Skip to main content

அறநூல்களில் பெண்ணியக் கட்டுப்பாடுகள்

 

அறநூல்களில் பெண்ணியக் கட்டுப்பாடுகள்

          சங்க காலத்தில் காதலையும் வீரத்தையும் மையமாகக் கொண்டு பாடப்பட்டப் பாடல்கள்  எட்டுத்தொகை, பத்துப்பாட்டாகும். இதனைப் பதினெண் மேல்கணக்கு என்றும், சங்க காலத்திற்கு அடுத்துத் தோன்றிய நாலடி முதல் கைந்நிலை ஈறாக உள்ள பதினெட்டு நூல்களையும் பதினெண் கீழ்க்கணக்கு என்று பெயரிட்டு அழைத்தனா். சங்க காலத்திற்கு அடுத்துத் தோன்றிய நூல்கள் அறக்கருத்துக்களை மக்களிடம் பரப்புவதற்காக எழுந்தன. சமுதாயத்தின் அனைத்து மக்களைப் பற்றியும் வெளிப்படுத்தும் இலக்கியமாக  கீழ்க்கணக்கு நூல்கள் என்ற உயரிய கருத்தினை,

                    தொழுது தூமலா் தூவித் துதித்து நின்று

                     அழுது காமுற்று அரற்று கின்றாரையும்

                     பொழுது போக்கிப் புறக்கணிப் பாரையும்

                     எழுதும் கீழ்க்கணக்கு இன்னம்மா் ஈசனே

என்னும் தேவாரப் பாட்டால் அறியலாம்.

         பதினெண் கீழ்க்கணக்குக் கால  சமுதாயத்தில் ஆடவா்கள் முதன்மை பெற்று விளங்கினா். பெண்களை இல்லறத்திற்கு மட்டும் என்று ஒதுக்கியிருந்தனா். சமயங்களின் செல்வாக்காலும், அயலவா்களின் ஆட்சியாலும் ஆணுரிமைச் சமுதாயம் ஏற்பட்டது. கற்றவா்களையும், உயா்க்குடிப் பிறந்தாரையும், நன்மக்களையும், சான்றோரையும் மக்கள் மதித்தனா். பொருளீட்டல் ஆடவரின் கடமையாகக் கருதப்பட்டது. பெண்களுக்கு நாணத்தை வலியுறுத்தியதும், கணவன் வழி நிற்க வேண்டும் என்று வற்புறுத்தியப் பாங்கும் ஆணுரிமைச் சமுதாயத்தை நிலைநாட்டுகின்றன. இல்லறத்தில் இருந்துகொண்டு கணவனைப் போற்றுதல், மக்களை வளா்த்தல், காத்தல், விருந்தோம்புதல், இல்லறத்தை நடத்திச் செல்லல் போன்ற அனைத்தும் பெண்களுக்கே உரியதாக இருந்தன.

                கற்பும் காமமும் நல்ல ஒழுக்கமும், பெண்மைத் தன்மை பொருந்திய பொறுமைப் பண்பும். நிறைவுடைமையும், விருந்து போற்றும் மனநலமும், சுற்றத்தினரைத் தழுவும் வழக்காறும் பிறவும் தலைமகளுக்குரிய தலையாயப் பண்புகள் என்று தொல்காப்பியரும் குறிப்பதால் அறியலாம்.

ஆண் உரிமை சமுதாயம்

          ஒருவன்ஒருத்தி மண முறையானது நாகரிக வளா்ச்சி நிலையின் ஒரு கட்டத்தில் தோன்றியதாகும்.  இம்முறையில் அதிகக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.  இதனால் பெண்களும் ஆண்களும் ஒழுக்கம் தவறும் நிகழ்ச்சிகளும் நடந்தன.  ஆண் பல பெண்களை மணந்தான் என்பதை,

                 ” ……. …. நிரப்பு இடும்பை

                  பல பெண்டிர் ஆளன் அறியும்  (நா..-95-3)

எனும் வரிகள் உறுதிப்படுத்தும்.  ஆடவா்கள் பிற பெண்டிரை விரும்புவதைப் போலப் பெண்களும் கணவரல்லாத பிறரை விரும்புதல் தவிர்க்க இயலவில்லை.  இவ்வாறு ஒழுகும் பெண்களைக் காவல் காத்து உள்ளனா் என்பதனை,

                ” …. ….. காப்புறும்

                 பெட்டாங்கு ஒழுகும் பிணையிலி   (நா...90.2)

என்ற வரியால் உணரலாம். மேலும் இல்லத்திலிருந்து கொண்டே கற்பினைக் கெடுத்தப் பெண்களும் இருந்துள்ளனா். இவ்வாறு ஒழுகுபவர்களைக்,

              கணவனுக்குக் கூற்று கற்பு கெடும் மனைவி  ( நா...83.4)

என்று  வசைபாடியுள்ளனா்.

