இலக்கியத்தில்
உளவியல்
தமிழர்களுக்கு ஒப்பிடும் மனமும்
உலகளாவிய பார்வையும்
தொன்று தொட்டே
உண்டு. தொல்காப்பியரே
‘ஐந்திரம் நிறைந்த’
என அயன்மொழி
புலமையுடையவர் என்று
குறிப்பிடுகின்றார். அதங்கோட்டாசான் ‘நான்மறை முற்றிய‘ என்ற பிறமொழி கற்றுத்
துறைப்போகிய சான்றோராகக்
காட்டப்படுகிறார். கபிலரின்
பிறமொழியறிவும் ஒப்பீட்டறிவும் குறிஞ்சிப்பாட்டின் வழி புலனாகிறது.
இலக்கியம்
உளவியலுடன் நெருங்கிய
தொடர்புடையதாகும். சங்க
இலக்கியம் வாழ்க்கை
அடிப்படையில் எழுந்த
பண்புகள் கொண்டிருப்பதால், முற்றிலும் உளவியலால் உருவாக்கம்
பெற்றது. அகத்திணைப்
பாடலாக இருந்தாலும்
அவை வாழ்க்கைச்
சூழலில் எழுந்த
ஒரு மனநிலையின்
எதிரொலியாகவே உருப்பெற்றிருப்பதைக் காணலாம்.
இலக்கியத்தில் சமுதாயம்
இலக்கியத்தைச்
சமுதாய நோக்குடனும்
உளவியல் நோக்குடன்
ஆராய வேண்டும்
என்று விரும்புகின்றனர். இலக்கியம் சமுதாய சூழ்நிலையோடும் பொருளாதார சமூக அழகியல்
முறைகளுடனும் தொடர்புடையது. இலக்கியத்தின்
மேல் சமுதாயம்
செலுத்தும் செல்வாக்கை,
சமுதாயத்தில் இலக்கியம்
பெற்றுள்ள இடத்தை
வகுத்து மதிப்பிடவேண்டும். படைப்பாளியின் சமுதாய நிலைக்கும்
இலக்கிய படைப்பிற்கும்
தொடர்புண்டு. அதனை
தனி வகையில்
ஆராய வேண்டும்.
”சமுதாயத்தின் விளைவே இலக்கியம்” என்றும், ”சமுதாயத்தைச் சொல்லில் வடித்தளிப்பதே இலக்கியம்” என்றும் கூறுவர்.
இலக்கியமும் உளவியலும்
அப்பரடிகள்
‘ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்’
என்ற இறைவனையே
ஒப்பீட்டுக் காட்டுகிறார். திருக்குறளைப் பாராட்டித் திருவள்ளுவமாலையைப் புலவர்கள் வடமொழியுடன்
பலவாறு ஒப்பிட்டுரைப்பதில் இன்பம் கண்டனர்.
”எப்பொருளும் யாரும் இயன்பின் அறிவுறச்
செப்பிய வள்ளுவர்தாம் செப்பவரும் – முப்பாற்குப்
பாரதம், ராமகதை, மனு,
பண்டையமறை
நோவனமற் றில்லை நிகர்” (பாரதம்
பாடிய பெருந்தேவனார்)
”ஆரியமும் செந்தமிழும் ஆராய்ந்து இதனினிது
சீரிய
தென்றொன்றைச் செப்பரிதால் – ஆரியம்
வேத
முடைத்துத் தமிழ்திரு வள்ளுவனார்
ஓது
குறட்பா வுடைத்து வண்ணக்கஞ் சாத்தனார்”
இங்ஙனம் ஒப்பிடும் மனப்பான்மையைத் தொன்று தொட்டு வளர்ந்து
வந்துள்ளமை அறியலாம்.
உலகளாவிய பார்வையும்
தமிழர்களுக்கு இயல்பான
ஒன்றாக விளங்கியது.
‘உலகம் உவப்ப’ என்று
திருமுருகாற்றுப்படையும், ‘நனந்தலை உலகம்‘
என்று முல்லைப்
பாட்டும், ‘வையகம்’ என்று
நெடுநல்வாடையும், ‘உலகெலாம் உணர்ந்து‘
என்று பெரிய
புராணமும் எனத்
தொடங்குகின்றன. தமிழ்
இலக்கியப் படைப்பு
உலகளாவிய நோக்குமும் உடையதென்பதை வலியுறுத்தும்.
