சங்க
கால அணிகலன்கள்
சங்ககால மக்கள் அணிகலன்கள் அணிவதிலும் இருபாலரும் ஈடுபாடு கொண்டிருந்தனர். அணி,
பூண், இழை, கலன் எனப் பல பெயர்களால் குறிப்பிட்டனர். அணியிழை, ஆயிழை, சேயிழை,
ஒளியிழை, என்று அடைமொழிகள் பெண்களைச் சுட்டியது இங்குக் குறிக்கத்தக்கது.
சங்க காலமக்கள் உச்சி முதல் உள்ளங்கால் வரை
அணிகளால் தங்களை அழகுபடுத்திக் கொண்டனர். ஆண்களைவிட பெண்களின் அலங்காரம் அதிகமாக இருந்தது.
கூந்தலணி
சில்லோதி, மெல்லோதி, ஐம்பால் ஓதி
என்றெல்லாம் பெண்கள் விளிக்கப்பட்டுள்ளனர். இதிலிருந்து அவர்களின் அலங்காரம் கூந்தலிலேயே
தொடங்குதல் பெறப்படுகிறது. சங்க மகளிர் பொன்
மாலையால் தங்கள் கூந்தலை அலங்கரித்தனர்.
”புனையிருங் கதுப்பகம் பொலியப்
பொன்னின்
தொடையமை மாலை”
எனப் பெரும்பாணாற்றுப்படை,
தொண்டைமான் இளந்திரையன் விறலியர்க்குக் கரிய கூந்தலில் சூடப்பொன்மாலையை வழங்கினான்
என்று விளக்குகிறது.
தலையணி
அவர்கள் தொய்யகம், சுரிதகம், ஆகிய
தலையணிகளை அணிந்துள்ளனர். இவற்றுள் தொய்யகம் என்பது இன்றைக்கு நாம் ‘தலைபில்லை’
என வழங்கும் தலைப் பாளையாகும். அது பொன்னால் செய்யப்பட்டு ஒன்பது வகை மணிகள் பதிக்கப்பட்டதாகும்.
தலை மயிர் பிரிவின் நடுவில் அணியப்பட்டதாகும்.
”கைவளை யாழி தொய்யகம் புனைதுகில்
மேகலை காஞ்சி” (7:46-47)
எனப் பரிபாடல்
வையைப் புது புனலில் நீராடிய மகளிரின் அணிகளைச் சொல்கையில் தொய்யகமும் இடம்பெறுகிறது.
சுரிதகம் என்பது சடையில் அணியப்படும் திருகுபூப்போன்ற வட்டமான மணிகள் பதிக்கப்பட்டப்
பொன்னணியாகும்.
”கைவல் வினைவன் தையுபு சொரிந்த
சுரிதக
உருவின வாகிப் பெரிய
கோங்கங்
குவிமுகை” (நற்:பா.88:5-7)
என, கோங்க முகையை
விளக்க இரத்தினக்கல் இட்டு இழைத்த பொன்னாலான சுரிதகத்தை ஒரு புலவர் ஒப்பிட்டு கூறுவது
அவர்களது அழகுணர்வுக்கு மற்றோரு அடையாளமாகும்.
நுதலணி
நெற்றியணி என்பது இன்று நாம் அணியும் நெற்றி
சுட்டி எனச் சொல்லப்படும் அணியை அவர்கள் அணிந்திருந்தனர். இதை,
”மகரப் பகுவாய் தாழ மண்ணுறுத்து”
எனத் திருமுருகாற்றுப்படை
குறிப்பிடுகிறது. எனவே, நெற்றியிலே மகர மீனின் வாய் போன்ற அணியை அவர்கள் அணிந்திருந்தது
தெரிகிறது.
”திலகஞ் தைஇய தேங்கமழ் திருநுதல்” எனவும்,
”திலகஞ் தைஇய தேங்கமழ் திருநுதல்
எமது முண்டோர் மதிநாள் திங்கள்”
எனவும் இலக்கியங்கள்
சங்க மகளிர் திலகமிட்டு ஒப்பனை செய்து கொண்டதைக் குறிக்கின்றன.
காதணி
காதில் குழையணியும் பழக்கம் சங்க மகளிரிடம்
இருந்துள்ளது. பூங்குழை, வார்குழை, பொலங்குழை, கனங்குழை எனப் பலப் பெயர்களில்
சங்கஇலக்கியம் அவர்கள் அணிந்திருந்த குழைகளைச் சுட்டுகிறது.
பூங்குழை – என்ற பெயருக்கேற்ப மலர்களைக்
குழையாக அணிந்திருந்தனர். அவற்றோடு தளிர்களையும் அதற்குப் பயன்படுத்தினர். இதனை,
”சாயிழைப் பிண்டித்தளிர் காதிற் றையினாள்
பாய்குழை நீலம் பகலாகத் தையினாள்”
எனப் பரிபாடலும்,
”...... ....... செந்தீ
ஒண்பூம் பிண்டி யொருகாது செரீஇ”(குறிஞ்சி.பா:18-9)
என வரும் வரிகள்
காட்டுகின்றன.
