Skip to main content

சங்க இலக்கியத்தில் கட்டடக்கலை

 

சங்க இலக்கியத்தில் கட்டடக்கலை

          வரலாற்றுக்கு அடிப்படைச் சான்றாகிய கட்டடக்கலை சங்ககாலத்தில் சிறப்பாக இருந்தது. கட்டட அமைப்பிற்கு உதாரணமாக நிழலுக்காகவும், விழாக்காலத்திலும் வீட்டில் முன் பந்தலிட்டு இருந்தன.

          கொடுங்கால் புன்னைக் கோடுதுடித்  தியற்றிய

            பைங்காய்த் தூங்கும் பாய்மணல் பந்தர்

                                                                                   (பெரும்பாண்.266-267)

எனப் புன்னை மரக்கொம்பைக் காலாக நட்டுப் புதுமணல் பந்தலிடப்பட்டது சொல்லப்படுகிறது.

சிற்றில்கள்

    சிற்றில்கள் என்பது குடில் என்றும் குரம்பை என்றும் அழைக்கப்படுகிறது. மீனவர், வேடர், பாணர், உழவர் போன்ற எளியமக்கள் குடிலமைத்து வாழ்ந்தனர். அவற்றில் கூரையாக ஈச்சவோலை, தருப்பைப்புல் வைக்கோல் ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளன.

          ஈத்திலை வேய்ந்த எய்ப்புறக் குரம்பை

          புதுவை வேய்ந்த கவிகுடி” (பெரும்பாண்.8)

என்னும் தொடர்கள் மூலம் அறியலாம்.

மாடங்கள்

       சிற்றில்களைத் தொடர்ந்து செல்வந்தர்களின் மாடமாளிகைகள் குறிக்கத்தக்கன. வான்தோய் மாடம், தோய்மாடம், மலைபுரை மாடம் என்றெல்லாம் இலக்கியங்கள் குறிப்பதிலிருந்து அவை மிக்க உயரமானதாய் இருந்திருக்க வேண்டும் என்பது பெறப்படுகிறது. இம்மாடங்கள் அமைக்கப்பட்ட விதத்தை நோக்குகையில், இவற்றின் தரைத்தளம் பரந்து விரிந்ததாயும், மேற்செல்லச் செல்ல மனைப்பரப்பு குறைந்து கொண்டே சென்றதையும் சங்க இலக்கியங்கள் வழி அறிய முடிகிறது.

          மகர நெற்றி வான்தோய் புரிசைச்

           சிகரம் தோன்றா சேணுயர் நல்லில்” (பெரும்பாண்.225)

என உச்சி காண யலாஉயரமான மாடங்களை உடைய புகார்ப் பட்டினத்தைப் பற்றிய குறிப்பிலிருந்து அம்மாடங்கள் கட்டப்பட்ட வித்ததை அறிய முடிகிறது. அக்கட்டடங்கள் செங்கல் மற்றும் சுண்ணாம்பால் ஆக்கப்பட்டன.

          வெள்ளி யன்ன விளங்கும் சுதையுரீஇ

           மணிகண் டன்ன மாத்திரள் திண்காழ்க்

           கெம்பு இயன்றன்ன  ......   .....நெடுஞ்சுவர்” (நெடுநல்.110-112)

என நெடுநல்வாடை சுண்ணாம்பு பூசப்பெற்ற கட்டடத்தைச் சுட்டுவது மேற்குறித்தற்குச் சான்றாகும். இவ்வாறு, செங்கல், சுண்ணாம்பினால் ஆன சுவர்கள் மீது விட்டம் அமைத்து அதன்மேல் மாடங்களைக் கட்டினர். அவற்றின் உத்திரம் மரம் மற்றும் இரும்பால் ஆக்கப்பட்டது.

மதலைப்பாடம்

          மாடங்களில் வாழும் செல்வந்தர் வீட்டுப்பெண்கள் வீதியில் நடைபெற்ற ஊர்வலங்களைக் காண்பதற்கு உதவியாக அம்மாளிகையில் ஓரமைப்பு இருந்தது. இன்றைய பால்கனியே அன்றைய மதலை  மாடம் ஆகும். நெடுநல்வாடை,

          மனையுறை புறவின் செங்காற் சேவல்

            ......     ........   .......   .......   ......

