வைகை நதி நாகரிகம் - கீழடி குறித்த பதிவுகள்
(புத்தக மதிப்புரை)
புதுகை பண்பலை 91.2 சமுதாய வானொலி நேயர்கள் அனைவருக்கும்
வணக்கம். இன்று புத்தக
மதிப்புரை சிறப்பு நிகழ்ச்சியில் முனைவர் சு.வெங்கடேசன் எழுதிய வைகை நதி நாகரிகம் (கீழடி குறித்த
பதிவுகள்) என்ற புத்தகத்தைப்
பார்ப்போம்.
இத்தகைய சிறந்ததொரு புத்தகம் முதல் பதிப்பாக டிசம்பர், 2017 – ஆம் ஆண்டும், இரண்டாம் பதிப்பாக
அக்டோபர், 2024 – ஆம் ஆண்டும்
சென்னை, விகடன் பிரசுரம் வெளியிட்டுள்ளார்கள். விலை 210 ரூபாய், பக்கங்கள்
252.
நூலாசிரியர் மதுரையைச் சேர்ந்தவர். இவர் இரண்டு ஆய்வு நூல்களும், ஏழு சிறு நூல்களும் எழுதியுள்ளார். காவல் கோட்டம் என்ற இவரது முதல் நாவலுக்கு 2011 – ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் – கலைஞர்கள் சங்கத்தின்
பொதுச் செயலாளராகப் பொறுப்பு வகிக்கின்றார்.
இந்நூல் 2400 ஆண்டுகள் பழமையான
நம் நாகரிகத்தின் அடையாளமாக பாண்டிய, சேர, சோழர்களின் செல்வ செழிப்பான வாழ்வை பதிவு செய்கிறது. கீழடி, தேனூர் அகழ்வாய்வில்
கண்டெடுக்கப்பட்ட ஆவணங்கள் மூலம் பல தகவல்களை ஆனந்த விகடனில் கட்டுரையாக வெளியாகியுள்ளது.
வைகை மற்றும் மதுரை ஆகிய இரு சொற்களும் தமிழ்ச் சமூகத்தின் ஆதி நினைவைச் சுட்டுபவை. உலகின் பழமையான
பேரிலக்கியத் தொகுதிகளில் ஒன்றான சங்க இலக்கியம், இச்சொற்களை தனது விதை நெல்லாகவே பேணுகிறது. ‘தமிழ்வைகை’ என்று இந்நதியோடு
மொழியை இணைத்துப் பேசுகிறது.
நூலாசிரியர் தமது முன்னுரையில், இதுவரை வைகைக் கரையிலோ அல்லது மதுரையை மையப்படுத்தியோ விரிவான
அகழாய்வு நிகழ்த்தப்படவில்லை. முதன்முறையாக நிகழும்போது வியப்புக் கலந்த ஆர்வத்துடன் அந்நிலம்
நோக்கிப் போனேன். அமர்நாத் ராமகிருஷ்ணன் குழுவினரோடுப் பல நாட்களை செலவிட்டேன். மண்ணுக்குள்
அகழ்ந்து நுழையும் உயிரினம் போல அவர்கள் காலத்தைக் கீழடி அகழாய்வுக் கண்டுபிடிப்புகள்
மேலெழுந்தபோது ஆனந்த விகடன் இதழில் ‘வைகை நதி நாகரிகம்’ என்ற தலைப்பில் தொடர் கட்டுரை எழுதினேன். அக்கட்டுரையின் வழி வாசகர்களின் கவனத்துக்குக் கொண்டு சென்றன.
கீழடி அகழாய்வில் முழுமையான அர்ப்பணிப்போடு ஈடுபட்டவர்கள் திரு. அமர்நாத் ராமகிருஷ்ணன்
அவர்கள், ஆய்வாளர்கள், மற்றும் ஆய்வு
மாணவர்கள், நிலம் தந்து
உதவிய விவசாயிகள் அனைவருக்கும் நன்றி சொல்வது நம் கடமை என்று நூலாசிரியர் தமது முன்னுரையில்
குறிப்பிட்டுள்ளார்.
இந்நூலில்
·
தமிழ் இந்து நாளிதழில், கீழடி – யாசகம் கேட்கும் தொல் நகரம் எனும் கட்டுரையும்,
·
விகடன் தடம்
எனும் இதழில் - கீழடி – புனைவும் அரசியலும்
எனும் கட்டுரையும்,
·
தமிழ் இந்து நாளிதழில் - கிடப்பில் போடப்படுகிறதா
கீழடி? எனும் கட்டுரையும்,
·
தீக்கதிர் எனும்
நாளிதழில் நேர்காணல் நிகழ்ச்சியாக, கீழடி – தமிழர் நாகரிக வரலாற்றின் உயிர் நாடி எனும் தலைப்பிலும்,
·
தீக்கதிர் எனும்
நாளிதழில் நேர்காணல் நிகழ்ச்சியில், கீழடி – மூன்றாம் கட்ட ஆய்வும் முடித்துவைக்கும்
ஏற்பாடும்! எனும் தலைப்பிலும்,
·
கீழடி – சூழ்ச்சிக்கு
இரையாகும் வரலாறு எனும் கட்டுரை ஜீனியர்
விகடன் இதழில் வெளியான படைப்புகளாகும்.
