Skip to main content

புறத்திணை அடையாளப் பூக்களும் சித்த மருத்துவமும்

 

 

புறத்திணை அடையாளப் பூக்களும் சித்த மருத்துவமும்

 

சங்க காலத்தில் வெட்சி, கரந்தை, வஞ்சி, உழிஞை, நொச்சி, தும்பை, வாகை,  முதலான போர்கள், தம் அடையாளப் பூக்களின் பெயர்களைக் கொண்டு வழங்கப் பெற்றவை. ஆனால் அம்மலர்களின் மருத்துவக் குணம் கருதியே அடையாளப் பூக்களாகப் பயன்படுத்தி உள்ளார்கள் என்பதை இலக்கியங்களின் வழி அறியலாம்.

போர்களின் தன்மைக்கேற்ப, மறவர்களுக்குப் பாதிப்புகள் ஏற்படாமல் பாதுகாக்கவும், நோய் எதிர்ப்புச் சக்தியைப் பெருக்கிக் கொள்வதற்கும், போரில் உண்டான வெட்டுக் காயங்கள், புண்கள் முதலானவற்றை ஆறச் செய்வதற்கும் புறத்திணை மலர்கள் பயன்படுத்தப் பெற்றுள்ளன.

வெட்சிப்பூவும் சித்த மருத்துவமும்

சங்ககாலப் போர் மறவர்கள் சூடும் மலரின் பெயரால் அப்போர்வகை பெயரிடப்பெற்றது. அவ்வகையில், பகைநாட்டாரின் ஆநிரைகளைக் கவர்ந்து வரும் மறவர் தம் தலையில் வெட்சிமலர்க் கண்ணியைச் சூடிச் சென்றனர். சிறுபூசல் அளவில் நிகழ்ந்தப் போர்முறையை வெட்சிப்போர் எனக் குறிப்பிட்டனர். வெட்சிமலரைப் பற்றிய மருத்துவ குணத்தை,

        வெட்சிப்பூ ... ... ..... ....

        ......   ......    .....    ...... .....

        சுரமுடனே தாகந் தொலைக்கும் உலகில்

        விரைவாய் இளைப்பகற்றும் விள.  (அகத்தியர் குண பாடம்)

அகத்தியர் குணப் பாடம் தெரிவித்துள்ளது. வெட்சிப்பூவை நீரிலிட்டுக் குடிக்கும் போது, தாகத்தைத் தணிப்பதோடு, இளைப்பையும் போக்கும் என்பதே இப்பாடலின் பொருள்.

   வெட்சிக் குருதியை அடக்கும் என்றும் சித்தமருத்தவக் குறிப்புள்ளது. வெட்சிப்போர் என்பது சிறுபூசலே என்றாலும், கடுமையான தாக்குதல்களுடன் கூடிய போர்வகை ஆகும். போர்த்தாக்குதலின் போது நிகழும் குருதி இழப்பைத் தடுக்கவும் பழந்தமிழர் வெட்சியைப் பயன்படுத்தியுள்ளார்கள்.

கரந்தைப் பூவும் சித்த மருத்துவமும்

        புறத்திணைகளுள் வெட்சிக்கு அடுத்து வைக்கப்படுவது, வெட்சிக்கு எதிரான அல்லது மாறானது கரந்தைத் திணையாகும். பகைவர் கவர்ந்து சென்ற தம் ஆநிரைகளை மீட்டு வரும் கரந்தைப் பூவை அணிந்து செல்வர்.

