Skip to main content

விடுகதையில் காணலாகும் சமுதாயச் சிந்தனைகள்

  விடுகதை யில் காணலாகும் சமுதாயச் சிந்தனைகள்         வாழ்க்கையின் உயிர்ப் பண்புகளாகிய உணர்வுப் பண்புகள் இலக்கியங்களின் கருவாக அமைகின்றபோது அவை படைப்போனின் உணர்ச்சிக்குத் தக்க உருவம் பெற்றுச் சாவாப் பேற்றினைப் பெறுவதுண்டு . அத்தகைய சாவாமையும் மூவாமையும் பெற்ற கருவூலமே விடுகதைகளாகும் . மானுடத்தின் சிந்தனைத் திறனையும் , பண்பாட்டுப் படிநிலைகளையும் அறிந்துகொள்ளும் வரலாற்றுப் பெட்டகமாகவும் , இலக்கியத்தின் கூறுகள் படிந்து விளங்குவதாகவும் உள்ளதால் விடுகதைகள் ‘ இலக்கியம் ’ எனும் பெருமை அடைகின்றன . அறியாமையால் உடனுக்குடன் மனிதனை வெட்கப்பட வைக்கும் இலக்கியம் விடுகதை ஒன்றேயாகும் . இலக்கியங்களில் விடுகதை         தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்தில் விடுகதையைப் ‘ பிசி ’ என்று குறிப்பிடுவதைக் காணலாம் . தொல்காப்பியர் பிசிக்குரிய இலக்கணத்தைக் கூறும் போது ,             ” ஒப்பொடு புணர்ந்த வுவமத் தானும்       ...

விடுகதையில் காணலாகும் சமுதாயச் சிந்தனைகள்

 

விடுகதையில் காணலாகும் சமுதாயச் சிந்தனைகள்

       வாழ்க்கையின் உயிர்ப் பண்புகளாகிய உணர்வுப் பண்புகள் இலக்கியங்களின் கருவாக அமைகின்றபோது அவை படைப்போனின் உணர்ச்சிக்குத் தக்க உருவம் பெற்றுச் சாவாப் பேற்றினைப் பெறுவதுண்டு. அத்தகைய சாவாமையும் மூவாமையும் பெற்ற கருவூலமே விடுகதைகளாகும். மானுடத்தின் சிந்தனைத் திறனையும், பண்பாட்டுப் படிநிலைகளையும் அறிந்துகொள்ளும் வரலாற்றுப் பெட்டகமாகவும், இலக்கியத்தின் கூறுகள் படிந்து விளங்குவதாகவும் உள்ளதால் விடுகதைகள்இலக்கியம்எனும் பெருமை அடைகின்றன. அறியாமையால் உடனுக்குடன் மனிதனை வெட்கப்பட வைக்கும் இலக்கியம் விடுகதை ஒன்றேயாகும்.

இலக்கியங்களில் விடுகதை

        தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்தில் விடுகதையைப்பிசிஎன்று குறிப்பிடுவதைக் காணலாம். தொல்காப்பியர் பிசிக்குரிய இலக்கணத்தைக் கூறும் போது,

            ஒப்பொடு புணர்ந்த வுவமத் தானும்

          தோன்றுவது கிளந்த துணிவி னானும்

          என்றிரு வகைத்தே பிசி வகை நிலையே”1

என உவமையாக வருவனவற்றைக் கூறிப் பொருளை மறைமுகமாகக் காட்டுவது எனவும், தெளிவுபட வருவது எனவும் இரு வகைப்படுத்திக் கூறுகிறார்.

        தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே விடுகதைகள் வழங்கிவந்தன என்பது அவர்தம் நூற்பா அமைப்பால் அறிந்தாலும், சங்க இலக்கியங்களில் தான் விடுகதைக் கூறுகள் அமைந்த பாடல்கள் காணப்படுகின்றன. குறுந்தொகை,  கலித்தொகை ஆகியவற்றில் விடுகதைப் பண்பமைந்த பாடல்வரிகள் கையாளப்பட்டுள்ளன. சிற்றிலக்கியங்களில் அம்மானை, பள்ளு, என்பவை புதிர்த் தன்மை கொண்ட வினாவிடை அமைப்புடையனவாக உள்ளன. தமிழகத்தில் 19 - ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இதழ்களின் ஊக்கத்தால் விடுகதைகளின் சேகரிப்புப் பணி தொடக்கம் பெற்றது.

