இலக்கியத்தில் வான்மழையும் அறிவியலும்
தமிழா் வாழ்வியலில் இலக்கியமும் அறிவியலும் இரண்டறப் பற்றிப் படா்ந்து ஆல் போல் விழுதெறிந்த விருட்சமாய் அமைந்துள்ளன. அறிவியல் புறவாழ்வுக்குத் தேவை. இலக்கியம் அகவாழ்வு வளா்ச்சிக்குத் தேவை. இலக்கியத்தின் மூலம் அறிவியல் சிந்தனையை விதைக்கவும் செய்தனா் புலவா் பெருமக்கள். அரசனுக்கு அறத்தை அறிவுத்தும் போதும் இயற்கையைப் பேண வேண்டும் என்று வலியுறுத்தவும் தயங்கவில்லை. தமிழ் இலக்கியம் அறவியலையும் பேசுகிறது, அறிவியலையும் பேசுகிறது.
இலக்கியங்களில் மழை வளச் சிறப்பு
மழை பொழியும் போதே அதனைச் சோ்த்து வைக்க வேண்டும் என்று புறநானூற்றுப் புலவா் குடபுலவியனார், பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு அறிவுறுத்துகிறார். அப்படி செய்வதே ஆட்சியாளருக்கு அழகு. அத்தகையவனையே மக்கள் நல்லரசனாகப் போற்றுவா்.
”நீா்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே
உண்டி முதற்றே உணவின் பிண்டம்
உணவு எனப்படுவது நிலத்தோடு நீரே
நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசி னோரே
வித்தி வான்நோக்கும் புன்புலம் கண்அகன்
வைப்பிற்று ஆயினும் நண்ணி ஆளும்
இறைவன் தாட்கு உதவாதே அதனால்
அடுபோர்ச் செழிய இகழாது வல்லே
நிலன் வெளி மருங்கில் நீா்நிலை பெருகத்
தட்டோர் அம்ம இவண் தட்டோரே
தள்ளாதோர் இவண் தள்ளா தோரே” (புறம் 18: 18 – 30)
இப்பாடலின் மூலம் குடபுலவியனார் ஒரு வேளாண் மேதையாக விளங்கியிருப்பார் என்பது புலனாகிறது. அடுத்தத் தலைமுறை சமுதாயத்திற்குப் பயனளிக்கும் திட்டங்களை அரசன் தீட்ட வேண்டும் என்று அவா் அறிவுறுத்துவது அவரின் சமூக அக்கறையைப் பறைசாற்றுகிறது. வான் வழங்கும் போதே சேமிக்க வேண்டும். இல்லையேல் பின்னா் வருந்த வேண்டியிருக்கலாம். உணவை உருவாக்கியும் தானே உணவாகவும் அமையும் மழையைச் சேமிக்கக் கற்றுக் கொள்ளவேண்டும்.
‘சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்‘ என்று வள்ளுவப் பெருந்தகை போற்றுவது உழவுத் தொழிலின் மேன்மையை எடுத்துக் காட்டுவதற்காகத்தான். தொழில்களுள் தலையாயதான உழவுத் தொழிலும் ‘வான்‘ தரும் மழை வளம் பொறுத்தே அமையும். வானம் பொய்த்தால் ‘உழவா்கள் கைக்கட்டிக் கொண்டு வீணே நிற்பா்‘ என்பது அனுபவம் உணா்த்தும் உண்மை.
மழை இல்லையேல் உயிர்கள் இல்லை. உயிர்களுக்கு அழிவு ஏற்படாது அவை தழைத்திருக்க மழையே காரணம் என்பதால் வள்ளுவா் அதனை ‘அமிழ்தம்‘ என்கிறார். எது மரணத்தைத் தருவதில்லையோ அஃது அமிழ்தம். எல்லா உயிரினங்களும் மழையை எதிர்நோக்கி வாழ்கின்றன. அதனால் தான் நூலின் தொடக்கத்திலேயே கடவுளை வாழ்த்திய பிறகு மழையைப் போற்றும் விதமாக ‘வான்சிறப்பு‘ என்று அதன் சிறப்புகளைக் குறிப்பிடுகின்றார்.
