Skip to main content

இணையமும் இதழ்களும்

 

இணையமும் இதழ்களும்

 

            உலகம் முழுவதும் ஏறக்குறைய நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்ட இணையத்தின் செயல்பாடு அண்மையில்தான் பல்வேறு வழிகளில் பெரும் மாற்றத்தையும், வளர்ச்சியையும் கண்டுள்ளது. அண்மைக்காலம் வரையில் இணையத்தின் செயல்பாடு, பயன்பாடு  பெரும்பாலும் ஆங்கிலமொழியே பயன்படுத்தப்பட்டு வந்தது. பல்வேறு நாடுகள் இணையத்தைப் பலவழிகளில் பயன்படுத்தத் தொடங்கியபின் அந்தந்த நாட்டு மொழிகள் இணையத்தில் இடம்பெறும் தேவை ஏற்பட்டது. எந்தத் துறையின் அறிவும் அம்மக்கள் பேசும் மொழியில் இருந்தால்தான் அது மக்களை எளிதில் சென்றடையும். அப்போதுதான் மக்களால் பெரிதும் பயன்படுத்த முடியும் என்ற அடிப்படையில் தமிழ்மொழி இணையத்தில் இடம்பெற வேண்டிய தேவையைக் காலம் ஏற்படுத்தித் தந்தது. இயற்கை மொழிஆய்வு அடிப்படையில் தமிழை நோக்கும் போது மற்ற மொழிகளைக் காட்டிலும் தமிழ்மொழிக்கு அதிக சிறப்பிடம் உண்டு. இச்சிறப்பே இணையத்தில் தமிழ்மொழி வளரப் பெருந்துணையாக இருந்தது.

இணையத்தில்  இதழியல்

  கல்வி, வணிகம், வங்கி சேவைகள், பொறியியல், மருத்துவம், வேளாண்மை போன்ற பல்வேறு துறைகள் கணினி தொழிற்நுட்பத்தைப் பயன்படுத்தி முன்னேறி வருகின்றன. அந்த வகையில் இதழியல் துறையும் முன்னேறி வருகிறது. அச்சு இதழியல் தொழிற்நுட்பத்தில் மிகப்பெரிய மாற்றத்தைக் கணினி ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் இணையத்தில் இதழியல் என்ற பிரிவும் தற்போது சிறப்புற நடைபெறுகிறது. அச்சில் வருகிற இதழ்களைப் போன்றே இணையத்தில் நூற்றுக்கணக்கான இதழ்கள் வருகின்றன. இவற்றை இணைய இதழ்கள் (E-Journals/ E-Zines) என்று குறிப்பிடுவர்.

இணையத்தில் இதழ்கள் வளர்ந்த நிலை

அச்சு ஊடகம், ஒலி ஊடகம், காட்சி ஊடகம் என எல்லாவற்றையும் தன்னகத்தே கொண்டு உருவான இணைய ஊடகத்தின் வளர்ச்சி, கடந்த சில ஆண்டுகளில் பல மடங்கு உயர்ந்துள்ளது. ஆரம்பத்தில் மிக சாதாரணமாக கருதப்பட்ட இணைய ஊடகங்கள் கடந்த சில வருடங்களில் உள்ளடக்கம், கட்டமைப்பு என எல்லாவற்றிலும் முன்னேறியிருக்கின்றன. ஊடக மொழிகளில் இணையத்தைப் பயன்படுத்துவதில் தமிழ்மொழியின் பங்களிப்பு சிறப்பானதாகவே உள்ளது. இதற்குப் பெருமளவில் துணை நின்றவர்கள் புலம்பெயர் தமிழர்களும், தொழில் நிமித்தமாக அயல்நாடுகளுக்குச் சென்ற தமிழர்கள் முக்கிய பங்கு வகித்தவர்கள். நாடு, இனம், மொழி எனக் கடல்கடந்து சென்றாலும் தம் தமிழர்கள் பண்பாடு, மொழி, கலை போன்றவற்றால் தமக்கான அடையாளத்தோடு வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் தமிழைப் பேசவும், கேட்கவும் வழி இல்லாமல் இருந்த நிலையில் இணையம் மூலம் கருத்துக்களையும், தகவல்களையும் பரிமாறிக்கொள்ள இணைய தளங்களையும், இணைய இதழ்களையும் தோற்றுவித்தனர்.

