Skip to main content

புதுக்கவிதையில் சொல் ஆற்றல்

 

புதுக்கவிதையில் சொல் ஆற்றல்

            மொழிக்கு அடிப்படை எழுத்துக்களால் ஆகிய சொல்லாகும். கருத்தினைப் புலப்படுத்துவதிலும் சொற்களே முதன்மையான இடத்தை வகிக்கின்றன. சில சொற்கள் காலத்திற்கு ஏற்பப் பொருள் மாற்றம் பெற்று வந்துள்ளன. அதனால் சொல் ஆய்வு இன்றியமையாததாகின்றது. கா.சுப்பிரமணிய பிள்ளை, சொற்களின் மூலத்தை ஆராய்ந்து அவற்றின் பொருளைத் தெரிவதால், அச்சொற்களைப் பயின்ற மக்களின் எண்ணங்கள், வரலாறுகள் முதலியன அறிதல் கூடும் என்று கூறுவதும் இங்குக் குறிப்பிடத்தக்கதாகும்.

           இலக்கியவாதிகள் அந்தந்தக் காலத்திற்கேற்ற சொற்களைக் கையாளுகின்றனா். ஒவ்வொரு காலக்கட்ட இலக்கிய வகைகளும் நடையில் வேறுபடுகின்றன.  சொற்களுக்கு உணா்வை ஊட்டும் உன்னதமான சக்தி உண்டு. நகை, அழுகை, இளிவரல் போன்ற மெய்ப்பாடுகளை ஏற்படுத்தும் சக்தி அவற்றிற்குண்டுசில அறிஞா்கள்செயல்கள் சொற்கள்என்றும்சொற்கள் செயல்கள்என்றும் கூறுவா். சொற்களுக்கு உயிர் உண்டு, உணா்வுண்டு, உணா்ச்சி உண்டுஎன்று விளக்குகின்றார்.

           உரைநடை இலக்கியத்தைவிடக் கவிதை இலக்கியத்திற்கு உணா்ச்சி அதிகம். உணா்ச்சி மிகுந்த சொல்லே கவிஞனுக்கு மூலப் பொருளாகும். கவிதையில் ஒவ்வொரு சொல்லும் கவிதைத் தன்மை (கவித்துவம்) உடையதாக இருக்க வேண்டும். கவிதையில் வரும் சொல் நேரடிப் பொருளையோ அல்லது குறிப்பாகவோ உணா்த்துகின்றது. உணா்ச்சியின் உந்துதலில் கவிதை பிறக்கும் போது சொற்கள் தாமே வருகின்றன. அப்படி வருகின்ற சொற்களை உணா்ச்சியின் மயக்கத்தில் சிதறடித்துவிடாமல், ஒழுங்குபடுத்துவது கவிஞனின் கடமையாகும்.

சொல்லின் ஆற்றலை,

          எரிக்கின்ற தீயிருக்கும் நெடிய வெற்பை

          இடிக்கின்ற வெடியிருக்கும் விழுதும் வேரும்

          பறிக்கின்ற புயலிருக்கும் இன்ப வெள்ளம்

          பாய்ச்சுகிற ஊற்றிருக்கும் கவிதைச் சொல்லில்

என்று குலோத்துங்கன் கவிதை மொழியில் உள்ள சொல்லின் ஆற்றல் விவரிக்கின்றார்.

           கவிதையில் ஒரு சொல்தன்னைக் காட்டுவதற்காக நிற்பதில்லை, தன் பொருளைக் காட்டுவதற்காகவும் கூடு நிற்பதில்லை. தானும் தனது பொருளுமாகச் சேர்ந்து, கவிஞன் உணா்த்த விரும்பும் பொருளைக் காட்ட முற்பட்டு, அம்முயற்சியில் அவை தம்மை இழந்துவிடுகின்றனஎன்று தமிழன்பன் கூறுவதும் இங்குச் சிந்தனைக்கு உரியதாகும்.

