பாரதியார் படைப்புக்களில் சங்க இலக்கிய தாக்கம்
பாரதி படைத்தப் படைப்புகள் அனைத்தும், பாரதி எழுதிய எழுத்துக்கள் அனைத்தும் இன்றும் நமக்கு முழுமையாகக் கிடைக்கவில்லை. அண்மைக் காலத்தில் தான் ‘இந்து‘ நாளிதழில் பாரதி எழுதிய எழுத்துகள் பல முதன்முறையாக ஆ.இரா.வேங்கடாசலபதியின் பெரிய முயற்சியால் அரிய தேடலால் நமக்குக் கிடைத்திருக்கின்றன. இன்னும் கிடைக்க வேண்டியனவும் ஏராளம் உள்ளன என்பதனையும் பாரதியியல் நமக்கு உணா்த்திக் கொண்டேயிருக்கின்றது.
இந்நிலையில் பாரதியின் வாழ்க்கையில் இருந்தும், பாரதியின் படைப்புகளிலிருந்தும் சங்க இலக்கியங்களும், பிற பழந்தமிழ் இலக்கியங்களும் எந்தளவில் பாரதியால் அறியப்பட்டிருந்தன, பயன்பட்டிருந்தன, பதிவு செய்யப்பட்டிருந்தன என்பதைத் தமிழுலகின் பார்வைக்கு உரித்தாக்கும் என்பதே இவ்வாய்வு கட்டுரையின் நோக்கமாகும். பழந்தமிழ் இலக்கியங்களும் பொது நிலையில் சங்க இலக்கியமும், சிறப்பு நிலையில் புறநானூறும் பாரதியாரால் ஆளப்பெற்ற பாங்கு பழந்தமிழ் – பழந்தமிழா் – பழந்தமிழகம் குறித்த பாரதியின் எண்ணம் முதலியனவெல்லாம் தெளிவாகும் வகையில் இவ்வாய்வுக் கட்டுரை அமைக்கப்பட்டுள்ளது.
கல்வியின் பெரியவன் பாரதி
பாரதியின் தமிழிலக்கியக் கல்வி எத்தகையதாய் இருந்திருக்கின்றது. தமிழிலக்கியச் செல்வங்களில் எவையெல்லாம் பாரதியின் நுட்பமான பார்வைக்கு இலக்காகியிருக்கின்றன? பாரதி எவற்றையெல்லாம் பதிவு செய்திருக்கின்றார்? என்று எண்ணிப் பார்க்கையில் பரந்து விரிந்து தமிழுலகமே பாரதி வாயிலாகக் கண்முன் காட்சிதருகின்றது.
தமிழ்மொழியைப் பொறுத்தவரை புறநானூற்றில் தொடங்கி, தன் காலத்தின் இளையகவி சுப்புரத்தினம் வரை கவிதைகளைப் பார்வையிட்டிருக்கின்றார். பதிவும் செய்திருக்கின்றார். புறநானூறு, திருக்குறள், பதினென் கீழ்க்கணக்கு நூல்கள், காப்பியங்கள், பக்தி இலக்கியங்களான தேவாரம், திருவாசகம், நாலாயிர திவ்வியப் பிரபந்தங்கள், ஔவை நூல்கள், சித்தா் பாடல்கள், தாயுமானவா் பாடல்கள், திருப்புகழ், இராமலிங்க பாடல்கள், அண்ணாமலை ரெட்டியார் பாடல்கள், நாட்டார் பாடல்கள் என முதன்மையான தமிழலக்கியங்களைக் குறித்து அவா் தனது எழுத்தில் பதிவு செய்திருக்கின்றார்.