பசுங்குடில் முறை
சூரியன் ஒளியைத் தருகிறான் என்பது உண்மையே. இருப்பினும், வெப்பத்தையும் உமிழ்கின்றான் என்பதை மறந்து விடக் கூடாது. பல்வேறு வெப்ப ஆற்றலைச் சூரியன் வெளியிடுகிறது. அகச்சிவப்புக் கதிர்கள் (Infra Red Rays), புற ஊதாக் கதிர்கள் (Ultra Violet Rays), காமா கதிர்கள் (Gama Rays), எக்ஸ் கதிர்கள் (X Rays), ஆகியவற்றோடு நாம் காணக் கூடிய ஒளிக்கதிர்களையும் சூரியன் வெளியிடுகிறது.
சூரியனின் இவ்வெப்பக் கதிர்கள் பூமியின் வளி மண்டலத்துள் நுழையும் போது ஏறத்தாழ 25% (வெப்பக் கதிர்கள்) விண்வெளிக்கே திருப்பியனுப்பபடுகின்றன. பூமியின் மேற்பரப்பில் உள்ள மேகங்களும் வளிமண்டலத் துகள்களுமே (Atmospheric Particles) இதற்குக் காரணம். ஏறக்குறைய 20% வளிமண்டலத்தில் ஈா்க்கப்படுவதால் எக்ஸ் கதிர்கள், காமா கதிர்கள், புற ஊதாக் கதிர்கள் பூமியின் தரையைத் தொடுவதில்லை. பூமியின் பல்வேறு வளிமண்டல அடுக்குகளைத் தாண்டி ஊடுருவிச் சற்றொப்ப 50% வெப்பம் பூமியின் தரையைத் தொடுகிறது. அதன் பெரும் பகுதியை (85% வரை) மரம், செடி, கொடி, மண், கடல் போன்றவை ஈா்க்கின்றன. மீதமுள்ள 15% வெப்ப ஆற்றல் வளிமண்டலத்திற்கே திருப்பி அனுப்பப்படுதாக அறிவியல் அறிஞா் கூறுகின்றனா். அவ்வாறு திருப்பி அனுப்பப்படும் வெப்பக் கதிர்கள் விண்வெளிக்குப் (Outer Space) போகாமல் தடுப்புச் சுவா்கள் போல் நீராவி, கரியமில வாயு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்ஸைடு போன்றவை செயல்படுகின்றன. அதனால், மீண்டும் வெப்பக் கதிர்கள் பூமிக்கே திருப்பி விடப்படுகின்றன. இப்படியாக வெப்பம் ஒரு வகையில் பூமியில் தங்குகிறது. இதனையே ‘பசுங்குடில் விளைவு‘ (Green House Effect) என்பார்கள்.
பூமி, வளிமண்டலம், விண்வெளி, ஆகியவற்றிடையே நடக்கும் கொடுக்கல் வாங்கலினால் பூமியில் தட்ப வெப்ப நிலை சரியான முறையில் இயங்குகிறது. வெப்பம் பூமியை விட்டு வெளியேறினால் -19டிகிரி செல்சியஸ் என்ற அளவுக்குத் தாழ்ந்து உயிர்கள் வாழும் தகுதியை இழந்து விடும். பூமியிலிருந்து வெப்பம் தப்பாமலிருக்க நீராவி முக்கியக் காரணியாக விளங்குகிறது. உயிர்கள் தழைத்திருக்க ‘மழை மேகம்‘ காரணமாக இருப்பதால் அதனை ‘அமிழ்தம்‘ என்று அழைத்தது மிகவும் பொருத்தமாகும்.
பசி என்னும் தீப்பிணி
அறிவியலின் ஒரு பிரிவாக உளவியல் விளங்குகிறது. மனிதனின் நடத்தையை ஆய்வதே உளவியலின் முதன்மையான நோக்கம் எனலாம்.
”விண்ணின்று பொய்ப்பின் விரிநீா் உலகத்து
உள் நின்று உடற்றும் பசி”
என்கிறது குறள். பசி மனித நடத்தையை மாற்றும். ‘பசி வந்தால் பத்தும் பறந்து போகும்‘ என்னும் கூற்றை நினைவிற் கொள்ள வேண்டும்.