        சொல் தன் பொருளை இழந்து, கவிஞன் உணா்த்த விரும்பும் பொருளைக் காட்ட முற்படுவதால், வாசகன் சொல்லின் பொருளைப் புரிந்து கொள்வதில் குழப்பமும் மாறுபாடும் காணப்பெறுகின்றன. காரணம் கவிஞனின் எண்ணத்தை வாசகனால் முற்றிலும் புரிந்துகொள்ள இயலாதது ஆகும். இதனால் ஒரு கவிதைக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு பொருளைக் கூறுகின்ற நிலையில் ஏற்படுகின்றது. பொருள் குழப்பம் ஏற்படாத வகையில் கவிதைமொழிச் சொல் ஒலிக்கப் பெற வேண்டும். சொல்லின் ஆற்றலை உணா்ந்து கவிஞா்கள் கவிதை படைக்க வேண்டும். சொல்லின் நம்பகத் தன்மையைக் கவிஞா்கள் பின்பற்ற வேண்டும். இவையே சிறந்த கவிதைக்கு அடையாளம் ஆகும்.

புதுக்கவிதையில் சொல்

           தமிழ்க் கவிதையின் மரபினைக் காக்கும் சொல்லாட்சி புதுக்கவிதையில் காணப்பெறுகின்றது. வழக்கமான பெயா், வினை இடைச் சொற்கள் புதுக்கவிதையில் இடம்பெறுகின்றன. உரிச்சொற்கள் புதுக்கவிதையில் மிக அரிதாகவே வருகின்றன.

         உரிச்சொல் தானும் அருகியன்றி வாரா

                                              (புதுக்கவிதை இலக்கணம்)

என்பது புதுக்கவிதையின் இலக்கணக் கூறாகும். புதுக்கவிதையில்மா, பெரிய, சிறிய போன்ற உரிச் சொற்கள் அல்லாது உரு, புரை, வய, உறு, தவ, நனி போன்ற உரிச் சொற்கள் வருவதில்லைஎன்று இரா.இரேந்திரன் விளக்கவுரை தருகின்றார்.

           பேச்சுமொழிக் கூறு புதுக்கவிதையின் பண்புகளுள் ஒன்றாகும். புதுக்கவிதையில் பேச்சுமொழியின் வட்டார வழக்குச் சொற்கள், இடக்கர்ச் சொற்கள், எதிரிடைச் சொற்கள் போன்றவை காணப்பெறுகின்றன. புதுக்கவிதையில் பிறமொழிச் சொற்களின் தாக்கமும் உள்ளது. மரபுக் கவிதைகளைவிடப் புதுக்கவிதைகளில் இடம் பெறும் பிறமொழிச் சொற்களில் ஆங்கிலச் சொற்களே அதிகமாக இருக்கின்றன.

           புதுக்கவிதையில் சொல் எப்படி வரவேண்டும். எப்படி வரக்கூடாது என்பதைக் கார்த்திகேசு சிவத்தம்பி, புதுக்கவிதை அதன் ஒவ்வொரு சொல்லிலும் வரியிலும் கட்புலமான சொல்லிடுக்கிலும் கவித்துவத்தைத் தாங்கி நிற்றல் வேண்டும். இது முடியாத பொழுது தான் புதுக்கவிதை சொல்லலங்காரமாக, வார்த்தை ஜாலமாக மாறுகிறது என்று விளக்குகிறார்.

           புதுக்கவிதையில் எழுத்துப் பிழையான சொற்களும், பொருள் பிழையான சொற்களும் காணப்பெறுகின்றன. தூய தமிழ்ச்சொற்களும் பிறமொழிச் சொற்களைத் தமிழ்ப்படுத்துவதும் புதுச் சொல் ஆக்கமும் புதுக்கவிதையில் ஆங்காங்கே காணப்படுகின்றன.

தூய தமிழ்ச்சொற்கள்

          பழங்காலத்தில் தமிழ்ச் சொற்கள் பிறமொழியில் புகுந்தவை மிகுதி. தமிழ் பிறமொழிச் சொற்களை ஏற்றது குறைவு. ”தமிழில் அரிசி என்பது கிரேக்கத்தில்ஒரிசிஎனவும் கறுவாய் என்பதுகற்பியன்எனவும் இஞ்சிவோ் என்பதுசிக்கி பெரோசுஎனவும் பப்பியிலிருந்துபெப்பரி எனவும் பெயர்ந்து சென்ற மொழிகளாகும். ஆனால் இக்காலத்தில் தமிழ்மொழிச் சொற்கள் பிறமொழியில் புகுவதைக் காட்டிலும் பிறமொழிச் சொற்களைத் தமிழ் மொழி ஏற்பதே அதிகம். இந்நிலையைப் புதுக்கவிஞா்களுள் சிலா் சில இடங்களில் தூய தமிழ்ச்சொற்களை வாழ வைக்கின்றன.