வார்குழை – இவ்வாறு மலர் மற்றும் தளிரோடு அமையாது பொன்னால் ஆன மணிகள்
பதிக்கப் பெற்ற குழைகளையும் அம்மக்கள் அணிந்திருந்தனர்.
”நெடுநீர் வார்குழை களைந்தென”
எனப் பரிபாடல்
குறிப்பதில் வார்குழை (ஒளி பொருந்திய குழை) என்பது பெறப்படுகிறது.
பொலங்குழை- செல்வம் நிறைந்த மனை முற்றத்தில் நெல்லைக் கொத்த வந்த கோழிகளை
விரட்ட, சங்கப் பெண்கள் தங்கள் காதில் அணிந்திருந்த மகரக்குழைகளைக் கழற்றி எறிந்தனர்
என்பதை, பட்டினப்பாலை,
”நேரிழை மகளிர் உணங்குணாக் கவரும்
கோழி யெறிந்த கொடுங்காற் கனங்குழை”
என்பதன் மூலம்
பெண்கள் காதில் பொன் குழை அணிந்தது தெரிகிறது.
இவ்வாறு பலவகைக் குழைகளை காதில் அணிந்தனர்.
மார்பணி
பொன்னாலும் முத்தாலும் ஆன மாலையை அவர்கள்
கழுத்தில் அணிந்திருந்தனர்.
”நூலில் ...... .... நுணங்கரின் மாலை
வாலொளி முத்தமொடு பாடினி யணிய”
எனவரும் பெரும்பாணாற்றுப்படை
பாடல் வரிகள் கரிகாலனிடமிருந்து பொன் மாலையையும், முத்தாரத்தையும் பரிசாகப் பெற்று
பாடினியர் கழுத்தில் அணிந்திருந்ததைக் குறிப்பிடுகிறது.
மேலும், மதாணி என்னும் மார்பணியும் அம்மக்களிடம்
இருந்ததை மதுரைக்காஞ்சி விளக்குகிறது.
”தீண்கதிர் மதாணி ... ..
மாக்களை”
என பேரிளம்
பெண்டிர் பூசைக்கு வேண்டிய மலர் கொண்டு புத்தப்பெருமானை வழிபடச் செலகையில் அவர்தம்
சிறுபிள்ளைகள் மார்பில் பதக்கம் அணிந்திருந்தனர். மதாணி என்பது இன்றைக்கும் வழக்கிலுள்ளப்
பதக்கம் என்பது தெரிகிறது.
தோளணி
வந்திகை என்ற தோளணியை அம்மகளிர் அணிந்திருந்தனர்.
இதற்கு,
”சோர்ந்துகு வண்ண வயக்குறு வந்திகை”
என்பதுகாட்டாகும்.
தோளின் கீழ் அணியும் இவ்வணி இன்றைய வங்கியேயாகும்.
கையணி
சங்க மகளிர் கைகளுக்கும் அணிகளைப் பயன்படுத்தினர்.
அவை தொடி என்றும் வளை என்றும் வகைப்படும். தொடி என்பது முன் கையில் அணியக்கூடிய அணியாகும்.
இது,
”பொலம் தொடி நின்ற மயிர்வார் முன்கை”
நெடுநல்வாடை
பாடல் மூலம் பெறப்படுகிறது. ஏறக்குறைய, இது இன்றைய பிரேஸ்லெட் என்னும் அணியாகும்.
மேலும்,
”பூந்தொடி மகளிர் சுடர்நிலை கொளுவி”
குறிஞ்சிப்பாட்டில்
மூலம் பூக்களையும் அம்மக்கள் தொடிகளாகப் பயன்படுத்தியது பெறப்படுகிறது.
தொடியோடு பல்வகை வளையல்களும் அவர்கள் கைகளை
அலங்கரித்தன. பொன் மற்றும் மணிகளால் ஆன வளையல்களோடு சங்கு வளையல்களையும் சிலபோது பூக்களையே
வளையல்களாகவும் அவர்கள் அணிந்து கொண்டனர். என்பதை,
”பவள வளை செறித்தாட் கண்டணிந்தாட் பச்சைக்
குவளை பசுந்தண்டு கொண்டு”
எனப் பரிப்பாடல்,
ஓரிளம் பெண்ணின் அழகியப் பவள வளையலைக் கண்டு அவளது தோழி தானும் அதுபோல அணிய விரும்பி
பின் குவளை மலரையே வளையாக அணிந்து கொண்டதைக் காட்டுகிறது. இதுபோல், சங்கு வளையையும்
அப்பெண்கள் மங்கலத்தின் பொருட்டு அணிந்ததை நெடுநல்வாடை காட்டுகிறது.