தென்னந்தோப்புக்கு
நடுவில் நடந்த அகழாய்வு
பாண்டியர்களின் பழைய தலைநகர் மணலூரின்
கண்மாய்க்கரை மேட்டில்தான் இந்த தென்னந்தோப்பு அமைந்திருக்கிறது. காலத்தின் கரங்களால்
இறுகப் பூட்டப்பட்ட மதுரை என்ற ஊர் ஓர் ஆதி ரகசியத்தின் கதவை, தென்னந்தோப்பின் காற்று
மௌள அசைத்துப் பார்க்கிறது.
மதுரை என்றாலே சவால்களுக்குப் பஞ்சம் இருக்காது.
2,000 ஆண்டுகளுக்கு முன்பு, ஒருவன் உலகம் முழுவதும் இருக்கும் நகரங்களைப் பார்த்து
சவால் விட்டான். ‘ஒரு துலாக்கோளைக் கொண்டு வாருங்கள். அதன் ஒரு தட்டில் இந்த உலகத்தில்
உள்ள அனைத்து நகரங்களையும் வையுங்கள். இன்னொரு தட்டில், மதுரையை மட்டும் வையுங்கள்.
பெருமையும் சிறப்பும் காரணமாக மதுரை இருக்கும் தட்டே கனம் தாங்காமல் கீழ் இறங்கும்’
என்றான்.
”உலக
நகரங்களை எல்லாம் சேர்த்தாலும் மதுரையின் புகழுக்கு ஈடு ஆகாதா?” எனக் கோபம் கொள்ளத்
தேவையில்லை. மதுரை என்பது, ஈடு – இணையற்ற ஒரு நகரம் என்பதற்கான அறிவிப்பை, கம்பீரத்தோடு
அவன் வெளியிட்டிருக்கிறான். இந்த நகரத்தை அவன் எவ்வளவு நேசித்திருந்தால், இப்படி ஒரு
அறிவிப்பைத் தாங்கிய கவிதையை, தமிழ்ச் சமூகம் பாதுகாத்து வருகிறது. இந்தச் சமூகத்துக்கு
மதுரையின் மீது இருக்கும் மதிப்பை எண்ணிப் பாருங்கள்.
பரிபாடலில் ஆறாவதாக இடம்பெற்றுள்ள இந்தப்
பாடல், மதுரையைப் பற்றிய கவிதை அல்ல. கனவு. இவ்வளவு பெரிய கனவை உருவாக்கி, அதைக் காத்துவரும்
திறன் மதுரைக்கு உண்டு. ஏனென்றால், மதுரை என்பது ஒரு நகரத்தின் பெயர் மட்டும் அல்ல.
தமிழ்மொழியின், பண்பாட்டின், தமிழ் இலக்கியத்தின் முகம். அது நிலத்தைக் குறிக்கும்
சொல்லாக மட்டும் அல்லாமல், தமிழர்களின் நினைவைக் குறிக்கும் சொல்லாகவும் இருக்கிறது.
உலகின் மிக மூத்த அரச குலங்களில் ஒன்று
பாண்டியர்களின் குலம். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் வேப்பம் பூ மாலையை அடையாளப் பூவாக
அணிந்தப் பாண்டியர்களின் தலைநகரம் என சங்க
இலக்கியங்கள் சுட்டுகின்றன. இன்றளவும் மதுரையின் அரசி மீனாட்சிக்கு, திருநாளில் வேப்பம்
பூ மாலைதான் சூடப்படுகிறது. காலத்தின் மிக நீண்ட ஓட்டத்தில், தனது அடையாளங்களையும்,
மரபுகளையும் உதிர்ந்து விடாமல் மதுரை காத்து வருகிறது.
நீண்ட காலப்பரப்பில் மதுரையைப் பற்றி இலக்கியங்கள்
தொடர்ந்து பேசிவருகின்றன.
·
விந்திய மலைக்கு
தெற்கே புகழ்பெற்ற நகரமாக மதுரை இருந்தது என்பதை வால்மீகி வர்ணிக்கிறார்.
·
திரௌபதியின்
சுயம்வரத்தில் பாண்டிய அரசன் கலந்து கொண்டதாக வியாசன் எழுதுகிறார்.
·
வாதஸாயனரும்,
கௌடில்யரும், காளிதாசனும் இந்த நகரை வியந்து பாடுகின்றனர். கடல் கடந்த தேசங்களிலிருந்து
பயணிகள், காலந்தோறும் இந்த நகருக்குள் வந்த வண்ணம் இருந்துள்ளனர்.
·
பரிபாடலும், மதுரைக்காஞ்சியும் பதிவு செய்துள்ளன.
இதன் பிரமாண்டத்தை சிலப்பதிகாரம் விரித்துக் காட்டியுள்ளது.
·
தேவராம் பாடிய
மூவரும், ஆழ்வார்கள் பலரும் பாடியுள்ளனர்.
·
திருவிளையாடற்புராணம்
இந்த நகரை உச்சியில் ஏற்றிக் கொண்டாடுகிறது.
