சங்ககால நுண்கலைகள்
சங்ககாலத் தமிழர்கள் நுண்கலைகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தனர் என்பதை
அக்கால நூல்கள் மிக அழகாகத் தெரிவிக்கின்றன. அவற்றைக் கட்டிடக்கலை, நடனக்கலை, நாடகக்கலை, இசைக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, கூத்துக்கலை, மருத்துவக்கலை என்று
பலவாறாகப் பிரித்தனர்.
கட்டிடக்கலை
முக்கண் முதல்வோன், முருகன், திருமால், கொற்றவை ஆகிய கடவுளர்களுக்கும், மற்றும் சிறுசிறு தெய்வங்களுக்கும் கோயில்கள் இருந்தன. அவைகள் அழியத்தக்க
செங்கல், மரம் முதலியவற்றால்
அமைக்கப்பட்டவை என்பதை,
”சுடுமண் ஓங்கிய நெடுநிலைக்கோட்டம்“
என்று பெரும்பாணாற்றுப்படை தெரிவிக்கின்றது. கட்டிடங்களை அமைக்கவும், கோயில்களைக்
கட்டவும் நூலறிப்புலவர் என்று
கூறப்பட்ட கட்டிடக்கலை அறிஞர்கள் இருந்தனர். அத்தகையோர் கட்டிடங்களை அமைக்கும்பொழுது திசைகளையும்
அவற்றில் உள்ள தெய்வங்களையும் நோக்கி அமைத்தனர் என்பதை நெடுநல்வாடை,
”நூலறி புலவர் நுண்ணிதிற் கயிறிட்டுத்
தேஎங்கொண்டு தெய்வ நோக்கிப்
பெரும் பெயர் மன்னர்க் கொப்ப மனை வகுத்து”
எனத் தெரிவிக்கின்றது.
மதுரை மாநகரைப்பற்றிக் குறிப்பிடும்பொழுது அந்நகரைச் சுற்றிலும் கோட்டை மதில்
இருந்ததாகவும்,
அம்மதிலின்மீது பல்வகை இயந்திரப் பொறிகள் வைக்கப்பட்டிருந்ததாகவும்,
கோட்டை மதிலுக்கு அப்பால் பெரும் அகழியும் அதனுள்
முதலைகளும் மீன்களும் விடப்பட்டு இருந்ததாகவும் சிலப்பதிகாரம் தெரிவிக்கின்றது.
நகர அமைப்பும் நல்ல திட்டத்துடன் ஆக்கப்பட்டிருந்தது என்பதைப் பரிபாடல் கூறுகின்றது. மதுரை மாநகரம்
தாமரை மலரின் வடிவத்தில் இருந்ததாகக் குறிப்பிடுகின்றது. தெருக்கள் வட்டவடிவில் காணப்பட்டன. கழிவுநீர்ப் பாதை,
தெருவின் அடியில் சென்றதாகவும், அப்பாதையில் யானை தாராளமாக நடந்து செல்லமுடியும் என்றும்
பரிபாடலின் மூலம் அறியலாம்.
நடனக்கலை
நடனக்கலையைப் பற்றிக் குறிப்பிடும் நூல்கள் அதனைக் கூத்து,
ஆடல் என்றே குறிப்பிடுகின்றன. மக்களின் வாழ்க்கை முழுவதும் பல்வகைக் கூத்துக்களால் ஆனது. தொல்காப்பியம்
கீழ்க்கண்ட கூத்துக்களை கூறுகின்றது. கருங்கூத்து, வள்ளிக் கூத்து. போன்ற போர் தொடர்பானவற்றையும், ஆய்ச்சியர் குரவை, வேட்டுவவரி போன்றவற்றையும் குறிப்பிடுகின்றது.
