Skip to main content

திருக்குறளில் மனித உறவும் நட்பும்

 

           திருக்குறளில் மனித உறவும் நட்பும்

 

        திருக்குறள் ஓர் அறநூல், அதுவும் அளவால் குறுகியது. அறம் கூறும் இலக்கியம் நூல்களையெல்லாம் நாம் இலக்கியம் என்று ஏற்றுக் கொள்வதில்லை. ஒரு சிறந்த இலக்கியத்திற்கு உணர்ச்சி, கற்பனை, கருத்து, வடிவம் என்னும் நான்குக் கூறுகளும் இன்றியமையாதன. இந்நான்கில் ஏதேனும் ஒன்று குறைந்தாலும் இலக்கியத்தரம் குன்றும். கற்பனை வளம் அற்றவையாம். ஆனால் கருத்தை நயம் ஏதுமின்றி நறுக்குத் தெறித்தாற் போல் கூறும் திருக்குறள் விதிவிலக்காக நின்று எளிய சொற்களில் கற்பனையுடனும், உணர்ச்சியுடனும், அறக்கருத்துக்களை மனித உறவுகளை, நட்புக் கொள்ளும் திறனை வெளிப்படுத்துகின்றது. அதனால் தான் குறள், காலம் கடந்து அறிதோறும் அறியாமை படுவது போல படிக்குந்தோறும் புதிய புதியக் கருத்துக்களைப் படிப்பவர்க்கும் ஆய்வோர்க்கும் தோற்றுவிக்கின்றது.

குறளில் அன்பு நெறி

         அன்பு, உயிர்களின் வாழ்க்கையில் இன்றியமையாத ஓர்அரிய பண்பு. விலங்குகளும் தங்களுக்குள் அன்பைப் பொழிந்து வாழ்கின்றன. வெயிலில் பெண்மானைத் தன் நிழலில் இருத்திக் காத்த ஆண் மானையும் வருந்தி, சுனையில் சிறுநீரைப் பிடியூட்டிப் பின் தான் குடித்தக் களிற்றையும், பாலைக்கலி அன்பின் வடிவங்களாக நமக்குக் காட்டுகின்றது.

         இத்தகைய அன்பு நெறியைத் திருக்குறள் வற்புறுத்துகிறது. அன்பின் வழி என்பது குறளின் அறநெறி முதிர்ச்சியே அருள் ஆருயிர் செயல்படவேண்டும்.

          அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு

           ஏன்போடு இயைந்த தொடர்பு    (குறள் - 73)

           அன்பின் வழியது உயிர்நிலை  (குறள் - 80)

வாழ்க்கையில் தளர்ச்சி வந்துற்று போது ஒழுக்கமுடையவரின் வாய்ச்சொல் வழுக்கல் நிலத்தில் ஊன்றுகோல் போன்று நம்மை நெறிப்படுத்தும்.

           இழுக்கல் உழையுழி ஊற்றக் கோல் அற்றே

            ஒழுக்கமுடையோர வாய்ச்சொல்   (ுறள் 415)

என்பது வள்ளுவர் கருத்து. அறிவுடையார் எதிர்காலத்தில் நிகழப்போவதை நிகழ்காலத்திலேயே அறிந்திருப்பார்.

          வள்ளுவர் இறைவனையே அறிவு வடிவமாகக்  கண்டவர். ‘வாலறிவன்என்றே கூறுகிறார். வாழ்க்கையை நல்வழிப்படுத்துவது அறிவுக்குழப்பத்தினின்றும் தெளிவுத் தருவது அறிவு ஆனாற்றான் வள்ளுவர்,

      எப்பொருள் யார்யார் வாயக் கேட்பினும் அப்பொருள்

       மேய்ப்பொருள் காண்பது அறிவு   (குறள் - 423)

குறள் காட்டும் காதல் வாழ்க்கை

          தமிழர்களின் வாழ்வில் தலையாயது காதல், காதலும் வீரமும் பண்டைத் தமிழரின் இரு கண்கள்,

       எல்லாவுயிர்ககும் இன்பது என்பது

        தானமர்ந்து வரூஉம் மேவற்று ஆகும்

காதலின்பம் என்பது எல்லா உயிர்க்கும் பொது என்று கூறுகிறார்.உடலுக்கு உழைப்பில் இன்பம், உணர்விற்கு ஒப்புரவில் இன்பம், உயிருக்குக் காதலில் இன்பம்,” என்கிறார் தவத்திரு குன்றக்குடியடிகளார். திருவள்ளுவர் 250 குறளில் காதலின்பத்தைப் பாடுகின்றார்.