        அக்கால மக்கள் வாழ்வில் இடைத் தொழில், மிக முக்கிய பங்கு வகித்தமையால் நாட்டின் பொருளாதாரம் பெரும்பான்மை இவற்றைச் சார்ந்தே இருந்தது. ஆதலின் ஒரு நாட்டின் ஆநிரைகளை கவருவது அந்நாட்டைப் பொருளாதார வகையில் தாக்குவதாகும். எனவே ஒரு நாட்டின் மேல் போர் தொடுக்க முனைகளில் அந்நாட்டின் ஆ நிரைகளைக் கவருவதான செயல் முதலில் இடம் பெற்றது. இதற்கு பதலடியாக பகைவர் கவர்ந்து கொண்ட தம் ஆநிரைகளை மீட்டு வந்து தன்னாட்டை (நாட்டின் பொருளாதாரத்தை) காப்பது அவசியமாகிறது. 

வெட்சி நிரை கவர்தல் ; மீட்டல் கரந்தையாம்

வட்கார் மேல் செல்வது வஞ்சி ; உட்காது
எதிர்ஊன்றல் காஞ்சி ; எயில்காத்தல் நொச்சி
அது வளைத்தல் ஆகும் உழிஞை - அதிரப்
பொருவது தும்பையாம் ; போர்க்களத்து மிக்கோர்

செரு வென்றது வாகையாம்

புறத்திணைகளின் 

கரந்தை என்பது கொட்டைக் கரந்தை என்னும் ஒரு பூண்டு வகையாகும்.

பூவிடுவதற்கு முன் இலைகளைப் பறித்துப் பொடி செய்து சர்க்கரையுடன் சேர்த்து காலை, மாலை சாப்பிட்டு வர குருதித் தூய்மையடையும். தோல் நோய்கள் அனைத்தும் குணமாகும்.

வஞ்சிப் பூவும் சித்த மருத்துவமும்

          எஞ்சா மண்ணாசையால் பகைநாட்டின்மீது படையெடுத்துச் செல்லும் வேந்தனும், அவன் தன் படைமறவரும் வஞ்சிப்பூவைச் சூடிச் செல்லுதல் மரபு. சிலப்பதிகாரத்தில் சேரன் செங்குட்டுவன் ஆரிய மன்னர்மீது கொண்ட வஞ்சினத்தால், இமயத்தை நோக்கிப் படையெடுத்துச் சென்ற போது வஞ்சிப்பூச் சென்றமையைப்,

          பூவா வஞ்சியிற் பூத்த வஞ்சி

            வாய்வாள் நெடுந்தகை மணிமுடிக் கணிந்து” (சிலம்பு – 26:50,51)

என இளங்கோவடிகள் குறித்துள்ளார். வஞ்சிப்பூ களைப்பைப் போக்கும் நோய் எதிர்ப்பாற்றலைப் பெருக்கும் என சித்த மருவத்துவக் குறிப்பு தெரிவிக்கிறது. மேலும் வஞ்சிக் கொடி சித்தமருத்துவத்தில் மிகவும் கொடிய நோய்களான எய்ட்ஸ், புற்றுநோய், காசநோய், சர்க்கரை நோய் முதலானவற்றைக் குணமாக்கும் மருந்து உள்ளதாம். வஞ்சிக் கொடியை சீந்தில் கொடி, வஞ்சி மரம், அமிர்த வல்லி, சோம வல்லி, சாகா மூலி, என்றெல்லாம் சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர். அகநானூற்றுப் பாடல் ஒன்றில்,

        நாண்கொள் நுண்கோலின் மீன்கொள் பாண்மகள்

        தான்புனல் அடைகரைப் படுத்த வராஅல்,

        நார்அரி நறவுஉண்டு இருந்த தந்தைக்கு

        வஞ்சி விறகின் சுட்டு, வாய் உறுக்கும் ( அகம் 216:1-4)

என பாண்மகள் ஒருத்தி தான் பிடித்த விரால் மீனை, வஞ்சி விறகால் சுட்டுத் தன் தந்தைக்கு உண்ணத் தந்தமையைக் குறிப்பிடுகின்றது. வஞ்சி மலர் மட்டுமல்லாமல், வஞ்சி விறகும் மருத்துவ குணம் கொண்டது என்பதை இப்பாடல் அடிகளின் மூலம் அறியலாம்.