தமிழ் இலக்கிய ஆய்விற்கு
‘ஒப்பியல்’ மிக
இன்றியமையாதது என்பதும்
தமிழர்களுக்கு ஒப்பியல்
இயல்பாகக் கைவந்ததொரு
கலையே என்பதும்
இவற்றால் அறியலாம்.
”யாதும் ஊரே
யாவரும் கேளீர்”
என்று உலகப்
பொதுமையை மெய்யியல்
வழித் தேடும்
தமிழனுக்குத் தற்சார்பற்ற
ஒப்பியல் வெற்றிதரும்
கருவியாகும் என்பதில்
ஐயமில்லை.
இலக்கிய உளவியலை 1. படைப்பாளி உளவியல்
2. படைப்பாக்க உளவியல் 3. இலக்கியம் அளிக்கும் உளவியல் 4. அவையினர் உளவியல் எனப் பேராசிரியர்
ரெனிவெலாக்குப் பகுத்துரைப்பர்.
படைப்பாளி உளவியல்
படைப்பாளி
தொடர்பானவை. பொதுவாகக்
கலைஞனின் இயல்பு
பிறரினும் வேறுபட்டது
என்பர். பிராய்டு
இலக்கிய மேதை
நரம்பு நோயுடையவனாயிருப்பான் என்றார்.
கலைஞர்கள் உணர்ச்சி
வயப்பட்டகளாயிருப்பர் என்றும் வறுமையுற்றவர்களாயிருப்பர் என்றும்
கூறுவர். ஆனால்,
இவற்றைக் கலைஞனின்
பொது இலக்கணத்தைக்
கூறுவது எந்த
அளவில் பொருந்தும்
என விளங்கவில்லை. புலவனின் இயல்பை நரம்பு
நோய்க்கும் (Neuroticism), பைத்தியத்திற்கும்
(Psychosis) இடைப்பட்டதாகக் கிரேக்கர்களும் கருதினர்.
கவிஞன் பிறரினின்று
ஒரு சிலவற்றில்
மிகவும் குறையுடையவனாகவும், ஒரு
சில கூறுகள்
பிறரினும் மிகுந்த
நிறையுடையவனாகவும் காணப்படுதல்
உண்டு. அவன்
பெற்றுள்ள தனிச்சிறப்பு
அவனது இழப்பிற்கு
ஈடாகும் என்று
உள நூலறிஞர்கள்
குறிப்பிடுகின்றனர். ‘இலக்கியக் கொள்கை’ என்ற நூல், போப்கூனர் - குள்ளர், பைரன் - கோணற்
காலினர், பிரௌஸ்ட் - காசநோயும் நரம்பு நோயுமுடைய உயரமானவர்,
கீட்சு – பிறரை விடக்
கட்டையானவர், தாமசு உல்வு – மிக
உயரமானவர்” என்று
குறிப்பிடுகிறது.
சங்க காலத்திலும் ”பெருங்கண்ணன், முடமோசியார், நடைமுடி நெட்டையார், நெடுங்கழுத்துப் பரணர், நெட்டிமையார்” என்றாற் போன்ற
பெயர்களைக் காணும்போது
முன்னர் கூறியது
உண்மையோ என்று
தோன்றுகிறது. ஒருவரது
குறை அவனுக்குத்
தூண்டு உணர்வாய்
அமைந்து பிறத் துறைகளில் மேம்பட
வைக்கிறது என்று
கொள்ளலாம். எடுத்துக்காட்டாக, ஐம்பொறிகளில் ஏதேனும் ஒன்றில்
குறைபாடு உடையவர் – கண் தெரியாதவர், காது
கேளாதவர், ஊமையர், கூர்மையான அறிவுடையவராகவும் பிற பொறியுணர்வுகளில் பிறரினும் மேம்பட்டவராகவும் விளங்கல் காணலாம்.
எழுத்தாளர்கள் வாழ்க்கை
சிக்கலிருந்து தப்பிக்கும்
மனவுணர்வினாலேயே எழுதுகின்றனர்
என்றும்
தமது அனுபவத்தை
எழுதுகின்றனர் என்றும்
கருதலாம்.