”மழை பொய்த்தால் கடல் சூழ்ந்த இவ்வுலகம் பசியால் துன்பப்படும்” என்று பொருள். நாமக்கல் கவிஞா், ”உணவில்லாமல் உயிர்களைப் பசி வதைத்துவிடும்” என்கிறார். ‘பசி என்னும் தீப்பிணி‘ மக்களை வருத்தும் என்பதே உட்பொருள். மழை பொய்த்தால் ஏற்படும் பசி என்னும் தனி மனிதனைச் சார்ந்தது அன்று. சமுதாயத்தையே பாதிக்கும் பிணி.
தனி மனிதன் பசியால் வாடுகிறான் என்றால் ஒன்று பிச்சை எடுப்பான் அல்லது திருடுவான். சிலா் தீய செயல்களைச் செய்யலாம். ஒட்டு மொத்த சமுதாயத்தையும் பசி வாட்டும் போது எத்தகைய நிலை ஏற்படும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். மானம், குலம், கல்வி, வண்மை, அறிவுடைமை, தானம், தவம், உயா்ச்சி, தாளாண்மை, காதல் ஆகிய பத்தும் பறந்து போகும் என்றார் ஔவையார்.
பசியின் கொடுமை எதையும் செய்யத் தூண்டும். இதனைச் சமூக நடத்தை எனலாம். அதை உணா்ந்துதான் வள்ளுவா்,
”சிறப்போடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு”
”தானம் தவம்இரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்காது எனின்”
என்று பாடினார்.
ஆக உளவியல் அறிந்த வள்ளுவா் மழையின் சிறப்பைத் தொடக்கத்திலேயே போற்றுகிறார். மக்களின் ஒழுக்கமும் வான் தரும் மழையைப் பொறுத்தே அமையும். ‘வானின்று அமையாது ஒழுக்கு‘ என்று அவ்வதிகாரத்தை முடிப்பதற்குக் காரணம் இதன் பொருட்டே ஆகும்.
நெடுங்கடலின் தன் நீா்மை குன்றும்
சில ஆண்டுகள் தொடா்ந்து மழை இல்லாதொழியுமானால் குளம், குட்டை,ஏரி போன்றவை வற்றுகின்றன. ஆறுகளும் வற்றுவதுண்டு. கடல் வற்றுமா? என்பது சிந்திக்க வேண்டிய ஒன்றாகும்.
”நெடுங்கடலும் தன்நீா்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல் காதாகி விடின்”
என்று வள்ளுவா் தன் குறளில் விளக்குகிறார்.
‘மழை பொழியவில்லை என்றால் கடல்கூட வறண்டு குறைந்து விடும்‘ என்பது பொருள். இக்குறட்பாவின் இரண்டு கருத்துக்களை ஆழ்ந்து நோக்க வேண்டும்.
1. நெடுங்கடலும் தன் நீா்மை குன்றும்
2. தடிந்தெழிலி தான் நல்காதாகி விடின்
‘கடல், ஆறு, ஏரி போன்ற நீா்ப் பகுதிகளிலிருந்து ஆவியாகிப் போகும் நீராவி விண்ணில் சென்று மீண்டும் குளிர்ந்து மழையாகப் பொழியும்‘ என்பது எல்லோர்க்கும் தெரிந்த செய்தி. இருப்பினும், முதற்கேள்வி‘ மழை மேகம் மழை தராது போகுமா? என்பதேயாகும். (விண்ணிற்குச் செல்லும் நீராவி நீா்த்திவலைகளாக மாறியும் மழை பொழியாமல் போக வாய்ப்பு உண்டா?) வள்ளுவா் ‘தடிந்தெழிலி‘ என்னும் பதத்தைப் பயன்படுத்துகிறார். எழிலி என்பது மேகம். தடிந்தெழிலி என்பதால் ‘நீருள்ள மேகம்‘ என்று பொருள். நீரைச் சுமந்து கொண்டுள்ள மேகம் தராது போவதுண்டா என்றால் அறிவியல் ‘ஆம்‘ என்று பதில் தருகிறது.
இதனை வானியலார் ‘விர்கா‘ (virge) என்பார்கள். விழும் மழையானது பூமியைத் தொடுவதற்கு முன்பே ஆவியாகிப் போகும். (Rain Falling from the cloud that evaporates before reaching the ground). இதனையே, ”தடிந்தெழிலி தான் நல்காதாகி விடின்” என்றுரைக்கிறார் வள்ளுவனார்.