உழிஞைப் பூவும் சித்த மருத்துவமும்

          அரண்கள் சூழ நாட்டின் மருதநிலப் பகுதியில் அமைக்கப்பெறும் கோட்டையைக் கைப்பற்றும் நோக்கில் சுற்றிவளைத்துப் போரிடும் மறவர் உழிஞை மலரைச் சூடிப் போரிடுவர். அதனால் கோட்டைப் போர் எனப்பெற்றது. அறுகை எனும் மன்னன் உழிஞை சூடிப் போர் புரிந்தமையைப் பரணர் நுண்கொடி உழிஞை வெல்போர் அறுகை எனப் பதிற்றுப்பத்தல் குறிப்பிட்டுள்ளார்.

          போர்மறவர்கள் சூடிய உழிஞை மலர், மஞ்சள் நிறமுடையது. இவ் உழிஞைக் கொடியைக் கிராமங்களில் கொற்றான் கொடி என அழைக்கின்றனர். கொற்றான் என்பது கருங்கொற்றான், நூழிற்கொற்றான், முடக்கொற்றான் (முடக்கறுத்தான்)  எனப் பல வகைப்படும். இக் கொடியானது முடக்குவாதம், கால்வலி முதலானவற்றிற்கு அருமருந்தாகப் பயன்படுகிறது.

நொச்சிப்பூவும் சித்த மருத்துவமும்

          தம் கோட்டையைக் காப்பதற்காகப் போர்புரியும் கோட்டைக்குரிய நொச்சி மறவர் சூடும் நொச்சி மலரின் மருத்துவக் குணங்கள், சித்தர் பாடல்கள் பலவற்றிலும் தெரிவிக்கப் பெற்றுள்ளன. பல்லாயிரம் வருடங்கள் கழிந்த பின்னரும், நொச்சிமரம் தம் பெயர் மாறாமல் மருத்துவப் பயன் கருதி இன்றும் வளர்க்கப் பெற்று வருகிறது.

          நொச்சி மரமானது நல்ல காற்றை (ஆக்ஸிசன்) அளிக்கக் கூடியது. நொச்சி மரத்தின் மருத்துவ குணமறிந்து சங்க கால மக்கள் வீடுதோறும் அதனை வளர்த்தமையால் நொச்சியை மனைமரம் என்றே இலக்கியங்கள் (நற்.246, அகம் 21, 367. பொரு.185, புறம் 16) குறிப்பிட்டுள்ளன.

தும்பைப் பூவும் சித்த மருத்துவமும்

          தம்முள் மாறுபாடு கொண்ட இருமன்னர்தம் படைகளும் நேருக்குநேர் நின்று மோதிக் கொள்ளும் போரே தும்பைப்போர் என அழைக்கப்பெற்றது. கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதியை,

          வேங்கை மார்பன் இரங்க வைகலும்

        ஆடுகொளக் குழைந்த தும்பைப் புலவர்

        பாடுதுறை முற்றிய கொற்ற வேந்தெ” (புறம்-21)

என ஐயூர் மூலங்கிழார் பாராட்டியுள்ளார். நொச்சியைப் போன்று, தும்பையும் பெயர் மாறாமல் சித்த மருத்துவத்தில் கொடிய விஷங்களையும் நீக்கக் கூடிய மூலிகையாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தாவரவகையைச் சார்ந்த தும்பைப்பூவின் மருத்துவ இயல்புகளைத்,

          ”தாகங் கடிதொழியுஞ் சன்னிபா தங்களறும்

          ஆகந் தனில் விழிநோய் அண்டுமோமாதந்த

           வம்பைப் பீறுங்குயத்து மாதேநின் செங்கரத்தால்

            தும்பைப்பூத் தன்னைத் தொடு

எனத் தேரையர் தம் பாடலில் குறிப்பிட்டுள்ளார்.

