”கண்ணி” என்பதற்குத் தமிழ்மொழியகராதி ”தலையில்
சூடும் பூமாலை, போர்ப்பூ, பூங்கொத்து. புள்ளைப் படுக்கும் முடிப்புக் கயிறு, முடிச்சு,
கொழுந்து, இசைப்பாட்டு, கரிசலாங்கண்ணி” என்று பொருள் கூறுகிறது. இவற்றில் போர்ப்பூ,
தலையில் சூடும் பூமாலை என்ற பொருள்களில் சங்க இலக்கியங்களில இச்சொல் ஆளப்பட்டுள்ளது.
இரு பக்கமும் பூக்கள் பொருந்தத் தொடுக்கும்
ஒரு தொகுப்பு கண்ணி எனப்படும். தலையில் சூடப்படுவது ‘கண்ணி’ என்றும், மார்பில் அணியப்படுவது
‘மாலை, தார்’ என்றும் வழங்கப்படுகிறது. தலையில் அணியும் பூமாலையிலேயே ஆண்கள் அணிவது
கண்ணி, என்றும் பெண்கள் அணிவது கோதை என்றும் தனித்தனிப் பெயர்களால் சுட்டப்படுகிறது.
இவ்வேறுபாட்டினை,
”மைந்தர் கண்ணி மகளிர் சூடவும்
மகளிர்
கோதை மைந்தர் மலையவும்” (பட்டினப். 109-110)
என்னும் அடிகள்
உணர்த்துகின்றன.
தலையில் அணியக் கூடிய கண்ணியையே மார்பில்
தாராகவும் அணியும் மரபு உள்ளது. சிவபெருமான் தலையில் கொன்றைக் கண்ணி அணிந்தவன், அதே
கொன்றையைத் தாராக மார்பில் அணிந்துள்ளான்.
”கண்ணி கார்நறுங் கொன்றைக் காமர்
வண்ண
மார்பின் தாருங் கொன்றை” (புறநா.1)
என்பது இதனை
விளக்கும். மக்கள் தம் வாழ்வில் அணியும் மரபைக் கடவுளுக்கும் சார்த்தியுள்ளனர்.
அரசர்கள் கண்ணி
சூடுதல்
சங்க காலப் பெருநில வேந்தர் சேர, சோழ, பாண்டியர்கள்
ஆவர். சேரர் பனம்பூவினையும், சோழர் ஆத்தி (ஆர்) யையும், பாண்டியர் வேம்பினையும் தத்தமக்குரிய
குடிப்பூவாகக் கொண்டிருந்தாலும் களங்காயை நாரில் முடிந்து கண்ணியாக்கி அணிந்து கொண்ட
சேரனையும் பதிற்றுப்பத்து பாடுகிறது.
மூவேந்தர்கள் குடிப்பூவினைக் கண்ணியாக்கித் தலையில் அணிந்து கொள்ளும் மரபினைப் பல பாடல்கள்
உணர்த்துகின்றன. சோழ மன்னர்களான நலங்கிள்ளியும் ஒருவரோடு ஒருவர் எதிர் நின்று பொருத
போது,
”நின்ன கண்ணியு மார்மிடைந்தன்றே நின்னொடு
பொருவோன் கண்ணியு மார்பிடைந் தன்றே” (புறநா,45)
என்று பாடுகின்றார்.
இரு அரசர்களில் யார் தோற்றாலும் ஆத்திக் கண்ணியைச் சூடியவன் பெருமையே குறையும். எனவே
போரைத் தவிர்க்குமாறு வேண்டுகிறார். இங்குக் குடிப்பெருமையின் சின்னமாகக் கண்ணி விளங்குகின்றது.
அரசர்கள் போருக்குச் செல்லும் பொழுதும் குடிக்குரிய
கண்ணியையும், போருக்குரிய கண்ணியையும் ஒருங்கே சூடிச் செல்லுதல் மரபாக உள்ளது. பாண்டின்
தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் உழிஞைப் பூவுடன் வேம்பின் தளிரையும் குடுமியில்
மலைந்து சென்றுள்ளான்.
”மன்ற வேம்பின் மாச்சினை யொண்டளிர்
நெடுஞ்கொடி
யுழிஞைப் பவரொடு மிடைந்து
செறியத்
தொடுத்த தேம்பாய் கண்ணி” (புறநா.76)
என்பதும் இம்மரபினை
விளக்குகிறது.
குறுநில மன்னர்கள்
கண்ணிச் சூடுதல்
குறுநில
மன்னர்களுள் பலர் கண்ணி சூடியுள்ள மரபைச் சங்கப் பாடல்கள் உணர்த்துகின்றன. அண்டிரன்
வழைக் கண்ணியும் (சுரபுன்னை) (புறநா.131), எழினி கூவிளங் கண்ணியும் (புறநா.158)
சூடியுள்ளனர். பிட்டங்கொற்றன் வேங்கைக் கண்ணி (புறநா.162) புனைந்துள்ளான். கபிலர்
இருங்கோவேளை,
”ஒலியற் கண்ணிப் புலிகடி மாஅல்” (புறநா.201)
என்பர். நன்னன்,
”பொன்னங் கண்ணிப் பொலந்தேர் நன்னன்”
(பதிற்.40)
”வண்டுபடக் கமழும் தேம்பாய் கண்ணித்
திண்தேர் நன்னன் ” (மலைபடு.466-467)
என்று சிறப்பிக்கப்படுகின்றான்.