மதுரையின் பெருமைக்கும், பராம்பரியத்துக்கும்
உள்ள இலக்கிய ஆதாரங்களைப் போல எண்ணிலடங்காத வரலாறு மற்றும் தொல்லியல் ஆதாரங்களும் உள்ளன.
இதுவரை கண்டறியப்பட்ட கல்வெட்டுகள் அதிகம் கிடைத்திருப்பது மதுரை மற்றும் அதைச் சுற்றியுள்ள
பகுதிகளில் தான்.
மதுரை பள்ளிச்
சந்தைத் திடல்
தொல்பொருள் ஆய்வுத்துறை, மதுரையிலிருந்து
தென்கிழக்காக சுமார் 12 கிலோ மீட்டரில் பள்ளிச் சந்தைத் திடல் என்ற இடத்தில் தென்னந்தோப்புக்குள்,
கடந்த ஐந்து மாதங்களாக அகழ்வாராய்ச்சியை நடத்தி வருகிறது. அந்த ஆய்வில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள
பொருட்களும் அமைப்புக்களும் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன.
சுமார் 2,500 – க்கு முற்பட்ட ஆண்டுகளில், மனிதர்கள் குடியிருந்த
குடியிருப்புப் பகுதியாக வரிசை, வரிசையாக வீடுகள், மிக அகலமான செங்கற்கள், தரைத்தளமாக,
கனமான தட்டோடுகள், மேற்கூரைக்கு ஆணி அறையப்பட்ட செம்மண் ஓடுகள், வீடுகளை ஒட்டி பெரும்
அகலத்தில் நீண்ட சுவர்கள், தண்ணீர் வழிந்தோட வடிகால்கள், வட்ட வடிவ உரையிடப்பட்ட கிணறு
என நிலத்துக்குள் ஒரு நகரமே துயில் கொண்டிருக்கிறது. அதைத் துயில் எழுப்பும் முயற்சியில்
தொல்பொருள் ஆய்வுத் துறை ஈடுபட்டிருக்கிறது. நீருக்குள் மூழ்கிய நகரங்களை, ஹாலிவுட்
படங்களின் கிராஃபிக்ஸ் காட்சிகளில் பார்க்கலாம். ஆனால் மண்ணுக்குள் இருந்து மேலே எழும்
நகரங்களை தமிழ்நாடு போன்ற மனித நாகரிகத்தின் பாரம்பரிய தொட்டில்களில்தான் பார்க்க முடியும்.
பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளால் ஒருபோதும் கைக்கொள்ள முடியாத பெருமைகளை நம் நாட்டு
கிராம ஊராட்சிகள் தன்னகத்தே கொண்டுள்ளன.
தமிழ்நாட்டில் இதுவரை நடந்துள்ள அகழாய்வுகளில்
சங்க காலத்தில் குடியிருப்புப் பகுதி கிடைத்திருப்பது இதுதான் முதல்முறை என்கிறார்கள்
தொல்லியலாளர்கள். இங்கு கிடைத்திருக்கும் பொருட்களின் பட்டியல் மிக நீளமானது மற்றும்
நம்ப முடியாத வியப்பை ஏற்படுத்தக்கூடியது.
இப்போது சொல்லுங்கள்... பரிபாடலில் புலவன்
எழுதியது வெறும் வாய்ச்சவடால் அல்ல. வாழ்வின் செருக்கில் இருந்து மேலெழுந்த சவால் என்பது
உண்மை அல்லவர?
வைகை நதி நாகரிகம்
மனித குலத்தின் நாகரிகங்கள் எல்லாம் நதிக்கரையின்
ஈர மணலில்தான் தொடங்கின. ஜீவநதி அல்லாத வரளும் நதிக்கரையிலும் மனித நாகரிகம் தழைத்தோங்கும்
என்பதற்கான சான்றுதான் வைகை. தமிழ் நாகரிகத்தின் தொட்டிலாக வைகையே இருந்துள்ளது. வருடத்தில்
நான்கு மாதங்களே நீர் ஓடும் வைகையின் கரையில், பல்லாயிரம் ஆண்டுகளாக மக்கள் கூட்டம்
செழித்தோங்கி வளர்ந்துள்ளது.
மத்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் அகழாய்வுப்
பிரிவு, வைகை நதிக்கரை நாகரித்தைப் பற்றி முழுமையான கள ஆய்வை நடத்த முடிவு செய்தது.
அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழு, 2013 மற்றும் 2014 – ம் ஆண்டுகளில் வைகையின்
தொடக்க இடமான வெள்ளிமலையில் இருந்து, அது வங்கக் கடலில் கலக்கும் அழகன் குளம் – ஆத்தங்கரை
வரை ஆற்றின் இருபுறமும் ஐந்து கிலோ மீட்டர் தூரத்துக்குள் இருக்கும் எல்லா கிராமங்களிலும்
தொல்லியல் கள ஆய்வு நடத்தியது.