வாகைப்பூவும் சித்த மருத்துவமும்

        சங்ககாலப் போர்களில் வெற்றிப் பெற்ற மன்னனும் அவன் படைமறவரும் வாகைப்பூவைச் சூடிக்கொண்டு வெற்றி நிகழ்வுகளைக் கொண்டாடியமையைச் சங்க இலக்கியங்கள் மூலம் அறியலாம். தற்காலத்திலும் வெற்றிப் பெற்றவனை வெற்றி வாகை சூடினான் என்று கூறும் வழக்கமுள்ளது. வாகைப்பூவானது வரலாற்றுச் சிறப்புடன் மருத்துவச் சிறப்புக்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. தும்பையைப் போன்று விஷத்தை முறிக்கும் குணம் இம்மலருக்கும் உண்டு. மேலும் காயங்களை, நாட்பட்ட புண்களை ஆற்றும் அற்புத ஆற்றல் வாய்ந்தது என்று சித்தர்கள் தெரிவித்துள்ளனர்.

          வாதசம னஞ்செய்யும் வர்விடத்தைப் போக்கிவிடும்

           சீதசிலேத் துமத்தைச் சிதைக்கும்காண்போதவுள்ள

           மாகைப்பை வைத்திருக்கும் மாநிலத்தி லேபெரிய

            வாகைப்பூ தன்னை வழுத்து

என அகத்தியர் குணபாடப் பாடல் தெரிவிக்கின்றது. அதாவது வாகைப்பூவை அரைத்துக் கட்டிகள், வீக்கம், தடிப்பு இவைகளின் பூசி வர அவைகள் குணமடையும். பூவை அரைத்து, குடிநீர் செய்து கொடுத்து வர வளிநோய்கள், பாம்புக்கடி, ஐயப்பெருக்கையும் போக்கும் என்பது இப்பாடலின் பொருள். ஆகப் போர்க்களங்களில் ஏற்பட்ட காயங்களை ஆற்றும் வகையில் போரின் முடிவில் கொண்டாடப் பெற்ற வெற்றி விழாவில் மறவர், வாகைப்பூவைச் சூடியிருப்பர்.

நிறைவாக,

          இவ்வாறு போர்களின் தன்மைக்கேற்ப, மறவர்களுக்குப் பாதிப்புகள் ஏற்படாமல் காக்கவும், நோய் எதிர்ப்புச் சக்திகள் பெருக்கவும், நல்ல காற்றைச் சுவாசிப்பதற்காகவும், போரில் உண்டான வெட்டுக்காயங்கள், புண்கள் ஆறச் செய்வதற்கும் எனப் புறத்திணை மலர்கள் பயன்படுத்தப் பெற்றுள்ளன. அதாவது, மருத்துவப் பயன்கருதியே போர்வீரர்கள் தம் தலைகளில் சூடிய பூங்கண்ணிகள், இக்கால மருத்துவ முதலுதவிப் பெட்டிகள் போல் அவர்களுக்கு விளங்கின.

மலர்களின் மருத்துவக் குணங்களைச் சங்கத் தமிழர் அறிந்திருந்தமையால், அவற்றைத் தம் அக வாழ்விலும், புற வாழ்விலும், இடத்திற்கேற்பவும் காலத்திற்கேற்பவும் பயன்படுத்தியுள்ளனர்.

         

     

         

    

 

 

 

    

 

 

Comments

Popular posts from this blog

எண்ணம் போல் வாழ்வு

                                                                        எண்ணம் போல் வாழ்வு             நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·      மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·         வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·   ...

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·         பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·         பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல். ·         உண்மைக்குப் புறம்பானவற்றைச் செய்யாதிருத்தல். ·         நண்பர்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·         மனத்திடத்தோடு வாழ்தல். ·         ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·         மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·         எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.      யாரையும் வெறுக்காதே ...