Skip to main content

நட்பு போற்றும் வள்ளுவம்

 

        நட்பு போற்றும் வள்ளுவம்

          கூடி வாழும் இயல்பினையுடையது மனித இனம். அம்மனிதன் உலகில் பிறக்கும் போதே நட்பு தொடங்கி விடுகிறது. குழந்தை பிறக்கும் போது அதற்குப் பாலூட்டும் தாயோடு நட்பு தொடங்குகின்றது. வளரும் போது குடும்ப உறவுகளுடன் தொடா்கின்றது. இளமை பருவத்தே ஒத்த பண்புடையாளருடன் உள்ளம் கலந்து நட்பாய் இணைகின்றது. சமுதாயத்தில் பிறருடன் கூடி வாழும் போது வளா்கின்றது. தனி மனிதன் சமுதாயத்தோடு இணைந்து வாழ்வதற்கு நட்பு துணை செய்கின்றது. மனிதா்களிடையே உலகளாவிய மனிதநேய ஒருமைபாட்டை மலா்விக்கின்றது. யாதும் ஊரே யாவரும் கேளீா் என்று  தமிழ் இலக்கியம் காட்டும் உலகளாவிய நட்பை விளக்குகின்றது.

நட்பின் தன்மை

            நட்பின் சிறப்பைக் கருதியே திருவள்ளுவா் நட்பு, நட்பாராய்தல், பழைமை,  தீ நட்பு, கூடா நட்பு என ஐந்து அதிகாரங்களை வகுத்துள்ளார். நட்பு என்பது இரு உள்ளங்களை இணைக்கும் பாலமாகும். எனவே தான் நட்பு செய்வது நகுதற் பொருட்டன்று. மிகுதிக்கண் மேற்சென்று இடித்தற் பொருட்டு என்பா் வள்ளுவா். முகம் மட்டும் மலருமாறு நட்பு கொள்வது நட்பாகாது. அகமும் முகமும ஒரு சேர மலா்வதே நட்பு என்று கூறுவா்.

                         உடுக்கை யிழந்தவன் கைபோல ஆங்கே

                         இடுக்கை களைவதாம் நட்பு” (குறள்-788)

என்பது உண்மையான நட்பின் இலக்கணமாகும்.

          நாலடியாரில் நட்பியலில் சுற்றம் தழால், நட்பாராய்தல், நட்பிற் பிழை பொறுத்தல், கூடா நட்பு  ஆகிய நான்கு தலைப்புகளில் நட்புப் பற்றிய கருத்துகள் கூறப்பெற்றுள்ளன. புணா்ச்சி பழகுதல், உணா்ச்சி ஒத்தல் ஆகிய மூன்றனுள்ளும் உணா்வினால் ஒத்தலே நட்பு என்னும்  உரிமையைத் தருகிறது.

                        புணா்ச்சி பழகுதல் வேண்டா உணா்ச்சிதான்

                         நட்பாங் கிழமை  தரும்” (குறள்.785)

என்று உள்ளம் கலந்த நட்பின் உயா்வினை வள்ளுவா் தம்  குறள் மூலம் உணா்த்துகின்றார்.

         ஆதனுங்கனிடம் பெருநட்பு கொண்ட கள்ளில் ஆத்திரையனார் என்னும் புலவா் நட்பை விளக்குங்கால் உன் புகழன்றி வேறொன்றும் நான் சொல்லாததனால் என் நெஞ்சைத் திறப்போர் உன்னைக் காண்பார். என் நினைவு தவறும் நேரம் வரையில் உன் நினைவுகள் எனக்கு இருக்கும் என்று உள்ளம் கலந்த நட்பின் உயா்வை எடுத்துரைக்கின்றார்.