குரவை: குரவை என்பது எழுவரேனும், எண்மரேனும் கடகக்
கைக்கோர்த்து ஆடும் கூத்தாகும். குரவை ஆடுதல் குறிஞ்சிநிலப் பாலார்க்கும் உரியது. தங்கள் நிலத்திற்குரிய
முருகனை வழிபட்டு ஆடிய கூத்து பெண்கள் குன்றக்குரவை எனப்பட்டது. முல்லை நில ஆய்ச்சியர்
மாயோனை நினைத்து ஆடிய கூத்து ஆய்ச்சியர் குரவை எனப்பட்டது. நெய்தல் நில மகளிர் ஆடும் குரவைக் கூத்தைப்பற்றிப் புறநானூறு
கூறும்பொழுது, மகளிர் வெண்மையுடைய
மதுவை உண்டு மெல்லிய குரவைக் கூத்திற்கு ஏற்றத் தாளத்தில் ஆடுவர் என்று கூறுகிறது. அப்பாடல் வருமாறு,
”திண்டிமில் வன்பரதவர்
வெப்புடைய மட்டுண்டு
கண்குரவைச் சீர்தூங்குந்து”
ஆடும் தொழில் புரிந்த
மகளிர் தாம்
பாடும் பாட்டின்
இசைக்கேற்ப இசை
அமைக்க யாழைத்
தாமே வைத்திருப்பர். பாலை நில மக்கள்
இதே ஆட்டத்தை
ஆடினர்.
துணங்கை: இதனை விழாக்காலங்களில் மகளிர் ஆடுவர். அப்போது முடங்கிய இரு கரங்களையும், விலாப்புடைப்புகளில் ஏற்றி அடித்துக் கொண்டு அசைந்தாடும் ஒரு
வகைக் கூத்து. அக்குரவை ஆட்டத்தின்
பொழுது மூங்கிலால் ஆக்கிய குழாயிலுள்ள கள்ளைப் பருகிக் குரவை ஆடுவர் என நற்றிணை கூறும். வெறியாட்டுக் கூத்து
முருகன் வழிபாட்டின் பொழுது ஆடல் பாடல் கொண்ட இளம் மகளிர் தம் காதல் மயக்கம் தீர ஆடுவர்.
விறலி: கூத்தி ஆடுமகள், ஆடுகளமகள்
என்று விறலி
குறிக்கப்படுகின்றாள். இதனைப் போலவே
நடனமாடும் ஆண்மகன்
கூத்தன், ஆடுமகன்,
ஆடுகளமகன் எனஅழைக்கப்படுகின்றான். இவர்கள்
நடனம் ஆடிய
இடம் ஆடுகளம்
என்று கூறப்பட்டது. விழாக்காலங்களில் பல்வகைக் கூத்துக்களை
முதன்முதல் அரங்கேறிச்
சிறப்புற நடிப்பவர்களுக்குத் தலைக்கோல் என்ற பட்டத்தை
மன்னன் வழங்குவான்
என்று சிலம்புத் தெரிவிக்கின்றது.
இசைக்கலை
பண்பட்ட எல்லா இனங்களும் தத்தமக்குரிய இசைமரபுகளைக் கொண்டுள்ளன. அனைத்துயிர்களையும் வயப்படுத்துவது என்னும் பொருளில்
இசை என்று பெயரிட்ட தமிழரின் நுண்ணறிவைப் பாராட்டவேண்டும். இசையிலக்கண நூல்கள் பல அழிந்துவிட்டன. இடைக்காலத்தில்
சமயங்களின் அரவணைப்பில் இசை வளர்ந்தது.
தமிழ் மக்களின் வாழ்வோடு
இசை இரண்டறக்
கலந்திருந்தமையைத் தொல்காப்பியமும், சங்க நூல்களும் காட்டுகின்றன. கருப்பொருள்களில் யாழினையும், பறையையும்
தொல்காப்பியர் குறித்துள்ளார். யாழ் பற்றிய இலக்கண
நூல் இருந்ததனை,
”அளபிறந் துயிர்த்தலும் ஒற்றிசை நீடலும்
உளவென மொழிப இசையொடு சிவணிய
யாழின் மறைய என்மனார் புலவர்”
என்னும் நூற்பாவால் உணரலாம். இயற்றமிழோடும்
இசை விரவிற்று. நால்வகைப் பாக்கட்கும்
உரிய ஓசை வேறுபாடுகளைக் கூறுவதோடு, பல்வேறு வண்ணங்களையும் அவர் குறிப்பிட்டுள்ளமையைக் காணலாம். தொல்காப்பியர்
காலத்திலேயே இசையையும், கூத்தையும் துணையாகக் கொண்டு நடத்தியதை ஆற்றுப்படை இலக்கணத்தின்
வழியே காட்டுகின்றார். மன்னர்களின் வாயிலில்
நின்று துயிலெடைப் பாடும் பாணர்கள் இருந்தனர். இதனை இடைக்காலத்தில், ‘திருப்பள்ளியெழுச்சி‘
என்றனர்.