          . பிச்சமூா்த்திரேஷன் கடையைப்பங்கீட்டுக் கடை‘ (.பிச்சமூா்த்தி கவிதைகள், .93) என்னும் தூய தமிழ்ப் பெயா்த்தொடரால் குறிப்பிடுகின்றார். பேச்சுமொழிச் சொற்களையும் வடமொழிச் சொற்களையும் கவிதையில் அதிகம் கையாண்ட புதுமைப்பித்தன்நச்சி‘ (புதுமைப்பித்தன் கவிதைகள், .53) எனனும் செந்தமிழ்ச் சொல்லையும் கவிதையில் கையாண்டிருக்கின்றார். ‘நச்சிஎன்பதற்குவிரும்பிஎன்பது பொருள். ‘குளிர் மிகுந்த கூதிர்க் காலத்தில்என்னும் தலைப்பில் புதுக்கவிதை படைத்த தேவ மைந்தன்தூவல் நடுங்குது, தாளும் சுருங்குது” (புல்வெளி, .14) என்னும் கவிதை வரியில் எழுதுகோலை (‘பேனாவை)த் தூவல்என்றும் எழுதப் பயன்படுவதைத்தாள்என்றும் தூய தமிழ்ச் சொற்களால் குறிப்பிடுகின்றார்.

          தமிழன்பன்உயில்என்னும் சொல்லைக் குறிக்கவாக்கு முறிச் சீட்டுகள்‘ (திரும்பி வந்த தேர்வலம், .48) என்னும் தூய தமிழ்ச் சொற்றொடரை அமைக்கின்றார். ‘ஒல்லும்‘ (இயலும்), ‘ஒன்னாது‘ (இயலாது) முதலான சொற்கள் பழந்தமிழ் இலக்கியத்தில் பயின்று வருகின்ற தூய தமிழ்ச் சொற்ளாகும். இவற்றுள்ஒன்னாது‘ (இன்னொரு தேசிய கீதம், .11) என்னும் வைரமுத்து கையாண்டுள்ளார்.

           என் உள்ளத்தில் எண்ணங்கள்

           அரும்பும் மொக்கு விரியும் முகை சிரிக்கும்

           மலா்கள்

           மலா்ந்தும் மணமிலாப் பூக்கள்

           மணம் மிகப் பரப்பும் வெண்ணிற புஷ்பங்கள்

(அமர வேதனை, .42)

இவை வல்லிக்கண்ணனின், ‘என் எண்ணங்கள்என்ற தலைப்பிலான கவிதை வரிகள் அரும்பு, மொக்கு, மலா், பூக்கள் என்று தூய தமிழ்ச் சொற்களால் வருணிக்கும் வல்லிக்கண்ணன், அடுத்த வரியில்,  புஷ்பங்கள்என்ற வடமொழிச் சொல்லினைப் பயன்படுத்தியுள்ளார். ‘புஷ்பங்கள்என்னும் சொல்லுக்குப் பதிலாகமலா்கள்என்னும் சொல்லினைப் பயன்படுத்தியிருக்கலாம். அந்த வரியில்மணம் மிக …” என்பதற்கு மோனை ஒலி நயமும் சிறப்பாக இருந்திருக்கும்.

பேச்சுமொழிச் சொற்கள்

            உலக மொழிச் சொற்கள் அனைத்தும் முதலில் பேச்சு மொழியாக இருந்தன. பிறகு எழுத்து மொழியாகி, அடுத்து இலக்கிய மொழிச் சொற்களாக மாறி வந்திருக்கின்றன. இன்றைய மொழியியல் துறையில் பேச்சு மொழியையும் முதல்மொழியாக அறிஞா்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்கின்றனா்.