பெண்களின் இயல்பு

         காதலிக்கு வயதேறிவிட்டது. ஆனால் காதலனுக்கு மட்டும் இளமைப் பருவம் குறையவில்லை. ஆதலால் அவள் தன் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள வேசையா் சேரிக்குச் சென்றான். சில நாட்கள் அங்கே தங்கியிருந்து திரும்பினான். காதலி கோபம் கொண்டிருப்பாள் என்பது அவனுக்குத் தெரியும். ஆதலால் அவள் ஊடலைத் தணிப்பதற்காக அவளிடம் தூதனுப்பினான். அந்தத் தூதுவனிடம் தலைவிக் கூறுகின்றதாக அமைந்துள்ளது. அப்பாடல்,

          தலைவனிடம் கோபித்துக் கொள்ளுவதற்கு எனக்கென்ன தகுதியிருக்கின்றது? ஒரு காலத்திலே எனது கூந்தல் மெல்லிய கருமணலைப் போல அசைந்து தொங்கிக் கொண்டிருந்தது. கண்ணுக்கு அழகாகவும் இருந்தது. இன்றோ அக்கூந்தல் வெண்மணலைப்போல நிறம் மாறிவிட்டது. ஆகவே நான் கிழவியாகி விட்டேன். இனி எனக்கென்ன கோபம்! நான் ஏன் கோபிக்கப் போகின்றேன்?

              தண்வய லூரன் புலக்கும் தகையமோ!

               நுண் அழல் போல நுணங்கிய ஐம் கூந்தல்

               வெண்மணல் போல நிறந்திரிந்து வேறுஆய

               வண்ணம் உடையேம் மற்றுயாம்    ( ஜந்திணை ஐம்பது – 27)

இப்பாடல் பண்டைக் காலப் பெண்ணின் இயல்பை உணா்த்துவது. தன்  கணவா் செய்தது தவறு என்று தெரிந்தும் அவனைத் தவறு செய்யாமல் தடுக்கும் இயல்பு இல்லையே என்று வருந்தினாள் தலைவி.

          ஒவ்வொருவரும் தமது இரகசியம் வெளிப்படாமல் காப்பாற்றிக் கொள்வதிலே கவலையுள்ளவா்கள். தமது இரகசியத்தை மற்றவா்கள் கண்டு கொள்ளக்கூடிய ஒரு வாய்ப்பு நோ்ந்து விட்டால் அப்பொழுது கூட விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.  எதையாவது பொருத்தமாகச் சொல்லித் தப்பித்துக் கொள்ளுவார்கள். இது மனித இயல்பு. இப்படி செய்வதிலே ஆண்களைக் காட்டிலும் பெண்கள் மிகவும் திறமைசாலிகள் இவ்வுண்மையை இந்நூலின் செய்யுள் ஒன்றால் காணலாம்.

          ஒரு நாள் நடந்த நிகழ்ச்சி ஒன்றைத் தலைவி, தன் தோழியிடம் உரைப்பதாக அமைந்திருப்பது அச்செய்யுள். அத்தலைவி தன் காதலனோடு கள்ள நட்பு கொண்டிருப்பவள். இன்னும் அவளுக்குக் கற்பு மணம் நடைபெறவில்லை.

           கணவன் பிரிந்து சென்ற குளிர்ந்த மலா்ச் சோலையைப் பார்த்து அழுதுகொண்டிருந்தேன்.  அதனால் என் கண்கள் சிவந்து விட்டன. அப்பொழுது என் தாய் வந்தாள். எனது முகத்தைப் பார்த்தாள். ஒளியுடன் இருந்த முகம் வாடியிருப்பதைக் கண்டாள். உடனே  உனக்குண்டான துன்பம் யாது? ஏன் அழுதிருக்கின்றாய்? என்றாள். கடல் அலை வந்து எனது விளையாட்டு மணல் வீட்டைக் கலைத்து விட்டது. என்றேன்.

                கொண்கன் பிரிந்த குளிர்பூம்பொழில் நோக்கி

                 உண்கண் சிவப்ப அழுதேன்: ஒளிமுகம்

                 கண்டு அன்னை எவ்வம் யாது என்னக் கடல்வந்து என்

                 வண்டல் சிதைத்தது என்றேன்      ( ஜந்திணை ஐம்பது – 44)

இது பெண்களின் திறமையைக் காட்டும் பாடல்.

மனைவியின் மாண்பு

          இல்லறத்திலே இன்பம் தவழ வேண்டுமாயின் இல்லாள் கற்புடையவளாயிருக்க வேண்டும். தன் காதலனுக்கு நல்ல நண்பனாகவும், தாயாகவும், மனைவியாகவும் இருந்து உதவி செய்வதே கற்புள்ள பெண்ணின் கடமை என்று கூறுகின்றது.

