இலக்கியத்தில் மரக்கலங்கள்
‘திரை கடலோடியும் திரவியம் தேடு’ என்பதற்கேற்ப பழந்தமிழர் கடல் வாணிபத்தில் சிறப்புற்றுத் திரவியம் தேடுவதிலும்,
தம்முடைய நாகரிகத்தினைக் கடல் கடந்து பரப்புவதிலும் சிறப்புற்றுத் திகழ்ந்தனர். கடல்
கடந்து செல்வதற்கேற்பப் பலவிதமான மரக்கலங்களைக் கட்டுவதில் வல்லவர்களாகவும் கொண்டு
வந்த பொருட்களை இறக்குமதி, ஏற்றுமதி செய்வதற்கேற்பத் துறைமுகங்களை நிர்மாணிப்பதில்
வல்லுநர்களாகவும் திகழ்ந்தனர். மரக்கலங்களை அம்பி, புணை, திமில், கலம், நாவாய்,
பஃறி என்று பல வகைகளில் துறைமுகங்களுக்கேற்ப,
பயணத்திற்கேற்ப பயன்படுத்தி இருக்கின்றனர்.
அம்பி
அம்பி என்பது தெப்பம் –தோணி வகையைச் சார்ந்தது.
”நல்அரை முழுமுதல் அவ்வயின் தொடுத்த
தூங்கல்
அம்பித் தூவல்அம் சேர்ப்பின்” (நற் .
354:6-7)
கடற்கரைச் சோலையை
அடுத்தப் புன்னை மரத்தின் அடியில் அசையும் தோணியினைக் கட்டியிருப்பதை நற்றிணைச் சுட்டுகிறது.
அம்பி பெரும்பாலும் மீன் பிடிக்கும் தொழிலுக்குப்
பயன்பட்டது.
”வாள்வாய் சுறவின் பனித்துறை நீந்தி”
(அகம்.187:21-23)
போன்ற பாடல்வரிகள்
இதனை உறுதி செய்கின்றன. அம்பி என்பது பாய்மரம் இன்றிக் காணப்படும் சிறு தோணியாதலால்
கடலில் வெகுதொலைவு பயணிக்க வாய்ப்பில்லை. எனவே இவற்றைப் பெரும்பாலும் ஆற்றிலும், கடற்கரையோரப்
பகுதிகளிலும் மட்டும் மீனவர்கள் பயன்படுத்தி இருக்க வாய்ப்புண்டு.
திமில்
”திண்திமில் பரதவர் ஒண்சுடர்க் கொளீஇ”
(அகம்.388:9-10)
”நளிகடல் திரைச்சுரம் உழந்த திண்திமில்” (அகம்.240:3-5)
”வலம்புரி மூழ்கிய வான்திமில் பரதவர்”
(350:11)
எனும் வரிகள்
திமில் வகை மரக்கலங்கள் மீன் பிடிக்க மட்டுமன்றி முத்துக் குளிக்கவும் பயன்படுத்தியிருப்பர்
என்பதைப் புலப்படுத்துகின்றன. இதனைச் செலுத்துவதற்குச் சிறப்பு வாய்ந்த திமிலர்கள்
இருந்துள்ளனர். இவ்வகை மரக்கலங்கள் (தோணி, அம்பி, திமில்) தனித்தனி மரக்கட்டையைக் குடைந்து
உருவாக்கப் பெற்றவையாகும்.
புணை
தெப்பம் இவை மரத்துண்டுகளைக் கொண்டு கட்டப்பட்ட
கட்டுமரம் ஆகும். இது பெரிய கப்பலில் எடுத்துச் செல்லப்பட்டதைப் பெரும்பாணாற்றுப்படையும்,
உயிர் காக்கும் படகாக விளங்கியதைக் கலித்தொகையும் குறிக்கின்றன.
வங்கம், நாவாய்
வங்கம், நாவாய் ஆகியவை பாய்மரங்கள் கொண்ட மிகப் பெரிய மரக்கலங்களாகத் திகழ்ந்துள்ளன.
அருமையான பொருள்களைக் கொண்டு வருவதற்காகப் பெரிய ஒலி செய்யும் வங்கங்கள் (பதிற்52:4)
பல திசைகளில் சென்றன என்பதையும் வங்கம் பேரொலி செய்யும் என்றும், நீர்வழிப் பொருள்களை
எடுத்துச் செல்லப் பயன்பட்டது என்றும் அறியலாம். பன்னாட்டுக் கடல் பயணத்தில் பயன்படுத்த
மரக்கலங்களில் கலமும், நாவாயும் முதல் இடத்தை வகிக்கின்றன.
இவை பல பாய்மரங்களையும், கொடிகளையும் (தூங்கு
நாவாய் துவன்று இருக்கை, மிசை கூம்பின் நசைக் கொடியும்.... பட்.174-175) கொண்டு விளங்கியதையும்,
ஒரு துறைமுகப் பட்டினத்திலிருந்து மற்றொரு துறைமுகப்பட்டினத்திற்குச் சென்று வந்தமைக்கான
குறிப்பினைக் கொண்டும் தமிழர்கள் உருவாக்கிய மரங்கலங்களுள் இவையே சிறப்பு வாய்ந்தவை
எனலாம்.
பஃறி
பெரிய அளவிலான படகு வெள்ளை உப்பின் விலையைக்
கூறி விற்றுப் பதிலாக நெல்லோடு வந்த பெரிய படகுகளை, குதிரைகளை வரிசையாகக் கட்டி வைப்பதைப்
போல முளைகளிலே பிணித்து வைத்திருப்பதைப் பட்டினப்பாலை -30 மூலம் அறியலாம்.
நிறைவாக,
கி.மு 5 - ஆம் நூற்றாண்டிலேயே மிகப்பெரிய கப்பல்களைக் கட்டக்கூடிய ஆற்றலையும்,
நுண்ணறிவையும் தமிழர் பெற்றிருந்தனர். இக்கப்பல்கள் ஒவ்வொன்றும் 33 டன் எடைச் சரக்குகளை
ஏற்றிச் செல்லக் கூடியவை. பிற்காலத்தில் சோழர் மன்னர்கள் காலத்தில் இவற்றைவிட பெரிய
கலங்கள் கட்டப் பெற்றன. சோழமண்டல கடற்கரையில்
புதுவை, மரக்காணம், முதலிய துறைமுகங்களில் மாபெரும் கப்பல்களும், பெரிய கட்டுமரங்களும்
வந்து தங்குவதுண்டு. இவ்விடங்களில் இருந்தும் நாவாய்கள் கரையோரமாகவே பாய் விரித்தோடிச்
சேரநாட்டுத் துறைமுகங்கள் அடைவதுண்டு. இவ்வாறு பல வகையான கலங்கள் தமிழ்நாட்டில் பயன்படுத்தப்பட்டன
என்பதற்கு யவன ஆசிரியர் குறிப்புகளும் சான்று பகர்கின்றன.
Comments
Post a Comment