மலையும்
மழையும்
நிலப்பரப்பு சமதளமாக அமையாததற்கு சூழல் அமைப்பும் வானிலையும் முக்கியப் பங்காற்றுகின்றது.
மலைகளின் முதன்மை, ‘மணிமலைப் பணைத்தோள் மாநில மடந்தை’ (சிறுபாண்.1) ‘தேன் தூங்கும்
உயர்சிமைய மலை நாறிய வியன் ஞாலத்து’ (மதுரை,4) எனச் சுட்டப்படுகின்றது. பருவக்காற்று,
மழை ஆகியவற்றின் காலநிலை, மலையிருப்பு மற்றும் அமைப்புடன் பொருத்தம் கொள்கின்றது.
இமயமலையும், மேற்குத் தொடர்ச்சி மலையும்
இந்தியாவின் பருவமலைக்குப் பலநிலையிலும் காரணமாக அமைகின்றன (Mountains and
Monsoons. The monsoons, P.K.Das, N.B.T, Delhi, 1995, pp.180-183). மலைத்தொடரின் நீளம்,
அதில் அமையும் கொடுமுடிகளின் உயரம், அவற்றிற்கு இடையே அமையும் பள்ளத்தாக்குகள் என்பன,
இடக்காற்று (Local winds) உருவாகவும், விரைந்தக் காற்றுப் போக்குத் தடைபடவும் களனமைக்கின்றன.
மலையுச்சிக் காற்றும், பள்ளத்தாக்குக் காற்றும் வெவ்வேறாக அமைகின்றன.
மலைச்சரிவுகளில் தங்கும் காற்றும், தாழ்வரைகளில் படிந்து கிடக்கும் காற்றும்,
பகலில், சூரிய வெப்பத்தால் வெம்மையுற்று, மேல் நோக்கி எழும் வெம்மையான காற்றோட்டத்தை
ஏற்படுத்துகின்றன. கதிர் மறைவில் இந்நிலை மாறி, உச்சிக்காற்று குளிர்ந்து விரைந்து
கீழ்நோக்கி இறங்குகின்றது. இவை மலையில் மட்டும் காணப்படும் காற்று நிலைகளாம். இதனால்
மலையும் மலைசார்ந்த கீழ் நிலங்களும் இரவில் குளிர் – தண்மை – அனுபவிப்பதும், தட்ப நிலையால்
வளிமண்டலத்திலுள்ள நீர்த்துளிகள் குளிர்ந்து வீழ்படிவாகி மழையை இப்பகுதிகளுக்கு வழங்குவதும்
காணப்படுகிறது. பொதுவாக மலையில், இரவில் மழை பெய்வதற்கு இதனால் வாய்ப்பு அமைகின்றது.
”பெருமழைக்கு இருக்கை சான்ற உயர்மலை” (புறம் 125,18-19)
”மாமலை அணைந்த கொண்மூ” (பட்டினப்.92)
”மின்னு வசிபு
இருள் தூங்கு விசும்பின் அதிரும் ஏறொடு
வெஞ்சுடர் சுரந்த கமஞ் சூல் வானம்
நெடும்பல் குன்றத்துக் குறும்பல மறுகி
தாஇல் பெரும்பெயல் தலைஇய யாமத்து” (நற்.261,1-5)
என இலக்கியத்தின்
மூலம் அறியலாம்.
இமயமலையின் மழைப் பொழிவையும்,
”இமயத்து ஈண்டி இன்குரல் பயிற்றி
கொண்டல் மாமழை பொழிந்த
நுண் பல் துளியினும் ... ”(புறம் – 166,22-24)
”மழை அண்ணாப்ப நீடிய நெடுவரைக்
கழை வளர் இமயம் போல” (புறம்- 166,32-33)
மேற்குத் தொடர்ச்சி
மலையில் ஒன்று முதல் இரண்டு கிலோ மீட்டர் வரை உயரமுள்ள முகடுகள் காணப்படுகின்றன. அது
தென் இந்தியாவின் மேற்குக் கடற்கரைக்கு இணையாக நீளத்தில் ஒத்து அமைகின்றது. இதனால்
மேற்கில் கடல்மீதெழுந்த வரும் காற்று மலை மீது ஏறிக் கடந்து செல்லும் நிலை ஏற்பட்டு
தென்மேற்குப் பருவ நிலைக்குக் களன் தருகின்றது. காற்றின் ஈரப்பதம் மழைவளத்தையும் அளிக்கின்றது.