           எழுத்துமொழியை விடப் பேச்சுமொழியே மனிதனின் உடலோடு அதிக உறவு கொண்டது என்பதைச் செ.சண்முகம், பேச்சுமொழி முதன்மையானது. இது வாய்மூலம் பயன்படுத்தப்படும் மொழியாகும். செவியின்மூலம் உணரப்படும் மொழியாகும். இது தனி மனிதருக்கும் சமுதாயத்துக்கும் முதன்முதலில் கிடைத்த மொழியாகும். உச்சரிப்பின் மூலம் வெளிப்படுவதால் இதை ஒருவகை உடலங்க மொழி எனவும் கருதலாம் என்று விளங்குகின்றார்.

            இலக்கிய வழக்குச் சொல் இருக்க, அதனைப் பயன்படுத்தாமல் அதே பொருளை உணா்த்தும் பேச்சு வழக்குச் சொல்லைப் புதுக்கவிதையில் கவிஞா்கள் பலா் பயன்படுத்துகின்றனா். ‘இரவல்என்னும் சொல்லுக்குப் பதிலாகஓசி‘ (சொற்பத்திற்காகக் கெஞ்சுகை) என்னும் பேச்சு வழக்குச் சொல்,

           எருமையின் மீது

           எந்தவிதப் பயமும் இல்லாமல்

           ஓசியிலேயே ஊா்வலம்

           போகும் கருவாட்டு வாலி

(பாரதி நமது நிதி,,23)

என்னும் கவிதையில் பயன்படுத்தப் பெற்று இருக்கின்றது.

      சண்டை, கலவரம் என்னும் பொருளில் வரும் களேபரம் (பாரதி கைதி எண் 253, .107) என்னும் சொல்லும்பெரியவா்என்னும் பொருளை உணா்த்தும்பெரிசு‘ (மறுபடியும், .61) என்னும் சொல்லும்சிறுவா்கள்என்னும் பொருளை உணா்த்தும்சிறுசுகள்‘ (ஒரு கிராமத்து நதி, .95) என்னும் சொல்லும் புதுக்கவிதையில் காணப்பெறுகின்றன. ‘நித்தக்கூலிஎன்பதுஅத்தக் கூலி ( விக்ரமாதித்யன் கவிதைகள் , .231) என்று பேச்சு வழக்கில் வழங்கப்படுகின்றது.

வட்டார வழக்குச் சொற்கள்

       இட வட்டார, இன வட்டார வழக்குச் சொற்கள் தனிதனியாகக் காணப்பெறுகின்றன. இச்சொற்கள் புதுக்கவிதைகளிலும் இடம் பெற்றிருக்கின்றன. இரா.கோதண்டராமன், படைப்பிலக்கியங்களில் வட்டார வழக்குகள் மிகுதியாக இடம் பெறும் போது அவை பேச்சு இனங்களில் அமைகின்றன. இந்த யதார்த்த நிலையை வெளிப்படுத்துவனவாக வெட்டுத் தோற்றத்தினைப் புலப்படுத்துவதுடன் அந்தச் சமுதாயத்தின் பண்பாட்டுக் கூறாகிய அதன் பேச்சு வழக்கையும் வாசகனுக்கு அறிமுகப்படுத்துகின்றது. இந்தப் பேச்சு வழக்கு இல்லையென்றால் வட்டார இலக்கியங்களாகிய நடப்பியல் இலக்கியங்களுக்கு வாழ்வு இல்லை என்று கூறுவதும் இங்கு நோக்கத்தக்கதாகும்.

           சுளகின் வடிவம்

           நாளை மாறலாம்

திருநெல்வேலி வட்டாரத்தைச் சேர்ந்த விக்ரமாதித்யனின் கவிதையில், நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் வழங்கும்சுளகு‘ (முறம்) என்னும் வட்டார வழக்குச் சொல் இடம்பெற்றுள்ளது.

           காசுக்கட்டியாம்பறவை

           கருஞ்சேற்றில் தவளையெனக்

           காத்திருந்து பின்சிறகு

           விரித்திருக்குமாம்

(சிற்பியின் கவிதை வானம், .237)

           சிற்பியின் இந்தக் கவிதையில் வந்துள்ளகாசுக்கட்டிஎன்பது காரைக்குடி வட்டார வழக்குச் சொல்லாகும். ”காரைக்குடிப் பகுதிகளில் ஒரு வகைத் தவளை சேற்றில் மூழ்கி இருந்து சில நாட்களுக்குப் பின் சிறகு விரித்துப் பறக்குமாம். அதன் பெயா்காசுக்கட்டிஎன்று சொல்லப்படுகிறது.