நல்லியக்கோடன் கொய்தளிர் கண்ணியும் (சிறுபாண்.267), மழவர் என்றழைக்கப்படும் அதியமான்
நெடுமானஞ்சி ”வண்டு படத்ததைந்த கண்ணியும்” (அகநா.1) சூடியுள்ளனர்.
குறுநிலமன்னரகள் போருக்குரிய அடையாளக் கண்ணியும்
அணிந்துள்ளனர். அகுதை தும்பை சூடியுள்ளமையைக் கபிலர் பாடுகின்றார் (புறநா.347). அறுகை
என்னும் குறுநில மன்னன்,
”நுண்கொடி யுழிஞை வெல்போ ரண்ணல்”(பதிற்.44)
என்று உழிஞை
சூடியதைப் பாடுவார். இளங்கோசர், கடலாடு மகளிர் கொய்த ஞாழல், கழனி உழவர் கொணர்ந்த குவளை
இவற்றை முல்லையுடன் சேர்த்துப் புனைந்த கண்ணியைச் சூடியுள்ளனர்(அகநா.216).
போருக்குரிய
கண்ணி
வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி,
உழிஞை, தும்பை, வாகைப் போர்களுக்கு அடையாளமாக அந்தந்தப் பூவையே கண்ணியாகப் புனைந்து
கொள்ளுதல் மரபு. இம்மரபினையே தொல்காப்பியர் குறிப்பிடவில்லை யாயினும் உரையாசிரியர்கள்
விளக்குகின்றனர். சங்கப் பாடல்கள் பலவும் இம்மரபுக்குச் சான்றாகும்.
ஆநிரைகளைக் கவரச் செல்லும் படைவீரர்கள் வெட்சிக்
கண்ணிச் சூடிச் செல்லுதல் மரபு. அதற்கு மாறாக, அதிரற் பூவினைச் சூடிச் சென்றதை,
”குயில்வா யன்ன கூர்முகை யதிரல்
பயிலா
தல்கிய பல்காழ் மாலை
மையிரும்
பித்தை பொலியச் சூட்டி” (புறநா.269)
என்று புறநானூறு
கூறுகின்றது. இப்புதிய மரபினைத் தாயங்கண்ணினார்.
”கொய்குழை யதிரல் வைகுபுலர் அலரி
சுரியிரும்
பித்தை சுரும்புபடச் சூடி
இகல்முனைத்
தரீஇய ஏறுடைப் பெருநிரை
நனைமுதிர்
நறவின் நாட்பலி கொடுக்கும்” (அகநா.213:4-7)
என்று விளக்குவர்.
அரண் காப்போர் நொச்சி சூடுவது மரபு. இக்கண்ணியை
ஊராருக்கு விழாவை அறிவிக்கும் குயவரும் தலையில் சூடும் மரபு உள்ளது.
”கண்ணி கட்டிய கதிர் அன்ன
ஒண்குரல்
நொச்சித் தெரியல் சூடி” (நற்.200)
எனக் குயவன்
நொச்சிக் கண்ணி சூடியமை தெரிகிறது. இம்மரபினை,
”மணிக்குரல் நொச்சித் தெரியல் சூடிப்
பனிக்கள்
ஆர்கையர் பார்முது குயவன்” (நற.293)
என்பதும் புலப்படுத்தும்.
உழிஞைப்
போருக்குச் செல்வோர் உழிஞைப் பூவுடன் பூளைப் பூவினையும் கண்ணியாகச் சூடிச் சென்றுள்ளனர்.
(பட்,234-235)
நிறைவாக,
தலையில் சூடும் பூமாலையைப் பொதுவாகக் குறிக்கப் பயன்பட்ட
கண்ணி என்னும் சொல்லாட்சி, ஆண்கள் அணிவதை மட்டும் குறிப்பாக உள்ளது.
· தொல்காப்பியர்
அரசர்கள் கண்ணி சூடும் மரபைக் கூறவில்லை ஆயினும் சங்கப்பாடல்கள் வழி அம்மரபு தெளிவாகிறது.
· குறுநில மன்னர்கள்
கண்ணி புனையும் மரபு இருந்தாலும், இது இன்னாருக்குரியது எனத் தனித்துக் கூறும் அளவுக்குச்
சான்றுகள் இல்லை. போருக்குச் செல்லும் பொழுது குடிக்குரிய மரபு.
· வெட்சிப் போருக்கச்
செல்வோர் அதிரற்பூவினை அணிந்து செல்லும் மரபும் உண்டு.
· குடிக்குரிய கண்ணியாக வேம்பு, ஆர், போந்தை என்பனவும், போருக்குரிய கண்ணியாக வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை என்பனவும் உள்ளன. மைந்தர்களும் பலவகையான கண்ணியையும் அழகுக்காகச் சூடியுள்ளனர்.
Comments
Post a Comment