சுமார் 350 கிராமங்களில் கள ஆய்வை நடத்திய
இந்தக் குழு, 293 கிராமங்களில் ஏதேனும் ஒரு வகையில் தொல்லியல் எச்சங்கள் இருப்பதைக்
கண்டறிந்துள்ளது. அதாவது 80 சதவிகிதக் கிராமங்கள், வளமான வரலாற்று ஆதாரங்களைக் கொண்டுள்ளன.
256 கிலோ மீட்டர் நீளம் கொண்ட ஒரு நதியில், சுமார் ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு கிராமம்
காலத்தின் மங்காத சுவடுகளை, தனது தோளில் சுமந்தபடி நிற்கிறது. வைகை வறண்ட நதி அல்ல...
வரலாற்று நதி என்பதை நிரூபிக்கும் புள்ளி விவரங்களே இவை.
மதுரைக்கு மிக அருகில் வைகை ஆற்றங்கரையில்
அமைந்திருக்கும் கிராமம், தேனூர், முதலாம் இராஜராஜசோழன் கல்வெட்டும், சடாவர்மன் சுந்தரபாண்டியன்
காலத்து கல்வெட்டும் சங்க இலக்கியமும் இந்த ஊரின் சிறப்பைப் பதிவு செய்கின்றன. என இலக்கிய,
தொல்லியல் அறிஞர்கள் கூறுகின்றனர். ஆனால், அறிஞர்கள் யாரும் ஆய்வு நடத்தாமல், தானாகவே
வெளிவந்த சுயம்புவான கண்டுபிடிப்பு ஒன்று உண்டு.
சிலப்பதிகாரத்தின் கடைசிப் பகுதியில்
1,000 பொற்கொல்லர்களின் தலைகளைக் கொய்து கண்ணகியைச் சாந்தப்படுத்தினான் பாண்டிய வேந்தன
எனச் சொல்லப்படுகிறது. இது ஒரு படைப்பாளியின் கற்பனையாக இருக்கலாம். ஆனால் பெரும் எண்ணிக்கையில்
பொற்கொல்லர்கள் இங்கு வாழ்ந்திருக்கிறார்கள் என்பதன் காட்சி இது. இவ்வளவு பெரும் எண்ணிக்கையில்
பொற்கொல்லர்கள் வாழ்வதற்கான தேவை இருந்த நகரமாக மதுரை இருந்துள்ளது. அப்படியென்றால்,
அவ்வளவு வேலைப்பாடுகள் செய்யத் தேவையான பொற்குவியல் இருந்துள்ளது என்பதை, யூகிப்பது
கடினம் அல்ல.
ஒரு கல்வெட்டு ஆதாரம், ஓர் இலக்கிய ஆதாரம்,
ஒரு வாய்மொழி வரலாற்று ஆதாரம்,.. என ஒவ்வொன்றாகச் சேர்த்துக் கொண்டிருந்தால், கை நிறையத்
தங்கக் கட்டிகளோடு நம் முன்னால் வந்து நிற்கிறாள் கோதை. அவளின் கைகளில் இருக்கும் மண்
கலயத்திலேயே இவ்வளவு தங்கம் என்றால், மாமதுரைக்குள் எவ்வளவோ?
சங்க இலக்கிய அகநானூற்றுப் பாடல் ஒன்றில்
பொருள் தேடி வடதிசை சென்ற தலைவன் தேடி வடதிசை சென்ற தலைவன் வரத் தாமதமாவதால் கோபமான
தலைவி, ‘பாடலிபுரத்தில் எடுத்து சோணை நதிக்கரையில்
ந்ந்த வம்சத்தினர் புதைத்து வைத்த புதையல் நம்மைவிட அதிக செல்வத்தைக் கொண்டது என நினைத்துத்
தேடிக் கொண்டிருக்கிறானோ? எனக் கேட்கிறாள். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, சோணை
நதிக்கரை நந்த வம்சத்தினரின் புதையலுக்கு இலக்கியம் கூறுகிறது.
சாம்ராஜ்ஜியங்களை ஆண்ட பேரரசர்களின் பெயர்கள்
கூட கல் எழுத்துக்குள் பதுங்கியிருக்கும் நிலையில் சாமானியப் பெண்ணின் பெயர் ஒன்று,
பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட்டு இன்றும் மின்னுகிறது. அந்த மின்னும் ஒளியின் சிரித்துக்
கொண்டே கோதை சொல்லும் செய்தி இதுதான்.
வைகை நதிக்கரை சங்கத் தமிழை மட்டும் வளர்க்கவில்லை.
தங்கத் தமிழையும் வளர்த்தது!.
நடுகற்கள்
நமது முன்னோர்கள் இறந்து போன ஒருவன், எதிர்காலத்தில்
நினைக்கப்பட வேண்டும் என்பதற்கான எண்ணற்ற முயற்சிகளைச் செய்தார்கள். அவர்களது விடாப்பிடியான
முயற்சியின் அடையாளமே நடுகற்கள்.
தொல்காப்பியன் தனது இலக்கண நூலில், ஒரு வீரனின் புகழை என்றென்றும் சுமந்து நிற்கப்
போவதால் வலிமை மிகுந்த கல்லைத்தான் நடுகல்லாக நடவேண்டும். ஊருக்குப் பக்கத்தில் கிடக்கிறது
என்பதால், எந்தக் கல்லையும் தூக்கி நட்டு விடக் கூடாது” என்கிறான்.