ஓர் எழுத்தாளனின் பல்வேறு
மனநிலைகளின் பிரதிபலிப்பாகவே அவனுடைய பல்வேறு பாத்திரங்கள்
படைக்கப்படுகின்றன எனலாம்.
இவையெல்லாம் மிகவும்
சிக்கலான, தெளிவுப்படுத்த வேண்டிய செய்திகளாகும். சங்கப்
புலவர்களில் ஔவையார்,
ஆதிமந்தியார், வெள்ளிவீதியார், போன்ற பெண்பாற் புலவர்கள்
வாழ்வில் அவலம்
நேர்ந்ததாகக் குறிப்புக்கள்
கிடைப்பதால் அவர்களின்
அகப்பாடல்களில் வெளிப்படும்
சோகவுணர்வு வெளிப்படுகின்றது என்பர்.
சங்கப்புலவர் வாழ்க்கையில்
அறிப்படாத நிலையில்
நமக்கு இவ்வகை
ஆய்வுகட்கு வாய்ப்பில்லை
என்று தோன்றுகிறது. உருமேனிய நாட்டு எல்.ரூசா கவிஞர்களை
மூன்று வகைகளில்
காண்கிறார். அவை,
1. கவலையற்ற மகிழ்வகையினர் – இவர்கள் கலையாக்கத்தில் இடையறா
மகிழ்வும் பறவை போன்ற
கவலையற்ற வாழ்வும் உடையவர்.
2. குழம்பிய அவல வகையினர் – முன்னவருக்கு நேர்மாறானவர்
3. சமநிலை உணர்வினர் – அவலமும் மகிழ்வும் ஆகிய இருநிலைகளையும் சமனிலைப் படுத்தி அளிக்கும் தன்மைக் கொண்டவர்.
இறுதி வகையினரே
பெரும்பான்மையினர் என்று
எல்.ரூசா
விளக்கியுள்ளார். சங்கப்
புலவர்கள் பெரும்பான்மையினர் மகிழ்வகையினரே எனலாம்.
”வள்ளியோர்ப் படர்ந்து,
புள்ளின் போகி,
நெடிய
என்னாது சுரம்பல கடந்து
வடியா
நாவின் வல்லாங்குப் பாடி,
பெற்றது மகிழ்ந்து,
சுற்றம் அருத்தி,
ஓம்பாது உண்டு,
கூம்பாது வீசி
வரிசைக்கு வருந்தும் இப்பரிசில் வாழ்க்கை ....” (புறம் – 47)
என்றுக் கோவூக்கிழார் விளக்கிக்
கூறுவதாலும் இதை
அறியலாம். ”பழுமரம் உள்ளிய பறவைப் போல”
(புறம் – 370) என்றும், ”பழுமரம் தேடும்
பறவை போல”
(பெரும்பாண் -20) என்றும் இதுபோல்
வருமிடங்கள் பலவாகும்.
சங்கத்தொகை நூல்கள்
தேர்ந்தெடுக்கப்பட்டப் பாடல்களைக்
கொண்டன ஆதலின்
குழம்பிய அவல
நிலையினைக் கொண்டவர்களைக்
காண்பது அரிதாயிருக்கிறது எனலாம்.
படைப்பாக்க உளவியல்
படைப்பாக்க உளவியல் கவிஞனின்
உளவியலுக்கும் கவிதையின்
உருவாக்கத்திறகும் இடையே
உள்ள வேறுபாடு
ஆராயப்படுகிறது. உளக்கருத்துக்கும் அதை வெளியிடும் நிலைக்கும்
உள்ள உறவு
ஆராயத்தக்கதாகும். முதற்கண்
”எந்நிலையில் படைப்பாளியாகின்றான்? அவனுக்கு ஏற்படும் தூண்டுணர்வு அல்லது அகத்தெழுச்சி (Inspiration) எவ்வாறு வாய்க்கிறது?” என்பன சிந்திக்கத்
தக்கனவாகும். சிலர்
தெய்வீக ஆற்றலால்
விளைகிறது என்பர்.
பக்தி இலக்கிய
காலத்திலும், காப்பிய
காலத்திலும் இவ்
இறைத்தூண்டுதல் பற்றிய
செய்திகள் உள்ளன.
