Skip to main content

சிலப்பதிகாரத்தில் சமுதாய நிலை

 

   சிலப்பதிகாரத்தில் சமுதாய நிலை   


          இளங்கோவடிகள்  உள்ளநிலை எனும் போது அவர் உணர்த்த விரும்பிய வாழ்க்கைத் தத்துவம் என்பதே பொருள். ஒருவர் இவ்வாறு கூறும்போது சமயக் கோட்பாடுகள் தாமே என்று எண்ணத் தோன்றாலாம். அவர்களின் நெஞ்சப்பாங்கு அவர்கள் படைப்புக்களில் பல நிலைகளில் அமைந்துள்ளதைக் காணலம். சைன சமயத்தைச் சார்ந்தப் புலவர்களையே எடுத்துக் கொண்டாலும் சிந்தாமணியும், சிலப்பதிகாரமும் படைத்த ஆசிரியர்கள் அளவில் வெவ்வேறு வடிவங்களையே நமக்குக் காட்டுகின்றன. கலைத்தகுதி அளவில் அவர்கள் வேறுபட்டுள்ளனர்; என்பது மட்டுமன்று, பொருளிலும் கவிஞர்களின் தனித்தன்மை வெளிப்படுகிறது.

        அவர்கள் காப்பியத்தை நடத்திச் செல்லும் திறத்தில் தெளிவாக விளங்கும். இங்குக் காப்பியக் கதை கவிஞனுக்கு முன்னரே வழங்கிய ஒன்றாயினும், இலக்கிய ஆராய்ச்சியில் ஈடுபடுவோர் கவிஞன் படைப்பு, அவன் உடைமை என்ற அளவில் ஆராய்தலே தக்கது. அவ்வாறு சிலப்பதிகாரத்தை இளங்கோவடிகள் நடத்திச் செல்லும் திறத்தை ஆராயும் போது அவர் உள்ளம் உணர்த்தும் வாழ்க்கைத் தத்துவம் விளங்கும்.

வாழ்க்கைத் தத்துவம்

         இக்காப்பியம் படைத்த அடிகள் வாழ்க்கை வாழ்வதற்கே என்ற எண்ணம் உடையவரா? உண்மையில் இவ்வுலகில் பெருமித வாழ்க்கை உண்டு என்று நம்புகிற இவர் காப்பித்தைப் பாடிச் செல்வதைப் பார்த்தால் இவ்வுலகில் வாழ்வு உண்டு என்று நம்புகின்றவராகத் தெரியவில்லை. புகார் காண்டத்தை எடுத்துக் கொண்டால் ஆடம்பரமாகக்  கோவலனும், கண்ணகியும் அவர்கள் வாழ்ந்த புகாரும் பதியெழுவறியாப் பழங்குடி கெழீஇய பொதுவது சிறப்பின் புகாரேஇருப்பினும், யாரிடமும் சொல்லாமல் கோவலனும், கண்ணகியும் புகாரை விட்டே சென்று விடுகின்றனர். புறச்சூழல் வாழத்துணை நிற்பது, ஆனால் உதவவில்லை.

       மதுரைக் காண்டத்திலும் இதே நிலை தான் ஏற்படுகிறது. நீதி தவறாது ஆண்டு வரும் அரசனுடைய நாட்டிற்குச் செல்கின்றனர். பொருள் தேடி வாழ்க்கை அமைத்துக் கொள்ள விரும்பும் கோவலனுக்கும் கண்ணகிக்கும் என்ற நம்பிக்கையோடு மதுரை நோக்கிச் சென்றவர்கள் இறுதியில் கணவன் இறக்கத் தனியே வெளியேற வேண்டிய நிலை கண்ணகிக்கு ஏற்படுகிறது.

           கீழ்த்திசை வாயில் கணவனோடு புகுந்தேன்

            மேற்றிசை வாயில் வறியேன் பெயர்கு”(182-3)

எனக் கண்ணகி வெளியேறுவதைப் பயிலும் போது, அப்பகுதி உள்ளத்தைத் தொடுகிறது. வஞ்சிக் காண்டத்தில் செங்குட்டுவன் பத்தினிக்கோட்டம் எடுப்பதற்கு இமயம் வரை படைகொண்டு சென்று வாகைச் சூடித் திரும்புகிறான். பெருமிதவாழ்வு என்று கருதுகிறோம். மாடலன் அவ்வெற்றிக் கோலத்தை விளக்கும் போது யாருக்கு வெற்றி என்ற வினா நம்மிடம் பிறந்து விடுகிறது.