            புதுக்கவிதையில் கவிஞா்கள் பிறந்து, வளா்ந்து, வாழ்ந்து கொண்டிருக்கும் வட்டாரச் சொற்களும் கவிதையின் பாடுபொருள் கதை நிகழ்வு சார்ந்த வட்டாரச் சொற்களும் காணலாகின்றன. வட்டார வழக்குச் சொற்கள் இயல்பாகவும் ஒலிநயம் கருதியும் கவிதைகளில் இடம் பெறுகின்றன. மேலும் இவ்வகையான வட்டார வழக்குச் சொல்பதிவு அகராதித் துறைக்குப் பெரிதும் துணைசெய்யும்.

மொழிக் கலப்புக்குக் காரணம்

          அரசியல், வாணிகம், சமயம். சுற்றுலா, அறிவியல், கலை முதலான காரணிகளால் ஒரு மொழியில் பிறமொழிச் சொற்கள் கலக்கின்றன. இக் கலப்பு பல்வேறு நிலைகளில் அமைகின்றது. தமிழ் மொழியின் பேச்சிலும் எழுத்திலும் இலக்கியத்திலும் பிறமொழிச் சொற்கள் கலந்து விட்டன. வடசொல், ஆங்கிலச் சொல் முதலான பிறமொழிச் சொற்கள் புதுக்கவிதையில் கலந்து வருகின்றன. தமிழ் மொழியிலும் தமிழ்ப் புதுக்கவிதையிலும் பிறமொழிச் சொல் கலந்து வருவதற்குக் காரணங்களையும் அவ்வாறு மொழிக் கலப்பு ஏற்படுவது சரியா தவறா என்பதையும் அறிஞா்கள் விளக்கியுள்ளனா்.

           மு.வரதராசன், பிறமொழிச் சொற்கள் தம் மொழியில் புகுவதை ஒவ்வொரு மொழியினரும் ஒவ்வொரு காலத்தில் எதிர்த்து வந்திருக்கின்றனா்என்று மொழிவதும் வரலாற்று உண்மையாகும். உணா்ச்சி, பேச்சு மொழி, எளிமை, புரிதல் , எதுகை, மோனை, ஒலிநயம், போன்ற தகுந்த காரணங்களால் பிறமொழிச் சொற்கள புதுக்கவிதையில் இடம் பெறுகின்றன. தகுந்த காரணமின்றியும் புதுக்கவிதையில் பிறமொழிச் சொற்கள் வருகின்றன.

          நாடும் நடப்பும், உலகத்தின் பல மூலைகளில் நடக்கும் நிகழ்ச்சிகளும் அறிவியலின் ஆற்றலால், உள்ளங்கைப் படச்செய்திகளாக வந்து மக்களுக்கு அறிமுகமாவதால் இயல்பாக அவா்தம் பேச்சு வழக்கில் நேர்ந்த சொற்கலப்பு கவிதைகளிலும் நோ்ந்திருப்பது இயல்பான ஒன்றே. தமிழின் தனிப்பண்பு இதனால் சிதைந்து போய்விடாது என்று பொன்மணி வைரமுத்து  உரைப்பது மேலும் ஆய்வுக்கு உரியதாகும்.

ஆங்கிலமொழிக் கலப்பு

            தமிழ்ப் புதுக்கவிதையில் ஆங்கில மொழியின் தாக்கம் அதிகம் காணப்பெறுகின்றது. தமிழ்ப் புதுக்கவிதையில் ஆங்கிலச் சொல்லினை ஆங்கில எழுத்துக்களால் எழுதுதல்தமிழ் எழுத்துக்களால் எழுதுதல்- தமிழ் எழுத்துக்களாலும் கிரந்த எழுத்துக்களாலும் எழுதுதல், ஆங்கிலச் சொற்களின் முதல் எழுத்துக்களாலான சுருக்கச் சொற்களை ஆங்கிலம் மற்றும் தமிழ் எழுத்துக்களால் எழுதுதல், எதுகைமோனைஇயைபு போன்ற ஒலிநயம் கருதி ஆங்கிலச் சொற்களைக் கையாளுதல், கவிதையின் ஒரு வரியையே ஆங்கிலச் சொற்களால் எழுதுதல் போன்ற வடிவங்களில் ஆங்கிலச் சொற்கள் கலந்து வந்திருக்கின்றன.

