மனித வாழ்வில்
மூடநம்பிக்கைகள்
மனித வாழ்வைச் சீரிய முறையில் அமைத்து, வகுத்து, நடத்துவதற்கு உறுதுணையாக அமைந்திருப்பது அவனிடம் உள்ள அறிவாற்றல்
தான். அவ்வாறான அறிவாற்றலை
மங்க வைத்து மழுங்கடிக்கும் தன்மையை மூடநம்பிக்கைகள் செயற்படுத்தி வருகின்றன. மூடநம்பிக்கை
என்பது தகுந்த ஆதாரமில்லாமல் மாறுபட்ட, அறிவுக்குப் பொருந்தாத, நம்பும் இயல்புடைய நம்பிக்கை அல்லது கருத்து ஆகும்.
மூடநம்பிக்கையானது
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக உலக மக்கள் மத்தியில் செறிந்து பரவிப் பல சொற்பதங்களான
போலிக் கோட்பாடு, தெய்வீக அருள் நிகழ்வு, நம்பிக்கை, இயற்கை கடந்த ஆற்றலச்சம், அறியாநிலைக் கிலி, தவறான மதிப்பச்சம், குருட்டுப் பழக்க வழக்கம் பின்பற்றும் பண்பு, மூடபக்தி, மூடத்தனம், மூடமதி போன்ற
அரும்பு, மொட்டு, பூ, காய், கனி ஆகியவற்றுடன்
நல்லதொரு உயர்நிலை இடத்தில் நின்று ரீங்காரமாக உலகச் சமுதாயங்களில் அபாய ஒலி பரப்பி
வருகின்றது.
ஒரு
பழக்க வழக்கத்தை ஒரு சமுதாயம் பல ஆண்டுகளுக்குக் கடைப்பிடிக்குமிடத்து, அதை இல்லாதொழிக்கப்
பல்லாயிரம் ஆண்டுகள் சென்றாலும் முடியாதிருப்பதை நாம் அறிவோம். அந்த வகையில்
எழுந்ததுதான் மூடநம்பிக்கைகளும் பிரச்சனைகளுமாகும்.
இந்தியாவில்
நம்பிக்கைகள்
கெட்ட சகுனங்கள் : 1. கண்ணாடி உடைதல். 2. மிருகங்கள், பறவைகள், ஊர்வனவற்றைக்
கனவில் காணல். 3. நாய் ஊளையிடல். 4. பூனையை, பசுவின் முகத்தைக்
காலையில் காணல். 5. ஒருவர் வெளியில்
போகும் பொழுது ‘எங்கே போகின்றாய்?’ என்று கேட்டல். 6. பொன், இரும்பைக் கனவு
காணல், நட்சத்திரம்
விழுதல், நில நடுக்கம்
உண்டாதல். 7. கர்ப்பம் தரித்திரிக்கும்
பெண்கள் இரவில் தனித்து நடத்தல். 8. இரவில் நகம் வெட்டுதல். 9. ஒரு கைம்பெண், தனி ஒரு பிராமணி, எண்ணெய் அல்லது பால் கொண்டு செல்பவன் ஆகியோர் தங்கள் பாதையில்
குறுக்கிடல். 10. எண்ணெய், மஞ்சள், குங்குமம் சிந்துதல். 11. பல்லி தலையில்
விழல். 12. முழுமதி நாளன்று
திருமணம் செய்தல். 13. ஆந்தை அலறல்.
14. பூனை பாதையில் குறுக்கிடலும் முதலியன. இவையெல்லாம்
தீய பலனைத் தருமென நம்புவர்.
நல்ல சகுனங்கள்: 1. பிரயாணம் செய்யும்
பொழுது யானையைக் காணல். 2. காக்கை கரைந்தால் விருந்தினர் வருவர். 3. பிரயாணப் பொழுதில்
மயிலைக் காணல். 4. சிட்டுக் குருவி
ஒன்று புது வீட்டில் ஒரு கூட்டைக் கட்டுதல். 5. கருப்பட்டியுடன் தயிர் சாப்பிடல். 6. குங்குமம், பூவுடன் திருமணமான
பெண்ணைக் காணல். 7. ஆண்களுக்கு
வலக் கண்ணும், பெண்களுக்கு
இடக் கண்ணும் துடித்தல். 8. பல்லி சொல்லல் முதலியவை நல்ல சகுனங்கள் என்பர்.
இலக்கியத்தில்
மூடநம்பிக்கைகள்
· திருதராட்டினன்
கண்பார்வையற்றவன் என்றதனால் அவன் மனைவி காந்தாரியும் தன் கண்களையும் இறுகக் கட்டிக்
கொண்டு அவனுடன் வாழ்ந்ததும்,
· பாண்டு மன்னன் இறந்த பொழுது அவன் இரண்டாவது மனைவி மாத்திரி உடன்கட்டை ஏறியதும், பாண்டுவின்
முதலாவது மனைவி குந்திதேவி கைம்மை பூண்டு வாழ்ந்ததை மகாபாரதத்திலும்,
· இராவணன் போரில்
மாண்டான் என அறிந்ததும் மண்டோதரி உயிர் நீத்ததை இராமாணத்திலும்,
· உடன்கட்டையேறல், கைம்மை பூண்டு
வாழ்தல், கணவன் இறந்தானென்று
அறிந்ததும் மனைவி உடன் உயிர் நீத்ததைத் தொல்காப்பியத்திலும்,
· போரில் மாண்ட
பூதப்பாண்டியனின் தேவியார் பெருங்கோப்பெண்டு அவன் சிதையில் புகுந்து உயிர் நீத்ததைப்
புறநானூற்றிலும்,
· கைம்பெண்கள்
தம் வாழ்நாள் முழுவதும் துறவறம் பூண்டு வாழவேண்டுமென்பதை மனுநீதி நூலிலும்,
· நீதி தவறிய
பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் உயிர் நீத்ததும் அவன் மனைவி கோப்பெருந்தேவியும் உடன்
உயிர் நீத்ததைச் சிலப்பதிகாரத்திலும், இருப்பவை அனைத்தும் மூடநம்பிக்கைகளின் உதாரணங்களே!