சங்க
இலக்கியங்களில் இசைக்கருவிகள், பண்கள்,
இசைவாணர்கள் பற்றிய
எண்ணற்ற செய்திகள்
இடம்பெறுகின்றன. குறிஞ்சி,
முல்லை, மருதம்,
பாலை என்னும்
நான்கும் அக்காலத்து
நிலவியற்கையொட்டி வழங்கிய
இசை வகைகளாகும்.
அவ்வவ் நிலப்
பெயரே இசைக்கும்
வழங்கிற்று.
தமிழகச்
சிற்பக்கலை
பண்டைக் காலந்தொட்டே வளர்ந்து வந்துள்ள கவின் கலைகளில் ஒன்று சிற்பக் கலையாகும். பல்லவர் காலத்திற்கு
முன்பு பெரும்பாலும், மண்ணுருவங்களும், சுதையுருவங்களுமே செய்யப்பட்டன. கோயில் கட்டுவதற்குக் கருங்கல் பயன்படுத்தப்பட்டன. கருங்கல் பயன்படுத்தப்பட்ட
பிறகுதான் சிற்பம் நிலைபேறடைந்த கலையாக சங்ககாலத் தமிழர்கள் மண்ணாலும், மரத்தாலும், தந்தத்தாலும், அழகிய சிற்பங்களை
உருவாக்கினர். வரலாற்றுச் சிறப்புமிக்க
புகார், காஞ்சி, அரிக்கமேடு, கொற்கை போன்ற இடங்களில்
அகழ்வாய்வுகள் நடந்தபோது கிடைத்துள்ள பல்வேறு மண் உருவங்கள் அக்காலச் சிற்பத்திற்குத்
தக்க சான்றுகளாகும்.
பல்லவர் காலச்
சிற்பம்
பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட சுதைக் கோயில்களில் இத்தகு சுதையுருவங்கள் இருந்தன. செங்கல்லால் சுவர்களை
எழுப்பி அவற்றின் புறங்களில் சுதையாலான உருவங்களை அமைப்பது மரபு திருவதிகைக் கற்சிற்பங்கள்
பெருவழக்கான கோயில் இதற்கு நல்ல எடுத்துக்காட்டாகும். சோழர் காலத்தும், நாயக்கர் காலத்தும் கூட வானளாவிய கோபுரங்களில் சுதையுருவங்கள்
அமைக்கப்பட்டன. இன்றும், கிராமப்புறத்துக் கோயில்களில் தெய்வ உருவங்கள் சுதையினாலேயே
அமைக்கப்பட்டு வருகின்றன. பெரிய பெரிய குதிரைகளும், யானைகளும், ஐயனார் கோயில்களை அழகு செய்கின்றன.
கற்
சிற்பங்கள்
சங்க காலத்தில் இறந்த
வீரர்கட்குக் கல்லில்
உருவம் செதுக்கி
வழிப்பட்டனர். கண்ணகி
உருவச் சிலை
அமைக்கப்பட்டதைச் சிலம்பு
கூறுகிறது. தமிழகத்தில்
கற் சிற்பங்களைத்
தொடங்கி வைத்த
பெருமை பல்லவர்கட்கு
உரியதாகும். கட்டுமானக்
கோயில்களிலும் எண்ணற்ற
சிற்ப உருவங்கள்
உள்ளன. கட்டடம்
வேறு, சிற்பம்
வேறு என்று
பிரித்தறிய முடியாதபடி
இவை இரண்டும்
இணைந்து நிற்பது
அக்காலத் தனித்தன்மையாகும். மாமல்லபுரம் பல்லவர்களின் மண்டபம்,
மும்மூர்த்தி மண்டபம்,
வராகர் குகை
ஆகியவற்றில் காணப்படும்
நேர்த்தி மிக்க
சிற்பங்கள் நம்
கண்ணைக் கவர்கின்றன.