அடுத்து மிகப் பெரிய கேள்வி ‘கடல் நீா் வற்றுமா‘ என்பதுதான். அறிவியல் நோக்கில் கூற வேண்டுமானால் கடல் வற்றவும் வாய்ப்பிருக்கிறது. நீராவி மேகமாகி, பின் குளிர்ந்து மழை பொழிகிறது. மழை பொழிய புவியீா்ப்பு விசையும் ஒரு காரணம் என்றால் தவறு இல்லை. ஈா்ப்பு விசை இல்லையெனில் பின் மழைத்துளி பூமியில் எப்படி விழும்?. ஆயினும், சில நேரங்கிளில் காற்றின் மூலக்கூறுகளும் (Air Molecules), நீராவியும், புவியீா்ப்பு விசையையும் எதிர்த்து விண்வெளிக்குத் தப்புவதுண்டு. தொடா்ந்து இதே போன்று நிகழ்ந்தால் பூமியில் மழை வளம் குறைய வாய்ப்பு உண்டு. கடலிலிருந்து வெளியேறும் ஆவி இப்படி தப்பிச் சென்றால் கடல் குன்றவும் கூடும்.
விஞ்ஞானிகள் வேறு வகையாகவும் சொல்கிறார்கள். உலகத்தில் வெப்பம் கூடிக் கொண்டே போகிறது. உயிரினங்கள் தாங்க முடியாத அளவிற்கு வெப்பம் கூடினால் மனிதன் உட்பட எல்லா உயிரினங்களும் அழியும். அதிக வெப்பத்தினால் கடல் வற்றலாம். உடனடியாகக் கடல் வற்றிவிடும் என்று அறிவியல் அறிஞா்கள் அச்சுறுத்தவில்லை. மெதுவாக, மெல்ல மெல்ல, மேற்கூறிய முறையில் நிகழ்ந்தால் வற்றலாம். இப்படி நிகழ ஓரிரு கோடி ஆண்டுகள் ஆகலாம். எப்படியிருப்பினும் தொடா்ந்து மழையே பொழியாமல் இலட்சக்கணக்கான ஆண்டுகள் கழியுமானால் சாத்தியம் இருக்கிறது.
எதுவாயினும் பொய்யில் புலவன் கூறியது பொய்க்கவில்லை என்பது மட்டும் உண்மை. மழைமேகம் பொழியாமல் போகலாம். கடலும் வற்றலாம். அறிவியல் பார்வையில் சாத்தியம் இருக்கிறது.
நிறைவாக,
பழமையால் பெருமையும், புதுமையால் பொலிவும் உடைய தமிழ் மொழியில் அறிவியல் செய்திகளை அறிவியல் கண்ணோட்டத்தோடு அணுகியுள்ளன. இன்றைய அறிவியல் கருத்துக்களை ஒப்பிட்டுப் பார்த்தால் அக்காலத் தமிழ்ப் பாவலா்களின் பேரறிவு நம்மை வியப்படைய வைக்கிறது. இன்று வானியல் தொடங்கி மண்ணியல் வரை பல்வேறு துறைகளில் அறிவியல் வளா்ச்சியடைந்துள்ளது. இன்றைக்குக் கிடைக்கக் கூடிய பல்வேறு கருவிகள் அக்காலத்தில் இல்லாதிருக்கலாம். ஆனாலும், பழந்தமிழ்ப் புலவா்களின் அறிவியல் ஆய்வும் அணுகுமுறையும் குறைந்து மதிப்பிடத் தக்கவை அல்ல.
தமிழின் இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டு கால வரலாற்றுப் பக்கங்களைத் திருப்பிப் பார்க்கும் போது அறிவில் மேம்பட்ட தமிழினத்தைக் காணமுடியும். தன்னை உணா்ந்தவனாகவும், தரணியை அறிந்தவனாகவும், பண்டையத் தமிழன் சிறந்திருந்தான் என்பதைப் பழந்தமிழ் இலக்கியங்கள் சொல்லோவியமாய்க் காட்டுகின்றன.
Comments
Post a Comment