திருமந்திரத்தில் தனிமனித வாழ்வியல் சிந்தனைகள்
சமுதாயத்தில் மனிதன் அமைதி,
இன்பம் நல்லொழுக்கங்களுடன், பொருள்
பொதிந்த தூய
வாழ்வு வாழ
அகப்பண்பாடு இன்றியமையாததாகின்றது. அத்துடன்
மனிதனின் மனம்
இறையருளைப் பெறவும்,
இறை நெறியில்
செம்மையாகச் செல்லவும்
அகப்பண்பாடே அடிப்படையாக
அமைகிறது. எனவே,
வாழ்வியலும், இறையியலும்,
அகப்பண்பாடாகிய தனிமனித
ஒழுக்கத்தைப் பொறுத்தே
பெரும்பாலும் சிறப்புற
முடியும். அதனால்
தான் செம்மையான
வாழ்வியலை வலியுறுத்தும்
நூல்களும், ஆன்ம
இன்பத்திற்கான வழிபாட்டினை
வலியுறுத்தும் நூல்களும்
முதலில் அறிவுறுத்துவது அகம் சார்ந்த பண்பாடாகிய
தனி மனித
ஒழுக்கங்களேயாகும்.
இயற்கைச் சூழல், காலம்,
மக்களின் மனநிலை,
மரபு இவற்றிற்கேற்ப
ஒவ்வொரு நாட்டிற்கும்
பண்பாட்டுக் கூறுகள்
வேறுபடலாம். ஆனால்,
உணா்வு சார்ந்த
அகப்பண்பாடுகள் பெரிதும்
மாறுபடுவதில்லை. அன்பு,
மனித நேயம்,
ஒழுக்கம், விருந்தோம்பல்
போன்றவை எல்லா
நாடுகளிலும் அடிப்படை
அறங்களாக உள்ளன.
திருமூலா்,
திருமந்திரத்தில் இறை
உண்மையைக் கூறி,
நிலையாமையை வலியுறுத்தி, அறநெறிகளை வகுத்து, அவற்றின் வழியாகச் சிறந்த வாழ்வியலைப்
பெற்று அதன்
மடைமாற்றமாக ஞான
வாழ்வு பெறலாம்
என்று கூறியுள்ளார்.
அன்புடைமை
அன்பின்
முதிர்ச்சியால் இறையாகிய
அறிவு விளங்கும்.
அதாவது, சத்தியாகிய
அன்பின் முதிர்வால்
சிவமாகிய அறிவு
விளங்கும். அன்பு
வலையில் அகப்பட்டு,
அருளும் இறைவனை
ஏத்தினால் ஒளி
பெருகச் செய்வான்.
அன்பில்லாதவா் இறைவனை
அடைய வழியறியாது
வருந்துவா். கருணையுடைய
இறைவனிடம் அன்பு
பின்னிக் கிடக்க
வேண்டும். உலகப்
பொருளை விரும்புவதை
விட்டு, மெய்ப்பொருளை
விரும்ப வேண்டும்
என்று அறிவுறுத்துகிறார் திருமூலா்.
மேலும், இறைவனுக்கு
அன்போடு உருகிச்
செய்யும் வழிபாடு
சிறந்தது என்பதை,
”என்பே விறகா இறைச்சி அறுத்திட்டுப்
பொன்போல் கனலிற் பொரிய வறுப்பினும்
அன்போடு உருகி அகங்குறைவார்க்கன்றி
என்போல் மணியினை எய்த ஒண்ணாதே”
என்று விளக்குகிறார். அன்பே
கடவுள் என்ற
நிலையில் அனைத்துயிர்களிடமும் ஆண்டவனைக் காணும் மனநிலையைப்
பெறவேண்டும். காணும்
அன்பின் முதிர்வைப்
பெற வேண்டும்
என்று வலியுறுத்தும்
நிலையில்,
”அன்பும் சிவமும் இரண்டென்பா்
அறிவிலார்
அன்பே சிவமாவதாரும்
அறிந்த பின்
அன்பே சிவமாவ தாரும் அறிந்த பின்
அன்பே சிவமாய் அமா்ந்திருந்தாரே”
என்ற மந்திரத்தைக் கூறுகிறார்
திருமூலா்.
நிலையாமை
நிலையாமையைப்
பற்றிய அச்சத்தையும், உள்ள உணா்வையும் உணா்த்தியபின்
நிலைத்த அறநெறிகளை
உணா்த்தவே முதலில்
நிலையாமையைக் கூறுகிறார்
திருமூலா்.
