சங்க
இலக்கியத்தில் புலால் உணவுகள்
உலகில் முதன்முதலில் உணவை நாகரீகமாகச் சமைத்து
உண்டவன் தமிழன். ஏனைய நாட்டாரெல்லாம் தம் நாட்டில் விளைந்த உணவுப் பொருட்களைப் பச்சையாகவும்
சுட்டும் வெறுமையாக அவித்தும் உண்டு வந்த காலத்தில் உணவைச் சோறும் கறியும் என இரண்டாக
வகுத்து, நெல்லரிசியைச் சோறாகச் சமைத்தும் கறி அல்லது குழம்பு வகைகளை சுவையோடு மட்டுமல்லாது
உடம்பை வலுப்படுத்துவனவும் நோய் வராது தடுப்பனவுமான பலவகையான மருந்துச் சுரக்குகளை
உசிலைச் (மசாலா) சேர்த்து ஆக்கியும் உயர்வாக உண்டு வந்தப் பெருமை தமிழரையேச் சாரும்
என தேவநேயப் பாவாணர் கூறுகின்றார்.
இலக்கியங்களில்
புலால் உணவுகள்
பழங்காலம் மட்டுமன்றி இன்று வரையிலும் பல வகையான விலங்குகள், பறவைகள் சுவையான
உணவுக்குப் பயன்படுத்தப்படுவதனைத் தவிர்க்க இயலவில்லை. அவற்றுள் நண்டு, வரால்மீன்,
உடும்பு, கோழி, பன்றி, ஈயல், ஆடு போன்றவை பெரும்பான்மை உணவாக உள்ளதனை இலக்கியங்கள்
வழி அறிய இயலுகின்றது.
மருதநில மக்கள் சோற்றுடன் கோழியிறைச்சியினை
உண்ட செய்தியினை இலக்கியங்கள் உணர்த்துகின்றது. மேலும் நண்டுக்கறி உண்பதனை ”அலை
வெண் சோறு சுவைத்தாள் அவைகள் கலவையொடு” என்பதனை சிறுபாணாற்றுப்படையும், முயல் கறியும்
சமைத்துச் சுவைக்கப்பட்ட நிகழ்வினை,
”மென்புலத்து வயலுழவர்
வன்டழலத்து பகடு விட்டுக்
குறு முயலின் குழைச் சூட்டோடு
நெடுவாளைப் பல்லுவியற்
பழந்சோற்றுப் புகவருந்தி” (புறம்
-395)
என்ற பாடல்
மூலம் அறியலாம். ஊண் துண்டுகளைக் கம்பியில் கோர்த்து நெருப்பில் சுட்டு உண்ணும் வழக்கம்
இருந்த செய்தியினை, ”காழிற் சுட்ட கோமூன் கொழுங்கறை” என்ற பொருநராற்றுப்படை
செய்தியால் அறியலாம். மேலும் வேகவைத்து உண்ட புலாலை ‘வேவிறைச்சி’ எனவும் சுட்டு
உண்ணும் புலாலைச் ‘சூட்டிறைச்சி’ எனவும் கூறுவதனையும் செம்மறியாட்டுக் கறியை
விரும்பி உண்ட செய்திகளையும் இதன் மூலம் அறியலாம். அதோடு மட்டுமின்றி ஆட்டிறிச்சியிலும்
அதன் தொடைக்கறியை சத்துடையதாகக் கருதி உண்டனர்
என்பதை இதன் மூலம் அறியலாம்.
