனாகவும் இருப்பவன் இறைவனே என்பதும் அவன் அருளும்
நாட்டமும் இன்றி மனிதச் செயல்கள் நலமாக நிறைவு பெறாது என்பதையும் உணர்த்தும் வகையில்
மனிதனால் முடிந்ததெல்லாம் ஓரளவு என்பதைத் தான் ‘எல்லாம் அவன்
செயல் என்ற முதுமொழி உணர்த்திக் காட்டுகிறது’ என அங்கும் விளக்கம்
தருகிறார்.
நிறைவாக,
கவிஞரின் இசைப் பாடல்கள் வாழ்க்கையின் பல்வேறு நிலைகளையும்
உணர்த்தும் பாடலாக அமைந்துள்ளன. பாமர மக்களின் எளிய ரசனைக்காக டப்பாங்குத்துப் பாடல்கள் தொடங்கிப்
பக்திச் சுவைமிக்க ஞானப் பாடல்கள் வரை பல்வேறு தரங்களில் அமைந்தப் பாடல்களையும் பாடியுள்ளார்.
இறையிசைப் பாடல்கள் வழி
உலக மக்களை ஒரு குலமாகக் கருதி ஒருதாய் மக்களாகச் சமரச சகவாழ்வு வாழ்வதற்குத் தாய்மொழிப்
பற்றும், தாய்நாட்டுப் பற்றும் தடையில்லை என்ற அரிய செய்தியை
அற்புதமாகப் பாடுகின்றார். திரைப்படப் பாடல்கள் பக்தி பாடலாக
உயரும் தகுதியை ஊட்டியவர் கவியரசர் என்றால் மிகையில்லை. சிறந்த
பாடல்கள் அனைத்தும் என்றும் புதியனவே. ஆனாலும் பொருள் நிறைந்த
பாடல்களே என்றும் புதியனவாக நின்று விளங்கும். அதில் பக்தியுணர்வு
கொண்டப் பாடல்கள் புலவர் நெஞ்சிலிருந்து பிறந்த பொருள் நிறைந்த பாடலுக்கு என்றும் இணையில்லை.
அடிக்குறிப்புகள்
1.
கண்ணதாசனின் கவிதை தொகுதி ஒன்று, பக்,18
2.
மேலது, தொகுதி இரண்டு, பக்-317-319
3.
மேலது, தொகுதி இரண்டு, பக், 354
4.
மேலது, தொகுதி இரண்டு, பக், 325
5.
மேலது, தொகுதி இரண்டு, பக், 16
6.
மேலது, தொகுதி இரண்டு, பக், 384
7.
மேலது, தொகுதி மூன்று, பக், 361
துணைநின்ற நூல்கள்
1.
அப்துல் கறீம். டாக்டர். மு, -கண்ணதாசன் திரையிசைப் பாடல்திறம், திருவரசு புத்தக நிலையம், முதல் பதிப்பு – 2017, சென்னை – 60017.
2.
கீதா.முனைவர் கி – திரைப்படக் கலை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், முதல் பதிப்பு -2022, சென்னை – 600 050
Comments
Post a Comment