போதைத் தரும் குடிவகைகளை
உட்கொள்வதால் கவிதை
பிறக்கிறதென்றும் சிலர்
கூறியுள்ளனர். சங்கப்
புலவர்கள் அரசவையில்
பெறும் நறவும்,
கள்ளும் உண்டபிறகு
பாடினர் என்று
கருதுமாறு, ஆற்றுப்படை
நூல்களின் குறிப்புக்கள்
காண்கிறோம். இவற்றைத்
தமிழ்க் கவிஞர்
சிலரும் போதைதரும்
குடிவகைகளை உட்கொண்டு
கவிதை எழுதியதாகச்
சுட்டுவர்.
ஒரு சிலருக்குத் தக்க
சூழ்நிலைகள் அமைந்தால்தான்
எழுதத் தோன்றுமாம்.
ஒருவருக்கு அழுகிய
ஆப்பள் பழத்தை
எதிரே வைத்தபிறகே
எழுத்தாற்றல் பிறக்கமாம்!
மற்றொருவர் எழுத
அமருமுன் துறவி
போல் உடுத்திக்
கொள்வாராம். ஒரு
சிலர் இரவு
நேரத்தையும் மற்றும்
சிலர் காலை
நேரத்தையும், எழுதுவதற்கு
ஏற்ற நேரமாகக்
கொண்டனர். ஒரு
சிலர் ஆரவராமான
சுழலில் எழுதியுள்ளனர். பொருளாதார நெருக்கடியும் ஒருவரது
கவிதைப் பிறப்புக்குக்
காரணம் என்பர்.
ஆற்றுப்படைப் பாட்டுகளும், பரிசில் துறைப் பாடல்களும்
இதனை வலியுறுத்தும்.
வாய்மொழியாகப் பாடியவற்றிற்கும் எழுத்தாணி
கொண்டு எழுதியவற்றிற்கும் வேறுபாடுண்டு.
கலி, பரிபாடல்,
வரி போன்ற
பா வகைகளின்
வாய்மொழித் தன்மையும்,
இசைத் தொடர்பும்
மிகுதி. அகவல்,
வெண்பாப் பாடல்கள்
எல்லாம் எழுதப்
பெற்றத் தன்மையையே
அதிகமாகக் கொண்டுள்ளன.
மேலும் இவற்றில்
ஓசை மட்டும்
சிறப்பிடம் பெறுகிறது.
இசை அன்று.
பக்தி இலக்கிய
பாடல்களில் வாய்மொழியாகப்
பாடப்பட்டாலும் இசைத்
தன்மைமிக்க பல்வேறு
விருத்தப்பா வகைகளால்
அமைந்துள்ளன.
இன்றும்
தாமே மைகொண்டு
எழுதுதல், தட்டெழுத்தில்
பதிவித்தல், கூறி
எழுதச் செய்தல்,
என்று பல
முறைகள் உள்ளன.
சிலர் முன்னரே
கருத்தில் உருவாகியதைப்
பின்னர் எழுதுகின்றனர். ஓர் ஆசிரியனின் நினைவில்,
உள்ளம் படைப்பதை
நினைவுள்ளம் இலக்கிய
வடிவில் தருகிறது.
இலக்கிய உளவியல்
”இலக்கியம் அளிக்கும் உளவியல்”
என்பதே உண்மையான
இலக்கியம் சார்ந்த
உளவியலாகும். தொல்காப்பியர்
குறிப்பிடும் இலக்கிய
விதிகள், துறைகள்,
கூற்றுகள், மெய்ப்பாடுகள்
போன்ற அனைத்தும்
தனித்தனியே உளவியலுடன்
ஒப்பிடத் தக்கனவாகும். இயற்கைப் பின்னணிக்கேற்ற காதலுணர்வைப்
படைப்பதே சிறந்த
உளவியல் அடிப்படையினதாகும். சங்கப்பாடல்கள் அனைத்தும் அமைப்பாலும், நடையாலும்
உரையாடல் திறனாலும்,
கருத்து அமைவாலும்,
நிகழ்ச்சிப் பின்னலாலும்
பாத்திரப் படைப்பாலும்
உளவியல் அடிப்படை
என்பது கண்டுத்
தெளியலாம்.