பாண்டியர்
காலச்
சிற்பங்கள்
கி.பி. 6,7,8 – ஆம் நூற்றாண்டுகளில்
ஆண்ட பாண்டிய மன்னர்களின் குகைக் கோயில்களில் அழகிய சிற்பங்கள் காணப்படுகின்றன. திருமெய்யம், பிள்ளையார்பட்டி, குன்றக்குடி, திருப்பரங்குன்றம்
என்னும் இடங்களில் இவற்றைக் காணலாம். கி.பி 8 – ஆம் நூற்றாண்டுக் கழுகுமலை ஒற்றைக்கல் கோயிலில் பாண்டியக் கலையின்
உன்னதப் படைப்பைக் காணலாம். கவின் சிற்பத்தை நாமக்கல் குடைவரைக் கோயிலில் அதியமாகக் கண்டு
களிக்கலாம்.
சோழர் காலச்
சிற்பங்கள்
பல்லவர்கள் போற்றி வளர்த்த
சிற்பக்கலை சோழ
மன்னர்கள் காலத்தில்
மேலும் வளர்ந்தது.
கருவறையின் கோட்டங்களை
இவை அலங்கரிக்கின்றன. இவை பல்வேறு தெய்வ
உருவங்களாகும்
பல்லவர் காலத்தில் சிற்பங்கள்
கோயில் சுவர்களிலேயே
புடைப்பாகச் செதுக்கப்பட்டன எனக் கண்டோம். ஆனால்
சோழர் காலத்தில்
சிற்பங்கள் தனியே
செய்யப்பட்டு அவற்றுக்கெனச்
சுவரில் அமைந்த
கோட்டங்களில் பொருத்தப்பட்டன. இங்குக் கட்டடமும், சிற்பமும்
சமநிலை வகிக்கின்றன. பல்லவர் காலத்தில் கட்டடமும்,
சிற்பம் போல்
காட்சியளிக்கிறது.
கங்கைகொண்ட சோழன் கட்டிய
பெரிய கோயில்
கருங்கல்லால் வானளாவும்
கட்டடத்தை எழுப்பினான். இங்கேயுள்ள கலைமகள் சிற்பமும்,
சண்டிக்குச் சிவன்
அருள்புரியும் சண்டீகப்பதம்
தாராசுரத்து ஐராவதேசுவரர்
கோயில் சிற்பங்கள்,
தில்லைக் கோபுரச்
சிற்பங்களும் அழகுடையது
எனினும் முற்கூறியவாறு
அவை கட்டடத்தின்
கம்பீரத்தில் தம்
ஒளியிழந்து தனித்தன்மையை
இழந்துவிடுகின்றன.
நம் நாட்டுச் சிற்பங்கள்
சமயத் தொடர்பானது.
எனவே, தெய்வப்
படிமங்களே மிகுதி.
உரோமரும் உண்மையான
உருவங்களைப் படைத்தது
போலன்றி நம்மவர்கள்
கற்பனை உருவங்களையே
படைத்தனர்.
ஓவியக் கலை
ஓவியம், ஓவம், ஓவு என்பன ஒரு
பொருட் கிளவிகளாகும். ஓவியக்கலை மிகப் பழமையான கவின் கலைகளில் ஒன்றாகும். இயற்கையோடு இயைந்த வாழ்வு நடத்திய பழங்கால மக்கள் தாம் கண்ட
விலங்குகள், பறவைகள், செடி, கொடிகள் ஆகியவற்றின்
உருவங்களை வரைந்து மகிழ்ந்தனர். பழங்கால மாந்தர் வாழ்ந்த இயற்கைக் குகைகளில் வேட்டைக் காட்சிகளும்
பிறவும் காணப்படுகின்றன. சங்க நாளில் ஓவியக்கலை முழுமையான வளர்ச்சியுற்றிருந்தமையின்
நுவலும் இலக்கண நூல்களும் எழுந்தன. அக்கலையின் நுட்பங்களை இன்று காணப்படும் ஓவியங்களில் அவை அழிந்துவிட்டன. ஆனால் தொன்மையானவை
பல்லவர் காலத்தைச் சார்ந்தனவாம்.