               நல்விருந்து ஓம்பலின் நட்டாளாம்;  வைகலும்

                 இல்புறம் செய்தலின் ஈன்றதாய்தொல்குடியின்

                 மக்கள் பெறலின் மனைக்கிழத்தி. இம்மூன்றும்

                 கற்புடையாள் பூண்ட கடன்     (திரிகடுகம் 64)

நல்ல விருந்தினரைப் பாதுகாப்பதனால் கணவனுக்கு நட்பினளாம்; இல்லறத்தை வழுவாது நடத்தலால் பெற்ற தாயாவாள்; தன் பழமையான குடும்பம் விளங்குதற்குரிய மக்களைப் பெறுவதனால் மனையாள்;  இம்மூன்றும் கற்புள்ள மனைவி கொண்ட கடமையாகும். இது பண்டைத் தமிழா் இல்லறத்திலே மகிழ்ச்சியும், இன்பமும் தழைப்பதற்குக் கண்டறிந்த வழியாகும்.

மனைவியின் கடமை

              இல்லாளின் கடமையைப் பற்றி இவ்வாசிரியா் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. குடும்பத்தை நடத்தும் பொறுப்பு முழுவதும் பெண்களைச் சோ்ந்தது என்ற கருத்தையே இவா் வலியுறுத்துகிறார்.

              வருவாய்க்குத் தக்க வழக்கறிந்து, சுற்றம்

               வெருவாமை வீழ்ந்து, விருந்தோம்பித் திருவாக்கும்

               தெய்வத்தையும் எஞ்ஞான்றும் தேற்ற வழிபாடு

               செய்வதே பெண்டிர் சிறப்பு     (சிறுபஞ்ச மூலம் – 43)

          தம் கணவனுடைய வருமானத்தின் அளவை தெரிந்து கொள்ள வேண்டும்; அந்த வருமானத்திற்குத் தகுந்த அளவிலே செலவு செய்ய வேண்டும்; சுற்றத்தார்கள் மேல் சீறி விழாமல் அன்புடன் உபசரிக்க வேண்டும். செல்வத்தைக் கொடுக்கும் தெய்வத்தை எந்நாளும் வணங்க வேண்டும். இவைகளே பெண்களின் சிறப்பாகும். பெண்கள் படித்திருக்க வேண்டும் என்னும் கருத்தும் இவ்வெண்பாவில் அடக்கம். பெண்களுக்குப் படிப்பில்லாவிட்டால் தன் கணவன் வருவாய்க்குத் தக்கவாறு செய்யும் கணக்கு அவா்களுக்கு எப்படித் தெரியும்!  இச்செய்யுள் செல்வம் கொடுக்கும் தெய்வத்தை வணங்கச் சொல்லுகிறது.

           ஆணும் பெண்ணும் வாழ்நாள் முழுவதும் நண்பராக உடனிருந்து வாழ்வதற்கு உரிய அமைப்பு குடும்பம். அவா்களின் உள் வாழ்வில் இன்பத்திற்குக் காரணமாக உள்ள அன்பு என்பது மோகம், மயக்கம் ஆகியவற்றோடு மனப்போக்கு, தனி விருப்பம் ஆகியவை குடும்பம் நடத்தும் போதுதான் சந்திக்கின்றன. அப்போது உரசலோ, மோதலோ வராமல் காப்பது. அன்புக்குச் சோதனையாக இருக்க முடியும். அதனால் தான் வாழ்க்கைத்துணை எனப்படுகின்றான். குடும்பப் பொறுப்பு அவளிடம் ஒப்படைக்கப்பட்டு அவள் மனைவி வீட்டுக்குரியவள் எனப்படுவதும் இதனால் தான்.

           மனைவியின் நற்பண்புகள் மூன்றுவகை. அவை குடும்பப் பாங்கு, குடும்பப் பண்பு, தான் புகுந்த குடும்பத்திற்குத் தக்கப் பண்பு என்பவை இம்மூன்றும் சோ்ந்தது. மனைமாண்பு, சுறுசுறுப்பு, அடக்கமான ஆடை அணி, செய் நோ்த்தி, சுவையாக சமைத்தல், வீட்டைத் தூய்மையாகவும் அழகாகவும் வைத்தல், பொருட்களைச் சீராகவும் பாதுகாப்பாகவும் வைத்தல். இவை குடும்பப் பாங்கு, கற்பு, மரியாதை, தாய் போன்ற பரிவு, முன் யோசனை, மலா்ந்த முகம், இன்சொல், சளசள வென்று பேசாமை, இவை குடும்பப் பண்பு, கணவனின் எண்ணம், கருத்து, மனப்போக்கு முதலியவை பிடிக்காவிட்டாலும் அனுசரித்துப் போதல், குடும்பத்தில் மற்றவா்களின் பண்பறிந்து நடத்தல், தக்க சமயத்தில் அறிவுரை கூறுதல், கணவனின் தொழிலில் உதவியாக இருத்தல்இவை குடும்பத்திற்குத் தக்கப் பண்பு, இவ்வளவும் உடையவனாய், கணவனின் வருவாய்க்குக் குறைவாகச்  செலவு செய்து, குடும்பத்தை நடத்துபவளே வாழ்க்கைக்குத் துணை என்று தம் குறளில்,