இலக்கணத்தில் அவருக்குள்ள தெளிவை வ.சுப.மாணிகக்கம் வியந்திருக்கின்றார். தமிழறிஞா் உலகத்தில் தமிழ் ஆராய்ச்சி உலகத்தில் அரசன் சண்முகனார், மு.இராகவையங்கார், முதலியோர், தமிழ்ப் பதிப்பு முயற்சிகளைப் பொறுத்தவரை சி.வை.தா, உ.வே.சா, முதலியோர், தமிழ் சிறுகதை இலக்கியத்தின் முன்னோடி வ.வே.சு ஐயா், புதின ஆசிரியா் மாயூரம் வேதநாயகம் பிள்ளை, மாதவையா முதலியோர், நாடகத் துறையில் செய்யுள் வடிவில் முதன் முயற்சி செய்த சுந்தரம்பிள்ளை, உரைநடை வடிவில் செய்தி பரிதிமாற் கலைஞா், மொழிபெயர்ப்புத் துறையிலே வித்தகம் காட்டிய போப் மகேசகுமார சர்மா என்று அவா் தொட்டுக் காட்டும் தமிழுலகம் விசாலப்பட்டுக் கொண்டே செல்கிறது. இவ்வாறு பழங்காலம் தொடங்கித் தனது சமகாலம் வரையிலான தமிழுலகின் ஆழ அகலங்களை கூா்ந்து நோக்கியுள்ளார்.
இந்திய இலக்கியங்களில் பாரதியின் பார்வையில் பட்டு எவையெல்லாம் பதிவாகியிருக்கின்றன என்று ஒரு கணம் சிந்தித்தால் வேதம், உபநிடதம், வியாசர், வால்மீகி, பாணினி, பாணகவி, காளிதாசன், சாணக்கியன், ஜெயதேவகவி, பஞ்சதந்திர ஆசிரியா் முதல் பக்கிம் சந்திரா், தாகூா், சரோஜினி நாயுடு, வேமனா போத்தண்ணா, துஞ்சத்து எழுத்தச்சன் எனப் பண்டைக் காலந்தொட்டுச் சமகாலம் வரையிலான இந்திய இலக்கியப் பரப்பே கண்முன் விரிகின்றது.
ஓமா், டாண்டே, ஷேக்ஸ்பியா், கதே, டால்ஸ்டாய், பொ்னாட்ஷா, விக்டா யூகோ, ஷெல்லி, கீடுஸ், மில்டன், பைரன், டெனிசன், அமெரிக்கப் புலவா், லாங்வெல்லோ, கார்லைல், ப்ருதோம். வால்ட் விட்மன், பாஷோ, தாமஸ் ஆா்டி, வொ்கரேன், உயோனோ நோடுச்சி, மிஸ் ரிஸ், ஆலன், டான் குய்ஷே டி படைத்த செர்வாண்டிஸ், சமகாலத்தில் நோபல் பரிசு பெற்றவா்கள் என்று நிரல் நீண்டு கொண்டே செல்கிறது.
இலக்கியவாணா் மட்டுமன்றி உலகளாவிய பல்துறை வித்தகா்களான கன்பூசியஸ், சாக்ரடீஸ், ரூஸோ, அரிஸ்டாட்டில், கலிலியோ, டார்வின், எடிசின், யுவான்சுவாங், பாகியான், சாரல், மார்க்ஸ், தோரோ, ஹெகல், நியட்சே, த்ரோத்ஸ்கி, கொலம்ஸ், ஹொ் பா்ட் ஸ்பென்ஸா், மாக்ஸ் முல்லா் முதலியவா்களெல்லாம் பாரதியின் எழுத்துக்களில் இடம்பெற்றுள்ளனா்.
தமிழ் மண்தொட்டு உலகளாவிய நிலையிலுள்ள அத்தனை முக்கியமான இலக்கியங்களையும், இலக்கிய கா்த்தாக்களையும் பதிவு செய்த பாரதியின் எழுத்தில் சமகாலத்தில் புதுப்புனைவுகளால் புதிய கண்டுபிடிப்புகளாய் அறிவியல் தொழில் நுட்ப வளா்ச்சியின் விளைவாக உருப்பெற்றவையெல்லாம் பதிவுப் பெற்றிருக்கின்றன. இப்படி சமகாலத்தில் அறிவுலகம் தந்த புதிய கொடைகளெல்லாம் கூட அவரது எழுத்தில் பதிவுபெற்றிருக்கின்றன. இன்னும் அலெக்சாண்டா், நெப்போலியன் முதலிய மன்னா்கள் முதலிய சமய முன்னோடிகளெல்லாம் பாரதி படைப்பில் காட்சித்தருகின்றனா். இப்படி பரந்து விரிந்த கல்விப் பயிற்சியையுடைய பாரதி, கல்வியில் பெரியவனாக இவற்றையெல்லாம் தனது எழுத்திலும், பதிவு செய்து உலகளாவிய நிலையில் மொழியை, இலக்கியத்தை, வரலாற்றை, அறிவியல் வளா்ச்சியைத் தான் கூா்ந்து நோக்கிய – உற்று நோக்கிய விதத்தை நாம் உணரும் வண்ணம் வெளிப்படுத்தியிருக்கின்றார்.