விடுகதை - சொல்லாராய்ச்சி

      திருநெல்வேலி  மாவட்டத்தில்அழிப்பான் கதைஎன்றும் ஆர்க்காடு, சேலம் மாவட்டங்களில்வெடிஎன்றும், சிலர்நொடிக்கதைஎன்றும் குறிப்பிடுவர். ‘புதிர்எனும் சொல்லாட்சியே விடுகதைக்குப் பொருத்தமானதாகக் கொள்வோருண்டு. உண்மைப் பொருளைத் தம்முள் புதைத்துக் கூறும் சொற்களைக் கொண்டதாக அதனைபுதிர்என்றனர். பிற கோள் வட்டங்களுக்கு நடுவில் புதைந்துள்ளமையால் சூரியனுக்கு அடுத்துள்ள கோளைப் புதன் என்றும், மனத்தகத்தே புதைந்துள்ளமையால் புத்தி என்றும் பெயரிட்டுள்ளமை ஈங்கு ஒப்பு நோக்கத்தக்கது.

            விடுகதை என்னும் சொல்லாட்சியில் கதை என்பது கதைத்தல் அல்லது கற்பனையாகக் கூறுதல் என்ற பொருள் அடிப்படையில் பயன்படுத்தப்பட்டுள்ளது என நினைத்துத் தோன்றுகிறது என்று குறிப்பிடுகின்றார் டாக்டர் .வே.சுப்பிரமணியனார். திருச்சி மாவட்டத்தில் வெடி என்றும் விடுகதை என்றும் குறிப்பிடுகின்றார்.

            விடுகதைகளில் பயிலப்படும் சொற்கள் வழி மக்களின் பழக்கவழக்கங்கள், மரபுகள், நம்பிக்கைகள், மரபுகள் இவற்றை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

குடும்ப அமைப்பு

            கிராம மக்கள் குடும்பம் ஒருமைப்பாட்டுடன் அமைவதை ஒழுக்கமாகக் கொண்டனர். எந்நிலையிலும் எவரும் பிரிந்து செல்வதை அனுமதிக்கமாட்டார்கள். தலைமுறை தலைமுறையாக வாழுகிற வீடு என்று கூறுவதில் பெருமிதம் தோன்றும். மணமானதும் பிள்ளை பெறுவதற்கு இறை முறையீட்டை மேற்கொண்டவர். மக்கட்செல்வம் கிடைத்ததும் வளர்ந்து வாலிபமாக்கி மணம் முடித்துக் கொடுப்பர். பிள்ளைக்கு ஏங்கிய ஏக்கம் பேரப் பிள்ளைகளுக்கு மாறிவிடும். இரண்டு தலைமுறையினரும் இணைந்து வாழும் வழக்கத்தைக் கிராமத்தில் இன்றும் காணலாம். மணம் முடித்தவுடன் பெற்றோரைப் பிரியும் தற்கால வாழ்க்கை முறைக்கு முற்றிலும் மாறுபட்ட பண்பாட்டைக் கிராம மக்களிடம் காணலாம்.

            துலுக்கனிலும் துலுக்கன் செந்துலுக்கன்

           செந்துலுக்கன் பெண்டாட்டி கும்மாத்தாள்

           கும்மாத்தாள் பெற்றபிள்ளை குடுகுடுப்பை

           குடுகுடுப்பை பெற்றபிள்ளை கிலுகிலுப்பை”2                                        

எனும் விடுகதைக்கு வழிக் குடும்ப அமைப்பையும், இணைந்து வாழும் பண்பாட்டையும் காணலாம்.