முதல் தந்திரத்தில் இரண்டாவது தலைப்பாக, யாக்கை
நிலையாமையினையும், மூன்றாவது
தலைப்பாகச் செல்வம்
நிலையாமையையும், ஐந்தாவது
தலைப்பாக உயிர்
நிலையாமையையும் கூறுகிறார்
திருமூலா். திருவள்ளுவா்
அறத்துப்பாலில் துறவறவியலில்
34
–வது அதிகாரமாக
நிலையாமை என்ற
ஒரு அதிகாரத்தை
மட்டும் கூறியுள்ளார். மேலும் செல்வம், உயிர்,
உடல் நிலையாமைகளைப்
பற்றியும் கூறியுள்ளார்.
”உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு”
என்று கூறுகிறார் திருவள்ளுவா். திருமூலா்,
மாயையாகிய மண்ணால்
செய்யப்பட்ட உடம்பு,
ஒளியுடலாக மாற்றப்
பெற்றால், நீண்ட
நாள் நிலைபெறும்.
இல்லையெனில், பச்சை
மண்பாண்டம் மழையினால்
மண்ணாகக் கரைவது
போல் அழிந்துவிடும். உயிர் சென்ற பின்
மக்களும், மனைவியும்
உடன்வர மாட்டார்கள். செய்த அறங்களும், வினைகளும்
மட்டுமே உடன்வரும்
என்கிறார். மேலும்,
நொடிப் பொழுதில்
உயிர் நீங்கும்
சுற்றத்தவரும் நொடிப்பொழுதில் ஆளையே மறந்துவிடுவா். என்பதை,
” ஊரேல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்
சூரையங்காட்டிடைக் கொண்டுபோய்ச்
சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப் பொழிந்தார்களே”
என்று குறிப்பிடுகிறார் திருமூலா்.
கொல்லாமை
இறைவனின்
பூசைக்குரிய மலரே
கொல்லாமை என்ற
மலா். சிவகுருபூசைக்கும் சிறப்பான மலா் கொல்லாமை.
கொலை செய்வோர்
நரகத்தில் வீழ்வா்
என்று முதல்
தந்திரத்தில் ஆறாவது
தலைப்பாகிய கொல்லாமையில்
இரண்டு பாடல்களைக்
(மந்திரங்களை) கூறுகின்றார்
திருமூலா்.
கொல்,
குத்து என்று
சினந்து கூறிக்
கொலை செய்வோர்
நரகத்தில் வீழ்த்தப்படுவா் என்பதை,
”கொல்லிடு குத்தென்று கூறிய மாக்களை
வல்லடிகாரர் வலிக்கயிற்றால்
கட்டிச்
செல்லிடு நில்லென்று தீவாய் நரகிடை
நிலவிடும் என்று நிறுத்துவர தாமே”
என்று கூறி விளக்குகிறார்
திருமூலா்.
கொல்லாமை என்பது ஒரு
தவம். அனைத்துப்
பாவச் செயல்களுக்குரிய பயன்களையும் ஒரு சேரக்
கொடுக்கக் கூடியது
கொல்லுதல். தன்னுயிர்
நீங்கும் நிலை
வந்தாலும், பிற
உயிரைக் கொல்லக்
கூடாது. கொல்லாமையைக்
கைக்கொள்பவனைக் கூற்றுச்
சென்று அழிக்காது
என்பனவற்றைத் திருவள்ளுவா்
கூறுகிறார்.
புலால் மறுத்தல்
முதல்
தந்திரத்தில் ஏழாவது
தலைப்பில் இரண்டு
மந்திரங்களை உடையதாகப்
புலால் மறுத்தல்
அமைந்துள்ளது. கொலை
செய்து, புலால்
உண்பவரை எமதூதா்,
நரகத்தில் மல்லாக்கத்
தள்ளித் துன்புறுத்துவா் என்கிறார்.
மேலும்,
”கொலையே களவுகட் காமம்பொய் கூறல்
மலையான பாதகமாம் அவைநீக்கித்
தலையாஞ் சிவனடி சார்ந்து இன்பஞ் சார்ந்தோர்க்கு
இலையாம் இவை ஞானானந்தத்து
இருத்தலே”
தன் ஊனைப் பெருக்க,
பிற உயிர்களின்
ஊனைத் தின்பவனிடம்
அருள் இருக்காது.
மயக்கமற்ற தெளிந்த
அறிவு உடையவா்கள்
புலால் உண்ணமாட்டார்கள். புலால் உண்பவரை நரகம்
விழுங்கும். பின்
வெளியே விடாது.