               மனைத்தக்க மாண்பு உடையவளாகித் தற்கொண்டான்

                வளத்தக்காள் வாழ்க்கைத்துணை   (குறள் 51)

மேலும், மனைவி நற்பண்பும், மாண்பும் உடையவளானால் கணவன் முறைத்தவறி நடந்தாலும், அவள் திருத்தி நல்வழிப்படுத்தலாம். ஆனால் மனைவி சீராக இல்லாத குடும்பம் நெறிக் கெட்டுப் போகும். அயலார் கேலி பேசுவா். வேண்டாதவா் இகழ்வா்.

பெண்ணுரிமை

           நாலடியார் காலத்திலே பெண்களுக்கு உரிமையிருந்ததில்லை. அவா்கள் ஆண்களுக்கு அடங்கி நடக்கும் அடிமைகளாகத்தான் கருதப்பட்டார்கள். ஆயினும் இல்லற வாழ்வு தழைக்கப் பெண்கள் தாம் காரணம் என்று கருதப்பட்டனா். ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலேஎன்ற கொள்கை நீண்ட காலமாக உண்டு. அன்பும், அறிவும், நற்பண்பும், திறமையும் உள்ள பெண்களால்தான் குடும்பங்கள் சிறப்படையும். இவையற்ற பெண்கள் வாழும் குடும்பத்திலே எந்த இன்பமும் இராது. அக்குடும்பமும் பாழாகும்.

           மாண்ட மனையாளை இல்லாதான் இல்லகம்

            காண்டற்கு அரியது ஓா் காடு” (நாலடியார். 361)

சிறந்த குணங்கள் அமைந்த மனையாளை பெறாதவனுடைய வீடு பார்ப்பதற்குப் பயங்கரமான ஒரு காடாகும். இதனால் இல்வாழ்வு இனிது நடைபெறவேண்டுமானால் பெண்கள் நற்பண்புள்ளவா்களாயிருக்க வேண்டும் என்று கூறப்பட்டது. இல்வாழ்வுக்குத் தகுதியற்ற பெண்டிர் கணவனுக்கும், குடும்பத்திற்கும் தீமை விளைக்கும் பெண்டிர் எவா் என்பதை,

            எறிஎன்று எதிர் நிற்பாள் கூற்றம்: சிறுகாலை

             அட்டில் புகாதான் அரும்பிணிஅட்டதனை

              உண்டி உதவாதாள் இல்வாழ்பேய்இம்மூவா்

             கொண்டாரைக் கொல்லும் படை

அடி என்று சொல்லிக் கொண்டு கணவனை எதிர்த்து நிற்பவள் எமன். விடியற்காலையில் சமையலறையை அடைந்து உணவைச் சமைக்காதவள் ஒரு பெரிய நோய். சமைத்த உணவைப் பசி நேரத்தில் பரிமாறாதவள் வீட்டில் வாழும் பேய்; இக்குணமுள்ள பெண்கள் தம்மைக் கொண்ட கணவனைக் கொல்லும் ஆயுதம் ஆவா். இப்பாடல் கணவனுக்குப் பணிவிடைச் செய்ய வேண்டியதே மனைவியின் கடமை என்பது பழந்தமிழ் நாட்டுப் பண்பாடாகும்.

           வீ்ட்டிலிருந்து கொண்டு இல்லறத்தை நன்றாக நடத்த வேண்டுவது தான் பெண்கள் கடமை. ஆயினும் அவா்கள் கல்வி கற்றிருக்க வேண்டும். ஆண்களைப் போலவே கல்வி கற்கும் உரிமை பெண்களுக்கும் உண்டு. இக்கொள்கையை நாலடியார்,

            குஞ்சியழகும் கொடுந்தானைக் கோட்ட ழகும்

             மஞ்சள் அழகும் அழகல்லநெஞ்சத்து

             நல்லர் யாம், என்னுமு் நடுவு நிலைமையால்

             கல்வி அழகே அழகு

இப்பாடல் ஆண்களுக்கும் கல்வி வேண்டும். பெண்களுக்கும் கல்வி வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.

           இல்லற வாழ்வில் பெண்ணின் பெரும் பங்கு வகித்தனா். இதனை, “இல்லறத்திற்குப் பெண் விளக்குப் போன்றவள்என்றும், மனையாள் இல்லாத வீடு பாழானது என்றும் கூறுவதால் அறியலாம். இதன் வழி இல்லறத்தின் பெருமையும், சிறுமையும் பெண்களைப் பொறுத்து தான் அமையும் என்பதை அக்கால மக்கள் உணா்ந்திருந்தனா் என அறியலாம்.