   காதலின்பத்தைத் தீயுடன் ஒப்பிட்டு, நெருப்பு தன்னைத் தொட்டால் சுடுமே அல்லாமல் காதலின்பம் போல் தன்னை விட்டு நீங்கிய பொழுது சுடவல்லதாகுமோ? என்ற வினாவினை எழுப்புகின்றது.

        இன்பம் சலிக்காமலிருப்பதற்காகத் தலைமகள் ஊடுகின்றாள். வாழ்வில் ஊடல் உப்பு போல் இருக்கவேண்டும் என்கிறது. ஊடியவரை உணர்த்தி ஊடல் தீர்க்கப்படுதல் வேண்டும். அவ்வாறில்லாத வாழ்க்கை வாடிய வற்றிய தடிந்தது போன்று அமைந்துவிடும் என்று எச்சரிக்கைச் செய்கின்றது திருக்குறள்.

        ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்

         கூடி முயங்கப் பெறின்    (குறள் - 1330)

இந்நூல், ‘கரத்தில் தொடங்கிகரத்தில் நிறைவு பெறுகின்றது. தமிழ் நெடுங்கணக்கு போல வாழ்க்கயின் எல்லா நிலைகளையும் உணர்த்தும் பல நிலை அறநூலாகத் திகழ்கின்றது. முன்னைப் பழமைக்குப் பழமையாயும், பின்னைப் புதுமைக்குப் புதுமையாயும் குறள் திகழ்கின்றது.

திருக்குறளில் அரசியல்

          திருவள்ளுவர் அரசியல் ஞானி, இலட்சிய அரசியல் படைத்த பிளாட்டோ, சமுதாய ஒப்பந்தம் கண்ட ரூசோ, பொதுவுடைமை தத்துவம் கண்ட லெனின் ஆகியோர் வைத்து எண்ணத்தக்க அளவுக்குத் திருவள்ளுவரின் அரசியல் சிந்தனை உயர்ந்தது. முடியாட்சிக் காலத்தில் திருவள்ளுவர் வாழ்ந்து திருக்குறளை இயற்றிருப்பினும், அவர் கருத்துக்கள் இன்றைய மக்களாட்சி முறைக்கும் பொருந்துவதாய் உள்ளன.

        முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு

         இறையென்று வைக்கப்படும்     (குறள் - 388)

என்று வள்ளுவர் அன்று கூறிய அரசியல் கருத்து இன்றும் ஆட்சியாளர்க்கும் பொருந்துவதாய் உள்ளது.

   அரசுக்கு இரண்டு வகையான உரிமைகளைக் குறள் வழங்குகின்றது. முதல் உரிமை கடமை, அதாவது தன்னை நம்பி வாழும் மக்களுக்குத் தொண்டு செய்தல், இந்த முதற் கடமையைச் செய்வதற்குத் தடையாக இருப்பவரைத் தண்டித்தல் இரண்டாவது கடமை, முதலுரிமைக் கடமையாகிய தொண்டினைச் செய்யத் துணைக்கருவியாகிய தண்டனை வழங்கும் உரிமை அரசுக்குக் கிடைத்தது.

        அரசுக்குப் பொருள் வரும் வழிகளை இயற்றலும், அறவழிகளில் பொருளை ஈட்டலும், ஈட்டிய பொருளைப் பேணிக் காத்தலும், காத்த அந்தப் பொருளை உரிய முறையில் பகிர்வு செய்வதும் அரசின் தலையாயக் கடமை,

           இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த

            வகுத்தலும் வல்ல தரசு  (குறள்  - 385)

அரசு சான்றோர்களைத் துணையாக்கிக் கொள்ளவேண்டும். புறங்கூறுவதை அப்படியே ஏற்கக் கூடாது என்பதற்குத் திருக்குறள் ஒற்றாடல் என்று ஒரு அதிகாரத்தையே தன்னுள் அமைத்துள்ளது பொருந்துவதாய் உள்ளது.

குறளில் ஆள்வினையுடைமை

          மனித வாழ்வு செயற்களமாக அமைதல் வேண்டும்; செயலின் தூய்மை நெஞ்சிற்கு நிம்மதி அளிக்கும் திருக்குறள் ஆள்வினையைப் போற்றி உரைக்கின்றது. மனித இனம் முன்னேற உழைப்பு அவசியம் என்பதை வலியுறுத்துகின்றது.