        வையம் காவல் பூண்ட நின்நல்யாண்டு

        ஐயை ந்திரட்டி சென்றதற் பின்னும்

        அறக்கள வேள்வி செய்யாதி யாங்கணும்

        மறக்கள வேள்வி செய்வோ யாயினை”(7-52)

என அவன் வாழ்வின் பொருளற்றத் தன்மையினை எடுத்து வற்புறுத்தக் காணலாம். மேலும் யாக்கை நில்லாது, இளமை நில்லாது என்றெல்லாம் எடுத்துக் கூறுகிறான். எனவே இவ்வுலகில் வாழ்வுண்டு என்று எவ்வாறு கொள்வது? இவ்வாறு பாடாததற்குக் காரணம் அவர் நம்பிக்கையே அவர் உணர்த்த விரும்பிய வாழ்க்கைத் தத்துவம்.

இம்மை வாழ்வு

     இவ்வுலகில் வாழ்வு என்பது மறுமைக்குரிய முயற்சியாக அமைய வேண்டுவதே தன்னளவில் இன்ப வாழ்வு என்று இம்மை வாழ்க்கையைக் கூறமுடியாது.” என்னும் கருத்தே இளங்கோவடிகளிடம் இருந்ததாகத் தோன்றுகிறது. செல்லும் தேயத்துக் குறுபொருள் தேடுமின் மல்லன்மா ஞாலத்து வாழ்வீர் என்று தம் காப்பியத்தை முடிப்பது இதனைத் தெளிவுப்படுத்தும். ஊழின் ஆற்றலை உணர்ந்து மறுமைக்கு வேண்டிய ஆயுத்தங்களைச் செய்வதே தெளிவாகிறது. ஊழினை கன்மம், நியதி, ஊழ், தெய்வம் என்பன ஒரு பொருள் சொற்கள், ஒருவன் செய்த செயல் அதன் பயனை ஊட்டுகின்ற நிலையை இவ்வாறு கூறுகிறோம்.

         இனி, ஊழின் ஆற்றலை இளங்கோ விளக்கிச் செல்லுவதை ஆராய்வோம். இக்காப்பியத்தில் சாபம் பெற்றவன் கோவலன் என்ற அளவில் வாழ்க்கையின் பல திருப்பங்கள் ஊழ்வினையால் நிகழ்வனவாகவே விளக்குவர். கண்ணகியோடு கோவலன் மணம் செய்து இன்புற்றமையும், கண்ணகியைப் பிரிந்து மாதவியோடு இன்புற்றமையும், ஊழ்வினையின் விளைவாக விளக்காது போயினும், மாதவியைப் பிரிந்த போது,

           ஊழிசை மேல் வைத்துத் தன் ஊழ்வினை வந்துருத்ததாகல்ன்

            உவவுற்ற திங்கள் முகத்தாளைக் கவவுக்கை ஞெகிழ்ந்தனனாய”(52)

எனபர். “கண்ணகி கணவனைப் பிரிந்த செய்தியும் பழம் பிறப்பில் நோன்பு பொய்த்தமையேஎனத் தேவந்திக் கூறுகிறாள்.

       கண்ணகியை அழைத்துக் கொண்டு மதுரை செல்லும் போதும் கோவலன் தானாகச் செல்லவில்லை. ஊழ்வினை அவனை ஏவிற்று என்பதை அடிகள் கூறுவது,

                    கங்குல் கடை கூட்ட வியம் கொண்டான்”(78)

என்றும் கூறுவர். கன்மத்தின் ஆற்றலைச் சைன சமயத்தவர்கள் பலவாக எடுத்து வற்புறுத்தினாலும் அதனை வெல்ல முடியும் என்பதே அவர்கள் கருத்து,

                    இட்ட வித்தின் எதிர்வள் தெய்தி

                     ஓட்டுங் காலை ஒழிக்கவும் ஒண்ணா

என்று உவமைக் கூறி விளக்கும்போது ஊழின் ஆற்றலோடு நம் முயற்சியினையும் வற்புறுத்துவதாகவே கொள்வர்.

கலை

        சைன சமயக் கோட்பாட்டினர் கலையைப் பழிப்பதாகக் கூறுவர். தீர்த்தங்கரர் ஒருவரே கலைகளை வெளிப்படுத்தியதாகவும் கூறுவதுண்டு. சமண காப்பியங்களில் வரும் தலைவர்கள் பலர் கலை வல்லவர்களாகச் சீவகன் இசைவல்லமையினைச் சிந்தாமணி அருமையாகப் பாடுகிறது. காமத்தை மிகுப்பன என அதன் இசையும் நாட்டியமும் ஆசிரியர்கள் கடிவதுண்டு. கிளை நரம்பினையும் கூத்தும் கேழ்த்தெழுந்து ஈன்ற காமம்என்பது சிந்தாமணி.

