கல்வியின் நிலை (அன்றும் இன்றும்)
‘கல்வி சிறந்த தமிழ்நாடு’ என பாரதியின் கூற்றிற்கிணங்க, பழங்காலத்தில் இலக்கிய ஆக்கங்கள் மட்டுமன்றி,
இலக்கண நூல்களும், பல் கலையறிவு புலப்படுத்தும் இசை, நாடக நூல்கள் போன்றனவும், உரையாசிரியர்களின்
விரிவுரையும் பிறவும், கல்வியாளர் பலர் இருந்தமையும் காட்டும்.
பழந்தமிழரும்
கல்வியும்
தொல்காப்பியம், கல்வி பற்றி, அகத்திணைப்
பிரிவு குறித்துப் பேசும் போது, ஓதற்பிரிவு, ‘வேண்டிய கல்வி யாண்டு மூன்றிறவாது’ (பொருள்.186)
எனப்படுதலால், கல்விக்காக தம் இல்லத்தை நீங்கினர் எனவும், கல்வி தேடி பிற ஊர், நகர்
அல்லது நாடு சென்றனர் எனவும், இளைஞனாக அமைந்த ஒருவன் அப்பருவத்தில் பெற்ற கல்வி மூன்றாண்டுக் கால அளவினதாக இருந்தது எனவும்
தெரிகின்றது.
எனவே, சிறுவராக அமைந்த போதும் தம்மிடத்திலும்
– அண்மையிடத்திலும், இளைஞரான பொழுது சேய்மையான பிறவிடத்திலும் கல்வி பெறும் நிலை அமைந்துள்ளது
எனலாம். தொடக்கக் கல்வி, மேற்படிப்பு என்பனவாக இவற்றை உணரலாம்.
சங்க இலக்கியம் கல்வி எனும் சொல்லை ஆளாத
போதும் கற்றல், கற்போர் பற்றிய எண்ணங்களை வழங்குகிறது. தொல்காப்பிய அடிப்படையில் பார்க்கும்போது,
”ஓதல் பகையே தூதிவை பிரிவே
அவற்றுள்
ஓதலுந் தூதும் உயர்ந்தோர் மேன” (பொருள்.
27-28)
என, ஓதல் –
அதாவது கல்வி கற்றல் எல்லோர்க்கும் பொதுவானதாகவும், உரிமையுடையதாகவும், கருதப்படாத போதும் சங்க இலக்கியம் பல்வகை மக்களை, தொழிலினரை பெண்டிரைப் புலவராகக் காட்டுவதால்
அக்காலத்தின் கல்வியின் பரப்பும் பொதுமையும் புலப்படும். புலவர்கள் அரசர்க்கு அமைச்சராகவிருந்து
அரசியலறம் மொழிந்தும், அறிவுரை கூறியும், தீநெறியிற் செல்லாமல் தடுத்து விலக்கியும்,
அமைதி காத்தும், தூது சென்றுரைத்து உதவியும் பயன் தந்தனர்.
கல்வியின் முக்கியத்துவம்
· கல்வி, அறிவுப்பேற்றை
நோக்கமாகக் கொண்டமைய வேண்டும்.
·
கல்வி பட்டத்திற்காக,
பதவிக்காக என இருத்தல் கூடாது.
· கல்வி அறிவு
என்பது தொடர்ந்து கற்க, மேலும் மேலும் கற்க என இருக்க வேண்டும்.
· கல்வி ஊன்றுகோலாக,
நன்மை தீமை கணிக்கவியலும் அளவியலாக அமைதல் நலம்.
· அழியும் பொருட்பேறுக்காக அன்றி அழியாத உண்மை, அன்பு, அடக்கம், அருள், அறம், பொறுமை, நட்பு, நடுவுநிலைமை
போன்றவற்றிற்கு செலுத்த வல்லதே கல்வி.
தற்கால கல்வி
நிலை
· தற்கால கல்விநிலை பல வகையிலும் போதியதாக இல்லை. இலவசக்
கல்வித் திட்டம் காரணமாகவும், தெருத்தோறும் எழுந்த கல்விக் கூடம் காரணமாகவும் கல்வி
பெற்றோர் எண்ணிக்கை மிகுந்துள்ளது. ஆனால் கற்றோரின் தரம் உயர்ந்ததாகத் தெரியவில்லை.
· தரமான கல்வியளிக்கப்பட்ட
போதிலும், கல்வி முறையின் சிலக் குறைகள் காரணமாக, நல்ல பண்புள்ள குடிமக்களை உருவாக்குவதில்
தோல்வியே கண்டுள்ளது.
· கல்வியறிவுமிக்க,
‘அரம் போலும் கூர்மை’ யினரான மனிதரை உருவாக்குவதுடன் கல்வித்துறை அமைந்து விடுவதால்
குறைபாடுகளுடைய மனிதனே உருவாகின்றான். அன்பும், பண்பும் தழுவிச் செல்லுதலும் அமைவதில்லை.
· அறிவும், வாழ்க்கையும்,
கல்வியும், பண்பாடும் இணைந்து செல்லவேண்டும். ஆனால் கல்வியும், வாழ்க்கையும் எதிரெதிர்
திசையில், சிறிதும் தொடர்பற்று அடிப்படை இணைவு இல்லாது செல்கின்றன.
· பட்டமும், பதவியும்,
பணமும் வேண்டுவதாக அன்றி, அறிவும், பண்பும், அறமும் வேண்டுவதாக அமைவதே உண்மைக் கல்வி.
நிறைவாக,
கல்வி என்பது வலிமை (Vitality), துணிவு
(Courage), நுட்பம் (Sensitiveness'), அறிவு (Intelligence) என நால்வகைப் பண்புகளைப்
பெற்றுத் தருவதாக அமைதல் வேண்டும். இந்நான்கும் நிறைவாகப் பெற்ற ஆணும், பெண்ணும் கொண்ட
சமுதாயம் மேன்மையுடையதாக அமையும். இதனால் மகிழ்ச்சி நிறைந்த வாழ்வும், அச்சமும் கோழைத்தனமும்
நீங்கிய பெண்களும், சோம்பலற்ற சமுதாயமும் உருவாகும்.
Comments
Post a Comment