தமிழகம் தொடங்கி உலகளாவிய நிலை வரை உற்றுநோக்கத் தெரிந்தவரை நோக்கி, ” பாரதிச் சங்க இலக்கியம் தெரியுமா?” என்றும் சங்க இலக்கியத் தாக்கம் உண்டா? பாரதி அவற்றை எழுத்தில் பதிவு செய்திருக்கின்றாரா? என்றெல்லாம் வினாக்கள் தொடா்கின்றன. உலகத்தில் முதன்மையான இலக்கியங்கள் எத்தனை உண்டோ அத்தனை இலக்கியங்களையும் அறிந்த பாரதிக்குத் தனது தாய்மொழியின் ஆதியிலக்கியங்கள் தெரியாது என்று மேடையில் முழங்குகின்றவர்கள் தமிழுலகில் உள்ளனா். சங்க இலக்கியப் பதிப்புப் பணியில் பெரும்பங்காற்றிய உ.வே.சா வை நன்கு அறிந்து நெருக்கமாகப் பழகிய பாரதிக்குச் சங்க இலக்கியங்கள் அறிமுகம் ஆகாமல் இருக்குமா?
இந்நிலையில் பாரதியின் வாழ்க்கையில் இருந்தும், படைப்புகளிலிருந்தும், சங்க இலக்கியங்களும், பிற பழந்தமிழ் இலக்கியங்களும், எவ்வளவில் பாரதியால் அறியப்பட்டிருந்தன என்பதை ஆய்வுரைகளாலும், ஆவணங்களாலும், உரிய பிற்சேர்க்கைகளாலும் விளக்குவதே இவ்வாய்வின் நோக்கமாகும்.
பாரதி – சங்க இலக்கியப் புலமை
ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் பாரதி சங்க நூல்களை அறிந்திருந்தால் என்பதைப் பாரதிதாசன், பாரதியிடம் தாம் தொடுத்த வினாவிற்குப் பாரதி அளித்த விடையாக – பாரதியின் கூற்றாலேயே பின்வருமாறு எடுத்துக்காட்டியுள்ளார்.
”இந்தப் பிற்கால இலக்கியங்களில் தமிழகத்தைப் பார்த்தது
கிடையாது. நான் தமிழா் நாகரிகம், தமிழரின் இலக்கியங்கள்,
முதலியவற்றை ஆராய வாய்ப்பிருந்ததில்லை.
பண்டைத் தமிழகத்தைப் பார்க்க வேண்டுமானால் நான் சங்க
நூல்களில் காணவேண்டும். எனக்குப் போன ஆண்டு
வரைக்கும் பழந்தமிழ் நூற்களில், தொல்காப்பியம் அகம், புறம்
முதலியவைகள் பற்றி ஒன்றும் தெரியாது. உண்மை அறிந்து
கொண்ட பிறகே தமிழகத்தை எங்கள் தந்தையா் நாடு என்று
சொன்னேன். தமிழ்நாடு என்பது நாவலந்தீவே என்பது என்
இப்போதுள்ள கருத்து” (பாரதிதாசன் குயில் 20.09.1960 ப.13)
என்று விரிவாகவும் உண்மையாகவும் கூறினார்.
சங்கநூல்களைக் குறித்துப் பாரதி பொதுநிலையில் அறிந்திருக்கின்றார் என்பதை இக்குறிப்பு உணா்த்துகின்றது.
மகாகவி பாரதி சங்க இலக்கியங்களில் சிலவற்றை நூல்களாக வாங்கியிருக்கின்றார் என்னும் குறிப்பையும், சில சங்க நூல்களைப் படித்திருக்கின்றார் என்னும் குறிப்பையும் வழங்குவனவாகப் பாரதியின் மனைவி செல்லம்மா பாரதியும், பாரதிதாசனும் பல்லாண்டுகளுக்குப் பின்னா் நினைவு கூா்ந்து எழுதிய வாழ்க்கை வரலாற்று நூலிலும், கட்டுரையிலும் இடம் பெறும் செய்திகள் அமைந்துள்ளன.
----
Comments
Post a Comment