ஓவியம் என்னும்
சொல்லை மிகுந்த
அழகு என்னும்
பொருள் கொண்டதாக
அன்றைய சான்றோர்
வழங்கினர். அழகிய
வீடுகட்கு உவமை
கூறினர். ஓவியங்களை
”ஓவத்தன்ன இடனுடை வரைப்பு”
என்று பாரியின்
அரண்மனையினைக் கபிலர்
பாராட்டினார். வீடுகட்கு
மட்டும் அன்றி
அழகிய இயற்கைக்
காட்சிகட்கும் ஓவியமே
பல பூக்களின்
தாதுக்களும் உதிர்ந்து
அழகிய காட்சி
உவமையாக்கப்பட்டது. பூம்புகார் பட்டினத்தை
‘ஓவத்தன்ன இடனுடை‘
என்று பாராட்டப்பட்டது. பூகார் பட்டினம் அழகிய
சோலை உவமையாகும்
வண்ண மலர்களையும்
கொண்டு விளங்கின அவ்வனம் வித்தகர்
இயற்றிய கைவினைச்
சித்திரச் செய்கைப்
படாம் போர்த்தியது
போல் தோற்றமளித்தது
எனச் சாத்தனார்
பாராட்டுகிறார்.
பெரிய மாளிகை வீடுகளின்
சுவர்களில் வெள்ளி
போன்ற சுதையினைப்
பூசி வண்ண
ஓவியங்களை வரைந்தனர்.
பூம்புகார் நகரத்து
மாட மாளிகைகளில்
அழகிய ஓவியங்கள்
இருந்தன. அத்தகு
மாளிகைகளாம் வெண்கோயில்கள்
தேர்கள் ஓடுவதனால்
எழும் தூசியால்
மாசு படிந்து
நீராடிய களிறு
போல் காட்சியளித்தன
என்று பட்டினப்பாலை
மூலம் அறியலாம்.
”வேறுபட்ட வினையோவத்து
வெண்கோயில் மாசூட்டும்”
ஓவியக் கலைஞர்கள் ‘கண்ணுள் வினைஞர்’
என்றும் ஓவமாக்கள் என்றும் கூறப்பட்டன.
”எவ்வகைச் செய்தியும் உவமம் காட்டி
நுண்ணிதின் உணர்ந்த நுழைந்த நோக்கின்
கண்ணுள் வினைஞர்”
என மாங்குடி மருதனார்
பாராட்டிக் கூறுகின்றார்.
சிற்பமும் ஓவியமும் மிகவும்
நெருங்கிய தொடர்புடையனவாகும். சிற்பக்
கலைஞன் ஓவியக்
கலைஞனாகவும் இருக்கவேண்டும். தாம் வடிக்கும்
கைவண்ணத்தைக் கலைஞன்
விரும்பும் உருவத்தினை
உள்ளத்தில் நிறுத்தித்
தம் கைவண்ணத்தைச்
செதுக்க விரும்பும்
உருவத்தினை காட்டுதல்
இருவர்க்கும் பொதுப்பண்பு
உருவத்தினை முதலில்
கல்லில் ஓவியமாக
வரைந்துக் கொள்வர்
என்பர். வண்ணங்களைக்
குழைத்து வைக்கும்
பலகை தான்
வட்டிகை எனப்பட்டது.
அரக்குநிறம் பாதிரிப்பூ
வரைவதற்கு துகிலிகை
பயன்பட்டது. ஓவியக்
கலைஞர்கள் ஒள்ளிய
அரக்குவண்ணம் ஊட்டிய
துகிலிகை யொத்தத்
துய்த்தலைப் பாதிரி
என்கிறார்.