நெற்கதிரில் விளைந்த கதிர், விளையாத கதிர்
என இருப்பது போல, கல்லிலும் விளைந்த கல், விளையாத கல் இருக்கின்றன. உதாரணமாக, இமயமலைக் கல்லை வைத்து அம்மி – குழவி செய்தால்,
அம்மியில் வைத்து இஞ்சியை இடிக்கும் போது இமயமும் இடிந்துவிடும். அதுவே விளைந்த கல்லில்
செய்தால், இடி தாங்காது இஞ்சி.
ஆள்காட்டி விரலை மடித்து, மண்பானையைத்
தட்டிப் பார்த்து வாங்கும் பாட்டியைப் போல, பாறையின் மேலே ஓடும் ரேகையைத் தட்டிப் பார்த்து,
அதன் விளைச்சலையும், பக்குவத்தையும் சொல்லும் மனிதர்கள் இன்றும் இருக்கிறார்கள். அவர்கள்
மரபு வழியில் அறிவைப் பெற்றவர்கள்.
நடுகற்கள் அமைக்கும் பழக்கம் சங்க காலத்தில்
மிக அதிகமாக இருந்ததை இலக்கியங்கள் மூலம் அறியலாம். ஏழு வகையான போர்கள். அவற்றில் எண்ணற்ற
வகையான மரணங்கள். எல்லா மரணங்களும் சமூகத்தால் நினைக்கப்படுவது இல்லை. அவற்றில் தனித்துவமாக
வீரத்தை வெளிப்படுத்தியவனின் செயல்தான் போற்றப்படுகிறது. அந்த வீரனே கல்லிலும் கவியிலும்
வாழ்பவன் ஆகிறான்.
பாறை ஓவியம்
மனிதன் தோன்றியவுடன் எழுத்துக்களைக் கண்டறிந்துவிடவில்லை.
ஓவியமும் எழுத்தும் தாயும் சேயும் போல. ஓவியத்துக்கு வயது சுமார் 30 ஆயிரம் ஆண்டுகள்
என்றால், எழுத்தின் வயது சுமார் 3,000 ஆண்டுகள் தான். கோடிகளின் கடைக்குட்டிதான் எழுத்து.
மனிதனின் பரிணாம வளர்ச்சியில் பாறை ஓவியங்கள் மிக முக்கிய சாட்சியம். எழுதப்பட்ட வரலாறுகளால்
எட்டித் தொட முடியாத எல்லையை ஆதிமனிதனின் முதல் கிறுக்கல்கள்தான் ஆவணப்படுத்தியுள்ளன.
வைகை கரையில் வளர்ந்த நாகரிகமும் தனது பழமையான சாட்சியங்களை பாறை ஓவியங்களில்தான் பாதுகாத்து
வைத்துள்ளது.
பாறையில் வரையப்பட்ட ஓவியம் சொல்லும் வரலாறு
இது என்றால், பானை ஓட்டில் வரையப்பட்ட ஓர் ஓவியமோ கடல் கடந்த கதையைச் சொல்கிறது.
பானை ஓட்டில் பதிவான ஓவியம்
வைகை நதி கடலோடு கலக்கும் முகத்துவாரத்தில்
இருக்கும் இடம் அழகன் குளம். இது ஒரு துறைமுக நகரம். தூர தேசங்களிலிருந்து கப்பல்கள்
சதா வந்து போய்கொண்டிருக்கும் இடம்.
கடற்கரை பகுதியில் வெயிலின் தாக்கம் தாங்க
முடியாமல் பனை மர நிழலில் சற்றே ஆசுவாசப் படுத்திக் கொண்டவன். கண்களைத் திறந்து பார்த்தான்.
கடலில் அசைந்தாடியபடி கப்பல் ஒன்று கரையை நோக்கி வந்து கொண்டிருந்தது. கப்பல் தனித்துவமான
அழகோடு இருப்பதை அவன் கூர்ந்து கவனித்தான். அதன் அழகை தரையில் கிடந்த உலோக்க் குச்சி
ஒன்றை எடுத்தவன், அந்தக் கப்பலைப் பார்த்தபடியே கையில் வைத்திருக்கும் பானை ஓட்டின்
மேல் கீற ஆரம்பித்தான். அவனது கீறல்களின் மூலம் கொஞ்ச கொஞ்சமாக அந்தக் கப்பல் கோட்டோவியமாகப்
பதிவானது.
பானை ஓட்டில் பதிவான அந்த ஓவியம். ஓர்
அபூர்வ ஆவணமாக மாறும் என யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். அந்த துறைமுகத்தையே மண்
மூடச் செய்தது. நூற்றாண்டுகள் உருண்டோடின. அந்த இடத்தில் ஒரு துறைமுகம் இருந்ததை இலக்கியத்தில்
பதிவு செய்யாமல் போயினர். தமிழர்களின் நினைவில் இருந்தே அழகன்குளம் அழிந்து போனது.