உழவுத்தொழில்

            நீரின்றி உலக இயக்கம் இராதுஉலகை இயக்கி வருவது உழவுத் தொழிலாகும். விண்ணில் விழிபதித்துத் தவமிருக்கும் மக்கள் உழவர்கள். மழையைக் கண்டதும் பூரித்துவிடும் இதயத்தை உடையவர்கள், ‘மழையைக் கண்டால் மகிழ்ந்து விரியும்எனும் விடுகதை உழவர்களின் இதய விரிப்பை விளக்கி நிற்கிறது. உழவுத் தொழிலின்  மூலபொருளே வயல். வயலுக்குச் சென்று நிலத்தைப் பண்படுத்த ஏர் உழுகின்றனர். நன்றாக உழுத நிலத்தில் விதைக்கின்றனர். வித்துக்கள் நாற்றுக்களாய் எழுந்து நின்றதும் அவற்றைப் பறித்து முறைப்படுத்தி நடுவதை நாற்று நடுதல் என்பர். நாற்றுக்கள் வளர்ந்து செழித்து முற்றியிருக்கும் நிலையில் அறுவடை நடைபெறுகிறது. அறுவடைக்குப் பின் நெல்குத்தி அரியாகவும் தவிடாகவும் உமியாகவும் பிரித்து எடுத்து உணவிற்கு உரியதாக்குகின்றனர். இச்செய்திகள் விடுகதைகள் மூலம் குறிப்பிடுகின்றனர். கிராம மக்களின் உயிர்த்தொழிலான உழவுத் தொழிலின் சிறப்பைக் கூறும் விடுகதைகளால் அத்தொழிலின் வழக்கங்கள் விளக்கப்படுகின்றன.

சாதியும் தொழிலும்

          பண்டைத் தமிழகத்தின் சமூக அமைப்பினைச் சங்க இலக்கியங்கள் கொண்டு அறியலாம். தமிழ்நாட்டுத் தச்சர்கள் மக்களுக்குத் தேவையான தட்டுமுட்டுச் சாமான்களையும், வண்டிகளையும், தேர்களையும் செய்து கொடுத்தனர். நால்வகைப் படைகளில் தேர்ப்படையும் ஒன்றாக இருந்ததால் தேர் செய்வது அன்றைய தச்சர்களின் தலைமையான உடையனவாக இருந்தது. அதியமானின் வலிமையைக் கூறவந்த ஔவையார்,

            வைகல் எண்டேர் செய்யும் தச்சன்

             திங்கள் வலித்த காலன் னோனே” 3

என்று பாராட்டினார். தச்சர்கள் அன்று முதல் இன்று வரை மரச் சாமான்கள், வீடு கட்டுவதற்குரிய பொருள்கள் செய்து கொடுக்கும் வழக்கம் காணப்படுகிறது. விடுகதையில் தச்சர்கள் பற்றிய குறிப்பு காணப்படுகிறது.

            ஆயிரம் தச்சர் கூடி

          அமைந்ததாம் மண்டபம்

          ஒருவன் கண்பட்டு

          உடைந்ததாம் மண்டபம்

          அது என்ன?” 4             

எனும் விடுகதையில் தச்சர்கள் மண்டபம் கட்டும் பணியில் ஈடுபடுவதைக் காணலாம்.

     ஆடைகளை வெளுக்கும் வண்ணார்கள் பற்றிய செய்திகள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. வண்ணாருக்குக்காழியர்என்னும் பெயர் வழங்கிற்று. வண்ணாரப் பெண் புலைத்திஎனக் குறிப்பிடப்படுகிறான். பழங்காலத்தில் மக்கள் மண்பாண்டங்களைப் பயன்படுத்தினர். பெரிய சூளைகளில் பானைகளும் பிற கலன்களும் சுடப்பட்டன. வண்ணார்கள் பற்றியும் குயவர்கள் பற்றிய செய்திகள் விடுகளைகளில் காணப்படுகின்றன.