தமிழில் இணைய தளங்கள் உருவாவதற்குப் பல்வேறு காரணங்கள் உண்டு. அரசியல் காரணங்களால் இலங்கையில் வாழ்ந்த தமிழர்கள் அயல்நாடுகளுக்குப் பரவி வாழ வேண்டிய தேவை 1983-ஆம் ஆண்டிற்குப் பிறகு ஏற்பட்டது. அதுபோல் தமிழகத் தமிழர்கள் பணியின் பொருட்டு அயல்நாடுகளுக்குச் செல்ல நேரிட்டது. இவ்வாறு தமிழகத்திலிருந்து பிரிந்து சென்ற மக்கள் தாயகத்துடன் தொடர்பு கொள்ளவும் பிற நாடுகளில் வாழுபவர்களுடன் தொடர்பு கொள்ளவும் இணைய தளங்களைப் பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது. அதுபோல் தாம் வாழும் நாடுகளில் தமிழ் வளர்ச்சிப் பணிகளில் கவனம் செலுத்தினர். அதற்கெனத் தமிழ்ச் சங்கங்கள், அமைப்புகள், வளர்ச்சி நிறுவனங்களை உருவாக்கினர். தம் பணிகளை வெளிவுலகிற்கு வெளிப்படுத்த இணையதளங்களைப் பயன்படுத்தினர். அவ்வகையில் இணையத்தில் தமிழை அயல் நாட்டுத் தமிழர்கள் 1986 முதல் பயன்படுத்தத் தொடங்கினர். முதல் முயற்சியாகத் தாங்கள் உருவாக்கிய தமிழ் எழுத்துருக்களைக் கொண்டு மின்னஞ்சல் அனுப்பி, உறவை வளர்த்தனர்.

 தமிழ் எழுத்துருக்களின் உருவாக்கத்தின் தொடர்ச்சியாக தமிழில் இணையதளங்கள், இணைய இதழ்கள் வடிவமைப்பதில் தொழிற்நுட்ப வல்லுநர்களும் தமிழறிஞர்களும் ஈடுபட்டனர். இதனால் முதல் தமிழ் இணைய இதழ் எது என்பதில் கருத்து வேறுபாடுகள் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இன்றைக்கு தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளில் இருந்தும் தமிழ் இணைய இதழ்கள் வந்துகொண்டிருக்கின்றன. இதனால் உலகளவில் தமிழர்களின் உணர்வுகளையும், படைப்புக்களையும் காணமுடிகிறது.

இணையத்தில் மின்னிதழ்கள்

     இணையத்தின் வழி இதழ்கள் வெளிவருவதை இணைய இதழ்கள் அல்லது மின்னதழ்கள் (e – journals/ezines) என்று குறிப்பிடுவர். தமிழ் இலக்கியம் சார்ந்த படைப்புக்களைத் தாங்கி அச்சில் வெளிவராமல் இணையத்தில் மட்டும் வெளிவருகின்ற மின்னிதழ்கள் இங்கு விளக்கப்பட்டுள்ளது.

1.   திண்ணைவீட்டில் திண்ணை வைத்துக் கட்டுவது தமிழர் மரபு. திண்ணைகளில் அமர்ந்து உள்ளூர்  செய்தி முதல் உலகச் செய்தி வரை பேசப்படும். இது வெறும் திண்ணைப் பேச்சாக இல்லாமல் அறிவார்நத செய்திகளை ஆராய்கின்ற பேச்சாக இருக்கும். இம்மின்னதழ்களில் யார் வேண்டுமானாலும் எதைப் பற்றி வேண்டுமானாலும் எழுதலாம். இதன் பொருட்டுத்தான் இவ்விதழுக்கு இப்பெயர் ஏற்பட்டதாக அறிய முடிகிறது.