சுமார் 2,000 ஆண்டுகள் கழிந்த பின்னர், தமிழ்நாடு தொல்லியல் துறையினர் ‘கோட்டைமேடு’
என மக்களால் இன்று அழைக்கப்படும் அந்த மண் மேவிய பகுதியில் அகழ்வாராய்ச்சி நடத்தினர்.
அப்போது மண்ணுக்குள் சிதையுண்ட பானை ஓடுகள் கிடைத்தன. அதில் இந்த கையளவு அகலம் கொண்ட
பானை ஓட்டில் கப்பலின் கோட்டோவியம் ஒன்று இருந்தது. இதை ஆய்வு செய்த தொல்லியலாளர்கள்
இதில் வரையப்பட்டுள்ளது அன்றைய ரோமானியக் கப்பல் என்றும் உறுதிபடுத்தினர்.
எகிப்து நாட்டின் துறைமுகத்தில் கிடைத்த
பானை ஓடும், ஆஸ்திரியா நாட்டு அருங்காட்சியத்தில் இருக்கும் ஒரு வணிக ஒப்பந்தமும்,
அழகன்குளத்துப் பானை ஓட்டு ஓவியமும் வணிகம் சிறப்பாக நடந்த நிகழ்வை உலகுக்குத் தந்துள்ளன.
கடல் பயண வழிகள்
சிந்துவெளிப் பகுதியில் கண்டறியப்பட்ட
கப்பல் முத்திரைகள் அன்றைய செழிப்பு மிகுந்த நாகரிகத்தின் சான்றாக விளங்குகின்றன. நடுக்கடல்
பயண வழிகள், கண்டு அறியப்படாத காலம் அது. அந்த காலத்தில் கரையை ஒட்டிய பயணமாக கப்பல்கள்
செல்லும்பொழுது சில நேரங்களில் கப்பல்கள் விலகி, கடலுக்குள் நீண்ட தூரம் சென்று விட்டால்,
கரை எந்தத் திசையில் இருக்கிறது என்று தெரியாமல் போய்விடும். அப்பொழுது மாலுமி, தன்னிடம்
உள்ள காகத்தை எடுத்துப் பறக்க விடுவார். அது, கரை இருக்கும் திசையை நோக்கி பறந்து செல்லும்.
அதனை வைத்து கப்பலை இயக்குவார். கப்பல்களுக்கு காகங்கள் வழிகாட்டிய காலம் அது. ஃபாராவில்
கிடைத்த கப்பல் முத்திரையில் திசைகாட்டும் பறவையும் சேர்ந்திருக்கிறது. சிந்துவெளிப்
பகுதியில் நடந்த வணிகப் பரிமாற்றத்தின் சான்றாகப் பார்க்கப்படுகிறது.
வணிகத்துக்கு வந்தவர்கள் பெரும் பொருளோடும்
புதிய பண்பாட்டோடும் வந்து இறங்கியிருக்கின்றனர். இந்தப் புது விருந்தினர்களின் முன்வருகையை
உணர்த்துவதாக காக்கை இருந்தது என்பதைக் காக்கைபாடினியார் நச்செள்ளையார் ‘விருந்தினர்
வரவை உணர்த்தும் காக்கையும் கரைந்தது’ என்பதைப் பாடியதற்காகவே காக்கைப்பாடினியார்
என்று பெயர் எடுத்தக் கவி. இன்று இருக்கும் நம்பிக்கை 2,000 ஆண்டுகளுக்கு முன்னால்
இருந்தது என்பதற்கு இந்தப் பாடலும், பாடலாசிரியரின் பெயருமே சான்று கூறுகின்றன.
கிரேக்கத்தின்
அரசியல் வரலாறு
வரலாறு எனும் விசித்திரத்தை,
அது விட்டுச் சென்ற காலடித் தடத்தில் இருந்து மட்டுமே நாம் அனுமானிக்க முடியும். அடுத்தவன் ஆய்வு செய்து
மறுக்கும் வரை இந்த அனுமானத்தை உண்மை என வாதிட்டுக் கொண்டிருக்கலாம். வரலாறும் உண்மையைப்
போலவே நிரந்தமானது அல்ல.
அரசியல்
காரணங்களால் வடஇந்திய தொடர்புகள் அறுபட்ட நிலையில் ரோமானியர்கள் கடல்வழியைக்
கண்டறிந்து மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் யவனர்களாக வாணிபம் செய்தது, அதற்கான சான்றுகளாக நிறைய ரோமானிய நாணயங்கள் வைகை நதிக்கரை
ஓரம் கிடைத்தது இப்படி ஏராளம் அரிய காட்சிகளை படம் பிடித்துக் காட்டுகிறார்.