            இரவும் பகலும் மயங்கிக் கையற்று

            மதலைப் பள்ளி மாறுவன இருப்ப” (நெடுநல்.43-46)

எனத் தெரிவிக்கிறது.

குவிமாடம்

          குவிமாடம் என்பது நீண்ட மாடங்களில் இறுதி மாடம் குவிமாடமாகும். அதாவது அரைவட்ட வடிவமாக அமைக்கப் பட்டிருந்ததாகும்.

          புதுப்பிறை யன்ன சுதை செய் மாடத்து”(புறம்.378.6)

என்பதில் பிறை வடிவம் என்பது மேற்குறித்த அரை வட்ட வடிவைக் குறிக்கிறது.

சாளரங்கள்

          மாடங்கள் காற்றோட்ட வசதியுடன் கட்டப்பட்டிருந்தன. அவற்றில் பல சாளரங்கள் இருந்தன. அச்சாளரங்கள் உள்புகும் காற்று முழுமையும் வெளியேறும் வகையில் நேருக்கு நேர் அமைப்பட்டிருந்தன. என்பதை,

          ”வேனிற் பள்ளித் தென்வளி தரூஉம்

            நேர்வாய்க் கட்டளை திரியாது” (நெடுநல்.61-62)

எனவரும் வரிகளில் மூலம் அறியலாம். மாடங்களில் பாதுகாப்பிற்காகக் கதவுகள் பொருத்தப்பட்டிருந்தன. அவை முதிர்ந்த மரத்தால் ஆனவை. அவற்றில் பல வேலைப்பாடுகள் நிறைந்திருந்தன. சான்றாக,

          ”புலிப் பொறிப் போர்க்கதவின்

            திருத்துஞ்சந் திண்காப்பிற்” (பட்டினப்.40)

எனப் பட்டினப்பாலை சோழ அரசனின் மாளிகைக் கதவுகளில் புலி உருவம் பொறிக்கப்பட்டிருந்ததைக் கூறுவது நோக்கத்தக்கது.

        மேலும், முழுக்கதவையும் திறக்க வேண்டாதபோது வேண்டியப் பகுதியை மட்டும் திறப்பதற்கு வழி இருந்தது. அத்தகைய அமைப்பிற்குப் ‘புதவம்’ என்ற பெயராகும். இது கதவுக்குள் கதவாக இருந்தது.

          ”உயர்ந்தோங்கிய நிரைப் புதவின்

           நெடுமதில் நிரைஞாயில்”(மதுரைக்.359)

என மதுரைக்காஞ்சி குறிப்பிடுகிறது.

          கட்டடங்கள் கிழக்குமேற்காகவோ, வடக்குத்தெற்காகவோ கட்டப்பட்டன. கட்டடங்களைக் கட்டும் முன் கயிறு இட்டு அளந்து மனைகளை வகுத்தனர். கயிறு, தோல் என்பன அளவை அலகுகளாகப் பயன்பட்டன.

          ”நூலறிப் புலவர் நுண்ணிதிற் கயிறிட்டு” (நெடுநல்.76)

என நெடுநல்வாடை இதைச் சுட்டுகிறது. பெரும் வெயில் காலத்திலேயே கட்டடங்கள் கட்டப்பட்டன.

கலங்கரை விளக்கங்கள்

     சங்ககாலக் கட்டடக்கலைக்குக் கலங்கரை விளக்கங்கள் சிறந்தச் சான்றாகும். இவை கடற்கரையோரத்தில் அமைந்திருந்தன. கூரைவேயாத மாடங்களாக இருந்தன. இவற்றில் இரவுநேரத்தில் கடலில் மீன்பிடிக்கச் செல்பவர்க்கும், கரைநோக்கி வருபவர்க்கும் உதவும் வகையில் விளக்குகள் கொளுத்தி வைக்கப்பட்டிருந்தன. அவ்விளக்குகளை உச்சியில் வைப்பதற்கு உதவ ஏணிபோன்ற அமைப்புகள் இருந்ததை,

          ”வான மூன்றிய மதலை போல

           ஏணி சாத்திய ஏற்றருஞ் சென்னி

           விண்பொர நிவந்த வேயா மாடத்து

            இரவின் மாட்டிய இலங்கு சுடர்”(பெரும்பாண்.157-162)

என்ற பாடல்  விளக்குகிறது.