            குயவன் செய்யாத பாண்டம்

           வண்ணான் வெளுக்காத வெள்ளை

          மழை பெய்யாத தண்ணீர்

          அது என்ன?” 5   

எனும் விடுகதையில் வண்ணான், குயவன் எனும் குறிப்புக்கள் காணப்படுகின்றன. நாட்டுப்புறங்களில் மக்கள் இனத்தைக் குறிக்கும் போது அவரவர் செய்யும் தொழில் அடிப்படையில் குறிப்பிடுகிற வழக்கம் காணப்படுகிறது.

வாணிகம்

        பழங்காலத்தில் தமிழகத்தில் உழவிற்கு அடுத்த நிலையில் வாணிகம் போற்றப்பட்டிருந்தது. அவரவர்க்குரிய பொருளை விற்பனை செய்துவந்த வழக்கம் காணப்படுகிறது. அக்காலத்தில் வாணிகம் செய்யப்பட்ட பொருள்கள் பற்றிப் பட்டினப்பாலையிலும், மதுரைக் காஞ்சியிலும் விரிவாகக் காணலாம். மிளகும் முத்தும் வெளிநாட்டினர்க்கு ஏற்றுமதி செய்துள்ளனர். வெளிநாட்டிலிருந்து குதிரைகள் இறக்குமதியான செய்திகள் பெரும்பாணாற்றுப்படையிலும் பட்டினப்பாலையிலும் காணப்படுகின்றன. ‘வணிகர்கள்அரசர் குடிக்கு அடுத்தக் குடியாகப் போற்றப்பட்டனர். இவ்வணிகம் தொன்றுதொட்டு மக்களால் போற்றப்பட்டு வருகிறது. அன்று முதல் இன்று வரை வணிகர்களே சமுதாய மாற்றத்திற்குப் பெரிதும் காரணமாக இருந்தனர். எள்ளாட்டி எண்ணெய் வாணிகம் செய்வாரைவாணியர்என்றும்வாணியச் செட்டியார்என்றும் அழைக்கும் மரபு காணப்படுகிறது.

            எள்ளிலே பிறந்து எள்ளிலே வளர்ந்த

          எண்ணெய் வாணியன் மகளே

          எள்ளுக்கும் சிறிய இலை என்னும் இலை”6   

எனும் விடுகதையில் எண்ணெய் வாணிகம் செய்யும் இத்தனி இனத்தினர் பற்றிய குறிப்புக் கிடைக்கிறது. வாணிகம் செய்துவரும் வழக்கம் இருந்து வந்ததற்குச் சான்றாக இவ்விடுகதை அமைந்துள்ளது.

வீரப்பண்பு

            பழங்காலத்திலிருந்து இன்று வரை தமிழனுடைய வீரம் தன்னிகரற்று விளங்குகிறது. சிறு குழந்தை இறந்தாலும், அதையும் வாளால் பிளந்து வீரமரணம் அடைந்ததாகக் கொண்டு புதைக்கின்ற தன்மையும், தமிழனை இகழ்ந்தான் என்பதால் வடவரைக் கல்சுமக்க வைத்த வீரமும் வரலாறாய் அமைந்துள்ளன. பகைமன்னர்கள் நுழையா வண்ணம் உறுதியானகோட்டைகட்டி வைத்திருந்தனர். கோட்டை உயரமாகவும் பரந்துபட்ட அமைப்பிலும் உருவாக்கினர். போருக்குச் செல்வதற்கும், பகைப்படை எளிதாக்க் கோட்டையைக் கைப்பற்றாமலும் இருக்கக்கோட்டைமிகவும் உறுதிவாய்ந்ததாகவும், மறைவிடங்களைக் கொண்டதாகவும் அமைந்திருந்தது. போர்க்களத்திற்குச் செல்லும் வீரர்கள் போர்க் கருவிகளாகக் கத்தியும், கவசமும் கொண்டு செல்வர். ஈட்டியும், கவசமும் எடுத்து செல்வர். வில்லும், அம்பும் ஏந்திச் செல்வர். கடுமையான போர் நடைபெறும் போது காலில்லாத வீரர்களின் காட்சியும், தலையற்ற முண்டங்களின் அசைவுகளும், இறந்து கிடக்கும் பிணங்களின் அவலக் காட்சியும் பார்ப்போர் நெஞ்சத்தை அச்சங் கொள்ளச் செய்யும். பழங்காலத் தமிழ் மக்களின் வீரப் பண்பாடு போர்க்களத்தின் காட்சியால் விளக்கம் பெறுகிறது.