         எந்தவொரு செயலைச் செய்தாலும் காலமும் இடனறிந்து, வலியறிந்து செய்ய வேண்டும்,  குறளில் அப்பொழுதுதான் செயலில் வெற்றிக்கிட்டும். ஆள்வினையுடைமைப் பற்றி,

           பொறியின்மை யார்க்கும் பழியன்;று அறிவறிந்து

            வினையின்மை பழி  ( குறள் - 68)

என்று ஆள்வினை இன்மையைப் பழி என்கின்றது.

      செய்ய வேண்டிய செயலைச் செய்யாமல் விடுவதாலும், செய்யத் தகாதவற்றைச் செய்வதாலும் ஒருவன் கெடுவான். செயலியற்றும் போது, இடுக்கண் வருவது இயல்பு. அதற்காக மனம் தளராமல் ஊக்கமுடனும், உறுதியுடனும் பாடுபட்டால் இன்பம் அமைது உறுதி.

        ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்

         தாழாது உஙற்றுபவர்  (குறள்  - 610)

தெய்வமே நம்முடைய காரியத்தைச் சாதித்துக் கொடுக்கத் தவறிவிட்டாலும், அல்லது தெய்வத்தால் முடியாது போனாலும் நாம் முயன்றால் முடிக்க முடியாது என்பது வள்ளுவத்தின் முடிவு.

குறளில் பொருளாதாரச் சிந்தனை

         பொருள் உலக நிகழ்வுகள் அனைத்துக்கும் அடிப்படை. இன்று மட்டுமன்று, என்றுமே வாழ்க்கையை நடைப்பயணத்திற்குப் பொருள் இன்றியமையாத ஒன்றாக இருந்து வந்திருக்கிறது. மனித வரலாற்றில் தொடர்ந்து முதன்மை வகித்து வருவது இந்த பொருளேயாகும். ‘செய்க பொருளைஎன்று ஆணை பிறப்பிப்பது போலக் கூறுகின்றது. ”செல்வரை எல்லோரும் செய்வர் சிறப்புஎன்றும் பேசுகின்றது. சிறந்ததாகிய பொருளை மிகுதியாக ஈட்டியவர்க்கு மற்ற அறமும் இன்பமாகிய இரண்டும் ஒரு சேரக் கைக்கூடும். கைக்கூடும் என்பது எளிய பொருளாகும்.

        ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்

         ஏனை இரண்டும் ஒருங்கு     (குறள் - 760)

என்று பொருளின் தேவையை எடுத்துக் காட்டுகின்றது.

         திருக்குறள் அறநூல். ஆதலால் பொருள் போற்றியுரைக்கும் போதும், அதுவரும் வழியைப் பற்றி அக்கரைக் கொள்கின்றது.  

         அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து

          தீதின்றி வந்த பொருள்      (குறள்  - 764)

அறவழியில் ஈட்டிய பொருள் இன்பத்தை நல்கும்.

          பழமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்

           கழிநல் குரவே தலை     (குறள் - 657)

பழியை மேற்கொண்டு இழிதொழில் செய்து பெரும் செல்வத்தை விடச் சான்றோர் வினைத் தூய்மையோடிருந்து பெறும் வறுமையே சிறந்தது என்கின்றது குறள். சுருங்கக் கூறின் பிளாட்டோவின் குடியரசும், அரிஸ்டாட்டிலின் ஆட்சிக் கலையும், கௌடியல்யரின் அர்த்தசாஸ்திரம், ரூசோவின் சமுதாய ஒப்பந்தமும், காரல் மார்கஸின் பொருள் முதல் வாதமும் பொருளாதாரச் சிந்தனைகளை உள்ளடக்கியன என்றாலும், திருக்குறள் அத்துடன் அறத்தையும் பிணைத்திருப்பது அதன் தனிசிறப்பாகும்.

நீதியால் நீதியை விளக்கும் முறை

      ஒரு வினையைக் கொண்டே மற்றொரு வினையை முடிக்க வேண்டும் என்பது வள்ளுவரின் பேரவா. இக்கருத்தை பழகிய யானையைக் கொண்டு பழகாத யானையைப் பிடிப்பதன் மூலம் விளக்குகிறார்.

        வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள்

          யானையால் யானையாத்தற்று  (குறள் - 678)

இக்கருத்தின் படியே ஒரு நீதியை விளக்க வந்த வள்ளுவர் அவர் விளக்க வந்த நீதியை உவமையாக்கி மற்றொரு நீதியை விளக்குகிறார்.

          அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை

            ஒழுக்க மிலான்கண் உயர்வு” (குறள்  - 252)

இவ்வாறு ஒரு நீதியைக் கொண்டு மற்றொரு நீதியை விளக்கும் வள்ளுவரின் புலமை பாராட்டி மகிழத்தக்கது. உலகப் பொருள்களையும் அவற்றின் நிகழ்ச்சிகளையும் பண்புகளையும் எடுத்துக்காட்டுதலேயன்றி, ஒரு கல்லில் இரண்டு மாங்காய் விழ எறிகின்ற வீரம் போலக் கண்ணன் கன்றைக் கொண்டு விளவெறிந்து இருபயன் கொண்டது போல ஒரு நீதிக்கு ஒரு நீதியை உவமமாகக் காட்டி இரு பயனை எய்த வைப்பர். என்று வள்ளுவரின் திறனை எடுத்துரைக்கின்றார் மகாவித்துவான் திரு..தண்டபாண தேசிகர்.

இனிமைதரும் நட்பு

        அறிவு கொளுத்தும் நூல்களைப் படிக்குந்தோறும் புதுப்புது கருத்துக்களைக் கற்பவர் தம் நெஞ்சத்தைக் கவர்ந்து இன்பத்தைத் தருகின்றன. அந்நூல்கள் தோறும் இனிய எண்ணங்களை அதைப்போலக் கூடிப்பழகும் உள்ளத்தில் அரிய வினைகளை வளர்க்கும் தன்மை பெற்றது. ஆற்றிமுடிக்கும் ஆற்றல் பெற்ற நட்புக்கு இன்ப எண்ணங்களை நெஞ்சில் வளர்க்கும் ஆற்றுலும் உண்டு. அந்தக் கருத்தை,

          நவில்தோறும் நூல்நயம் போலும் பயில்தோறும்

            பண்புடை யாளர் தொடர்பு  (குறள் - 783)

என்னும் குறள் விளக்குகிறது.

          நட்பு அரிய செயல்களை முடிக்கும்; அளவற்ற இன்பம் கொடுக்கும்; என்று கூறியிருப்பதாலும், அறமிலா வழியில் சென்றால் இடித்துரைக்கும் இருவர் மனமும் ஒன்று. கோப்பெருஞ்சோழனும், பிசிராந்தையாரும் கொண்ட நட்பு இத்தகையதே. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்ததும் இல்லை, பழகியதும் இல்லை, ஆயினும் அவர்கள் நண்பர்களானார்கள். நட்பு ஆவதற்குக் காரணம் அவர்கள் இருவருடைய மனமும் ஒன்றுபட்டிருந்ததேயாகும். ‘உணர்ச்சி தாம் நட்பாம் கிழமைதரும்என்று கூறி நட்பு எத்தகையது என்பதை வள்ளுவர் தெளிவுப்படுத்துகிறார்.

நிறைவாக,  

        வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து

         வான் புகழ் கொண்ட தமிழ்நாடு

என்று பாரதியார் திருக்குறளையும், திருவள்ளுவரையும் பாராட்டியுள்ளார்.

        ஓரறிவுயிர்கள் முதல் மக்கள் வரையில் பலவகை உயிர்களும் உடம்பெடுத்துப் பிறப்பு முதல் இறப்பு வரையில் எல்லாம் ஒரு வகை ஒழுங்கு முறைக்கு உட்பட்டே நடந்து வருகின்றன. மக்கள் மனம் கொண்டு வாழ்க்கையில் நிகழும் எழுச்சி, உயர்வு, தாழ்வு, கேடு, ஆக்கம் இன்பம், துன்பம் முதலிய பலவும் இவ்வாறே ஒழுங்கான முறையில் அமைந்த வருகின்றன. இதற்கு பல இலக்கியங்கள் தூண்டுகோலாக நமக்குப் பயன்படுகின்றன. அதன் சான்று நம் திருக்குறள், மாறிவரும் காலப்போக்கிற்கு ஈடுகொடுக்கும் ஆற்றல் வாய்ந்தது. உலகளாவிய சிந்தனையைஉறவு நிலையை  - ஒருமைப்பாட்டை உருவாக்குவது திருக்குறள் என்னும் உலகப் பொதுமறை நூலாகும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

 

 

 

 

 

 

 

 

 

 

Comments

Popular posts from this blog

எண்ணம் போல் வாழ்வு

                                                                        எண்ணம் போல் வாழ்வு             நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·      மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·         வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·   ...

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·         பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·         பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல். ·         உண்மைக்குப் புறம்பானவற்றைச் செய்யாதிருத்தல். ·         நண்பர்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·         மனத்திடத்தோடு வாழ்தல். ·         ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·         மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·         எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.      யாரையும் வெறுக்காதே ...