காலை உணவின் முக்கியத்துவம்
நமது நாட்டில் தானியங்கள், பருப்பு
வகைகள், காய்கறிகள், கீரை வகைகள், பழவகைகள், என உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத
இயற்கைவளங்கள் நிறைந்த கிடைத்தற்கரிய மாபெரும் பொக்கிஷமாகும். அவை மட்டுமல்லாது சமையல்
கலையிலும், அறுசுவையிலும், விருந்தோம்பல் முறையிலும் நம் நாட்டிற்கு இணை நம்நாடே எனலாம்.
இத்தகைய வளங்கள் நிறைந்த நாட்டில் மக்கள் நோய், ஊட்டச்சத்துக் குறைபாடு மிக அதிகளவில்
இருப்பது வருத்தற்குரியது.
காலை உணவின் முக்கியத்துவம்
‘உணவே மருந்து
மருந்தே உணவு’ என ஆன்றோர் பெருமக்கள் அறிவுறுத்தியுள்ளனர். உடல் நலம் காக்கும் காலை உணவின்
முக்கியத்துவத்தை அறியலாம். நாம் இந்த இயந்திர உலகில் வேலைப்பளுவின் காரணமாகவும், உடல்
பருமனை, எடையைக் குறைக்கவும், விரதங்கள் என்று பலக் காரணங்களால் நம்மில் பலர் காலை
உணவை உண்பதில்லை. இதன் விபரீதங்கள் நாம் அறியவில்லை.
நாம் இரவில் சீக்கிரம் சாப்பிடுவது
நன்மை தரும். ஆனால் நகர வாழ்க்கையில், இரவில் பணியின் காரணமாகவும், பொது நிகழ்ச்சிகளில்
பங்கேற்கும் நிலையிலும், அவரவர் தனிப்பட்ட வேலைகளை இரவில்தான் செய்கிறார்கள். இதனால்
சாப்பிடும் நேரம், உறங்கும் நேரம் மாறி உடலை வீணாக்கிக் கொள்கிறார்கள். இரவு 9 மணிக்குச்
சாப்பிட்டால் மறுநாள் காலை 9 மணிக்குதான் உண்கிறார்கள். ஆக 12 மணிநேரம் வயிறு காலியாக
இருந்தால் ஏற்படும் விபரீதத்தை யோசித்துப் பார்ப்பதில்லை.
வயிற்றில் உணவு இருக்கிறதோ இல்லையோ,
அது அதன் வேலையைச் செய்து கொண்டேயிருக்கும். ஒரு வினாடி கூட ஓய்வெடுக்காத இயந்திரம்
நமது உடல். உணவின் செரிமானத்திற்குத் தேவையான அமில நீரை வயிற்றில் சுரந்து கொண்டேயிருக்கும்.
வயிற்றில் உணவு இல்லாத போதும், இந்த அமிலம் வயிற்றின் மேல் படிவத்தைக் கொஞ்சம், கொஞ்சமாக
அரித்து வரும். இதனால் acidity, ulcer போன்ற தொல்லைகள் உண்டாகி, இதனால் வயிற்றில் எரிச்சல்,
வலி என ஏற்பட்டு நாளடைவில் Peptic Ulcer ஆகி, பெரிய பிரச்சனையை உருவாக்கி விடும். ஆகவே
காலை உணவைத் தவிர்ப்பது நமக்கு நாமே நோய் என்னும் வேண்டாத விருந்தாளியை வரவேற்பதாகும்.
காலை உணவு மற்ற இரு வேளை உணவுகளை
விட அதிகமாக உண்ண வேண்டும். மற்ற இரு வேளைகளிலும் குறைவாக உண்ணுவது உடல் ஆரோக்கியத்திற்கு
நல்லது என மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
காலை வேளை உண்பதால் மூளை தாக்குதல்,
மாரடைப்பு, திடீர் இறப்பு தடுக்கப்படுகிறது. இம்மூன்றும் தாக்கும் நேரம் காலை 6 மணியிலிருந்து
1 மணி வரை என ஆய்வில் கணித்துள்ளார்கள். காலையில் கொழுப்பு குறைந்த உணவுகள் அல்லது
கொழுப்பில்லாத தயிர், பழங்கள், ஆரஞ்சு, திராட்சைப் பழரசம், நமது இட்லி சாம்பார் போன்ற
உணவினை உண்பது நல்லது. ஆகவே காலை உணவைத் தவிர்க்காதீர்கள்.
”மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று” (குறள் – 941)
என்ற திருவள்ளுவரின் கூற்றிற்கிணங்க
அளவை மிஞ்சும் போதும் ஆபத்துதான். அதுபோல அளவில் குறையும்போதும் ஆபத்துதான். ஆக மனிதன்
உயிர் வாழ, உயிரைத் தாங்கும் உடல் சிறப்பாகச் செயல்பட, பழுதில்லாது பயன்படத் தேவை உணவு.
Comments
Post a Comment