சங்க
இலக்கியத்தில் மலர்களின் மருத்துவம்
பழந்தமிழர்
மலர்களைக் கண்ணியாகவும், கோதையாகவும் மாலையாகவும் மட்டுமன்றித் தழையுடன் சேர்த்து மலர்களை ஆடையாகவும் அணியும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். நோய்கள் தம்மை அணுகாதவண்ணம் மருத்துவ அறிவுடன் மலர்களின் குணங்களை அறிந்து நன்கு பயன்படுத்தினர்.
வேந்தரும், மறவரும், புலவரும், பாணரும், பொது மக்களும் என அனைவரும் நாள்தோறும் தலையில் சூடியும், மாலையாக அணிந்தும் மலர்களோடு தோற்றமளித்ததைச் சங்க இலக்கியங்களின் மூலம் அறியலாம். அக்கால மக்கள் மலர்களின் தன்மைகளை அறிந்தே பயன்படுத்தியுள்ளனர்.
சங்க இலக்கியத்தில் மலர்கள் பயன்படுத்திய விதம்
கல்வி வளர்ச்சிக்கும், அறிவு வளர்ச்சிக்கும் தேவையான மூளையின் வளர்ச்சியை அதிகரிக்கும் தன்மையுடையது தாமரை மலர். இம்மலரை, பாணரும், விறலியரும் சூடினர் என்பதை,
”பாணர் தாமரை மலைய...” புறம் . 12:1
”தலைவன் தாமரை மலைய விறலியர்” (மலை.569)
”சில்வளை விறலி செல்குவை யாயின்
வள்ளிதழ்த்
தாமரை நெய்தலொடரிந்து” (பதி.78:4,5)
எனப் புற இலக்கியங்கள் மூலம் அறியலாம்.
முல்லை, மல்லிகை முதலான மணம் பரப்பும் மலர்களைத் தலையில் சூடுவதால் மனத்தெளிவும், மகிழ்ச்சியும் உண்டாகும். மேலும் மனஅழுத்தம் நீங்கும் தன்மையுடையன. இத்தகைய மணம்மிக்க மலர்களை சங்ககாலத்தில் தெருக்களில் கூவி விற்கும் தன்மையைப்,
”பித்திகை விரவுமலர் கொள்ளீரோ வென
வண்டுசூழ் வட்டியள் இருதருந்
தண்டலை உழவர் தனிமட மகளே” (நற் 97:7)
என நற்றிணை மூலம் அறியலாம். அதன் தன்மைகளை உணர்ந்த
சங்ககாலப் பெண்டிர் தம் கணவர் அருகிலிருக்கும்
வேளைகளில் மட்டுமே அவற்றைச்சூடிக் கொண்டனர் என்பதை,
”பாணர் முல்லை பாட சுடர்இழை
வாள்நுதல் அரிவை முல்லை மலைய
இனிதிருந் தனனே நெடுந்தகை
துனிதீர் கொள்கைத்தன் புதல்வனொடு பொலிந்தே” (ஐங் .408)
என்ற
ஐங்குறுநூற்றுப் பாடல் காட்சிப்படுத்தியுள்ளது. ஆனால் கணவன் பொருளீட்டுதல், போர் முதலான காரணங்களுக்காகப்
பிரிந்திருந்த காலங்களில் சங்க கால மகளிர்
மலர் அணிவதில்லை என்பதை,
”புணர்ந்தோர் பூவணி அணியப் பிரிந்தோர்
பைதலுண்கண் பனிவார் புறைப்ப” – (புறம்.194:3,4)
என்ற
புறநானூற்றுப் பாடல் உணர்த்துகின்றன.
தம் புதல்வரின் குழந்தைப்
பருவத்தில் பூக்களால் அலங்கரிக்கப்பெற்ற தொட்டிலில் இட்டு தாலாட்டியுள்ளதை,
”குறுங்காற் கட்டில் நறும்பூஞ் சேக்கைப்
பள்ளி யானையின் உயிர்த்தனன் நசையிற்
புதல்வன் தழீஇயினன்”
-குறுந்
. 359
என்ற
குறுந்தொகைப் பாடல் உணர்த்துகிறது.
தற்கால
மலர் மருத்துவம்
மனநலமும் உடல்நலமும் ஒன்றோடொன்று தொடர்புடையன. இவை இரண்டும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போன்றவை. மனித உடம்பில் நோய்கள் தோன்றப் பெரும்பாலும் மனநலமின்மையே காரணமாக அமைகிறது. கோபம், பொறாமை, பயம், பகைமை, உணர்ச்சி, பொறுமையின்மை, அதிர்ச்சி, வெறுப்பு முதலான எண்ணங்கள் மனநிலையைக் கெடுத்து, உடல் நோய்களுக்கு வழிவகுக்கின்றன. இவ்வாறு மனநிலையால் உடல்நிலை நோயுறும்போது அந்நோயைத் தீர்க்க மலர்களிலிருந்து தயாரிக்கப்பெற்ற மருந்துகளைக் கொண்டு குணம்பெறச் செய்வதே தற்கால மலர் மருத்துவம் ஆகும். இம்மருவத்துவம் இன்று உலகின் பல நாடுகளில் புகழ்பெற்று வருகிறது. இருபதாம் நூற்றாண்டில் இங்கிலாந்தைச் சார்ந்த எட்வர்டு பாட்ச் என்ற ஆங்கில மருத்துவரால் இம்மலர் மருத்துவம் உலகெங்கும் அறிமுகமானது.
நிறைவாக,
பழந்தமிழர் மனத்தையும், உடலையும் கெடுக்கும் எதிர்மறை எண்ணங்கள் இன்றி, நலமுடனும், மகிழ்வுடனும் வாழ்வதற்கு மலர்களின் தன்மையையும், மருத்துவக் குணங்களையும் நன்கு அறிந்தே பயன்படுத்தியுள்ளனர். மலர்களின் அழகையும் மணத்தையும் மட்டுமின்றி, மருத்துவக் குணங்களையும் நன்கு அறிந்தமையால், அவற்றைத் தம் அகவாழ்விலும், புறவாழ்விலும்
பயன்படுத்தி மகிழ்ந்தனர்.
Super Mam
ReplyDelete