மேற்காட்டிய இலக்கியங்களிலுள்ள
மூடநம்பிக்கையின் தோற்றம் காலத்தை விஞ்சி நிற்கின்றது. இதனால் கோடிக்கணக்கான மக்கள் மாண்டு அழிந்தனரே! அவர்கள் புரிந்த
உயிர் தியாகங்கள் உலகுக்கு என்ன பாடத்தைக் கற்பித்து நிற்கின்றன. சமயம், புராணம் என்ற
போர்வைக்குள் இவற்றைச் சிந்திக்காது பின்பற்றி நிரபராதி மக்கள் பரிதாபமாக மடிந்துள்ளனர்.
மூடநம்பிக்கையின்
விளைவுகள்
நாம்
குழந்தையாய் பிறந்து வளரும் காலத்தில் மூடநம்பிக்கை பற்றி நம் பெற்றோர், பாட்டன் தாத்தா
ஆகியோர் சொல்லிக் கொடுத்த பாடங்கள் அனைத்தும் பசுமரத்தாணி போல் நம் மனதில் பதிவாகியுள்ளன.
கோயில் திருவிழாவில் அலகு குத்தி, காவடி எடுத்து, செடில் குத்தி, தீ மிதித்து, ஆணி மிதியடி நடந்து அங்கப் பிரதட்சிணை புரிந்து, பாற் செம்பு
தாங்கி, ஆடும், கோழியும் காணிக்கையாக
உயிரப்பலி கொடுத்து, அன்னதானம் கொடுத்து – இவ்வாறு நற்செயல்கள் என நம்பி செய்தும் நம்முடைய பிரத்தியேக, குடும்ப, பொது பிரச்சனைகள்
எவ்வளவுத் தீர்த்தன?
பகுத்தறிவுக்
கொள்கைகள்
இவ்வாறு
மூடநம்பிக்கைகளை நம்பாத சில பகுத்தறிவாளர்கள் இதை எதிர்த்து மக்கள் மத்தியில் புரிந்துணர்வை
உருவாக்கும் நோக்கத்தோடு பல பகுத்தறிவுக் கழகங்களை அமைத்து அரும் பெரும் செயலாற்றினர். கணிசமான மக்கள்
இவர்களுடன் சேர்ந்து செயற்பட்டுமுள்ளனர்.
ஈ.வே.ரா.பெரியார்: இவர் சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை
மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும்,
சாதி மற்றும் பாலின சமத்துவம் போன்ற கொள்கைக்காகவும் போராடிய
மிகப்பெரிய பகுத்தறிவாளர்.
1925-ம் ஆண்டு
சமுகத்தில் இருக்கும் மூடபழக்க வழக்கங்களை அகற்ற வேண்டும் என ‘சுயமரியாதை இயக்கம்’ தொடங்கினார். அதே அண்டு “குடியரசு நாளிதழை” தொடங்கினார் தந்தை பெரியார். இந்த
நாளிதழ் மூலம் பெரியார் தன்னுடைய கொள்கைகளையும் சிந்தனைகளையும் பரப்பினார். இதற்கு
மக்களின் பெரும் ஆதரவும் கிடைத்தது. மாநாடு, கூட்டங்கள்
நடத்தி மக்களிடைய விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
பெண்கள் உரிமை, பெண் கல்வி, பெண்களின் விருப்பத்திருமணம், கைம்பெண் திருமணம், ஆதரவற்றோர் மற்றும் கருணை
இல்லங்கள் போன்ற செயல்களில் ஈடுபட்டனர்.
வசதியான, முற்பட்ட சாதியாகக் கருதப்பட்ட நாயக்கர் என்ற சமூகத்தில் பிறந்திருந்தும்,
சாதிக் கொடுமை, தீண்டாமை, மூடநம்பிக்கை, வர்ணாஸ்ரம தர்மம் கடைப்பிடிக்கும்
பார்ப்பனியம், பெண்களைத் தாழ்வாகக் கருதும் மனநிலை
போன்றவற்றை எதிர்த்து மக்களுக்காகக் குரல் கொடுத்தார்.
இன்று நாம் தலைநிமிர்ந்து
சமத்துவத்தோடும், பகுத்தறிவோடும் வாழ்கிறோம் என்றால்,
அதில் தந்தை பெரியாரின் பணி மிகப்பெரியது. மாபெரும் சிந்தனையாளர் ‘பெரியார்’ என்றால் அது மிகையாகாது.
நிறைவாக,
மூடநம்பிக்கைகளில்
அமிழ்ந்து வசிப்போர் தொகை இன்று சற்றுக் குறைந்து காணப்படினும் பல கிராம மக்களிடையே
மாற்றமற்ற நிலைமையைத்தான் நாம் காணமுடிகின்றது. எனினும் இந்நம்பிக்கைகள் அருகிய விடத்து, மக்களிடையே
மனநிம்மதியும், மகிழ்ச்சியான
வாழ்வும் பரந்த நோக்கும் பெருகி, நல்வாழ்வு வாழ்வர் என்பது உறுதி.
Comments
Post a Comment