சங்க இலக்கியத்தில் நோய்களும் மருத்துவமும்
சங்க காலப் புலவர்கள் நானூற்று எழுபத்து மூவருள் உறையூர் மருத்துவன் தாமோதரனார்
மருத்துவத் தொழில் புரிந்தவர் என்பது அவர்தம் பெயரால் புலப்படும். சங்கப் பாடல்கள்
இம்மருத்துவர்களின் இயல்பைப் பல அடிகளில் குறித்துள்ளன. பிணியுற்றவர்களுக்கு அவர் விரும்புவன
கொடாது வேறாகிய மருந்து கொடுப்பது மருத்துவர் இயல்பு. இதனை நத்தங்கொற்றனார்,
”அரும்பிணி உறுநர்க்கு வேட்டது
கொடாது
மருந்தாய்ந்து கொடுத்த அறவோன்” (நற்.136)
எனக் குறிப்பிடுவர்.
மருத்துவன் நோய்க்குரிய மருந்தை வாய்வழியாக ஊட்டுதல் மரபு. இதனைச் சேரமான் பாலை பாடிய
பெருங்கடுங்கோ,
”... .. ...யாக்கையுண் மருத்துவ னூட்டிய
மருந்து” (கலித்.17)
எனச் சுட்டுவர்.
மேலும், மனிதனுக்கு ஏற்படும் உடல் நோயையும், உளநோயையும் சுட்டுகின்றன.
உடல் நோய் மருத்துவம்
சங்க காலத்தில் வீரம் சிறப்பாகப் போற்றப்பட்டதால் போர்களும் அதிகமாக நடந்தன.
போரில் கூர்மையான வாள்பட்டு உடலில் குருதி வழியப் புண் ஏற்படும் பொழுது அக்குருதி வழிவதைத்
தடுக்கவும் புண்பட்ட இடத்தில் தூசு முதலியன படாமல் இருக்கவும் புண்களில் பஞ்சு வைத்துத்
துணியால் கட்டியுள்ளனர். இதனை,
”கதுவாய் போகிய துதிவா யெஃகமொடு
பஞ்சியுங் களையாப் புண்ணர்” (புறநா.353)
என்பது உணர்த்தும்.
போரில் ஏற்பட்ட பிளந்த காயத்தை ஊசி கொண்டு
தையலிடுவதை மருத்துவ முறையாகக் கொண்டுள்ளனர். இவ்வாறு தைப்பதற்கு ஊசியைப் பயன்படுத்தியுள்ளனர்.
இவ்வூசி ‘நெடுவள்ளூசி’ எனப் பெற்றுள்ளது. இந்நெடிய வெண்மையான ஊசி தசையில் புகுந்து
குருதியில் தோய்ந்து வெளிவருதலை, மீன்கொத்திப் பறவை நீரில் வாழும் மீனைக் கொத்தி எழுவதற்கு
ஒப்பிடுவர். இதனை,
”மீன்றேர் கொட்பிற் பனிக்கய மூழ்கிச்
சிரல்பெயர்ந்
தன்ன நெடுவள் ளூசி
நெடுவசி
பரந்த வடு” (பதிற்.42)
என்பர் பரணர்.
தேள் கொட்டினால் தடவும் மருந்தைச் சோழன்
நல்லுருத்திரன் ‘இடுதேள் மருந்து’ (கலி.110) எனச் சுட்டுவர். இதனால் சங்க காலத்தில்
தேள் போன்ற விடப் பூச்சிகள் கடித்தால் தடவுவதற்கு மருந்து இருந்தது என்பதால் அறியலாம்.
உடல் நோய்களுக்கு மரம் சிறந்த மருந்தாக விளங்கியுள்ளது.
மருந்தாகப் பயன்படுத்தப்படும் மரத்தை மக்கள் எவரும் அதனை அழித்து வெட்டிப் பயன் கொள்ளமாட்டார்கள்.
இதனை,
”மரம்சா மருந்தும் கொள்ளார் மாந்தர்”
(நற்.226)
என்பர் கணியன்
பூங்குன்றனார். ”மருந்துகொண் மரத்தின் வாள்வடு மயங்கி” (புறம்.180) மருந்து கொள் மரம் ஈண்டு அத்திமரம் ஆகும். அத்தி
மரத்தின் பால் புண்ணுக்கிடுவர். அதனால் அதன் அடிப்பகுதி வெட்டுப்பட்ட வடுக்கள் நிரம்பியிருத்தலின்
வடுப்பட்ட யாக்கைக்கு உவமையாயிற்று.
உளநோய்
சங்க இலக்கியத்தில் காதலால், பிரிவால் தலைமக்கள் அடையும் துன்பம் புலவர்களால்
நோயாகச் சுட்டப்படுகிறது. இந்நோய்க்குரிய மருந்தினையும் புலவர்கள் தம் பாடல்களில் குறிப்பிட்டுள்ளனர்.
தலைவியின் உளநோய்க்குச் சிறந்த மருந்தாகப் புதுபுனலாடுதல் கூறப்பட்டுள்ளது. தலைவன்
தலைவியைத் திருமணம் செய்து கொள்ளாது வரைவு நீட்டிக்கின்றான். விரைவில் திருமணம் செய்துகொள்ள
உணர்த்த விரும்பும் தோழி, தலைவன் சிறைப்புறமாக நிற்கும் பொழுது தலைவியிடம் அன்னை கூறிய
மொழிகளைக் கூறுகிறாள். அக்கூற்றில் அன்னை தலைவியின் உடல் வேறுபாட்டை உணர்ந்து புதுபுனலில்
நீராடச் செல்லுமாறு கூறியதை எடுத்துரைக்கிறாள். இதனை,
”வானுற நிவந்த பெருமலைக் கவாஅன்
ஆர்கலி
வானம் தலைஇ நடுநாள்
கனைபெயல்
பொழிந்தெனக் கானம் கல்லென்று
முளியிலைக் கழித்தன முகிழிணர் கொளவரும்
விருந்தின்
தீநீர் மருந்து மாயின்
கண்ணின்
நோக்கித் தண்ணென வுண்டு
முனியா தாடப் பெறின்இவள்
பிணியும் தீர்குவள் செல்கென் றோளே” (நற்.53)
என்பர். இதனால்
புதுப் புனலாடுதல் சிறந்த மருந்தாகக் கருதப்பெற்றமை பெறப்படும். புதுப்புனல் மலைப்பகுதியில்
உள்ள உலர்ந்த சருகுகளையும் அரும்புகளோடு கூடிய பூங்கொத்துக்களையும் அடித்துக் கொண்டு
வருவதால், அது மருந்துத் தன்மை உடையதாகக் கருதப்படுகிறது. இப்புதுப்புனலில் உடலும்
உள்ளமும் குளிர நீராடினால் மெய்வருத்தம் நீங்கும் என்பது உணர்த்தப்பட்டுள்ளது.
நிறைவாக,
சங்ககாலத்தில் வெட்டுக் காயங்களைத் தையலிட்டு
மருந்து வைத்துக் கட்டியுள்ளனர். உளநோய் தொடர்பான சிந்தனை இருந்துள்ளமையைப் பல பாடலகள்
உணர்த்துகின்றன. இவற்றால் இயற்கை மருத்துவமே சங்க கால மருத்துவ முறைஎன்பது விளங்கும்.
Comments
Post a Comment