தூண் அமைப்பு

          மாடங்களில் அமைந்திருக்கும் தூண்களும் குறிக்கத்தக்கன. அவை பீடம், குடம், கால், பொதியல் எனப்பல உறுப்புகளைக் கொண்டதாக, மிக்க உயரமானதாக இருந்தன. கருங்காலி போன்ற மரத்தால் தூண்கள் செய்யப்பட்டன.

          ”பருவிரும்பு பிணித்து செவ்வரக் குரீஇத்

           துணைமான் கதவம் பொருத்தி இணைமாண்டு

            நாளொடு பெயரிய கோளமை விழுமரத்துப்

           போதவிழ் குவளைப் புதுப்பிடிக் காலமைத்து”

                                                                                        (நெடுநல்.80-83)

என நெடுநல்வாடை காட்டுவதிலிருந்து தூண்களின் தலைப்பு மலர்ந்த குவளைமலர் போன்ற அமைப்பைப் பெற்றிருந்ததை அறியமுடிகிறது. இதனால் பீடம் குறுகியும் மேலே விரிந்தும் இருந்ததாக உத்திரத்தின் பாரம் நேரே பரப்பப்பட்டுத் தாங்கப்பட்டது. இது அவர்தம் கட்டடக்கலைக்கு மிகச் சிறந்தச் சான்றாகும்.

கோட்டைகள்

    சங்ககாலத்தில் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட கோட்டைமதில் போன்றவையும் அவர்களின் கட்டடக்கலை ஆற்றலுக்குச் சான்று தருகின்றன.

          கோட்டைகள் மண், செங்கல்லோடு கருங்கால்லாலும் கட்டப்பட்டன. கருங்கல் கோட்டைகளில் கருங்கல்லை இணைக்கச் செம்பு அல்லது ஈயத்தை உருக்கி இடையே கட்டினர். முழுக்க, முழுக்க பாதுகாப்பு நோக்கோடு அமைக்கப்பட்ட கோட்டையில் போர்க்காலத்தில் எதிரியின் பலத்தை அறியவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதாவது, கோட்டைக்கு வெளியே பல துளைகள் இருந்தன. அவற்றுக்கு குரூஉக்கள் எனப்பெயர். கோட்டைக்குள் இருந்து அத்துளைகள் வழியே எல்லாத் திசையிலும் ஈட்டி, மேல் ஆகியவற்றை எறியும் வகையில் அவை அமைக்கப்பட்டிருந்தன. இதை,

          ”கொடுமுடி காக்கும் குரூஉக்கண் நெடுமதில்”(அகம்.159.18)

என அகநானூறு விளக்குகிறது. கோட்டை மதில்களும் பாதுகாப்பிற்காக மிக்க உயரமானதாய் அமைக்கப்பட்டிருந்தன.

தெருக்கள்

          தெருக்களின் அமைப்பு முதலில் நோக்கப்படுகிறது. தெருக்கள் அகலமாக இருந்தன. நேர் நேராக இருந்தன. இது,

          ”ஆறுகிடந் தன்ன அகல நெடுந்தெரு” (மதுரைக்.359)

என்பதால் அறியப்படுகிறது. மேலும், தெருக்கள் கருங்கல் பரவிய சாலையாக இருந்திருக்க வேண்டும் என்பதை,

          ”திண்தேர் குழித்த குண்டு நெடுஞ் தெரு”(பெரும்பாண்.397)

எனப் பெரும்பாணாற்றுப்படையில் தேர் செல்லும் தெரு குறிப்பிடப்படுகிறது. புது மண் சாலையாக இருந்திருப்பின் குழியாக வாய்ப்பில்லை.