      இம்மின்னிதழில் கலை, அரசியல், அறிவியல், சமூகம், கதை கட்டுரை, கவிதை, இலக்கியம் சார்ந்த செய்திகள் எனப் பல்வகைச் செய்திகள் இடம் பெறுகின்றன. இதன் இணைய முகவரி : www.thinnai.com

2.   தட்ஸ் தமிழ்திண்ணையைப் போல இலக்கிய இதழாக இல்லாமல் நாளிதழைப் போல இம்மின்னதழ் வெளிவருகிறது. இதில் பல்துறைச் சார்ந்த விரிவான செய்திகள், இலக்கியச் செய்திகள்  வெளிவருகிறது. இவ்விதழ் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் ஆகிய ஆறு மொழிகளில் வெளிவருகிறது என்பதும்,  இதில் செய்திகள் உடனுக்குடன் வெளியிடப்படுகின்றன என்பதும் வியத்தகு செய்தியாகும்.  இதன் இணைய முகவரி : www.thatstamil.com

3.   வார்ப்புஇவ்விதழ் கவிதைக்கென்று வாரந்தோறும் வெளிவருகின்ற இணைய இதழ் வாரந்தோறும் வெளிவருகின்றது. இது 1998 ஆம் ஆண்டுநிக்குமோ நிக்காதோஎன்று பெயரில் இணைய இதழாக வெளிவந்தது. கவிஞர் இசாக்  அவர்களின் ஆலோசனைப்படி கவிஞர் மாலியன் அவர்களால் வார்ப்பு என்ற பெயர் மாற்றம் பெற்றது. இவ்விதழின் பதிப்பாசிரியர் பா. மகாதேவன். கவிதைகள், விமர்சனங்கள், நேர்காணல்கள், கட்டுரைகள் என்னும் தலைப்புகளில் செய்திகளைப் பெறும்வகையில் இது வடிவமைக்கபட்டுள்ளது. இதன் இணைய முகவரி : www.vaarppu.com

மேலும், மரத்தடி, தமிழம் நெட், தமிழ்க்கூடல், நிலாச்சாரல், தமிழோவியம், தமிழ்க்காவல், தமிழ்த்திணை, வானவில், ஆறாம்திணை, அம்பலம், அரும்பு போன்ற மின்னிதழ்கள் இலக்கியச் செய்திகளை வெளியிடுகின்ற இணைய இதழ்களில் மேற்காட்டியவை குறிப்பிடத்தக்கவையாகும். இவை போன்ற இன்னும் பல நூற்றுக்கணக்கான இதழ்கள் இணையத்தில் காணக்கிடைக்கின்றன.                 

அச்சிலும் இணையத்திலும் வெளிவரும் இதழ்கள்

அச்சு இதழ்களாக வெளிவரும் இதழ்கள் பெருமளவு வாசகப்பரப்பை அடைய வேண்டும் என்ற நோக்கில் இன்று இணையத்திலும் தம் இதழ் பக்கங்களை வெளியிடுகின்றன. இவ்வாறு அச்சிலும் இணையத்திலும் வெளியிடப்படுகின்ற இதழ்கள் இரண்டு வழிமுறைகளில் வெளிவருகின்றன. ஒன்று அச்சு இதழ் வடிவமைப்பு போலவே அதே வடிவமைப்பில் E-paper என்ற வகையில் வெளியிடுவது. மற்றொன்று இதழ் செய்திகளைத் தொகுத்து நிரல் படுத்தி, தமிழகம், இந்தியா, அரசியல், பொது செய்திகள், சினிமா என்று பகுத்து வழங்குவது.

மக்களிடையே பெரும் செல்வாக்கு பெற்று வெளிவருகின்ற அச்சிதழ்கள் பெரும்பாலும் இன்றைக்கு இணையத்திலும் தம் பக்கங்களை வெளியட்டுவருகின்றன. அச்சில் வந்து கொண்டிருக்கின்ற நாளிதழ்கள், மாலை இதழ்கள், வார இமழ்கள், மாத இதழ்கள், காலாண்டிதழ்கள் என அனைத்து இதழ்களும் இணைய இதழ்களாக வெளிவருகின்றன.