பார்த்தியாவுடன்
யுத்தம் நடத்தி இறுதியில் சமரசம் செய்து கொண்ட மன்னன் அகஸ்டஸ் சீசரின் (இவன்
பெயரில் தான் ஆகஸ்ட் என ஓரு ஆங்கில மாதத்துக்குப் பெயரிடப்பட்டது) ஆட்சிக்
காலத்தில், ரோம் நகரம் வணிகத் தொடர்பு வைத்துள்ள நகரங்களைப் பற்றி வரைபடத்தைத்
தயாரிக்கச் சொன்னான். அவனது ஆணைப்படி, கல்லிலே பொறிக்கப்பட்ட ஒரு வரைபடம்
தயாரிக்கப்பட்டது. ‘பியூட்டிங்கர் டேபிள்’ என அழைக்கப்படும் அந்த வரைபடத்தில்
பாண்டிய துறைமுகம் கொற்கை குறிப்பிடப்பட்டுள்ளது. கல்லிலே வரையப்பட்ட வரைபடத்தில்
மதுரையை ஆட்சி செய்த நன்மாறனைப் பற்றி நக்கீரன் என்கிற புலவன் கவியிலே ஒரு
வரைபடத்தை வரைந்து காட்டினான். அரண்மனையில் மன்னனின் அன்றாட வாழ்வைப் பற்றிய
பாடலாக எடுத்துக் கொள்ளலாம்.
எல்லாக்
காலங்களிலும் பண்பாடு. வணிகத்தைப் பின்தொடர்ந்து வந்து சேரும். அப்படிதான்
எண்ணற்றவை வந்து சேர்ந்தன.
ரோமானியர்களின் வரலாறு
கி.பி.
முதலாம் நூற்றாண்டில் பெயர் அறியபடாத மாலுமியால் எழுதப்பட்ட ‘The periplus of the Erythraean sea’ என்ற நூலில், ரோமானியப் பேரரசுக்கு இந்தியாவில்
இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களின் விவரங்கள் அளிக்கப்படுகின்றன. அவற்றில் முத்து.
மிளகு. பட்டு. கற்பூரம், நவரத்தினங்கள் ஆகியவை முக்கிய இடத்தைப் பெறுகின்றன. தமிழகத்திலிருந்து
கிரேக்கத்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்டப் பொருட்களாக பாண்டி நாட்டு முத்துக்கள், சேர
நாட்டு மிளகு, சோழ நாட்டின் நவரத்தினக் கற்களும் ஆகும். குறிப்பாக முத்துக்களின் ஆதிக்கமே
அன்று ரோமாபுரியை ஆட்டிப்படைத்திருக்கிறது. ஒரு பெண் முத்து அணிந்து பொது இடத்தில்
நடந்து செல்வது என்பது, அவளுக்கு முன்னால் ஒரு படைவீரர் நடந்து செல்வதைப் போல் மதிப்பு
அளிப்பதாக அவர்கள் கருதினார்கள்.
ரோமாபுரியிலிருந்து வருடத்திற்கு
மில்லியன் தொகைகள் மதிப்பிலான தங்கம் வீணாவதாக அரசின் கணக்காளர்கள் கண்டித்தார்கள்.
கிளியோபாட்ரா, தான் அருந்தும் மதுவில் தன்னிடம் உள்ள விலை உயர்ந்த முத்தைக் கரைத்துக்
குடித்தாள் என்பதும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இந்த ஆய்வுப் பணியை மேற்கொள்ளும்
குழுவின் பொறுப்பாளர் அமர்நாத் இராமகிருஷ்ணன் கூறுவது போல, அகழாய்வுக்கான ஒரு பொக்கிஷம்
கீழடி! இந்த இடத்தை நாம் பாதுகாப்பதும் தொடர்ந்து இங்கு அகழாய்வுப் பணிகள் நடப்பதை
உறுதி செய்வதும் தமிழ் சமூகம் முன்னெடு்க்க வேண்டிய கடமை. இங்கு நடத்த வேண்டிய ஆய்வுக்கான
ஒரு நீண்ட காலத் திட்டத்தை, தொல்லியல் துறை உருவாக்கப்பட வேண்டும். அதைப் பாதுகாத்து
அடுத்தத் தலைமுறையின் கையில் சேர்க்கவேண்டும். தமிழ் மொழியின் மீதும், வரலாற்றின் மீதும்,
பண்பாட்டின் மீதும் அக்கறை கொண்ட எல்லோரும் ஒருங்கிணைந்து பதில் தேட வேண்டிய கேள்விகள்
இவை.
கீழடி – யாசகம் கேட்கும் தொல் நகரம்
எனும் தலைப்பில், கீழடியில் இருக்கும் தொல்லியல்
மேடு, சுமார் 110 ஏக்கர் பரப்பைக் கொண்டது. அதில் வெறும் 50 சென்ட் நிலப்பரப்பில் தான்
அகழாய்வு நடந்துள்ளது. மீதமிருக்கும் பெரும் பகுதியில் ஆய்வுகள் தொடர்ந்து செய்தால்,
இந்த நகரத்தின் பல்வேறு பகுதிகளை நம்மால் கண்டறிய முடியும். இந்த ஆய்வினை அர்ப்பணிப்பு
உணர்வோடு நடத்திக் கொண்டிருக்கும் அமர்நாத் இராமகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர்.
சங்க
இலக்கியம் சொல்லும் அதே புவியியல் அமைப்பில்தான் இன்று அகழாய்வு இடம் இருக்கிறது.