        அரண்மனை, அரசாங்க அலுவலகங்கள் மற்றும் நீதிமன்றங்கள் நகரின் மையத்தில் இருக்கும்படியாக நகரங்கள் அமைக்கப்பட்டன. நகரத்தில் மக்கள் வாழிடங்கள் தனியாக இருந்தன. இவற்றிற்கெல்லாம் ஏற்ற வகையில் தாமரை வடிவில் இருந்தன.

          ”மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்

           பூவோடு புரையுஞ் சீருர் பூவின்

            இதழகத் தலனய தெருவம் இதழகத்

           தரும் பொருட் டனைத்தே அண்ணல் கோயில்”

                                                                                     (பரிபாடல்.7,1-4)

என்ற பரிபாடல் வரிகள் மதுரை நகரின் அமைப்பை விளக்குகின்றன. தாமரையின் இதழ்கள் போல நகரின் தெருக்களும் அதன் பொகுட்டைப் பொல அரண்மனையும் இருந்தது என்பது அறியப்படுகிறது.

குடிநீர்

          ஒரு நகரமைப்பில் குடிநீர் வழங்கலும் கழிவுநீர் அகற்றலும் மிக முக்கியக் கூறுகளாகும். குடிநீருக்கு நகரில் பல வீடுகளில் உறை கிணறுகள் இருந்தன. சுட்டமண்ணால் ஆன உறைகள் இடிக்கப்பட்டு அதைச் சுற்றி கெட்டி களிமண் கொண்டு பூசப்பட்டதையும் இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. பெரும்பாலும் மணற்பாங்கான இடங்களிலேயே உறைகிணறுகள் தோண்டப்பட்டன.

          ”வளமனை மகளிர் குளநீர் அயர” (மதுரைக்.603)

என்ற  பாடல் வரிகள் மூலம் குடிநீருக்கும் குளிக்கவும் குளங்கள் பயன்பட்டது எனத் தெரிகிறது.

கழிவு நீர்

  கழிவுநீர் வடிகால் என்பதை கரந்துபடை என்று பெயரிட்டிருந்தனர். இது செங்கல் மற்றும் கருங்கல்லால் ஆன அமைப்பாகும்.

          ”கல்லிடித் தியற்றிய இட்டுவாய்க் கிடங்கின்” (மதுரைக்.703)

என்பதனால் வீடுகளிலிருந்து கழிவுநீர் புதை சாக்கடை வழி திரட்டப்பட்டு ஊருக்கு வெளியே எடுத்துச் செல்லப்பட்டு அகழியில் கலக்கப்பட்டதை அறிய முடிகிறது. மேலும், இப்புதை சாக்கடைகள் தெருவின் நடுவில் அமைக்கப்பட்டிருந்ததும் தெரியவருகிறது.

நிறைவாக,

      சங்ககால மக்கள் மாடமாளிகைகள் மட்டுமல்லாது குடில், குரம்பை போன்ற சிற்றில்களிலும் வசித்தனர். விட்டம் வைத்தும், தூண்கள் வைத்தும் மாடங்களைக் கட்டினர். இதன்மூலம் வலிமையான கட்ட்டங்களை உருவாக்கும் அறிவுநுட்பம் அவர்களிடம் இருந்தது வெளிப்படுகிறது. எனவே, சங்ககாலத்தில் ஏழைகளும் இருந்துள்ளனர். திட்டமிட்ட நகர அமைப்பு, நாகரீக வளர்ச்சிக்கு அங்கீகாரம் தருகிறது. இதன்மூலம் பண்பட்ட நாகரீக வாழ்விற்கு மிகச் சிறந்த அடையாளமாகும்.

                   

Comments

Popular posts from this blog

எண்ணம் போல் வாழ்வு

                                                                        எண்ணம் போல் வாழ்வு             நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·      மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·         வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·   ...

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·         பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·         பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல். ·         உண்மைக்குப் புறம்பானவற்றைச் செய்யாதிருத்தல். ·         நண்பர்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·         மனத்திடத்தோடு வாழ்தல். ·         ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·         மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·         எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.      யாரையும் வெறுக்காதே ...