Skip to main content

வில்லின் வரலாறு

 வில்லின் வரலாறு

        மிதிலையில் சனகன் மாளிகையில் சிவனால் கொடுக்கப்பட்ட வில் இருந்தது. அதை ஒடிக்க முயன்று தோல்வியைத் தழுவியர் பலர். ஆண்டுகள் சில கடந்தும் வில்லை ஒடித்து சீதையை மணப்பாரின்மையால் சனகன் பெருங்கவலையில் ஆழ்ந்தான். நாளும் அவன் வேதனை வளர்ந்து வந்தது. அந்நிலையில்தான் கோசிகன் இராம இலக்குவருடன் சனகன் மாளிகை அடைந்தான். இராமனைக் கண்டதும் சனகன் மனதில் சிறிது நம்பிக்கை தோன்றியது. இச்செய்தியை கம்பர் அழகாக வருணிக்கிறார்.

            ”போதக மனையவன் பொலிவு நோக்கியவ்

             வேதனை தருகின்ற வில்லை நோக்கித்தன்

             மாதினை நோக்குவான் மனத்தை நோக்கிய

             கோதமன் காதலன் கூறன் மேயினான்

          தக்கன் உமையவளை இகழ்ந்தான். அதனை அறிந்த சிவன் சினம் கொண்டான். தன் கையில் வில்லை ஏந்தினான். வேள்விச்சாலையை நோக்கி விரைந்தான் தக்கன். வேள்விக்குத் துணையாக நின்ற தேவர்களின் பற்கள் பறந்தன. கைகள் அறுந்து வீழ்ந்தன. எஞ்சிய தேவர் அஞ்சி ஓடி ஒளிந்தனர். புகாத இடமெங்கும் சென்று புகுந்தனர். வேள்வித் தீ அளிந்தது. பின்னரே, முக்கண்ணன் முனிவு நீங்கியது, ஆயினும், தேவர்கள் வில்லினிடத்துக் கொண்ட அச்சத்தை நீக்கினாரல்லர். தேவர்களின் அச்சத்தைப் போக்க, சிவன் தன் கை வில்லை வாட் படையிற் சிறந்து விளங்கிய சனகன் முன்னோனுக்கு வழங்கினான்.

அவ்வில்தான் சீதையின் திருமணத்திற்கு அன்றுவரை தடையாக இருந்தது. ஆற்றல் வாய்ந்த அவ்வில்லை இராமன் நொய்தின் எடுத்து வளைத்து ஒடித்தான். சனகன் வேதனை தீர்ந்தது. தையலாள் சானகியை இராமன் மணம் செய்து கொண்டான். தயரத மன்னனும், மக்களும், படையினரும் அயோத்திக்குத் திரும்பி வரும் வழியில் மூவேழு தலைமுறை மன்னர் குலத்தைக் கருவறுத்த பரசுராமன் எதிர்ப்பட்டான். கையில் வில் ஒன்றைத் தாங்கி நின்ற பரசுராமன் வில்லின் வரலாற்றைக் கூறினான்.

தெய்வத் தச்சன் மயன் இரு விற்களை வடித்தான். சூரியனைப் போன்ற ஒளியுடனும், மேருமலை போன்ற வலியுடனும், தமக்கு ஈடில்லாதனவுமாக அவை விளங்கின. ஒன்றை உமை கேள்வன் உவந்து எடுத்தான். மற்றொன்றை நெடிய மால் கொண்டான். ஆளுக்கு ஒரு வில்லை எடுத்ததை அறிந்தனர் தேவர்கள். இரு விற்களின் ஆற்றல் சான்ற வில் எது என்பதை அறிய அவாக் கொண்டனர். விண்ணவர், தங்கள் கருத்தை தாமரைக் கிழவனிடம் வெளிப்படுத்தினர். தேவர் சிந்தனை சீரிது என உணர்ந்த வேரியங் கமலத்தோன் வில்லைக் காரணமாகக் கொண்டு யாரினும் உயர்ந்த மூலத்து ஒருவராம் இருவரிடையேயும் அமர் மூட்டினான்.