கீழடி – புனைவும் அரசியலும்
கீழடி
நிலத்தைப் பாதுகாப்பது என்பது ஒரு பெரும்பணி. ஒரு பெரும் நாகரிகத்தின் அடையாளங்களைத்
தாங்கி நிற்கும் இந்தத் தொல்லியல் மேட்டைப் பாதுகாத்து எதிர்காலத் தலைமுறையினரிடம்
ஒப்படைக்க வேண்டிய பொறுப்பு நம்மிடம் இருக்கிறது. அரசியல் மனஉறுதி தேவைப்படுகிறது.
அதை உருவாக்க அனைத்து முனைகளிலும் இயங்க வேண்டிய தேவையுள்ளது.
கீழடி – தமிழர் நாகரிக வரலாற்றின் உயிர் நாடி,
கீழடி – மூன்றாம் கட்ட ஆய்வும் முடித்துவைக்கும் ஏற்பாடும்!
என்ற இரண்டு தலைப்புக்களில் நேர்காணல் நிகழ்ச்சியில் சு.வெங்கடேசன் அவர்கள்
ஆற்றிய உரையில் சுருக்கமாக,
கீழடி என்ற கிராமம் தேர்வு செய்யப்பட்டதன் பின்னணி
- தனித்துவம் - தற்போதைய பிரச்சனை -கீழடியின் மூன்றாம் கட்ட அகழாய்வு முடிவுகள் - ஆய்வாளர்
ஸ்ரீராமன் தெரிவித்துள்ள பின்னணி
போன்ற வினாக்களுக்கு விடைக் காணும் வகையில்
நேர்க்காணல் அமைந்துள்ளது. அதற்கு நூலாசிரியர் நல்லதொரு விளக்கத்தை அளித்துள்ளார்.
அவற்றில் ஒரு வினாவாக,
கேள்வி - அகழாய்வு செய்வதற்கு கீழடி என்ற கிராமத்தை ஏன் தேர்வு
செய்தார்கள். அதன் பின்னணி என்ன? என்ற கேள்விக்கு,
பதிலாக,
- மத்திய தொல்லியல் துறையினர், 2013 - 14 ம் ஆண்டுகளில் வைகை நதிப் படுகையில் உருவான
நாகரிகத்தைப் பற்றி ஆய்வு செய்ய விரிவான ஒரு கள ஆய்வை நடத்தினர். வைகை நதி தொடங்கும்
இடத்திலிருந்து அது கடலில் கலக்கும் இடம் வரை நதியின் இரண்டு பக்கங்களும் மூன்று கிலோமீட்டர்
தொலைவரை உள்ள அனைத்து கிராமங்களையும் ஆய்வு செய்தனர். தொல்லியல் எச்சங்கள் மிக அதிகமாக
அடையாளம் காணப்பட்ட கிராமம் கீழடி. இது மதுரையிலிருந்து 15 கிலோ மீட்டர் தூரத்தில்,
சிவகங்கை மாவட்ட எல்லையில் உள்ளது.
நிறைவாக,
·
"வைகை நதி நாகரிகம் –
கீழடி குறித்த பதிவுகள்" என்ற இந்த
நூல்,
தமிழர் பண்பாட்டை புதிய அடையாளங்களோடு உலகிற்கு காட்டும்
முயற்சியின் முக்கிய கட்டமாக விளங்குகிறது.
·
இந்நூல் தமிழ் நாகரிகத்தின்
பாரம்பரியம்,
அறிவியல் வளர்ச்சி, நகர அமைப்பு, சமூக அமைப்பு ஆகிய அனைத்தையும் பன்முகமாக நோக்கும் ஒரு முக்கிய ஆவணமாகும்.
·
கண்ணகி
வாழ்ந்த ஊர் கடை சிலம்பு ஏந்தல் (கடைச்சநேந்தல்), தேனூர், அந்த நரி (அந்தனேரி), வெம்பூர் (குத்துக்கல்), புலிமான்கோம்பை (புள்ளிமான் கோம்பை), அழகன்குளம் இப்படி ஏராளமான தரவுகளை வாரி வழங்கியிருக்கிறார் நூலாசிரியர் சு. வெங்கடேசன்
அவர்கள்.
·
"வைகை நதி நாகரிகம் –
கீழடி குறித்த பதிவுகள்" என்பது
சாதாரண வரலாற்று புத்தகமல்ல. இது தமிழரின் அடையாளப் போராட்டத்தின் ஒரு முக்கிய
ஆவணமாகும். கீழடியின் மண்ணில் புதைந்திருந்த தமிழர் பாரம்பரியத்தை உலகிற்கு
அறிவித்த அரிய ஆவணமாகும்.
·
இந்த நூல் வாசகனை சிறந்த வரலாற்றுப்
பயணத்துக்குள் அழைத்துச் செல்கிறது.
· பழங்கால வைகை நாகரித்தை நம் கண்முன் காட்டும்
அரிய பொக்கிஷமாக அமைந்துள்ளது.
· இந்நூல் மாணவர்களும், ஆய்வாளர்களும் பயன்பெறும்
வகையில் அமைந்துள்ளது.
சிக்மண்ட்
ஃபிராய்ட் என்பவர்,
”உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ அதுபோல
மனதுக்குப் பயிற்சி புத்தக வாசிப்பு” என்று கூறியதற்கேற்ப வாசிப்பை நேசிப்போம்.
Comments
Post a Comment