மலையின் மேற்குப் பகுதிக்கு மட்டுமன்றி, மழைக்காற்று கடந்து கிழக்குப் பகுதிக்கும்
இந்தியாவின் நடுப்பகுதிக்கும் சென்று மழையால் நீர்வளம் தருகின்றது. பரிபாடல் இம்மலைத்தொடர்
மற்றும் அதன் மழைத்தொடர்ச்சி பற்றிக் குறிக்கிறது.
”மதியம் மறைய வருநாளில் வாய்த்த
பொதியில் முனிவன் புரை வரை கீறி
மிதுனம் அடைய விரிகதிர் வேனில்
எதிர் வரவு மாரி இயைக என இவ் ஆற்றால்
புரைகெழு சையம் பொழி மழை தாழ
நெரிதரூஉம் வையைப் புனல்” (பரி-11,10-15)
சையம் எனப்படும்
சகியபர்வதமான மேற்குத்தொடர்ச்சி மலை ‘இடவப்பாதி’ மலைப் பொழிவைப் பெறுவது இன்றும் கேரளப்
பகுதியிலும் குற்றாலச் சாரலிலும் வெளிப்படுகின்றது. ‘பொதியில் முனிவன் புரை வரை’ என்பதால்
பொதிய மலையில் மழைப் பொழிவுப் பதிவும் மேற்படி பரிபாடல் வழி வெளிப்படுகின்றது.
”வளி பொரு மின்னொடு வான் இருள் பரப்பி
விளிவு இன்று கிளையொடு மேல் மலை முற்றி...
(பரி 12,1-5)
என வானியலின்
மழைப்பொழிவுக்குக் காரணம் மலைகளே. அந்நீர் அருவியாகி, ஆறாகப் பெருகி, நிலப்பரப்பின்
பிற பகுதிகளையும் வளங்கொழிக்கக் காரணமாகும் என்பது இவற்றின் வழி புலப்படுகின்றது.
இமையப் பொழிவு/பனி உருக்கம் கங்கைநதிப் பெருக்குக்குக்
காரணம் என்பதை,
”இமையவர் உறையும் சிமையசட செவ்வரை
வெண் திரை கிழித்த விளங்கு சுடர் நெடுங் கோட்டுப்
பொன் கொழித்து இழிதரும் போக்கு அருங் கங்கைப்
பெருநீர்ப் போகும் இரியல் மாக்கள்” (பெரும்பாண்,429-32)
மழை இல்லாத
காலத்தும், பனி உருகுவதால் கங்கை நீர் வற்றாது காட்சியளிப்பது,
”வளமழை மாறிய என்றூழ் காலை
மன்பதை எல்லாம் சென்று உண கங்கைக்
கரை பெரு மலிநீர் நிறைந்து தோன்றயாங்கு” (புறம்,
161, 5-7)
என்பதால் அறியலாம். காவிரியில் குடக்கிலுள்ள பொன்மலையின் மழைப்பொழிவால்
ஏற்படும் புதுநீர்ப் பெருக்கும் இலக்கியத்தின் வழி அறிய முடிகின்றது.
”குடாஅது
பொன் படு நெடு வரைப் புயல் ஏறு சிலைப்பின்
பூவிரி புதுநீர் காவிரி புரக்கும் ... (புறம்,165,26-28)
இவ்வாறு மலைப்
பகுதியால் மழைப் பொழியும் என்பதைப் பல இலக்கியங்களின் வழி அறிந்து கொள்ள முடிகின்றது.
Comments
Post a Comment