வில்லைத் தாங்கிய வித்தகர் இருவரும் ஏழுலகமும் அஞ்சுமாறு போரைத் தொடங்கினர். மூண்ட போருக்கு முடிவு காண இயலவில்லை.  கடும்போர் நடந்தது. திரிபுரம் எரித்த தேவன் வில் முறிந்தது. மூண்ட சினம் பெருகச் சிவன் போரைத் தொடர, விண்ணவர் தலையிட்டு விலக்கினர். நெற்றிக்கண் கடவுள் தன் வில்லை ஆயிரம் கண்ணோனிடம் கொடுத்தான். கரியமால் கையில் தவத்தில் சிறந்து விளங்கிய இரிசிக முனிவனிடம் சென்றது. இரிசிகன் சமதக்கினிக்குக் கொடுக்க, அவ்வில் பரசுராமனை அடைந்தது. விண்ணவர் கோன் உமையொரு பாகனிடம் பெற்ற வில்லைச் சனகனுக்கு அளித்தான். அவ்வில்லைத் தான் மிதிலையில் இராமன் ஒடித்து சீதையைக் கைப்பிடித்தான்.

இருபெருங் கடவுளரிடம் இருந்த விற்கள் இரண்டில் வரலாற்றை இரு வேறிடங்களில் சுருக்கமாகவே கம்பர் கூறியுள்ளார். சுருங்கக் கூறப்பட்ட வரலாறு காப்பிய தலைவனுடைய பண்பை வெளிப்படுத்தப் போவதாக உள்ளது. காப்பியத் தலைவன் இராமனுடைய வீரம் வெளிப்படும் முதலிடம் தாடகை வதமாகும் என்பதை முன்னர் கண்டோம். வேள்விக்குத் தடையாக இருந்த அரக்கர்களைக் கொன்று ஒழித்ததாலும் அறிந்தோம். கை வண்ணத்தைக் காட்டிய கம்பர் கால் வண்ணம் காட்டத் தவறவில்லை. விற்களின் வரலாற்றாலும் இராமனுடைய வீரத்தைப் புலப்படுத்துகிறார்.

வில்லின் பெருமையை அறிந்தால் தான் அவ்வில்லை ஆண்ட ஆடவன் சிறப்பும் வெளிப்படும். சிவன் தந்த வில்லின் சிறப்பை முற்கூறி, அவ்வில் இராமனால் இரிந்ததையையும் விளக்கினார் கம்பர். பின், பரசுராமன் வாயிலாக மற்றொரு வில்லின் ஆற்றலைக் காட்டி, அவ்வில்லையும் இராமன் நொய்தின் வாங்கி வளைத்து நாணேற்றிய திறனையும் செப்பினான். செப்பருங் குணத்து இராமன் தோளாற்றலை விளக்கும் பொருட்டே விற்களின் வரலாறு கூறப்பட்டது.

இவ்வரலாற்றால் மற்றொரு செய்தியையும் கம்பநாடன் காட்டுவதை எளிதில் உணரலாம். உரிய பொருள் உரியவனிடம் வந்து சேர்ந்ததை நயமாகக் கூறியுள்ளார் கம்பர். இரண்டு விற்களில், சிவன் கை வில் மிதிலையில் இராமனால் ஒடிக்கப்பட்டது. திருமால் தாங்கிய வில், ‘எங்கு சுற்றியும் அரங்கனைச் சேவி’ என்பது போல இராமனை வந்தடைந்தது. இராமன் திருமாலின் அவதாரம் என்பதைக் குறிப்பாக உணர்த்திச் செல்லும் இடங்களும், வெளிப்படையாக் கூறும் இடங்களும் இராமாயணத்தில் காணப்படுகின்றன. இவ்விடத்தில் நுட்பமாக உணர்த்தி செல்லும் திறத்தினைக் கண்டு உவக்கின்றோம்.

 

          

Comments

Popular posts from this blog

எண்ணம் போல் வாழ்வு

                                                                        எண்ணம் போல் வாழ்வு             நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·      மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·         வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·   ...

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·         பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·         பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல். ·         உண்மைக்குப் புறம்பானவற்றைச் செய்யாதிருத்தல். ·         நண்பர்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·         மனத்திடத்தோடு வாழ்தல். ·         ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·         மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·         எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.      யாரையும் வெறுக்காதே ...