சங்க காலத்தில் எல்லா செல்வங்களையும் பெற்று
உயர்ந்த நிலையில் வாழ்பவர்கள் ஒரு புறமும், ஒரு வேளை உணவுக்கும் வழியின்றி இரக்கும்
அறிஞர்கள் மற்றொரு புறமுமாகக் காணும் நிலை எல்லாச் சமுதாயத்திலும் தொடர்ந்து காணப்படுகிறது.
அக்காலத்தில் வறுமை நிலை பெரும்பாலும் கலைஞர்களிடம் காணப்படுகிறது. அவர்கள் தமக்கும்
தம் சுற்றத்தினருக்கும் பொருள் வேண்டி, மன்னர்களையும் செல்வர்களையும் நாடி , அவர்களிடம்
தம் கலைத்திறனைக் காட்டிப் பொருள் பெற்றுள்ளனர். அவர்களும் பெருமகிழ்வுடன் பொருள்களை
வாரி வழங்கியுள்ளனர்.
பொற்றாமரை வழங்கும்
மரபு
புரவலர்கள், இரவலர்களுக்கு யானை, தேர், அணிகலன்,
ஊர் எனப் பலவகையான பொருள்களைப் பரிசிலாகக் கொடுத்துள்ளனர். இவற்றுள் பொற்றாமரைப் பூவினைக்
கலைஞர்களுக்கு வழங்கும் மரபு பெரிதும் காணப்படுகிறது.
நெட்டிமையார் என்ற புலவர் பாண்டியன் பல்யாகசாலை
முதுகுடுமிப் பெருவழுதியின் பரிசில் வழங்கும் இயல்பைச் சிறப்பிக்கப் பாணர்க்குத் தாமரை
மலையும் தன்மையைப் பாடுகின்றார் (புற.நா.12). சோழன் நலங்கிள்ளியின் நாண்மகிழிருக்கையில்,
பாணர்கள் பொன்னாலின்ற தாமரைப் பூவினைப் பொற்கம்பியாலான நூலின்கண் சேர்த்து அலங்கரித்த
மாலையை அரிய தலையில் பொலிவு பெறச் சூட்டிப் பெருமகிழ்வுடன் சூழ்ந்து இருக்கின்றனர்(புறநா.29).
கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன், பாணர்க்குப் பொற்றாமரை சூட்டியதால் கெடாத புகழை நிலைநாட்டுகின்றனான்(பதிற்.48).
பொற்றாமரைப் பூக்கள், பகைவருடைய யானைகளைக்
கொன்று, அவற்றின் ஓடைப் பொன்னைக் கொண்டு ஆக்கப்பெறும். இவ்வாறு செய்யப் பெற்ற வாடாத்
தாமரையினைத் திருமுடிக்காரியின் முன்னோர், பாணர்க்கு வழங்கியுள்ளனர். (புறநா.126).
பொன்னால் செய்யப்பெறும் பூவானது, வெள்ளி நாரால் தொடுக்கப் பெற்று வழங்கப்பெறுவதை,
”ஒள்ளழல் புரிந்த தாமரை
வெள்ளி நாராற் பூப்பெற் றிசினே” (புறநா.11)
என்பர் பேய்மகள்
இளவெயினி.
பொற்றாமரைப்
புனைவு
பொன்னாலாகிய தாமரைப் பூ, ‘பொலந் தாமரை’
(புறநா.361), ‘பைம்பொற்றாமரை’(பதிற்.48), ‘பசும்பொற்றாமரை’ (புறநா.141) எனச்
சிறப்பிக்கப் பெறுகிறது. பொன்னை நெருப்பிலிட்டுச் சூடாக்கி அணியாகச் செய்யப்பெறும்
தன்மையை ‘அழல்புரிந்த வடா தாமரை”(புறநா.29), ‘ஒள்ளழல் புரிந்த தாமரை’ (புறநா.11)
என்பர்.
இயற்கையாக, நீரில் பூக்கும் தாமரை வாடும்
இயல்புடையது. பொன்னால் செய்யப்பெறும் இத்தாமரை வாடாத இயல்புடையது என்பதனால் இதனை, ‘வாடாத்
தாமரை’(புறநா.126,319) என்பர். இயல்பாகப் பூத்து நிற்கும் தாமரையையே வண்டுகள் மொய்க்கும்.
பொன்னால் செய்யப்பெறும் தாமரையில் வண்டுகள் சூழா. இத்தன்மையை ‘ஆடுவண்டி மிராத்தாமரை’(புறநா.69,
பெரும்பாண்.480) என நயம்படப் பாடுகின்றனர். பொன்னாலியன்ற தாமரை, நீர் நிலையில்
பூவா; ஆதலின் ‘கேணி பூவா’ (புறநா.364) என விதந்து மொழிகின்றனர்.
பொற்குவளைப்
பரிசில்
பாணர், பொன்னாலாகிய குவளை மலரினையும் பரிசிலாகப்
பெற்றுள்ளனர். வன்பரணரைத் தலைவராகக் கொண்ட பாணர் சுற்றத்திற்கு, வல்வில்லோரி ‘பனிநீர்ப்
பூவா மணிமிடை குவளை’ யினைப் பரிசிலாக வழங்கியுள்ளான். பொன்னால் செய்யப்பெற்ற இக்குவளை
மலரை, வெள்ளி நாரில் தொடுத்துக் கண்ணியாக்கிக் கொடுத்துள்ளான்(புறநா.153).
நிறைவாக,
சங்க காலத்தில் ஆடல், பாடல் இசையில் வல்ல
கலைஞர்களுக்குப் பொற்றாமரை வழங்கும் மரபினைக்
கொண்டுள்ளனர். பொற்றாமரை பெறுவதன் மூலம் பாணர் முதலியோர் சிறந்த கலைஞர்கள் என்ற அங்கீகாரத்தைச்
சமுதாயத்தில் பெறுகின்றனர். இன்றும் ‘பொற்கிழி’ போன்ற விருது சிறந்த கலைஞர்களுக்கு அளிக்கப்பெறுவது இம்மரபின்
தொடர்ச்சியைக் காட்டி நிற்கும்.
Comments
Post a Comment