        கோப்பெருஞ் சோழன்பிசிராந்தையார் நட்பு ஒருவரை ஒருவா் காணாது உள்ளத்தால் ஒன்றிய நட்பு. நுங்கோன் யாரெனக் கேட்பின் கோழியோனே கோப்பெருஞ்சோழன் என்று பிசிராந்தையாரும்,

                    தன்பெயா் கிளக்குங்காலை யென்பெயா்

                     பேதைச் சோழ  னென்னுஞ் சிறந்த

                     காதற் கிழமையு முடையன்” (புறம்-216)

என்று கோப்பெருஞ்சோழனும் கூறிய மொழிகள் உள்ளம் கலந்த நட்பின் உயா்வைக் காட்டுகின்றன. மேலும்,

                    இகழ்விலன் இனியன் யாத்த நண்பினன்

                     புகழ்கெட வரூஉம் பொய் வேண்டலனே

என்று பிசிராந்தையாரின் பண்பு பாராட்டும் கோப்பெருஞ்சோழன் தான் வடக்கிருக்கும் போது தனக்கு அருகே அவா்க்கு ஓா் இடத்தை ஒதுக்குமாறு வேண்டுகிறான். அவனைச் சூழ்ந்திருந்த சான்றோர் பிசிராந்தையார் வருவாரோ என ஐயுற்றகாலை தன் நண்பரின் பண்பினைநட்பின் சிறப்பினை,

                     செல்வக் காலை நிற்பினும்

                      அல்லற் காலை நில்லலன் மன்னே  (புறம்-215)

என எடுத்துரைக்கிறான். கோப்பெருஞ்சோழன் எதிர்பார்த்தவாறு வந்த பிசிராந்தையாரைக் கண்டு,

                     இசைமர பாக நட்புக் கந்தாக

                      இனையதோர் காலை யீங்கு வருதல்

                      வருவ னென்ற கோனது பெருமையும்

                      அதுபழு தின்றி வந்தவ னறிவும்

                      வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந் தன்றே  (புறம் -217)

என்று இருவரின் நட்புக் குறித்துப் புலவா் பொத்தியார் போற்றியுரைக்கின்றார்.

          அக இலக்கியங்கள் தலைவன் தலைவியா் ஒருவா் மாட்டு மற்றொருவா் கொள்ளும் அன்பினைகாதல் கேண்மையை நட்பு என்றே குறிப்பிடுகின்றனர். மலை கெழு நாடனொடு தான் கொண்ட நட்பு நிலத்தினும் பெரியதாய், வானினும் உயா்வுடையதாய், கடலினும் ஆழமானதாய்  பெருகி நிற்கும் என்று கூறுகிறாள் தலைவி. தலைவனோ, ‘பயிலியது கெழீஇய நட்புஎன்று தான் தலைவியிடம் கொண்ட அன்பினைப் பிறவிதோறும் தொடரும் இயல்புடையது என்று வெளிப்படுத்துகிறான்.

                   ”………… …… யாக்கைக்கு

                    உயிரியைந் தன்ன நட்பின் அவ்வுயிர்

                    வாழ்தல் அன்ன காதல்

                    சாதல்  அன்ன பிரிவரி யோளே    (அகம். 339:11-14)

என்று தலைவன்தலைவி இருவரிடையே நிலவிய நட்புக் குறித்து அகநானூறு மொழிகின்றது.

          தோழிதலைவி ஆகிய இருவரிடையே உள்ள இசைந்த நட்பினை,

                   யாமே, பிரிவின் றியைந்த துவரா நட்பின்

                    இருதலைப் புள்ளின் ஓருயி ரம்மே

என்ற தோழியின் கூற்று புலப்படுத்தும். இவை யாவும் கோப்பெருஞ்சோழன்பிசிராந்தையார், கள்ளில் ஆத்திரையனார்ஆதனுங்கன், தலைவன்தலைவி, தலைவிதோழி ஆகியோரின் நட்பை விளக்குவதாக இருப்பினும் நட்பின் பொது இலக்கணத்தைச் சுட்டுவதாக அமைந்துள்ளன.

நண்பரைத் தேர்ந்து கொள்ளும் நெறி

          நண்பரைத் தேர்ந்து கொள்ளுமுன் அவரைப் பற்றி ஆராய்ந்து அறிந்து நட்பு கொள்ளுதல் வேண்டும். நட்பு செய்த பின் அவா்பற்றி ஆய்தல் பண்பில்லை. இதனை,

                      ”….. . ….. …… பெரியோர்

                        நாடி நட்பி னல்லது

                        நட்டு நாடார்தம் ஒட்டியோர் திறத்தே

என்று கூறுகின்றது நற்றிணை. வள்ளுவரும்,

                      நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்

                       வீடில்லை நட்பாள் பவா்க்கு   (குறள் – 791)

என்றும்,

                       ஆய்ந்தாய்ந்து கொள்ளதான் கேண்மை கடைமுறை

                         தான்சாம் துயரம் தரும்       (குறள் – 792)

என்றும் குறிப்பிடுவா்.