”சங்க
இலக்கியம் 1862 அகப்பாடல் உடைய காதல்
இலக்கியம். ஒவ்வொரு பாடலிலும் ஆண்,
பெண் உள்ளங்களைப் படம்பிடித்துக் காட்டுகின்றன. மேலும், காதல் தலைமையுடைய இவ்விருவரைப் பற்றி பாங்கன் நினைத்தனவும்,
ஊரார், கண்டார் நினைத்தனவும் ஆகிய பல்வேறு உள்ளங்களின் அறிவினையும் பெறுவர்”
என்று டாக்டர்.வ.சுப.மாணிக்கனார் குறிப்பிடுகிறார்.
களவு காலத்தில் இனியவளாக
இருந்த தலைமகள்
கற்புக் காலத்தில்
பரத்தையிற் பிரித்து
இன்னாதவனாக மாறிவிட்டதை
நினைத்து வருந்துகிறாள்
தலைவி. நெருஞ்சி
மலர் கண்ணுக்கு
இனிதாகக் காட்சியளிக்கிறது, ஆனால் அருகிற்சென்று நாம்
நடக்க முயன்றால்
காலைப் பதம்
பார்த்துவிடுகிறது. தலைவனின்
நிலையும், இதுபோல
உளது எனத்
தலைவி நோகின்றாள்.
”நோம்என் நெஞ்சே!
நோம்என் நெஞ்சே!
புன்புலத்து அயன்ற சிறியிலை நெருஞ்சிக்
சுடகின் புதுமலர் முட்பயந் தாஅங்கு
இனிய
செய்தநம் காதலர்
இன்னா
செய்தல் நோம்என் நெஞ்சே!
(குறுந் – 202)
அள்ளூர் நன்முல்லையாரின் இப்பாடலில்
அவலத்திற்கு ஏற்ற
அமைப்பு உள்ளது.
அடிப்பட்டவள் பலகாற்
சொல்லி அரற்றுவது
போன்ற பாங்கில்
பாடல் யாக்கப்
பெற்றள்ளமை அவலத்தை
மிகுதிப் படுத்துகிறது.
”அன்னாய்! வாழி! வேண்டு, அன்னை!” என்ற குறிஞ்சிப்
பாட்டுத் தொடங்குகிறது. தாயிடம் கூறப்போகும் செய்தி.
அவளுக்கு மிக்க
சினமூட்டும் என்பதால்
அறத்தோடு நிற்கும்
தோழி இவ்வாறு
கெஞ்சிக் கெஞ்சி
அழைக்கின்றாள், ”தாயே வாழ்வாயாக! தான்
சொல்வதை விரும்பிக் கேட்பாயாக,
தாயே!” என்னும் இந்நடைப்
போக்கு ‘அம்மா
அம்மா’ என்று
கொஞ்சிக் குழந்தையை
நினைவூட்டவில்லையா? இத்தகைய கருத்துக்கேற்ற நடைப் போக்குகள் சங்க
இலக்கியத்தில் மிகுதியாக
உள்ளது.
”காமர்
கடும்புனல் கலந்தெம்மொடு ஆடுவாள்”
என்று தொடங்குகிறது
குறிஞ்சிப் பாட்டு
ஒன்று (கலி;
39) தலைவி ஆற்றில்
நீராடுகையில் வெள்ளத்தால்
அடித்துச் செல்லப்பட
இருந்தபோது, தலைவனால்
காப்பாற்றப்பட்ட செய்தியை
தாயிடம் தோழி
கூறுகிறாள், ”தினைப்புலம் காக்கச் சென்றவர்கள் நீராடப் போனது
ஏன்?” என்று தாய்
கேட்பாள் ஆகையால்
‘காமர் புனல்’
, ‘கண்டார்க்கு நீராடும்
விருப்பத்தை ஊட்டும்
புனல் என்றாள்.
‘நிதானமாக நீராடியிருக்கலாமே’ என்று சினவாமல் ”கடும்
புனல்‘ – வேகம்
மிகுதியால் இழுத்துச்
சென்றுவிட்டது – என்றாள்.
‘தனியாகவா அவளை
விடுத்துத் தோழி
எல்லாம் வேடிக்கை
பாரத்தீர்கள்?” என்று
தாய் கடியுமுன்
‘கலந்து தான்
ஆடினோம். அவளை மட்டும் வெள்ளம் இழுத்துச் சென்றது‘
எனக் கூறுவாள்
போலக் ‘கலந்தெம்மொடு
ஆடுவாள்‘ என்றும்
கூறினாள். இதுபோல
உரையாடல் முழுவதும்
உளவியலுக்கு ஏற்பத்
திறம்பட அமைந்திருக்கும் என்பதால் சொல்லுக்குச் சொல்,
வரிக்குவரி, சங்கப்
பாடல்களில்
காணலாம்.