”ஓவ மாக்கள் ஒள்ளரக் கூட்டிய
துகிலிகை யன்ன துய்த்தலைப் பாதிரி”
நடனமாடும் பெண்டிர் அன்று
நடனக்கலையுடன் வேறு
பலக் கலைகளையும்
கற்றுத்துறைப் போக
வேண்டியிருந்தது. பூம்புகார்ப்
பொற்கொடி மாதவி,
”ஓவியச் செந்நூல் உரைநூற் கிடக்கையும்
கற்றுத் துறைபோகிய பொற்றொடி நங்கை”
என்று சாத்தனாரால் பாராட்டப்படுகிறாள். என்வே
ஓவியக் கலையின்
நுட்பங்களைக் கூறும்
நூல்களும் அன்று
வழக்கில் இருந்தன
என்பதை உணரலாம்.
கூத்துக்கலை
தமிழர்
போற்றி வளர்த்தக் கலைகளில் கூத்தும் ஒன்று. இசைக் கலையோடு இணைந்து வளர்ந்தக் கலை இதுவாகும். இக்கலை ஆடவர் பெண்டிர்
இருசாரார்க்கும் பொதுவாகும். விழாக்களின் போது கூத்தர்கள் மக்களை தம் ஆடல் பாடல்களால் மகிழ்வித்தனர். மன்னர்களும், மக்களும் கூத்தர்களைப்
பேணினர். நானில மக்களும்
ஆடிப்பாடி மகிழ்ந்ததற்குச் சங்க நூற்களில் எண்ணற்ற சான்றுகள் உள்ளன.
சங்க காலத்தில் எல்லாத் துறைகளிலும் ஆடலும், பாடலும் விரவியிருந்தனர். ஆடிய ஆடல்களில் வள்ளிக் கூத்து ஒன்று. பண்டையோர் நாட்டுக்கு
வளமும் வெற்றியும் கொணர்ந்த வள்ளியின் பெருமைகளைப் பாடி, ஆடுவது இதுவாகும். இதனைத் தொல்காப்பியர் ‘வாடா வள்ளி‘ என்பர். வாடா வள்ளியால் வளம் பலதரும் நாடுகளைப் பற்றிப் பெரும்பாணாற்றுப்படை,
”வாடா வள்ளியின் வளம்பல தரூஉம்
நாடுபல கழிந்த பின்றை”
என்கிறது.
இக்கூத்தினை ஆடவரும்
பெண்டிரும் ஆடுவர்.
இஃது இழிந்தோர்
காணும் கூத்தென்பர். பொதுமக்கள் ஆடிய இன்னொரு
கூத்து குரவை
எனப்படும். மலைவாழ்நர்
விரும்பி ஆடியது
இக்கூத்தாகும். மலையுச்சியில்
குன்றவாணர்கள் மான்தோற்
சிறுபறையின் முழக்கோடு
ஆடினர்.
”நறவுநாட் செய்த குறவர்தம் பெண்டிரொடு
மான்தோற் சிறுபறை கறங்கக் கல்லென
வான்தோய் மீமிசை அயரும் குரைவை”
மூங்கிற் குழாயில் பெய்த
முற்றிய கள்ளைக்
குடித்துவிட்டு வேங்கை
முற்றத்தில் குரவையாடினர். குறவர்கள் மட்டுமன்றிப் பரதவர்களும்
நீல மணி
போலும் கழிமுள்ள
குரவையாடினர். மலர்
நிரம்பிய மணல்
குன்றுகள் நிறைந்த
கடற்கரையில் பரதவ
மகளிர் ஆடிய
குரவையைப் பற்றி
மதுரைக் காஞ்சியும்
குறிக்கிறது. சமயச்
சடங்கோடு ஆடல்
கலை நெருங்கிய
வெறியாட்டு
என்பது முருகனை
தொடர்பு கொண்டிருந்தது. இச்சடங்கின் போது வெண்மையான
பனந்தோட்டோடு கடம்ப மலரையும் சூடி
இனிய வாச்சியம்
முழங்க வேலன்
வெறியாடினான். துணங்கை
என்பது இன்னொரு
கூத்தாகும். விழாவின்
போது தெருக்களில்
துணங்கை ஆடினர்.
இதற்கு ஏற்ப
முழவு ஒலித்தது.