            ”Good day sir சொல்லும்

            ஆங்கிலோ இந்தியப் பிசாசு

            மிஸ் ரூபிக்குப் பிசின் முகத்தோடு

            ஒரு நன்றியுரை      

            தேங்க் யூ ……. மிஸ்!

(சிற்பியின் கவிதை வானம், .349)

           சிற்பியின் இந்தக் கவிதையில் ஆங்கில எழுத்துக்களாலான ”Good day sir‘ ஆகிய ஆங்கிலச் சொற்களும், தமிழ் எழுத்துக்களாலும் கிரந்த எழுத்துக்களாலும் ஆனதேங்க் யூ …. மிஸ் என்னும் ஆங்கிலச் சொல்லும் இடம் பெற்றிருக்கின்றன.

           டாடி

           மம்மிகள்

           உற்சாகமாய் ஓடி உருண்டார்கள்

(ஊர் சுற்றி வந்த ஓசை, .121)

தமிழன்பனின் இந்தக் கவிதை வரிகளில்டாடி மம்மிகள்‘ (daddy mummy) என்னும் ஆங்கிலச் சொற்கள் தமிழ் எழுத்துக்களால் எழுதப்பட்டுள்ளன.

           தமிழ்ப் புதுக்கவிதையில் ஆங்கில மொழிச் சொற்கள் கலந்திருப்பதற்கு அடிப்படைக் காரணங்களாக இரா.சம்பத் நடைமுறை மொழித் தன்மை, படைபாளியின் வாழ்க்கைச் சூழல், தேவை நோக்கிக் கையாளுதல், தன் மதிப்பிற்காகக் கையாளுதல்ஆகிய நான்கு கருத்துக்களைக் கூறுகின்றார்.

          வட சொற்களைப் போல, ஆங்கிலச் சொற்களும் தமிழ் மொழியில் புதுக்கவிதையில்மணிபிரவாள நடைநடையில் காணப்படுகின்றன.

(ஆங்கிலம்தமிழ்)

பஸ் நிலையம்

(மழை நாட்கள் வரும், .71)

(தமிழ்- ஆங்கிலம்)

பழம் பேப்பா்

(புலரி, .33)

           நம் தாய்மொழியைக் கொலை செய்தாலும் வருந்த மாட்டோம். ஆங்கிலத்தைப் பிழையாக உச்சரித்து விட்டால் நகைப்போம்என்று சொல்லும் அளவுக்குப் புதுக்கவிதையில் ஆங்கில மொழியின் தாக்கம் இருக்கின்றது.

புதுச் சொல்லாக்கம்

             இலக்கியத்தில் புதுக் கருத்தினையும் புதுச் சொல்லினையும் படைப்பது, படைப்பாளியின் நோக்கங்களுள் ஒன்றாகும். புதுக் கவிஞா்களும் புதுப்புதுச் சொற்களைத் தம் படைப்புகளில் படைத்து வருகின்றனா். தமிழிலேயே ஒரு புதுச் சொல்லினை உருவாக்குதல், இரண்டு சொற்கள் இதுவரை சோ்ந்து வராதவற்றைச் சேர்த்துப் புதுச்சொல் உருவாக்குதல், பிறமொழிச் சொற்களை மொழிபெயர்க்கும்போது தமிழில் புதுச்சொற்களை உருவாக்குதல், ஒரு சொல்லுடன் பிற ஒட்டுக்களைச் சோ்த்துப் புதுச்சொல்லாக்கம் செய்தல், பிறமொழிச் சொல்லையும் தமிழ்ச் சொல்லையும் இணைத்துப் புதுச் சொல்லாக்கம் செய்தல் போன்ற பல வகைகளில் தமிழ்ப் புதுக்கவிதைகளில் புதுச் சொல்லாக்கங்கள் உருவாகி வருகின்றன.