குறிஞ்சிப் பாட்டு முழுவதும்
உளவியல் அடிப்படைத்
தன்மை பொருந்திருப்பதைப் பகுத்து ஆராய்தல் கூடும்.
சங்கப்
பாடல்கள் உளவியல்
தன்மை மிக்கன
என்பதற்கு இப்பாடல்
உதவும். இதில்
பெருமை மிக்க
தலைமகனும், மென்மை மிக்கத்
தலைவியும் அறிவுமிக்க தோழியுமாகிய பாத்திரப் படைப்பும், தலைவியின் அவலநிலையை
அழகுற எடுத்துக்
காட்டும் கருத்தமைதியும் சிந்திக்கத் தக்கவையாகும். ‘அன்னாய்‘
என்று தாயை
அழைத்து ‘நீயும்
வருந்ததி‘ எனத்
தாய் அனுதாபப்
படுவாள் போலப்
பேச்சைத் தொடங்கி,
”இவளும் தேம்பும்,
என்று தலைவியின்
அழுகையைச் சுட்டிக்காட்டி, ‘உங்கள் இருவருக்குமிடையே என்ன
செய்வதென்று தெரியாமல்
யானும் அஞ்சுகிறேன்” – இரு போர் அச்சமோடு
யானும் ஆற்றேன்‘
என்று வருந்திக்
கூறி ‘செப்பல்
ஆன்றிசின்; சினவாதமோ?”
– ‘உண்மையை உரைக்கின்றேன்! கோபமில்லாமல் கேட்பாயாக‘ என்று
தோழி தொடங்கும்
அழகிலேயே ”உளவியல்
பாங்கில் ஒட்பத்தை”காணலாம். பாட்டு
முழுதும் கற்பார்
இதனை ஓர் ‘உளவியல் பாட்டு‘
என்றே கூறுவர்.
சங்க இலக்கியத்தில்
இவ்வாறு உளவியல்
ஆய்வுக்கு நிறைய
வாய்ப்பிருக்கிறது.
சங்க இலக்கியத்தில் ஓவியம்
பாட்டுப் பொருளாகும்
இடம் ஒன்றுண்டு.
இருபுறமும் மலைச்சாரல்,
இடையில் நெருப்புப்
போன்ற பூக்களையுடைய
சிவந்த வேங்கைமரம், அதன்மீது அருவிநீர் பூச்சொரிதல்
போலக் கொட்டிக்
கொண்டிருக்கிறது. இக்காட்சியைக் ‘கஜலட்சுமி‘
ஓவியத்தோடு கபிலர்
பெருமான் இரண்டு
பக்கமும் இருயானைகள்
இருந்து பனிநீரைச்
சொரி தர,
இடையில் திருமகள்
செந்தாமரைப் பூவில்
வீற்றிருப்பாள். இதனைக்
குறிஞ்சிநில மலைக்காட்சிக்கு ஒப்பிடுவதால் கசலட்சுமி பற்றிய
சித்திரமோ அல்லது
இரவிவர்மர் கசலட்சுமி
ஓவியம் தீட்டியுள்ளார். ஆயினும் அவரது கற்பனைக்கு
உதவியதன்று, இன்றைய
ரவிவர்மாவிற்கு
முன்பே சித்திரமாய்ச்
சிற்பமாய் நிலவியிருந்தது. அவற்றின் அடிப்படையில் கபிலரால் தீட்டப்
பெற்றது இக்கலித்தொகைப் பாடல்,
”கதிர்விரு கனைகடர்க் கவின் கொண்ட
நனஞ்சாரல்
எதிரெதிர் ஓங்கிய மால்வரை அடுக்கத்து
அதிர்இசை அருவிதன் அஞ்சின்ன மிசைவீழ
முதிரினர் ஊழ்கொண்ட முழுவுத்தாள் எரிவேங்கை
வரிநுதல் எழில்வேழம் பூநீர்மேல் சொரிதரப்
புரிநெகிழ் தாமரை மலரங்கன் வீறெய்த்த்
திருநயந் திருந்தன்ன தேங்கமிழ் விறல்வெற்ப” (கலி – 44)
ஓவியத்தையே பாட்டுப் பொருளாக்கிய ‘தொன்மை மிக்கத்
தமிழ் கவிதை‘
என்று இதனைக்
கொள்ளலாம்.