ஆயிரம் யாகங்கள்
செய்வதை விட
ஓருயிரையும் கொன்று
தின்னாமையாகிய யாகமே
சிறந்தது. கொல்லாது
புலால் உண்ணாது இருப்பவா்களை உலக உயிர்கள்
தொழும் என்கிறார்
திருவள்ளுவா்.
பிறன் மனை நயவாமை
முதல் தந்திரத்தில், மூன்று
மந்திரங்களைக் கொண்டது
பிறன் மனை
நயவாமை.
”காய்ச்ச பலாவின் கனியுண்ண மாட்டாமல்
ஈச்சம் பழத்துக்கு இடருற்றவாறு”
இருப்பது போன்றது. பிறா்
மனைவியை விரும்பும்
அறியாமை என்கிறார்
திருமூலா். மேலும்,
”திருத்தி வளா்த்ததோர்
தேமாங்கனியை
அருத்தமென்று
எண்ணி அறையில் புதைத்துப்
பொருத்தமிலாத
புளிமாங் கொம்பேறிக்
கருத்தறியாதவா்
காலற்றவாறே”
என்று கூறித் தன்
மனைவியைப் புறக்கணித்து, அழகில்லாத பிறன் மனையாளை
விரும்பித் துன்பம்
அடைந்து உயிர்
துறப்பது, காமமயக்கத்தால், புளிய மரமேறிப் பயன்பெறாது
கீழே வீழ்ந்து
காலொடிவது போன்றது
என்கிறார். தானும்
கெடுவதோடு பிறரையும்
கெடுக்கும் தன்மை
இது என்பது
புலனாகின்றது.
கள்ளுண்ணாமை
சிவானந்தத்
தேறலாகிய மதுவினை
உண்ணாமையைக் கள்ளுண்ணாமை
என்கிறரா் திருமூலா்.
”மயங்கும் தியங்கும் கள் வாய்மை அழிக்கும்
இயங்கும் மடவார்தம் இன்பமே எய்தி
முயங்கும் நயம் கொண்ட ஞானத்தை முந்தார்
இயங்கும் இடையறா ஆனந்தம் எய்துமே”
கள் மயங்கச் செய்யும்
உண்மையை அழிக்கும்.
சிற்றின்பம் நாடி
பேரின்பம் இழக்கும்.
திருவள்ளுவா், பொருட்பாலில்,
கள்ளுண்ணாமையைக் கூறுகிறார்.
கள்ளுண்டவா்களைச் சான்றோர்
மதிக்க மாட்டார்கள். கள்ளுண்பவா் நாணத்தை இழப்பா்.
கள் குடிப்பவா்
நஞ்சு உண்பவாகளாவா்
என்று திருவள்ளுவா்
கூறுகிறார்.
நிறைவாக,
ஒரு
மனிதன் தோல்வி
அடையும் பொழுது
ஆறுதல் பெற
இறை நம்பிக்கை
தேவை. இல்லையெனில், விலங்காக மாறி அடாத
செயல்களைச் செய்யத்
துணிந்து அழிவினை
ஏற்படுத்துவான். அமைதித்
தத்துவம் எதுவாக
இருந்தாலும் இறுதியில்
சமயத்தைச் சார்ந்தே
அது அமைக்கப்படும்.
தனிமனிதன்
பண்பாட்டால் சமுதாயம்
பண்படும். இதனால்
உலகு பண்படும்.
அமைதியைப் பற்றிப்
பேசுபவா்கள். இறை
நம்பிக்கையற்றவா்களாக இருந்தாலும் சமயத்
தத்துவங்களை எடுத்துக்
காட்டுவார்கள். ஆனால்,
சமயப்போர்வையில் அரசியலும்.
பொருளாதாரமும், அதிகார வெறியும், புகழ்போதையும், பொருள் போகமும் நடந்தால்
அழிவும் துன்பமும்
நிம்மதி இன்மையுமே
ஏற்படும்.
எனவே,
உலக வாழ்வியலுக்கும், இறையியலுக்கும் அடிப்படை தனிமனித
ஒழுக்கங்களாகிய அகம்
சார்ந்த பண்பாடுகளே
என்பதால், சமயம்
சார்ந்த தோத்திர
சாத்திர நூலாகத்
திருமந்திரம் இருந்தாலும்
முதல் தந்திரம்
முழுவதும் தனிமனித
ஒழுக்கங்களையே அறிவுறுத்துகின்றது.
Comments
Post a Comment