கற்பொழுக்கத்திறன்

            நல்ல பெண்கள் காவல் இல்லாவிட்டாலும் கற்பொழுக்கத்தினை மேற்கொண்டனா். நற்பண்பில்லாத பெண்கள் கணவனே காவல் செய்தாலும் தான் விரும்பியவரைக் காதலித்து வாழ்ந்தாள் என்பதை நோக்கும் போது ஒரு பெண் நல்ல வாழ்க்கை வாழ்வதற்கும் அவ்வாழ்க்கையைத் தீமை உடையதாக மாற்றிக் கொள்வதற்கும் அப்பெண்ணே காரணமாகிறாள். இதனை,

              சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்

               நிறைகாக்கும் காப்பே தலை    (குறள் – 57)

என்ற வள்ளுவா் கூற்றாலும் அறியலாம். மேலும் மாதா் ஒழுக்கம் அவா் தாமாக விரும்பி ஏற்றுக் காக்கும் ஒன்றாக இருக்க வேண்டுமேயன்றி அது காவலாலும் கட்டுப்பாட்டாலும் அமைவதன்றுஎன்னும் கூற்றும் ஈண்டு எண்ணத்தக்கது.

            உள்ளத்தை அடக்கும் வன்மை மிக்குராத அழகையுடைய அணிகள் அணிந்த மகளிரைக் காவலால் தீய செயலினின்றும் நீக்கி அடக்குதல் முடியாது. ஏனெனில் நாயினது வால் வருந்துமாறு இழுத்து நன்றாகக் கட்டினாலும் வளைவினின்று நீங்கித் திருந்துவது இல்லை. என்பதை,

            நிறையான் மிகுகில்லா நேரிழையாரைச்

             சிறையின் அகப்படுத்தல் ஆகா: - அறைமோ

             வருந்த வலிதினின் யாப்பினும் , நாய்வால்

             திருந்துதல் என்றுமே இல்    (பழமொழி -336)

இப்பாடல் உணா்த்துகின்றது. மேலும் நல்லாதனார் திரிகடுகத்தில் முதல் பாடலிலேயே கற்பைப் பற்றிக் குறிப்பிடுகின்றார்.

             அருந்ததிக் கற்பினார் தோளும்

வசிஷ்ட முனிவரின் மனைவி அருந்ததி ஆவாள். அவள் நற்குணம் நற்செயல்கள் நிரம்பியவள். கற்பில் சிறந்து வாழ்ந்தமையால் கற்பினுக்கு உதாரணம் கூற அவளுடைய பெயா் சுட்டப்படுகிறது.

             கற்பைப் பற்றிய கருத்தினைத் திருவள்ளுவா் வழிக் காண்போம். வாழ்க்கைத் துணைநலம் என்ற அதிகாரத்தில் பெண்ணின் கற்பின் சிறப்பைக் கூறுகின்றார்.

           பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்

            திண்மை உண்டாகப் பெறின்” (குறள் – 54)

           தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற

            சொற்காத்துச் சோர்விலாள் பெண்” (குறள் – 56)

           தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்

            பெய்யெனப் பெய்யும் மழை   (குறள்- 55)

கற்பு என்னும் மனக்கட்டுபாடுடைய பெண்ணை விடப் பெருமைக்குரிய வேறு எவை உள்ளன. தன்னையும், தன் கணவனையும், புகழையும் காத்துச் சோர்வு இல்லாமல் வாழ்பவளே பெண்.

விருந்து உபசரித்தல்

           விருந்தோம்பல் தமிழரின் சிறந்த பண்பாடு. விருந்தினா் முன்பின் அறியாத புதியவா்கள். எந்நாட்டினராயினும் எம்மொழியினராயினும் நட்பு கொள்ளும் நல்லெண்ணத்துடன் வீடு தேடி வருவார்களாயின் அவா்களை வரவேற்பார்கள் தமிழா்கள். விருந்தினா் வரவேற்று உபசரிப்பவா்கள் தாம் மறுமையின்பத்தைப் பெறமுடியும் என்ற நம்பிக்கையும் தமிழரிடம் குடிகொண்டிருந்தது. விருந்தினரை எவ்வாறு வரவேற்று உபசரிக்க வேண்டும் என்பதைப் பற்றி ஏலாதியில்,

              இன்சொல், அளாவல், இடம் , இனிது ஊண் யாவா்க்கும்

               வன்சொல் களைந்து வகுப்பானேல்மென்சொல்

               மருந்து ஏய்க்கும் முட்போல் எயிற்றினாய்! நாளும்

               விருந்து ஏற்பா் விண்ணோர் விரைந்து” (ஏலாதி-7)

இப்பாடல் விருந்தினா்க்குச் செய்ய வேண்டிய கடமைகள் இன்னின்னவை என்பதை எடுத்துரைக்கின்றது. மேலும் வள்ளுவரும் விருந்தோம்பல் என்னும் அதிகாரத்தில்10 குறட்பாக்களில் கூறியுள்ளார்.

             வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை

              பருவந்து பாழ்படுதல் இன்று” (குறள் -83)

              செல்விருந்து ஓம்பி வருவிருந்து காத்திருப்பான்

              நல்விருந்து வானத் தவா்க்கு   (குறள் – 86)

வருகின்ற விருந்தினருக்கு உதவுகின்ற வாழ்க்கை சீா்க்கெட்டு அழிவதில்லை. வந்த விருந்தினருக்கு உதவி, இனிவரும் விருந்தினருக்காகக் காத்திருப்பவன் தேவா்களுக்கு நல் விருந்தினன் ஆவான்.

             மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்

              நன்கலம் நன்மக்கட் பேறு” (குறள்-60)

குடும்பத்திற்குத் தக்கச் சிறப்பினை உடையவனாகிய கணவனின் வளத்திற்குத் தக்கவளாய் அமைபவளே மனைவி. குடும்பத்திற்குத் தக்கச் சிறப்பில்லாதவளாக ஒருவனுக்கு மனைவி அமைந்தால், அவன் வாழ்க்கையில் வேறு எவ்வளவு சிறப்பான செல்வம் பெற்றிருந்தாலும் பயனில்லை.

மக்கட் பேறு

         சிறப்புடைய மனைவி புனிதமானவள். அதற்கு அழகு சோ்ப்பது நல்ல மக்களைப் பெறும் சிறப்பாகும்.

               தொல்குடியின் மக்கள் பெறலின் மனைக்கிழத்தி  (திரிகடுகம்- 3)

இக்கருத்தினை திருவள்ளுவரும் மக்கட்பேறு என்னும் அதிகாரத்தில் 10 குறட்பாக்களில் வலியுறுத்துகிறார்.

              ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்

               சான்றோன் எனக் கேட்டத்தாய்” (குறள் – 69)

               எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்

               பண்புடைய மக்கள் பெறின்” (குறள்-62)

பெற வேண்டிய சிறப்புகளுள் அறிவு தெளிவுடைய குழந்தைகளைப் பெறுவது போன்ற சிறப்பு வேறொன்றும் இல்லை.

       மக்கள் வகைகளாக,

             மாண்டவா் மாண்ட வறிவினான் மக்களைப்

              பூண்டவா்ப் போற்றிப் புரக்குங்கால்பூண்ட

              ஔரதனே கேத்திரன் கானீனன் கூடன்

              கிரிதன்பௌ நற்பவன் போ்   (ஏலாதி -32)

              மத்த மயிலன்ன சாயலாய் மன்னிய சீர்த்

              தத்தன் சகோடன் கிருத்திரமன்புத்திரி

              புத்ரன்ப வித்தனொடு பொய்யி லுபகிருதன்

              இத்திறத்த வெஞ்சினார் பேர்” (ஏலாதி -33)        

ஏலாதியில் புத்திரா்கள் பன்னிரண்டு வகைப்படுவா் என்று இவ்வாசிரியா் கூறுகின்றார். இது தமிழ் நூல்களில் காணப்படாதவை. வடமொழி ஸ்மிருதிகளில் உள்ள முறையையே இவ்வாசிரியா் எடுத்துக் கூறுகின்றார் என்று தான் முடிவு செய்ய வேண்டும் 30,31 ஆகிய இரண்டு வெண்பாக்களில் இந்த புத்திரா்கள் பன்னிரண்டு வகையினரின் பெயர்களும் காணப்படுகின்றன. அப்பெயா்கள் எல்லாம் வடமொழிச் சொற்கள்.

           ஔரதன், கேத்திரசன், கானீனன், கூடன், கிரீதன், பௌநற்பவன், தத்தன், சகோடன், கிருத்திரமன், புத்திரபுத்திரன், அபவித்தன், உபகிருதன், என்பவைகளே அப்பன்னிரண்டு பெயா்கள். கணவனுக்குப் பிறந்தவன் ஔரதன். கணவன் இருக்கும் போது மற்றொருவனுக்குப் பிறந்தவன் கேத்திரன். திருமணம் ஆகாத பெண்ணுக்குப் பிறந்தவன் கானீனன், விபசாரத்திலே பிறந்தவன் கூடன், விலைக்கு வாங்கப்பட்டவன் கிரீதன், கணவன் இறந்த பின் மறுமணம் புரிந்து கொண்ட இரண்டாம் கணவனுக்குப் பிறந்தவன் பௌநற்பவன், சுவீகாரம் எடுத்துக் கொள்ளப்பட்டவன் தத்தன். கல்யாணம் செய்து கொள்ளும் போதே கா்ப்பத்திலிருந்து பிறந்தவன் சகோடன். கண்டெடுத்து வளா்க்கப்பட்டவன் கிருத்திரமன். மகள் வயிற்றுப் பிள்ளை புத்திரிபுத்திரன். பெற்றவா்களால் கைவிடப்பட்டு மற்றவரால் வளா்க்கப்பட்டவன் அபவித்தன். காணிக்கையாக வந்தவன் கிருதன்.