”ஓவியம்
போன்றதே கவிதை” என்பது உரோமப் பேரறிஞர்
வகுத்த வாய்பாடு,
தமிழ்க் கவிதை
இதில் பெற்ற
வெற்றியை மறுக்கமுடியாது.
ஓர் ஓவியனும் ஒரு
கவிதையும், ஒரு
படைப்பாளனும் ஓரே
விதமான உளநிலையை
நம்மிடம் ஏற்படுத்தக்
கூடும். கலைகளிடையே
பொதுவியல்புகள் இருந்தாலன்றி
இஃது இயலாது
ஒருவகையான கலையுணர்வை,
மனநிலையை உண்டாக்க
வேண்டுமானால், அவற்றிற்கேற்ப
பொதுத் தன்மைகளும்
அவற்றிடையே அமைந்திருக்க
வேண்டும்.
அவையினர் உளவியல்
இவ்வகை
உளவியல் படிப்பவரை,
கலைஞரைப் பற்றியது.
வாசகர்ளாலேதான் இலக்கியப்
போக்குகள் மாறுகின்றன.
புதிய வகைகள்
தோன்றுகின்றன எனறில்லாது
ஆராய இவ்வகை
இடம் தரும்.
இலக்கியப் போக்கை வாசகர்களின்
மனப்போக்கே தீர்மானிக்கிறது. ஒவ்வொரு காலக்கட்டத்தில் உலகெங்கும்
ஒவ்வொரு விதச்
சுவையுணர்வு தலை
தூக்குவதால், அதற்கேற்ப
இலக்கியம் திசை
திரும்புகிறது. சமுதாய
மனவுணர்வு அலைகள்
உலகெங்கும் ஒரு
போக்காக நிகழ்வதும்
உண்டு. படிப்படியாக
முன்பின்னாக நிகழ்வதும்
உண்டு. உலகெங்கும்
வீரநிலைக் காலம்
தொன்மையான இனங்களில்
முன்பின்னாகத் தோன்றிப்
பலகாலம் நிலைத்திருக்கிறது. வாய்மொழிக்
காலத்துத் தோன்றிய
இலக்கிய பண்புகள்
பலவும் ஒரே
அடிப்படையில் அமைந்துள்ளது. மக்கள் மனத்தைப் பிரதிபலிக்கும் புராணச் செய்திகளால் தொன்மைக்
கூறுகளிலும் ஒற்றுமையும்
வேற்றுமையும் காணப்படுகின்றன. எனவே அவையினர் உளவியல்
என்பது சமுதாய
பின்புல ஆய்வாக
அமைகிறது.
நிறைவாக,
இலக்கியம்
தோன்றிய அன்றே
அதன் வரலாறும்,
அதன் உளம்
சார்ந்த நிகழ்வுகளும்
உடன் தோன்றுகிறது. வரிவடிவம் தோன்றாமுன் வாய்மொழி
இலக்கியமாக இருந்த
காலத்திலும் அதற்கொரு
வரலாறுண்டு ஆயினும், வரலாற்றுக்
காலத்துக்கு முற்பட்ட
அதனைப் பற்றி
உய்த்துணர் நிலையைக் குறிப்பிடுகிறது. பின்னர்
படிப்படியாகத் தோன்றிய
இலக்கிய வரலாறுகளின்
வரலாறு பல்வேறு
கால நிலைகளில்
பல்வேறு வகைகளாக
உருப்பெற்ற சிந்தனை
வளர்ச்சியைக் காட்டும்.
உளவியல்
நன்கு கற்றவர்கள்
இயல்பு நீங்கிய மனநிலைகள்,
மன எழுச்சிகள், பாலுணர்வுச் சிக்கல்கள்,
கனவுகள், என்னும்
பலவற்றை இலக்கியப்
பனுவல்களில் கண்டு
தெளிவர். உளவியலாய்வுக்கு மனித மனம்போல இலக்கியமும்
பயன்படுவதுண்டு.
Comments
Post a Comment