பாண்டவர்கள்
சூரிய பகவான் குந்தி தேவியிடம் கூறியதைப்
போல அவள் மீண்டும் கன்னிப் பெண்ணாகத் திகழ்ந்தாள். அவளை மணந்து கொள்ள பல அரசகுமாரர்கள்
போட்டியிட்டார்கள். பின்னர், சுயம்வர முறைப்படி குந்திதேவி பாண்டுராஜனை மலர் மாலை சூடி
தன் கணவனாகத் தேர்ந்தெடுத்தாள்.
மணமக்கள் அஸ்தினாபுரம் சென்றடைந்து சிறந்த
முறையில் வாழ்ந்து வந்தார்கள். இவ்விதமிருக்க, பாண்டு மகாராஜா ”மாத்ரி” என்ற இளவரசியை
மணந்து கொண்டார்.
பாண்டு மன்னன் வேட்டையாடுவதில் அதிக ஆர்வமுள்ளவன்.
அங்கே ஒரு ஆண்மானும் பெண்மானும் காதல் விளையாட்டில் ஈடுபட்டு விளையாடி கொண்டிருந்தன. அந்த மான்களின்
மீதுகுறிவைத்து அம்பு எய்தவும் ஆண்மான் மீது அம்பு பட்டது. ஆண்மானின் உருவம் மறைந்து
அதிலிருந்து முனிவரின் உருவம் வெளிப்பட்டது. பின்னர் பெண்மானின் உருவம் மறைந்து அதிலிருந்து
முனிவரின் மனைவி வெளிப்பட்டாள்.
அம்பு தைத்த வலி பொறுக்க முடியாததலால் அவர்
துடித்துக் கொண்டிருந்தார். கணவரின் துன்பத்தைப் பார்த்துக் கண்ணீர் விட்ட வண்ணம் அவருடைய
மனைவி காணப்பட்டாள்.
பாண்டு மன்னர் அவர்களிடம் சென்று தன்னை மன்னிக்க
வேண்டும் என்றும், மான் என்று நினைத்தே அம்பு எய்ததாகக் கூறினான். தன்னை மன்னிக்கும்
படி எவ்வளவு வேண்டியும் அந்த முனிவர் மன்னிக்கவே இல்லை. ”நீ உன் மனைவியுடன் கூடிக்களிக்க
ஆரம்பித்ததும் உனக்கு இறப்பு ஏற்படும்” என்று சாபமிட்டு அந்த முனிவர் இறந்து போனார்.
இவ்விதம் அந்த முனிவர் கொடுத்த சாபத்தை எண்ணியும்,
தன்னால் அந்த முனிவர் அநியாயமாக இறந்து போனதை எண்ணியும் பாண்டு மன்னன் பெரிதும் வருந்தினான்.
அந்தத் துயர நிகழ்ச்சியை எண்ணியவனாய் பாண்டு மன்னன் மாளிகையை அடைந்தான். அங்கு அவன்
மன அமைதி பெறவில்லை. எப்போதும் அந்த முனிவரின் துயரமுடிவுதான் அவன் கண்முன் தெரிந்தவண்ணம்
இருந்தது. அவன் மன அமைதியை முற்றிலும் இழந்தவனாகக் காணப்பட்டான்.
தன்னுடைய மனைவியர் இருவரிடமும் காட்டில்
வேட்டையாடச் சென்றபோது நடந்த நிகழ்ச்சியைக் கூறியதோடு அந்த முனிவர் இட்ட சாபத்தையும்
பற்றிக் கூறி வருந்தினான். அவனுடைய துன்பத்தைப் போக்கிட முனைந்த குந்திதேவி, கவலைப்பட
வேண்டாம் என்றும் துருவாச முனிவர் தனக்கு உபதேசித்த மந்திரத்தைக் கொண்டு குழந்தைகளைப்
பெற்று கொள்ளலாம்” என்று எவ்வளவோ கூறியும் பாண்டு மன்னன் அமைதியடைய வில்லை. திரும்பத்
திரும்ப குந்தி தேவியும் மாதிரியும் பாண்டு மன்னனிடம் நடந்ததை நினைத்துக் கவலைப்பட
வேண்டாம் என்று எவ்வளவோ கூறியும் பாண்டு மன்னன் அமைதியடைய வில்லை.
பாண்டு மன்னன் மன அமைதியை இழந்த நிலையில்
அரசு பொறுப்பை பிஷ்மரிடம் ஒப்படைத்து விட்டு தன்னுடைய மனைவியர் இருவருடன் காட்டிற்குச்
சென்றான்.
குந்தி தேவி துருவாச முனிவர் உபதேசித்த மந்திரத்தின்
துணை கொண்டு பஞ்சபாண்டவர்களைப் பெற்றெடுத்தாள். அவர்கள் காட்டிலேயே பெற்றோருடன் வளர்ந்து
வந்தார்கள். பிள்ளைகளுடனும் மனைவியருடனும் வாழ்ந்து வந்த பாண்டு மன்ன்ன் ஓரளவு நிம்மதி
பெற்றவனாக வாழ்ந்து வந்தான்.
ஒரு நாள் காட்டில் பாண்டுவும் மாத்ரியும்
தனித்து இருந்தார்கள். அவர்கள் இருவரும் இயற்கை அழகை ரசித்த வண்ணம் உலவிக் கொண்டிருந்தார்கள்.
அப்போது பாண்டு முனிவர் கொடுத்த சாபத்தை மறந்தவனாய் மாத்ரியுடன் கூடிக்களிக்க முயலவும்
அவன் உயிர் பிரிந்தது.
இவ்விதம் மாத்ரியுடன் கூடிக்களிக்க முனைந்த
பாண்டுவுக்கு இறப்பு நேரிட, தன் கணவன் இறப்பிற்குத் தான் அல்லவா காரணமாக இருந்துவிட்டோம்
என்று எண்ணிய அவள் தன்னுயிரை மாய்த்துக் கொண்டாள்.
அதன்பின்னர் குந்திதேவியையும், பாண்டவர்களையும்
காட்டில் வாழ்ந்த முனிவர்கள் அழைத்து வந்து அஸ்தினாபுரத்தில் விட்டுச் சென்றார்கள்.
Comments
Post a Comment