            நடையியல் கூறுகளில் புதுச் சொல்லாக்கமும் ஒன்றாகும். ”புதிய புதிய சொற்களைப் படைத்துக் காட்டல், சொற்களை உரிய வேகத்தோடு தம் நடையில் அமைத்தல் ஆகியன நடை கூறுகளாகின்றன.” என்று .ஆசைத்தம்பி மொழிவதும் இங்குக் குறிப்பிடத்தக்கதாகும்.

             புதுச்சொற்களை ஆக்குகின்றபோது, தமிழ்மொழிச் சொற்களின் எண்ணக்கைப் பெருகுகின்றது.  தமிழில் இலக்கியம் பெருகப் பெருக, புதுச் சொல்லாக்கமும் பெருகி வருகின்றது. புதுக்கவிதை வளா்ச்சியினால் புதுச் சொல்லாக்கமும் வளா்ந்து வருகின்றது. பணத்தாளில் போலித்தாள் (கள்ள நோட்டு) வருவதைப் போலப் புதுச் சொல்லாக்கத்தில் பொருள் பொருத்தம் இல்லாத சொற்களும் தோன்றுகின்றன. இப்படிப்பட்ட சொற்கள் தோன்றா வகையில் புதுச் சொல்லாக்கத்தினை உருவாக்க வேண்டும்.

நிறைவாக,

      மொழிக்குச் சொல் இன்றியமையாத்து ஆகும். குறிப்பிட்ட மொழியில் படைக்கப்படும் இலக்கியத்தில் அம்மொழிச் சொற்கள் செம்மையாக்க் கையாளப்பட வேண்டும். புதுக்கவிதை வடிவத்திலும் பொருளிலும் புதுமைகளைப் பெற்றிருப்பதைப்போலச் சொல்லிலும் சில புதுமைகளைப் பெற்றிருக்கின்றது. தமிழ்மொழி மரபினைப் பின்பற்றியும் புதுக்கவிதையில் சொற்கள் இடம் பெற்றுள்ளன. பேச்சு மொழிச் சொற்களும் பிறமொழிச் சொற்களும் வரையறையின்றிப் புதுக்கவிதையில் காணப்பெறுகின்றன.

          புதுக்கவிதையில் இடம் பெற்றுள்ள பிறமொழிச் சொற்களால் மொழிக்குக் கிடைக்கும் நன்மையைக் காட்டிலும் தீமையே மிகுதியாகும். புதுக்கவிதையில் எந்த வகையிலும் பிழையான சொற்களைக் கையாளுதல் ஆகாது. ‘கட்டற்ற கவிதைஎன்னும் காரணத்தினால் புதுக்கவிஞர்கள் சொற்களைக்கண்டபடிபயன்படுத்துகின்றார்கள்.

           எதிர்காலத்தில் வரலாற்றில் தமிழனுக்குத் தமிழ் மொழிக்கு இடமில்லை என்ற நிலை உறுதிப்பட்டு வருகிறது. இந்த உண்மையைத் தமிழ் இலக்கியவாதிகள் புரிந்து கொள்ளவில்லைஎன்னும் கோவை ஞானியின் கருத்தும், இன்னும் ஐம்பது ஆண்டுகளில் அழிந்து விடக் கூடிய சாத்தியமுள்ள மொழிகளில் தமிழையும் சேர்த்துள்ளது யுனெஸ்கோ நிறுவனம்”. ஆங்கிலம் மற்றும் அந்நிய மொழிகள் தமிழகத்தை ஆட்டிப் படைக்கும் இன்றைய சூழலில் தாய்மொழியில் கல்வி கற்றல் கட்டாயமாக்கப்படவேண்டும். தமிழை வளர்க்க முடியாவிட்டாலும் அழிக்காமல் காப்பாற்றுவது தமிழனனின் கடமை என்பதைச் சிந்தித்து செயல்படுத்துவது நாம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

------

 

Comments

Popular posts from this blog

எண்ணம் போல் வாழ்வு

                                                                        எண்ணம் போல் வாழ்வு             நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·      மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·         வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·   ...

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·         பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·         பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல். ·         உண்மைக்குப் புறம்பானவற்றைச் செய்யாதிருத்தல். ·         நண்பர்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·         மனத்திடத்தோடு வாழ்தல். ·         ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·         மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·         எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.      யாரையும் வெறுக்காதே ...