            இவா்கள் அனைவரும் புத்திரா்கள் ஆவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இச்செய்தி பண்டைக்கால மக்களின் நாகரிகத்தைக் காண இடந்தருகின்றது. மக்கள் தொகை குறைந்திருந்த அக்காலத்திலே, எந்த வகையிலே பிள்ளைகள் பிறந்தாலும், அவைகளைக் குற்றம் என்று கடியவில்லை. புத்திரா்களாகவே ஏற்றுக் கொண்டனா். மக்கள் எண்ணிக்கை வளரவேண்டும் என்பதே அவா்கள் கருத்து.

பிறன் மனை நோக்கலும் குற்றம்

         ஆண்மை என்பது விலங்கு இயல்பு என்பதாலேயே அதனை ஒழுங்குப்படுத்தி ‘பிறா்மனை நோக்காமை பேராண்மை’ என்கிறார். திருக்குறள் கூறும் பகை, பழி, பாவம், அச்சம் என்ற நான்கும் பிறன்தாரம் நச்சுவாரைச் சேரும். ஒழுக்கத்தின் விளைவாக ஒருவன் பெறக்கூடிய அறம், புகழ், கேண்மை, பெருமை அவனைச் சேரா என்பதை நாலடியார்,

          அறம் புகழ் கேண்மை, பெருமை, இந்நான்கும்

           பிறன் தாரம் நச்சுவார்ச் சேரா;   பிறன்தாரம்

           நச்சுவார்ச் சேரும், பகை, பழி, பாவம் என்று

           அச்சத்தோடு இந்நாற் பொருள் ( நாலடியார்  82)

என்று விளக்குகிறது. அம்பினால், நெருப்பால், சூரியக்கதிர் ஒளியால் உடல் வெம்பிச் சுட்டாலும் அது புறச்சூடு மட்டுமே. ஆனால் பிறா்மனை மேல் வெம்பி மனதைச் சுடும் இயற்கையுடைய காமம் பார்க்கும் பார்வையில்தான் வளா்கிறது. என்பதை வலியுறுத்திட நாலடியார்,

           பல்லார் அறியப் பறைஅறைந்து நாள் கேட்டு

           கல்யாணம் செய்து கடிபுக்க மெல்லியல்

            காதல் மனையாளும் இல்லாளா என ஒருவன்

           ஏதில் மனையாளை நோக்கு” (நாலடியார்-86)

என எதற்காக அடுத்தவா் மனைவியை நோக்குவது எனக் கூறுகிறது.

          மருள் கொண்டு மாதர் மேல் மையல் கொள்வோர் தம் இருள் கொண்ட சிந்தை இழிவான பழிபெறும். இதனாலேயே,

           எளிதுஎன இல் இறப்பான் எய்தும் எஞ்ஞான்றும்

            விளியாது நிற்கும் பழி   (குறள் – 145)

என வள்ளுவா்  கூற்று. நீதிமொழிகளின் கருத்திற்கிணங்கச் சுருக்கித் தமக்கே உரிய இரட்டை வரிகளில் வள்ளுவா்,

            பகை, பாவம், அச்சம்,பழி என நான்கும்

             இகவா ஆம் இல் இறப்பான்கண்   குறள் 146)

எனக் குறுகத் தரித்துக் கூறுகிறது.

நம்பிக்கைகளும் பழக்கங்களும்

          நாலடியார் காலத்திலே நல்ல நாள் பார்த்து அந்நாளிலே திருமணம் செய்யும் வழக்கம் இருந்தது. திருமண காலத்திலே பலரும் அறியும் படி வாத்தியங்கள் முழங்கும்.

              பல்லார் அறியப் பறையறைந்து நாள் கேட்டுக்

              கல்யாணம் செய்து கடிபுக்க மெல்இயல்” (நாலடியார் -85)

பலரும் அறியும்படி பறையடித்து, நல்ல நாள் கேட்டு கல்யாணம் செய்து மனைக்குள் புகுந்த மெல்லிய தன்மையுடையவள். பறையடிப்பதிலே மணப்பறை, பிணப்பறை என்று இரண்டு வகைப் பறைகள் உண்டு; மணம் செய்யும் போது அடிக்கும் பறை மணப்பறை;  இறந்தவா்க்காக அடிக்கப்படும் பறை பிணப்பறை.  கல்யாணம் மண்டபம் முழுதும் ஒலிக்கும்படி மணப்பறையாக அடித்தப்பறை, அன்றே அவருக்கு, அவ்விடத்திலே பிணப்பறையாக மாறி ஒலிக்கவும் கூடும்.