அறிவுத்திறன் (கணக்கறிவு)

     சங்க காலத்தில் தமிழர்கள் கணக்கியலறிவு மிக்கவர்களாக வாழ்ந்துள்ளமை இலக்கியங்களால் உணர்த்தப்படுகிறது. நக்கீரர் தந்தை மதுரையில்மதுரைக் கணக்காயனார்எனும் சிறப்புடன் விளங்கியுள்ளார். ‘எண்ணும் எழுத்தும்பயிற்றுவிக்கப்பட்டன. எண்ணென்பது கணக்கையும் எழுத்தென்பது மற்றவற்றையும் குறித்தது. வாயினால் வந்த பக்கம், கையினால் வகுத்த பக்கம் என்று தொல்காப்பியர் ஏட்டுக் கல்வியையும் தொழிற்கல்வியையும் பிரித்துக் காட்டுகிறார். ஒன்று முதல் கோடியினும் மேலானவற்றை ஆம்பல், வெள்ளம் முதலாய எண்களை எண்ண அறிந்திருந்தனர். நாட்டுப்புற மக்கள் பின்னங்களால் ஆன கணக்கை வாயால் கூறி, மனதால் செய்து விடைதரும் அறிவு படைத்திருந்தனர்.

            விடுகதைகளில் கோணம் எனும் கணக்கியலின் குறிப்புகள் காணப்படுகின்றன. முகத்தல் அளவைக்குரியபடிவிடுகதைகளில் குறிப்பிடப்படுகின்றன. இத்துடன் ஒரு எண்ணையே மீண்டும் மீண்டும் குறிப்பிட்டுக் கணக்கைக் கூறும் பழக்கமும் காணப்படுகிறது. கூட்டல் முறையில் அமைந்த கணக்கு முறையும் உள்ளது. இரண்டு எனும் எண்ணைப் பொருட்களுடன் இணைத்துக் கூறும்போதுஒரு ஜோடிஎனும் கணக்கு முறையில் குறிப்பிடும் வழக்கம் உள்ளது. பழம் பண்பாட்டை விளக்குகிற நிலையில் கணக்கியலறிவு பெரிதும் துணைபுரியும்.

இசையறிவு

            பழங்காலத்திலிருந்து இசையோடு இணைந்து வாழ்ந்தவர்கள் நாட்டுப்புற மக்கள். ‘பண்பட்ட எல்லா இனங்களும் தத்தமக்குரிய இசை மரபுகளைக் கொண்டுள்ளன. காடு வாழ் மாந்தரும் நாடோடியினங்களும் தமக்குரிய இசைமரபுகளைக் கொண்டுள்ளனர்என்பார் தட்சணாமூர்த்தி. நாட்டுப்புறப் பாடல்களில் இசை இரண்டறக் கலந்திருப்பதைப் பாடல்களின் ஒலியமைப்பிலிருந்து காணலாம். பாடலோடு இணைந்து வருவது தாளம். இரண்டும் ஒன்றிற்கொன்று முரண்பட்டால் பாடலின் இனிமை சிதையும். பாட்டும் தாளமும் மாறுபடாது அமைவதே இசைக்கலையின் சிறப்பு நிலையாகும். ஓர் இனம் இசையுணர்வில் செம்மை பெற்றிருந்தால், அவ்வினம் பண்பாட்டுச் சிறப்புடைய இனமாகும். பண்பட்ட இதயமும், நல் உணர்வுகளும் மனிதனுக்கு அமையும்போதுதான் இசையை அனுபவிக்க இயலும். நாட்டுப்புற மக்களின் பண்பட்ட இசை சான்றாக அமையும்.

