திரை
(Wrinkling)
மூப்புற்ற உடலின் தோற்றத்தைக் குறிப்பிடும் பொழுது திரை என்ற சொல்லை இலக்கியங்கள்
சுட்டுகின்றன. உடலின் தோல் வற்றி உலர்ந்து சுருங்குவதைத் திரைதல் என்கிறோம். பாம்பு
உரித்துவிட்ட தோல் எவ்வாறு சுருங்கி இருக்குமோ அது போல் சீவகனின் தோல் அமைந்திருப்பதாகச்
சீவகனின் முதிய வேடத்தைத் திருத்தக்கதேவர் ‘அணங்கர வுரித்ததோல் அனைய மேனியன்’ என்று
வருணிக்கிறார். இதே போன்று பெரும்பற்ற புலியூர்
நம்பியும் முதியவேடத்தில் செல்லும் சிவனின் தோற்றத்தை மூத்தோர்/பன்னக வுரியன் பழைய
மேனியும் (31:9) என்று குறிப்பிடுகிறார்.
மேற்றோலின் அடியிலுள்ள கொழுப்புத் தசைகளின்
இழப்பு, சூரிய ஒளி நீண்டகாலமாக உடலின் மீது படுதல் ஆகிய காரணங்களினால் மூப்பில் தோலில்
சுருக்கங்கள் ஏற்படுவதாக அறிவியல் சான்றுகள் காட்டுகின்றன.
இலக்கியங்களில்
திரை
‘திரை’ உடலின் அனைத்துப் பகுதிகளிலும் மேற்றோலில் நிகழும் செயற்பாடாயினும்,
சில உறுப்புகளின் அழகியற் சிறப்பு நோக்கி அவ்வவ்விடத்துத் தோல் திரைதல் விதந்தோதப்பட்டுள்ளது.
மூப்பில் முகத்தில் தோல் சுருங்கித் திரைதலைப் பலரும் இலக்கியங்களில் எடுத்துக்காட்டுகின்றனர்.
முகிலால் உண்ணப்பட்ட நிலவுபோல் மூப்பில்
தங்கத்தின் முகத்தொளி குறைந்ததாகப் பாரதிதாசன் குறிப்பிடுகிறார்(கு.வி:2ப.98). இக்கருத்தையே
மதியல்ல முகம் அவட்கு/வறல் நிலம் என்ற தங்கத்தின் கணவன் கூற்றாக வெளிப்படுத்துகிறார்(ப.101).
முகத்தில், குறிப்பாக நெற்றியில் தோல் திரைதல்
சில இடங்களில் சுட்டப்படுகிறது. பிறைநுதல் வண்ணம் காணாயோ நீ/ நரைமையிற் றிரைதோற்
றகையின் றாயது என்று மணிமேகலை (20:43-44) நெற்றி திரைந்த தன்மையைக் குறிப்பிடுகிறது.
சிதம்பரேசுரர் விறலிவிடுதூதில் வரும் தாய்க்கிழவி தன்மகளுக்கு மூப்பு இன்னும் வரவில்லை
என்பதை அறிவிக்க, நெற்றி சரீரம் நெகிழ்ந்ததோ (981) என்று கேட்கின்றாள்.
சுபவிரதை என்னும் பெண்ணைச் சோதிக்க முதிய
வேடத்தில் சென்ற சிவனுடைய தோற்றத்தை விவரிக்கும் போது திரைந்த கன்னங்களுடன் சென்றதாகப்
பரஞ்சோதியார் குறிப்பிடுகிறார். மூப்பின் அறிகுறிகளில் ஒன்றாக கன்னம் திரைதலைக் கூளப்ப
நாயகன் விறலிவிடு தூதும்(721) சிதம்பரேசுரர் விறலி விடு தூதும் (979-80) குறிப்பிடுகின்றன.
தோல் திரைதல் தொடர்பாகக் கிடைக்கும் சான்றுகளைக்
காணும்போது உடலின் பிறப் பகுதிகளைக் காட்டிலும் முகம் பற்றியும் நெற்றி, கன்னம் ஆகியவை
பற்றியும் அதிகமான அளவில் குறிப்பிடப்பட்டிருக்கக் காண்கிறோம். இவை எளிதில் பார்வைக்குப்
புலனாவாதாலும் அழகியற் சிறப்பு நோக்கியும் கூறப்பட்டிருக்கலாம். தோல் தொடர்பான ஆய்வுகளில்
ஈடுபட்டுள்ள அறிஞர்கள் பிற உடற்பகுதிகளைக் காட்டிலும் முகத்தில் முன்னதாகத் திரை ஏற்படுவதாக
அறிவித்துள்ளனர். இதனை நோக்கும் போது, இவ்வுண்மையை அறிந்த காரணத்தாலும் இலக்கிய படைப்பாளர்
தம் படைப்புகளில் முகம் திரைதலை அதிகமாகக் குறிப்பிட்டிருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது.
Comments
Post a Comment