”பொலந்தொடி நின்ற மயிர்வாற் முன்கையை
வலம்புரி வளையோடு கடிகைநூல் யாத்து”
என்பதில் பாண்டியனைப்
பிரிந்த அரசி தன் கையில் சங்கு வளையலை மட்டும் மங்கலத்தின் பொருட்டு அணிந்திருந்ததின்
மூலம் அறியலாம்.
விரலணி
கை விரல்களில் மோதிரமும் அணிந்திருந்தனர்.
”வாளைப் பகுவாய் கடுப்ப வணங்கு உறுத்துச்
செவ்விரல் கொளீஇய செங்கோல் விளக்கத்து....”
என நெடுநல்வாடை
வாளை மீன் வாய் போன்ற வடிவு கொண்ட மோதிரத்தைச் சங்க மகளிர் அணிந்திருந்ததை இலக்கியம்
சொல்கிறது.
கால் சிலம்பு
காலில் சிலம்பணியும் பழக்கம் அக்காலத்திலும்
இருந்துள்ளது.
”நாள் மகிழ் இருக்கை காண்மார் பூணொடு
தெள்ளரிப் பொற்சிலம் பொலிப்ப......”
என மதுரைக்காஞ்சி
செல்வந்தர் வீட்டு மகளிர் நிலா முற்றத்தினின்று தெருவில் நடக்கும் விழாவை, காலில் அணிந்திருந்த
பொற்சிலம்பு ஒலிக்கக் கண்டது சொல்லப்படுகிறது. அச்சிலம்பின் உள்ளீடு முத்தாகவோ மாணிக்கமாகவோ
இருந்தது.
”....... .......... தெந்தீர்
முத்தரிப் பொன் சிலம்பு ஒலிப்ப” (நற் . பா.110:4-5)
எனப் பொன்னலான
சிலம்பில் முத்துக்களைப் பரலாகக் கொண்டு அணிந்தது பெறப்படுகிறது. இவ்வாறு பெண்கள் பலவகை
அணிகலன்களால் தங்களை அலங்கரித்துக் கொண்டனர்.
ஆண்களின் அணிகலன்கள்
ஆண்களும் அணிகளால் தங்களை அலங்கரித்துக்
கொண்டனர்.
தலையலங்காரம்
ஆண்களுக்குத் தலையில் முடி (கீரிடம்) அணியும்
பழக்கம் இருந்தது. எனினும், அது ஆட்சியாளர்களுக்கே உரியதாய் இருந்த அணிகளனாகும்.
”முடியொடு கடகம் சேர்த்தி”
என முல்லைப்பாட்டு
அரசன் முடிசூடி இருந்த அழகைக் காட்டுகிறது.
கடவுளருக்கும்
முடிசூட்டி இருந்தனர் என்பதைத் திருமுருகாற்றுப் படையில்,
”ஐவே றுருவிற்செய்வினை முற்றிய
முடியொடு விளங்கிய”
என் முருகன்
முடி அணிந்திருந்ததைக் குறிக்கிறது.
கழுத்தணி
சங்ககால ஆண்கள் கழுத்தில் முத்து மாலையைக்
கழுத்தில் அணிந்திருந்ததை,
”திண்கா ழாரநீவிக் கதிர்விடு
மொண்காழ் ஆரங் கவைஇய மார்பின்”
என மதுரைக்காஞ்சி
பாண்டிய நெடுஞ்செழியன் மார்பில் முத்துமாலை அணிந்திருந்ததைச் சொல்கிறது.
கையணி
ஆண்களின் கையணியாகத் தொடியும் கடகமும் பயன்பட்டன.
”தூங்கெயில் எறிந்த தொடிவிளங்கு தடக்கை
..... .... ......
...... செம்பியன்” (சிறுபாண்:81-82)
எனச் செம்பியன்
கையில் இருந்த தொடி சொல்லப்படுகிறது.
நள்ளி கையில் கடகம் அணிந்திருந்ததை,
”மடைசெறி முன்கைக் கடகமோ டீத்தனன்”(புறம்.பா150:21)
எனக் காட்டும்
பாடல் வரிகளினின்று ஆண்களுக்குக் கடகம் அணியும் பழக்கம் இருந்ததும் தெரிகிறது.
விரலணி
ஆண்களும் மோதிரம் அணிந்திருந்தனர்.
”பொலஞ் செயப்பொலிந்த நலம் பெறுவிளக்கம்”
என மதுரைக்காஞ்சி
விளக்கமாகிய மோதிரத்தைக் குறிப்பிடுகின்றது.
நிறைவாக,
இவ்வாறு, ஆணும் பெண்ணும் உச்சி முதல் உள்ளங்கால்
வரை பல்வகை அணிகலன் தங்களை அலங்கரித்து கொண்டது அவர்களின் கலையுணர்வைக் காட்டுவதோடு
அவர்தம் நாகரிக வாழ்க்கையையும் அதற்கு அடிப்படையான செல்வச் செழிப்பையும் பறைசாற்றுகிறது.
Comments
Post a Comment