        புகாரில் இக்கலை வாழ்வு பொச்சாப்புண்டு பொருளுரையாளர் நச்சுக் கொல்வதற்குக் காரணமாயிற்றுவஞ்சியில் சேரன் செங்குட்டுவன் நாட்டிய மாதர்கள் வாழ்த்தப் போர் மேற்கொள்கின்றவன் நிலையாமை உணர்வற்று அறக்கள வேள்வி செய்யாது மறக்கள வேள்வியிலேயே நாட்டம் கொள்வதற்குக் காரணமாயிற்று. கலையரசி என்று பாராட்டப்பெறும் மாதவி கலையை மட்டுமன்று, வாழ்க்கையினையே துறந்து துறவியாகிவிடுகிறாள். தன் மகள் மணிமேகலையும் துறவு நெறியைத் தழுவச் செய்கிறாள். கலையரசியிடம் சென்ற கோவலன் வாழ்க்கை பாழாகியது, மக்கள் கலை வாழ்க்கையை இலட்சியத்திலிருந்து திசைத்திருப்பி விடுவதையே பாடுகிறார் என்று கூறல் வேண்டும்.

வைதீகச் சூழல்

        வைதீக நெறியில் மக்கள் பரவலாக ஈடுபட்டிருந்த காலத்தே எழுந்தது என்பது நூலை ஒரு முறைப் பயின்றாலும் விளங்கும். பல்வேறு கோவில் வழிபாடுகள், வேள்விகள், இந்திர விழா போன்ற நிகழ்ச்சிகள், வருண தேவதைகள் பற்றிய விளக்கங்கள் இவ்வெண்ணத்தை நமக்குத் தருதல் இயல்பு ஆயின், காப்பியத்தை ஆழ்ந்து பயிலும்போது, இச்சமுதாய நிலையில் தம் கோட்பாட்டை வெளிப்படுத்திச் செல்லுவதைக் காணலாம்.

   வருணதருமம் சைனர்களும் ஏற்றுக் கொண்டுள்ள ஒன்றே, பிற வழிபாடுகளைப் பொறுத்த அளவில் அவ்வழிபாடுகளில் ஈடுபடுவோர் அனைவரையும் கொண்டு, சமண நெறியில் தலைநிற்கும். தன் காப்பியத் தலைவியைப் பாராட்டிச் செல்லும் திறமும் ஆசிரியரின் உள்ளத்தைக் காட்டும். சாலினி கண்ணகியைப் பற்றிக் கூறும் போது, இவளோ,

           கொங்கச் செல்வி குடமலையாட்டி

           தென்றமிழ்ப் பாவை செய்த தவக்கொழுந்து

           ஒரு மாமணியை உலகிற் கோங்கிய திருமாமணி”(47-9)

என்பள். இதேப் போன்று கண்ணனை வழிபடும் மாதரியும் கண்ணகியைப் பாராட்டுகிறாள். சிவனருளால் தோன்றிச் சிவன் திருவடிகளைத் தன் முடிமேல் கொண்டு ஆட்சி செலுத்தும் செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோவில் எடுத்து வழிபடுகிறான். இச்செயல்கள் தாம் கண்ட சமுதாயத்தின் ஊடே தம் கருத்தைத் திறம் பட அடிகள் பாடிச் செல்வதை நன்கு விளக்கும்.

நிறைவாக,

       சைன சமயக் கோட்பாடுகளையே கூறுகிறார் எனக் கொள்ளும்போதும் ஒரு சமயத் தலைவராகவோ, தத்துவ ஞானியாகவோ நின்று தம் கோட்பாடுகளை உணர்த்துகிறார் என்று கூற இயலாது. இம்மையில் வாழ்க்கை இல்லை, மறுமைக்கு வேண்டியதனைத் தேடுவதே நாம் செய்யத்தக்கது  என்றும் நம் பாவ புண்ணியங்களுக்கேற்ப நம் ஊழ் அமையுமென்றும், அதனைத் தெளிந்து வாழ்வதே வாழ்வு என்றும் கூறப்படுகின்ற சைன சமயக்கோட்பாடுகளே இளங்கோவடிகளால் விளக்கப்படுகின்றன.

         காப்பியங்கள் பொதுவாக சமுதாய நிலையினை இருந்தவாறே பாடிச் செல்வதுதான் இயல்பு. இந்நிலையில் அடிகள் சிறந்தக் கவிஞர் என்ற நிலையில், சமுதாயநிலைகள் பலவற்றோடு ஒன்றி நின்றுப் பாடுவதைக் கொண்டு அவர் பொது நோக்குடையவர் என்றால் பொருந்தாது. சைனசமயக் கோட்பாடுகளில் பிரசார வேகம் காணபடாது போயினும் அக்கோட்பாடுகளின் துடிப்பு இளங்கோவடிகளின் கருத்துக்களை வெளிப்படுத்துவதன் மூலம் தெளிவாகவே புலனாகிறது.

 

-----

Comments

Popular posts from this blog

எண்ணம் போல் வாழ்வு

                                                                        எண்ணம் போல் வாழ்வு             நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·      மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·         வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·   ...

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·         பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·         பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல். ·         உண்மைக்குப் புறம்பானவற்றைச் செய்யாதிருத்தல். ·         நண்பர்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·         மனத்திடத்தோடு வாழ்தல். ·         ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·         மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·         எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.      யாரையும் வெறுக்காதே ...