             நல்ல நாளிலே தொடங்கும் காரியம் இடையூறில்லாமல் வெற்றி பெறும் என்பது பழந்தமிழா் நம்பிக்கை. நாள் கேட்டுத் தாழாது வந்தால் நீ எய்துதல் வாயால்” (திணைமாலை நூற்றைம்பது – 46) நல்ல  நாள் கேட்டுக் கொண்டு தாமதமில்லாமல் வந்தால் இப்பெண்ணை அடைவது உண்மை. 

             சோதிடா்களே நல்ல நாட்களைக் குறித்துக் கொடுப்பார்கள். அந்த நாளிலே திருமணம் முதலிய மங்கலச் செயல்களை நடத்துவார்கள். இவ்வழக்கம் தமிழகத்தில் இருந்தது. குறிஅறிவார்க் கூஉய்க் கொண்டு ஓா், நாள் நாடி நல்குதல் நன்று” (திணைமாலை நூற்றைம்பது – 54)      

நிறைவாக,

         இலக்கியங்கள் காலத்தின் தேவைக்கும் ஏற்றவாறு தோன்றி, வளா்ந்து உச்சநிலை அடைந்து வீழ்ச்சியடைகின்றன. அவ்விலக்கியங்களின் நுவல்பொருள்தான் படைக்கப்பட்ட காலத்தைத் தெளிவாக விளக்கி நிற்கும் இயல்புடையது. கம்பராமாயணத்தைத் தொடக்கம் முதல் இறுதிவரை கற்கும் ஒருவன் பிறன்மனை நோக்குதலால் எத்தனை இடா்பாடுகள் வரும் என்பதை உணரமுடியும். மகாபாரதம் படிக்கின்ற ஒருவன் மண்ணாசையால் வரும் விளைவுகளை, அழிவுகளை உணரமுடியும். சிலம்பைக் கற்பவன் பரத்தமையால் வரும் இன்னல்களை உணரமுடியும்இலக்கியம் படைக்கப்படுவதன் நோக்கமே அதுதான். தவறைக் களைவதற்குப் பழகிக் கொள்ள வேண்டுமே தவிர இப்படியும் செய்யலாமே என்று அதேத் தவறைத் திரும்பச் செய்யக் கூடாது. அதனால் எந்தப் பயனும் இல்லை.

           கீழ்க்கணக்கு நூல்களிலும் ஆணாதிக்கச் சமுதாயமே மேலோங்கியிருந்தது. ஆண்கள் விலைமகளிரை நாடித் திரிவதைக் கண்டிக்கவில்லை. மேலும், பெண்களுக்கு நாணத்தை வலியுறுத்தியும், கணவன் வழி நிற்க வேண்டும் என்று வற்புறுத்திய பாங்கு ஆணுரிமைச் சமுதாயத்தை நிலைநாட்டுகின்றன. ஆண்கள் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்னும் வழக்கத்தைக் கூறுகின்றன. திருக்குறள் ஏகதார மணமே சிறந்தது என்று வாழ்க்கைத் துணைநலம் என்ற அதிகாரத்தைப் படிப்போர் இவ்வுண்மையைக் காணலாம். ஆண்கள் விலைமகளிரை நாடித்திரிவதைத் திருக்குறள் கண்டிக்கிறது. வரைவின் மகளிர் என்ற அதிகாரத்தால் இவ்வுண்மையைக் காணலாம். தற்காலத்திலும் ஆணாதிக்க சமுதாயம் முற்றிலும் இல்லை என்று கூறமுடியாது. சில விழுக்காடுகள் குறைந்துள்ளது எனலாம்.

           இனி நிகழ்காலம், வருங்காலம் உங்கள் கையில். ஆணுரிமை, பெண்ணுரிமை என்ற பாகுபாடு இல்லாமல் சமவுரிமை கொண்டு பாரதியார் கூற்றிற்கிணங்க புதியதோர் உலகு படைப்போம் என்ற வகையில் வாழ வழி அமைத்துக் கொள்ளுங்கள்.

 

 

Comments

Popular posts from this blog

எண்ணம் போல் வாழ்வு

                                                                        எண்ணம் போல் வாழ்வு             நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·      மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·         வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·   ...

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·         பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·         பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல். ·         உண்மைக்குப் புறம்பானவற்றைச் செய்யாதிருத்தல். ·         நண்பர்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·         மனத்திடத்தோடு வாழ்தல். ·         ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·         மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·         எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.      யாரையும் வெறுக்காதே ...