தினமலர் (www.dinamalar.com)

அச்சில் நாளிதழாக வெளிவருகின்ற தினமலர் இணையத்தில் www.dinamalar.com எனும் இணைய முகவரியில் வெளிவருகிறது. இணைய இதழின் தன்மைக்கு ஏற்ப இருபத்திநான்குமணி நேரமும் உடனுக்குடன் புதிய செய்திகளை புதுப்பித்துக் கொண்டே இருக்கின்றன. அரசியல், பொதுவான செய்திகள், கோர்ட், உலகம், தமிழகம், மாவட்டம், விளையாட்டு, வர்த்தகம், சினிமா இன்றைய செய்திகள், தற்போதைய செய்திகள், தினமலர் செய்தி (வீடியோ), கருத்துக்கணிப்பு, சினிமா கேலரி என்று அச்சு இதழில் வெளியிட முடியாத செய்திகளையும் தம் இணைய இதழில் வெளியிடுகின்றன. அது மட்டுமின்றி வாரம் முழுக்க இணைப்பிதழாக வெளிவருகிற கம்ம்யூட்டர் மலர், சிறுவர் மலர், ஆன்மிக மலர், வார மலர் போன்ற அச்சு இதழையும் இணைத்து வெளிவருகின்றன.

மாலைமலர் (www.malaimalar.com )

அச்சில் தினமும் மாலைநேரங்களில் வெளிவருகிற மாலைமலர் இணையத்தில் www.malaimalar.com எனும் முகவரியில் வெளிவருகிறது. அச்சு இதழைப்போல் இல்லாமல் உடனுக்குடன் செய்திகளை தரவேற்றம் செய்து வருகிறது. தலைப்புச்செய்திகள், உலகச்செய்திகள், தேசியச்செய்திகள், மாநிலச்செய்திகள், மாவட்டச்செய்திகள், விளையாட்டுச்செய்திகள் என அச்சில் வெளிவருகிற செய்திகளோடு ஆன்மிகம், ஆரோக்கியம், வீடியோ, காலச்சுவடுகள், ஹலோ FM, E-paper’ போன்று இணைய இதழின் வடிவமைப்போடு செய்திகளை உடனுக்குடன் வெளியிடுகின்றன.

விகடன் (www.vikatan.com)

வார இதழாக அச்சில் வெளிவருகிற ஆனந்த விகடன் இணையத்தில் www.vikatan.com எனும் முகவரியில் வெளிவருகிறது. இணையத்தில் இம்முகவரியில் ஆனந்தவிகடன், ஜுனியர் விகடன், அவள் விகடன், சுட்டி விகடன், சக்தி விகடன், நாணயம் விகடன், மோட்டார் விகடன், பசுமை விகடன், டாக்டர் விகடன் என விகடன் குழுமத்தில் இருந்து வெளிவருகிற அனைத்து வார இதழ்களையும் ஒரே இணைய முகவரியில் வாசகர்கள் தேர்வு செய்து படிக்கும் வகையில் வெளிவருகிறது. மற்றும் உடனுக்குடன் செய்திகளையும் பதிவேற்றுகின்றன. செய்திகள், ஹைலைட் செய்திகள், ஒலிவடிவம், விகடன் வெப் டி.வி., இன்றைய கேலரி, யூத் ஃபுல் விகடன்என்று இணையத்தில் மட்டும் வெளியிடுகிற செய்திகளையும் வெளியிடுகின்றன.

புதிய தலைமுறை (www.puthiyathalaimurai.com)

அச்சில் வார இதழாக வெளிவருகிற புதியதலைமுறை இதழ் இணையத்தில் www.puthiyathalaimurai.com எனும் முகவரியில் இணைய இதழாக வெளிவருகிறது. இந்த வாரம், சென்ற வாரம், மின்-இதழ்கள், விதைகள், வாசகர் வட்டம், பிரசுரங்கள் எனும் செய்திகளை தலைப்பிட்டு வெளிவருகிறது. மற்றும் புதிய தலைமுறை, புதிய தலைமுறை கல்வி ஆகிய இரு இதழ்களின் செய்திகளையும் பதிப்பிக்கின்றன.

உலகத் தமிழர் (www.worldtamils.com )

கனடாவில் வார இதழாக வெளிவருகிற உலகத்தமிழர் எனும் இதழ், இணையத்தில் www.worldtamils.com (உலகத் தமிழர் இணையம்) எனும் முகவரியில் நாளிதழாக வெளிவருகிறது. அச்சு இதழின் பதிப்பனை அப்படியே E-paper எனும் பகுதியில் வெளியிடுகின்றது. மற்றும் செய்திகள், கட்டுரைகள், புகைப்படத்தொகுப்பு, கருத்துக்களம், காணொளிகள், உலகச்செய்திகள், இந்தியா, கனடா, விளையாட்டு, விழுதுகள், இராசிபலன், சினிமா, அரசியல், அறிவியல், மருத்துவம் போன்ற செய்திகளை வெளியிடுகின்றன. துயர் பகிர்வுகள் (மரண அறிவித்தல்கள்) எனும் பகுதியில் ஈழத் தமிழர்களின் மரண அறிவிப்புகளை அவர்களின் புகைப்படங்கள், முகவரிகளோடு வெளியிடுகின்றன. உலகமெங்கும் ஈழத்தமிழர்கள் பரவி வாழ்ந்துவருவதால் இலங்கையிலும். புகலிட நாடுகளிலும் உள்ளோர் அறிந்து கொள்ளும் வகையில் இத்தகவலை பதிவு செய்கின்றனர்.