”முழவு இமிழும் அகலாங்கண்
விழவு நின்ற வியன் மறுகில் துணங்கை”
இத்துணங்கைக் கூத்தில் மகளிர்
பங்கு பெறுவர்.
ஆடவரும், பெண்டிரும்
சேர்ந்து ஆடுவர்.
இங்ஙனம் நடக்கும்
துணங்கையில் அரசர்
கலந்துகொண்டனர்.
”முழாவிமிழ் துணங்கைக்குத் தழூஉப்பு ணையாகச்
சிலைப்புவ லேற்றிற் றலைக்கை தந்துநீ
நளித்தனை வருதல் உடன்றனள் ஆகி”
போர்க்கள வெற்றியைச் சிறப்பித்து
வீரர்கள் கூத்தாடுவதும் வழக்கமாக இருந்தது. வெற்றிப் பெற்ற மன்னர்கள் தேரின் முன்னும் பின்னும் நின்றாடுவது
முன்தேர்க் குரவை, பின்தேர்க் குரவை எனத் தொல்காப்பியத்தில் பேசப்படுகிறது.
பொருநர்க்குப்
பரிசு
பொருநருக்கு மன்னர்கள் பெரும்
பொருளைப் பரிசாக
நல்கினர். அக்கொடைச்
செயல் புலவர்களால்
பெரிதும் பாராட்டப்படுகின்றது. அவர்கட்குக்
களிறும் பொற்றாமரையும்
கொடுத்துப் பாராட்டியுள்ளார்.
”முழவுத்தோள் முரட்பொருநர்க்கு
உருகெழு பெருஞ்சிறப்பின்
இருபெயர்ப் பேராயமொடு
இலங்கு மருப்பின் களிறு கொடுத்தும்
பொலந்தாமரைப் பூச்சூட்டியும்
நலஞ்சான்ற கலஞ்சிதறும்
பல்குட்டுவர் வேல்கோவே”
மன்னர்கள் கூத்தர்களைப் பேணிய
சிறப்பால் அவர்கள் கோடியர் தலைவர் எனப் பாராட்டப்பட்டனர். பாணர், பொருநர் ஆகியோர்க்கு அடையாத வாயில்கள் என மன்னர் அரண்மனைகள்
பாராட்டப்பட்டன.
கூத்து
நூல்கள்
சங்க
இலக்கியத்தில் கூத்து
நூல்கள் பற்றிய
குறிப்பேதும் இல்லை.
எனினும் பழைய
கூத்து நூல்கள்
பல இருந்து
அழிந்தன என்பதை
உரையாசிரியர்கள் மூலம்
அறிகின்றோம். ‘நாடக நன்னூல்’ நன்கு கடைபிடித்து
ஆடினாள். யாப்பருங்கல
உரையின் வழிச்
செயிற்றியம், சயந்தம்,
பொய்கையார் நூல்
என்பனவற்றால் அறிகிறோம். ‘விளக்கத்தார் கூத்து’
என்பதொன்றும் இருந்துள்ளது. மேலும்,
செயன்முறை, மதிவாணனார் நாடகத்தமிழ்,
என்னும் நூல்களும்
உள்ளன.
மருத்துவக்
கலை
நோயற்ற வாழ்வே
குறைவற்ற செல்வம்
என்பது தமிழரின்
பட்டறிவால் உருவான
பழமொழியாகும். நோய்களைப்
பற்றியும், நோய்
தீர்க்கும் முறைகள்
பற்றியும் தமிழர்
பன்னெடுங்காலத்திற்கு முன்பே நன்குணர்ந்திருந்தனர் என்பதற்கு
இலக்கியங்களும், கல்வெட்டுக்களும் சான்று பகர்கின்றன. அவற்றின் துணைக் கொண்டு
தமிழ்நாட்டு மருவத்துவக்
கலையின் வரலாற்றினை
அறியலாம்.
சங்க
காலத்தில் மருத்துவ
அறிஞர் பலர்
வாழ்ந்தனர். அவர்களுள்
சிலர் சிறந்த
இலக்கியச் செல்வராயும்
திகழ்ந்தனர் என்பதற்கு
மருத்துவன் தாமோதரனார்
என்னும் புலவரே
சான்றாவார். புலவராய்த்
திகழ்ந்தமையால் அன்று
எண்ணற்ற மருத்துவர்கள்
இருந்திருக்க வேண்டும்.
