Skip to main content

குரம்பை

 

குரம்பை

          நெடுநிலை மாடங்களும், ஓடுகளும் கூரையாகக் கொண்டிருந்த தமிழகத்தில் ஓலைகளால் ஆன குரம்பை வீடுகளும் காணப்பட்டன. குரம்பை வீடுகள் பற்றி தமிழிலக்கியங்கள் தெளிவாக விளக்குகின்றன. பாலை, முல்லை, மருத, நெய்தல் நிலத்தில் வாழ்ந்த மக்களும் தோப்புக்குடிகளில் வாழ்ந்தவர்களும் வேறு வேறு விதமான கூரைகளால் குரம்பை அமைத்துக் கொண்டு வாழ்ந்தனர். இவர்களின் குரம்பைகளைப் பற்றி விவரங்களைக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பெரும்பாணாற்றுப் படையில் தெளிவாகத் தருகின்றார்.

ஈந்துக் குரம்பை

     பாலை நிலத்தில் வாழும் எயினர்கள் ஈந்தின் இலையால் வேயப்பட்ட குடிசையில் வாழ்ந்தனர். சொரசொரப்பான முதுகுப்புறத்தையும், கொழுவிய மடலையும், வேல் போலும் நுனியையும் பொருந்தியது ஈந்தின் இலை. முள் போன்ற ஈந்தின் இலை கொண்டு குரம்பை வேயப்பட்டு இருந்ததால் கூரையில் அணிலும், கருப்பை(எலி) யும் ஓடாமல் காக்கப்பட்டது. எளிய பொருட்களைக் கொண்டு அரிய நுட்பத்துடன் எயினர் கள் குரம்பை அமைத்து வாழ்ந்த நிலையினை,

          ”வரிப்புற அணிலொடு கருப்பை ஆடாது

           யாற்றுஅறல் புரையும் வெரிநுடைக் கொழுமடல்

           வேல்தலை அன்ன வைந்நுதி, நெடுந்தகர்

           ஈந்துஇலை வேய்ந்த எய்ப்புறக் குரம்பை” (பெரும்.85-88)

என்று பெரும்பாணாற்றுப்படை விளக்குகிறது.

வரகு வைக்கோல் குரம்பை

     முல்லை நிலத்தில் வாழ்ந்த கோவலர்கள் வரகு வைக்கோல் கற்றையை மூங்கில் கழியில் மீது வேய்ந்த குரம்பையில் வாழ்ந்தனர். இதனை,

          ”கற்றை வேய்ந்த கழித்தலைச் சாம்பின்”(பெரும்.150)

என்னும் பெரும்பாணாற்றுப்படைச் சுட்டுகிறது.

நெல் வைக்கோல் குரம்பை

          மருத நிலத்தில் நெல் மிகுதி, நெல்லது வைக்கோலைக் கொண்டு உழவர்கள் குரம்பைகளைக் கட்டிக் கொண்டனர் என்பதனை,

          ”புதுவை வேய்ந்த கவிகுடில்” (பெரும்.225)

என்று பெரும்பாணாற்றுப்படை வழி அறியலாம். இதில் புதுவை என்பது ‘புது வைக்கோல்’ எனப் பொருள் படும்.

தருப்பைப் புல் (நாணல்) குரம்பை

      நெய்தல் நிலத்தில் தருப்பைப் புல் (நாணல்) மிகுதியாகக் காணப்படும். நெய்தல் நில வலைஞர்கள், வேழக்கோலை நிரல்பட வைத்து இடையிடையே வெள்ளிய கொம்புகளைக் கலந்து நிறுத்தி இவைகளைத் தாழை நாரால் கட்டி நிறுத்தினர். இந்தக் கட்டுமானத்தின் மீது தருப்பைப் புல்லை வேய்ந்து குரம்பையைக் கட்டினர். இத்தகவலை,

          ”வேழம் நிரைத்து, வெண்கோடு விரைஇ

           தாழை ஐடிந்து தருப்பை வேய்ந்த

           குறியிறைக் குரம்பை” (பெரும்.263-265)

என்னும் வரிகளில் உருத்திரங்கண்ணனார் வெளியிடுகின்றார்.

          இதில் வேழம் என்பது கருப்பந்தட்டை, கொறுக்கைச்சி, மூங்கில்கோல் ஆகிய மூன்றினையும் குறிக்கும். வேழம்,புல், இனத்தது ஆதலின் உறுதியின் பொருட்டு வெள்ளிய மரக்கொம்பை நிறுத்தினர்.

தெங்கு மடல் குரம்பை

    தென்னந்தோப்புகளில் வாழும் உழவர்கள் தோப்புகளின் நடுவில் தென்னையின் வாடிய மடலால் (தென்னை ஓலை) வேயப்பட்ட குரம்பையில் வாழ்ந்தனர். இதனை,

          ”வண்தோட்டுத் தெங்கின் வேய்ந்த

         .... ......     .......   .......   ...... ..........

         தண்டலை உழவர் தனிமனை” (பெரும்.353-355)

என்று பெரும்பாணாற்றுப்படை எடுத்துரைக்கின்றது.

முள் வேலிகள்

       சில வீடுகளில் முன்றிலில் வேலியாக முட்களை நட்டனர். அவ்வாறு நடப்பட்ட வேலிகள் வாழ்முள்வேலி என்றும், இடுமுள்வேலி என்றும் வழங்கப்பட்டன. இருவேறு வகைப்பட்ட வேலிகளை தேவைக்கு ஏற்றாற் போல் நட்டனர்.

          வாழ்முள்வேலி என்பது முட்செடிகளையும், முள்மரங்களையும் வளர்த்து அவற்றால் ஆக்கிய வேலி எயினர் வீட்டில்,

          ”வாழ்முள் வேலிச் சூழ்மிளைப் படப்பை” (பெரும்.126)

இருந்ததாகப் பெரும்பாணாற்றுப்படை தெரிவிக்கின்றது.

       கோவலர் குடியிருப்புகளில் இடுமுள் வேலி காணப்பட்டது. முள்ளை வெட்டிக் கொணர்ந்து அமைக்கும் வேலி இடுமுள்வேலி எனப்படும். இதனை,

          ”இடுமுள் வேலி எருப்படு வரைப்பின்” (பெரும் . 154)

எனக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் எடுத்துரைக்கின்றார்.

          முள்வேலிகள் மட்டுமல்லாது நெல்லி மரங்களால் ஆன வேலியும் இருந்தது. சங்ககாலத்து மன்னன்  பிட்டங்கொற்றன் ஊரில் நெல்லி மரங்கள் வேலியாக வளர்க்கப்பட்டன. மான்கள் நெல்லிக்கனிகளை முன்றிலில் துப்பிச் சென்றதை,

          ”மரை பிரித்துஉண்ட நெல்லி வேலி

           பரலுடை முன்றில் அங்குடிச் சீறூர்” (புறம்.170,1-2)

என்று உறையூர் மருத்துவன் தாமோதரனார் வருணிக்கிறார்.

 

 

 

Comments

Popular posts from this blog

எண்ணம் போல் வாழ்வு

                                                                        எண்ணம் போல் வாழ்வு             நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·      மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·         வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·   ...

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·         பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·         பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல். ·         உண்மைக்குப் புறம்பானவற்றைச் செய்யாதிருத்தல். ·         நண்பர்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·         மனத்திடத்தோடு வாழ்தல். ·         ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·         மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·         எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.      யாரையும் வெறுக்காதே ...