அச்சு இதழ்கள் இணையத்தில் வெளிவரும் போது அச்சில் வருகிற இதழ் செய்தியோடு உடனுக்குடன் செய்திகளை தரவேற்றம் செய்தும், செய்திகள் குறித்த வீடியோக்கள், ஒலி வடிவில் செய்திகளையும் மற்றும் பல்வேறு சிறப்பு பக்கங்கள் பலவற்றையும் இணைத்து வெளிவருகின்றன.

இணையத்தில் அச்சிதழ்கள் பெற்ற மாற்றங்கள்

நாள், வார, மாத இதழ்களாக வரும் அச்சிதழ்கள் இணையத்தில் சில மாற்றங்களைப் பெற்று வெளிவருகின்றன. அவற்றில் முதலாவதாகப் பல்லூடகத் தன்மையை அவை பெறுகின்றன. முதல் பக்கத்திலேயே அனைத்துச் செய்திகளைப் பற்றிய தலைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதனால் நாம் நேரடியாகத் தலைப்பினைத் தேர்வு செய்து படிக்க முடிகிறது. நாள் முழுவதும் செய்திகளை உடனுக்குடன் பதிவேற்றம் செய்கின்றன. சில செய்திகளுக்கு அதன் முக்கியத்துவம் கருதி வீடியோக்களை வெளியிடுகின்றன. ஒலி வடிவிலும் செய்திகளை வழங்குகின்றன. புகைப்படச் செய்திகள் அனைத்தும் வண்ணத்தில் அமைகின்றன. இதனால் கூர்ந்து படிக்கும் வசதி கிடைக்கிறது. வாசகர்களிடம் இருந்து கருத்துக் கணிப்பில் பெறும் வசதி உள்ளதால் செய்திகளின் முக்கியத்துவம் உடனுக்குடன் அறிந்து கொள்ள முடிகிறது.

வணிக நோக்கில் அமையும் தேவையற்ற செய்திகளை அச்சு இதழ்கள் இணையத்தில் தவிர்த்து விடுகின்றன. விளம்பரங்கள் அதிகளவில் இடம்பெறுவதில்லை. இவ்வாறு அச்சு இதழ்கள் இணையத்திலும் சில மாற்றங்களைப் பெற்று இணையத்தில் வலம் வருகின்றன.

நிறைவாக,

          சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலை செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர்  என்பது பாரதியின் அமுத வரிகள். ஆனால் இன்று எட்டுத்திக்கும் செல்ல வேண்டியதில்லை. இணையத்திற்குச் சென்றாலே எல்லாத் திக்குகளும் நம்மை நோக்கி இணைய கரம் நீட்டும்.  எதிர்காலத்தில் பிற தகவல் தொடர்பு ஊடகங்களைக் காட்டிலும் முழுவீச்சில் இணையம் வளர்ச்சியுற்று முன்னணி இடத்தைப் பிடிக்கும் என்பதில் ஐயமில்லை.

பார்வை நூல்கள்

1.  இணையமும் இனிய தமிழும்   - முனைவர் க. துரையரசன்

2.  கணினியும் இணையமும்         - பழனியப்பன்

Comments

Popular posts from this blog

எண்ணம் போல் வாழ்வு

                                                                        எண்ணம் போல் வாழ்வு             நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·      மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·         வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·   ...

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·         பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·         பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல். ·         உண்மைக்குப் புறம்பானவற்றைச் செய்யாதிருத்தல். ·         நண்பர்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·         மனத்திடத்தோடு வாழ்தல். ·         ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·         மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·         எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.      யாரையும் வெறுக்காதே ...