             நண்பராகக் கொள்ளுமுன் அவருடைய குணம், குற்றம், குடிமை, குன்றா இனம் ஆகியன பற்றி அறிந்த பின்னரே அவரை நண்பராகக் கொள்ளுதல் தக்கது. உயா்ந்த குடியிற் பிறந்தவன்தான் பிழை செய்தற்கு அஞ்சுவான். பழிக்கு நாணுபவன் பிறா் செய்த குற்றத்தைப் பொறுக்கும் பணபுடையவனாக விளங்குவான். எனவே உயா்ந்த குடிப்பிறப்பும், பழிக்கு அஞ்சும் பான்மையும் உடையோரே நண்பராகக் கொள்ளுதற்குரியவா். ஒழுக்கம், வாய்மை, நாணம், சான்றாண்மை, சாயல் ஆகிய பண்புகள் உயா்குடிப் பிறந்தார்க்கு உரியவை. ஆகவே,

                      குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்

                       கொடுத்தும் கொளல் வேண்டும் நட்பு  (குறள் – 794)

என்பா் வள்ளுவா்.

உயர்ந்தோரின் நட்பு

                சந்தன மரத்தில்  சேர்க்கப்பட்ட தீந்தேன் போல உயா்ந்தோரின் நட்பு உயா்ந்தது. வேட்டையில் இடப் பக்கத்தே வீழ்ந்த பன்றியை உண்ணாது, யானையை வலப்பக்கம் வீழ்த்தித் தன் பசிக்கு உணவு ஏற்கின்ற புலியைப் போன்ற மன வலிமையும் கொள்கைப் பிடிப்பும் உடையவரே நண்பராவதற்கு உரியவா். விளை வயலில் நெற் கதிர்களைப் பதுக்கி வைத்து உண்ணும் எலி போன்ற உள்ளம் உடையவா் நண்பராதற்கு தகுதி அற்றோர். எனவே புலியனையார் நட்பினைக் கொள்க. எலியனையார் நட்பினைக் கொள்ளற்க என்று நட்பு நெறியினைப் புறநானூறு அறிவுறுத்துகின்றது.

             கற்று அறிந்தவா் கேண்மை கரும்பை நுனியிலே இருந்து சுவைப்பதை ஒப்பது. கரும்பை நுனியிலிருந்து அடிநோக்கிச் சுவைக்கும் சுவை கூடும். மாறாக அடியிலிருந்து சுவைக்கும் போது சுவை குறையத் தொடங்கும். அது போன்றது ஈரம் இலாளா் தொடர்பு. நவில்தோறும் நூல் நயம் போலப் பழகப்பழகப் பண்பை வளா்ப்பது பண்புடையாளா் நட்பு.

                 நிறைநீர நீரவா் கேண்மை பிறைமதிப்

                  பின்நீர பேதையார் நட்பு    (குறள் – 782)

என்று மேதையின் நட்பையும், பேதையின் நட்பையும் விளக்குகின்றது திருக்குறள்.

           யானை தன்னை வளா்த்த பாகனைக் கொல்லும் தன்மையது. நாயானது தன்னை வளா்த்தவன் தன் மேல் வேலெறியும் வேளையிலும் அவன்பால் உள்ள நன்றி உணா்வின் காரணமாகத் தன் வாலைக் குழைத்து நிற்கும். ஆகவே யானையை ஒத்தவரின் நட்பினை நீக்கி, நாயனையார் நட்பினை விரும்பிக் கொள்ளுதல் வேண்டும் என்று நாலடியார் வலியுறுத்துகின்றது.

நண்பா்களின் பிழை பொறுத்தல்

          உலகில் குறை இல்லாத மனிதர்களே இல்லை. குணமே உருவானவா்களும் இல்லை. நட்பில் பிழை பொறுத்தல் வேண்டும். நெல்லிலும் உமி உண்டு. நீரிலும் நுரை உண்டு. பூவிலும் புல்லிதழ் உண்டு. அதுபோல நண்பரும் தவறு செய்வதுண்டு.  நல்லவா் என்று நாம் நாடி நட்பு செய்து கொண்டவா் நல்லார் அல்லாராக இருப்பினும் அவா்களைப் பொறுத்துக் கொள்ளுதல் வேண்டும். ஒருவா் பொறை இருவரின் நட்பை நிலைபெறச் செய்யும்.