            தட்டும் தாளம் நின்றுவிட்டால்

           ஆட்டம் எதுவும் நடக்காது” 7 

எனும் விடுகதையில் பாட்டுடன் தாளம் இணைவதன் இன்றியமையாமைக் குறிப்பிட்டிருப்பதைக் காணலாம்.

விடுகதைகளில் பிறமொழிச் சொற்கள்

            ஆங்கிலேயர்களின் ஆட்சி இருநூறு ஆண்டுகாலம் நம் நாட்டிலிருந்த காரணத்தால் ஆங்கிலச் சொற்களும் விடுகதைகளில் இடம்பெறுகின்றன. இவ்விடுகதைகள் அண்மைக் காலத்தில் எழுந்தன என்பது இச்சொற்களால் அறியலாம். விடுகதைப் பண்பு மக்களிடம் இருந்துவருகிறது என்பதற்கு அண்மைக்கால விடுகதைகள் சான்றாகும். விடுகதைகள் காலத்தையும் பிரதிபலிக்கின்றன என்பது இதனால் அறியப்படுகிறது.

          பச்சை பச்சை டாக்டர்

           எங்க டாக்டர்

          குண்டு குண்டு டாக்டர்

           எங்க டாக்டர்

          வெள்ள வெள்ள் டாக்டர்

          எங்க டாக்டர்”8   

எனும் விடுகதையில்டாக்டர்எனும் விடுகதையில்இன்சான்எனும் சொல் மனிதனைக் குறிக்கும் அரபுச் சொல்லாகும். ‘குரான்என்பது இஸ்லாமியர்களின் வேதப் புத்தகமாகும்.

நிறைவாக

                நாட்டுப்புற இலக்கியம் ஒரு தனிமனிதனின் குரலாக இல்லாமல் ஒரு சமுதாயத்தின் கூட்டுக் குரலாக ஒலிப்பது. எங்கோ ஊற்றெடுத்துப் புறப்படும் சிற்றாறு வழியில் பல சிற்றூர்களின் சேர்க்கையால் பேராறு ஆவது போல, விரிவடைகின்றன. நாட்டுப்புற இலக்கியம் பாமர மக்களின் அரிய கருவூலங்களாகும். கலைஞனின் கலைத்திறம் அக்கலையின் நுட்பத்தை மறைத்து வைத்தலும் ஆய்வாளன் வேலை அதனைக் கண்டு வெளிப்படுத்துவதாகும் என்ற ஹட்சனின் கூற்றிற்கிணங்க,  விடுகதைகள் வழியாக நாட்டுப்புற மக்களின் தொழில், தெய்வ நம்பிக்கை, உழவுத்தொழில், வாணிகம், வீரப்பண்பு, கணக்கறிவு, பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்தல் முதலியன பண்பாட்டுக் கூறுகளாகக் குறிக்கப்பட்டுள்ளன.

சான்றெண் விளக்கம்

1.   (தொல் - செய்-196)

2.    விடை - சேவல், பெட்டைக்கோழி, முட்டை

3.   (புறம், 87)

4.    விடை தேன்கூடு

5.    விடைதேங்காய்

6.    விடைவிடத்தலை இலை

7.    விடைஇதயம்

8.    விடைவெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு

துணை நின்ற நூல்கள்

1.    ஆறுமுகம்., -                         நாட்டுப்புற இலக்கியமும் பண்பாடும்,

                                                தேன்தமிழ்ப் பதிப்பகம்,

                                                சுப்பிரமணியம் பிள்ளைத்தெரு,

                                                சேலம் – 638 001.

2.    நாசீர் அலி. டாக்டர்.மீ..மு. – நாட்டுப்புப் பண்பாட்டியல்,

                                                இக்ரஹ பப்ளிகேஷன்ஸ், பராங்குசம்

                                                தெரு, திருச்சி – 620 021.

Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·                       பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·     பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல்.             உண்மைக்குப் புறம்பானவற்றைச்  செய்யாதிருத்தல். ·     நண்பர்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·                 ம னத்திடத்தோடு வாழ்தல்,  ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·             மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·                      எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.              எவரையும் வெறுக்...