இன்று தமிழகம்
முழுவதும் அவர்
பெயர் மட்டும்
அறியப்படுகின்றது. கிறித்துவுக்குச் சில நூற்றாண்டுகட்கு முன்பே
தென்னகத்தில் அசோகரால்
நிறுவப்பட்ட மருத்துவமனைகள்
இங்கு இருந்தன
என்பதற்கு அவருடைய
கல்வெட்டுக்களே சான்றாகின்றன. மனிதர்க்கு மட்டுமன்றி விலங்குகட்கும் மருத்துவமனைகள் அவரால் நிறுவப்பட்டன.
ஓர் ஊரில் யாண்டேனும்
ஒரு மருந்து
மரம் இருப்பினும்
அஃது அனைவர்க்கும்
உதவும். அதன்
இலை, பூ,
காய், பட்டை,
வேர் முதலிய
அனைத்தாலும் பிறர்க்குப்
பயன்படுகிறது. ஒப்புரவாளன்
இத்தகு மருந்து
மரத்துக்குச் சமமானவன்
என்கிறார் வள்ளுவர்.
”மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கட் படின்”
உடல் முழுவதும் புண்பெற்ற
மறவனுடைய உடல் மக்களால் வெட்டப்பட்ட மரம் போலிருந்ததாக ஒரு புலவர்
பாராட்டுகின்றார். ‘மருந்து கொள் மரத்தின்
வாள்வரு மயங்கி’ என்ற பாடலைக்
கொண்டு இதனை
அறியலாம். மருத்துவன்
ஒரு வணிகனல்லன்,
அவன் மனிதகுலத்
தொண்டனாவான். எனவே
அவன் தன்பாலுள்ள
கலையை மறைத்தலாகாது. அங்ஙனம் மறைத்தல் பாவம்
என்பது
பண்டையத் தமிழரின்
கோட்பாடாகும்.
”வருந்திய செல்லல் தீர்த்த திறனறி யொருவன்
மருத்தறை கோடலின் கொடிதே”
என்னும் கலித்தொகையடிகள் இதற்குச்
சான்றாதல் காணலாம். மருத்துவன் நோயாளியின் விருப்பத்தையறிய வேண்டாது அவனுக்கு எது நல்லது என ஆய்ந்து
மருந்து அளிக்க வேண்டும். ‘நோயாளி வேட்டதைக் கொடாது மருந்தாய்ந்து கொடுத்த அறவோன்’
என சங்க
இலக்கியத்தில் பேசப்படுகிறான். சங்ககாலத்தில் போர்கள் அடிக்கடி
நிகழ்ந்தன. புண்பட்ட
வீரர்கட்கு மருந்துகள்
பயன்படுத்தி இருக்க
வேண்டும். புண்களை
ஊசிகொண்டு தைத்தல்
வழக்கில் இருந்துள்ளது. சிரல் பெயர்ந்தாற் போல
நெடுவள்சி கொண்டு
மார்பிலேற்பட்ட புண்ணைத்
தைத்தமை பற்றிப்
பதிற்றுப்பத்துப் பாடலொன்று
குறிப்பதால் அறுவை
சிகிச்சை மருத்துவமும்
ஓரளவு வளர்ச்சியுற்றிருந்தமை அறியப்படும்.
நிறைவாக,
பண்டைய தமிழ்மக்கள் கலையார்வம்
மிக்கவராய்த் திகழ்ந்தனர். இசைக்கலை,
சிற்பக்கலை, ஓவியக்கலை,
கூத்துக்கலை ஆகிய
கலைகள் சங்கத்திற்கு
முன்னரே நன்கு
வளர்ச்சி பெற்றிருந்தது. மேலும், மருத்துவக் கலையும் மக்களுக்குப்
பெரும் பயனை
அளித்தது. ‘நோயற்ற
வாழ்வே குறைவற்ற
செல்வம்’ என்பதைச்
சங்கத்தமிழர்கள் நன்குணர்ந்திருந்தனர்.
Comments
Post a Comment