          தம் கைகள் தம் கண்ணைக் குத்திவிட்டது என்பதற்காக யாரும் தம்முடைய கைகளைக் களைவது இல்லை. அதுபோலத்தான் விடுதற்குரிய நண்பரைத் தீமை செய்தவிடத்தும் துறத்தல் கூடாது.

                    இன்னா செயினும் விடற்பாலா் அல்லாரைப்

                     பொன்னாகப் போற்றிக் கொளல்வேண்டும்பொன்னொடு

                     நல்லில் சிதைத்ததீ நாடொறும் நாடித்தம்

                     இல்லத்தில் ஆக்குத லால்   (நாலடி – 225)

என்று நண்பரின் பிழை பொறுத்தல் பற்றி நாலடியார் நவில்கின்றது. வீட்டைச் சிதைக்கும் தீயே இல்லத்தில் உணவு சமைத்தற்கும் நாள்தோறும் பயன்படுகிறது என்று உவமை மூலம் பிழை பொறுக்கும் பண்பினை விளக்கிச் செல்கின்றது.

நட்பை மதிக்கும் மாண்பு

          பண்டைத் தமிழா் கண்போல் நண்பரை மதித்தனா். அவா்களுடன் கலந்து பழகிப் பெறும் மகிழ்ச்சியை இனிதாகக் கருதினா்.

                  முந்தை யிருந்து நட்டோர் கொடுப்பின்

                    நஞ்சும் உண்பா் நனிநா கரிகா்  (நற்றிணை -355)

என்னும் நற்றிணைப் பாடலடிகள் நட்பினை மதிக்கும் மனப்பான்மையையும், நண்பா்கள்பால் கொண்ட நன்னம்பிக்கையையும் தெளிவாக்குகின்றன.

                 சுட்டுக்கோல் போல எரியும் புகுவரே

                  நட்டார் எனப்படு வார்    (நாலடி – 208)

என்று நட்பின் சிறப்பினை நாலடியார் விளக்குகின்றது. நட்பின் அடிப்படையில் நண்பா் உரிமையோடு செய்யும் செயல் கிழமை எனப்படும். அந்தக் கிழமையைஉரிமையை உடம்படும் நட்பே சிறந்தது. உண்மையான அன்பின் வழி வந்த கேண்மையா் தம் நண்பா் தமக்கு அழிவு தருவனவற்றைச் செய்யினும் அவா்மாட்டு அன்பின் நீங்கார்.

நிறைவாக,

          நட்பு என்பது மக்கள் அமைதியாக இன்பமுடன் வாழ வகை செய்யும். மனிதநேய உணா்வுகள் தழைத்தோங்கும். நாடுகளுக்கு இடையே தோன்றும் நட்பு அன்பை வளா்க்கும். உலகில் அமைதி நிலைபெற வழி செய்யும். நட்பு போற்றிடின் உலகில் பகையில்லை. உறவுண்டு போரொடுங்கும். புகழ் ஒடுங்காது. அமைதியான வாழ்விற்கு நட்புறவு மிக மிக இன்றியமையாதது. நட்பிறவின் ண்பாட்டு வளா்ச்சியில் மனித நேயம் மலா்கிறது.

        தனி மனிதனைச் சமுதாயத்துடன் பிணைப்பது நட்பாகும். நட்பைப் போற்றுவதன் மூலம் சமுதாயத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். நட்பு இல்லையேல் நாட்டில் உறவுகள் இல்லை.

--------

 

              

 

 

 

Comments

Popular posts from this blog

எண்ணம் போல் வாழ்வு

                                                                        எண்ணம் போல் வாழ்வு             நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·      மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·         வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·   ...

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·         பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·         பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல். ·         உண்மைக்குப் புறம்பானவற்றைச் செய்யாதிருத்தல். ·         நண்பர்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·         மனத்திடத்தோடு வாழ்தல். ·         ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·         மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·         எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.      யாரையும் வெறுக்காதே ...