வயல்களில் பிடிக்கப்பட்ட யானையின் தும்பிக்கையைப்
போன்று நீண்டு துடிக்கும் வரால் மீன், நண்டு மற்றும் இறைச்சித் துண்டுகள் போன்ற உணவுப்
பொருட்களை அரிசிச் சோற்றோடு உண்ணும் வழக்கினை
மக்களிடம் காணமுடிகின்றது என்பதனை,
”கண்பு மலி பழனம் கமழத்துழைஇ
வரை யோர் தந்த இரும் சுவல் வாளை
நிலையோர் இட்ட நெடுநாண் தூண்டில்
பிடிக்கை அன்ன செங்கண் வராஅல்
துடிக்கண் அன்ன குறையொரு விரைஇப்
பகன்றைக் கண்ணிப் பழையர் மகளிர்
நெண்டாடு செறுவில் தராய்க்கண் வைத்த
விலங்கல் அன்ன போர் முதல் தொலைகி
வளஞ்செய் விளைஞர் வல்சி நல்க”
என்ற மலைபடுகடாம்
வரிகள் மூலம் ஒவ்வொரு வயல்கள்உள்ள ஒவ்வொரு வீடுகளிலும் சாதாரணமாகத் தின சமையலாகவே வராலும்,
நண்டும் உள்ளது என்பதனைக் காணமுடிகின்றது. நெய்தல் நிலமக்களின் வாழ்விலும் மீன் உணவுகள்
மிகந்தப் பங்கேற்கின்றது.
”வறல் குழல் சூட்டின் வயன் வயின் பெறுகுவீர்”
என்ற சிறுபாணாற்றுப்படை வரிகளில் ‘வறல்குழல்’ என்பது குழல்மீன் காய்ந்த நிலையான
கருவாடாகவும் பயன்படுத்தப்பட்டச் செய்தியினை உணர்த்துகின்றது.
ஈச்ச விதைபோல் கொழுத்த அரிசி உணவோடு உடும்புக்
கறியினை எயினர் உண்ட நிலையினை,
”கொடுவல் எயினர் குறும்பில்
சேபின்
களர் வளர் ஈந்தின் கார் கண்டன்ன
சுவல் வினை நெல்லின் செவ்வழிச் சென்றி
ஞமலிதந்த மனவுச் சூல் உடும்பின்
வறைகால் யாத்து, வயின் தொறும் பெறுகுவீர்”
(129-133)
என்று பெரும்பாணாற்றுப்படை
நாய் கொண்டு பிடிக்கப்பட்டுச் சமைக்கப்படும் உடும்புக்கறிப் பற்றிக் குறிப்பிடுகின்றது.
மேலும் செல்வந்தர்கள் அரிசிச் சோற்றோடு கோழிக்கறி உண்டதனையும்,
வெண்ணெல் வல்சி
மனைவாழ் அளகின் வாட்டொடும்”
(254-255)
என்றுக் கூறுகின்றது.
புலால் சேர்த்துச் சமைக்கப்படும் பிரியாணி
போன்ற உணவும் அக்காலத்தில் நடைமுறையில் உள்ளதனை ”பைந் நிணம் ஒழுகிய நெய்ம்மலி அடிசில்”
என்று குறிஞ்சிப்பாட்டு அரிசி, நெய், மாமிசம் கலந்து செய்யப்பட்ட உணவின் வகையினைக்
காட்டுகின்றது.
நிறைவாக,
உணவு என்பது ஏதோ பசியினை அடைக்கப் பயன்படும்
ஒரு பொருளாக மட்டுமன்றி, சிலர் சொல்வது போல் ‘வெந்ததைத் தின்று விதி வந்தால் மாள்வோம்’
என்ற நிலையிலும் இல்லாமல் தமிழர்கள் பன்னெடுங் காலமாகவே வகைவகையான தானியங்களை விளைவித்து
காய், கனிகளைப் பயிர்செய்து விலங்கு பறவைகளைச்
சமைத்துண்டு வாழ்ந்த நிலையினைக் காண முடிந்தது. இதன் மூலம் சங்க காலத் தமிழர்கள்
வாழ்க்கையில் பல்வேறு நிலைகளிலும் செம்மையுடன் வாழ்ந்த நிலைகளை அறிந்துணர முடிகின்றது.
Comments
Post a Comment