குடும்பம்
குடும்பம் என்பது சமுதாயத்தில் மிகவும் அவசியமான
அங்கமாகத் திகழ்கிறது. குடும்பமே சமூகத்தில் ஆணிவேராகவும், அடித்தளமாகவும் அமைகிறது.
”குடும்பம் என்பதை ஆங்கிலத்தில்
‘Family’ என்ற சொல்லால் குறிப்பிடுகிறோம். அச்சொல் (Famulus) என்ற சொல்லிலிருந்து வந்ததாகும்.
இச்சொல்லிற்கு வேலைக்காரன் என்பது பொருளாகும்”- என்று பாஸ்கல் கிஸ்பர்ட் குறிப்பிடுகின்றார்.
கூடுதல் என்னும் சொல்லின் முதனிலை அழிந்து
குடு என ஆகக் குடும்பம் என்னும் சொல் பிறக்கிறது. கூடுதல் என்னும் செயல் உயிரியல் இனப்பெருக்கத்திற்கு
வழி வகுக்கிறது. அவ்வகையில் கூடுதல் என்னும் சொல்லின் அடியை ஒட்டிக் குடும்பம் என்னும்
சொல் பிறந்திருக்க வேண்டும். குடும்பு என்னும் சொல்லுக்கு, ‘பூ முதலியவற்றின் கொத்து’
என்று வின்சுலோவின் தமிழ் – ஆங்கில அகராதி பொருள் தருகிறது.
மொட்டு, மலர், காய், கனி ஆகியன இணைந்து கொத்தாக
(குடும்பமாக) விளங்குவதைப் போலக் குடும்பத் தலைவனும், தந்தை, தாய், மனைவி, மக்கள்,
பெயரன், பெயர்த்தி ஆகியவர்களை இணைத்து வாழ்கிறான். பேச்சு வழக்கில் இவன் பெரிய குடும்பி
என்று வழங்குவது இங்கு சிந்திக்கத் தக்கதாகும்.
‘குடும்பம்’ என்ற சொல்லுக்குத் தமிழ்க் கையகராதியில்
– குலம், மனைவி, சமுசாரம் என்னும் பொருள் காணப்படுகின்றன.
‘குடும்பம்’ என்னும் சொல்லுக்கு வின்சுலோ
தமிழ் – ஆங்கில அகராதி – ஒரு குடியிலுள்ளார், உறவின் முறையர், குடி என்று பொருள் உள்ளது.
திருவள்ளுவர் குடும்பம் சொல்லை,
”இடும்பைக்கோ கொள் கலம் கொல்லோ குடும்பத்தைக்
குற்றம் மறைப்பான் உடம்பு”
ஒரு குறளில்
பயன்படுத்தியுள்ளார். இவருக்குப் பின்னர் சில இலக்கியங்களிலும் பயன்படுகிறது.
குடும்பம் என்னும் சொல்லுக்கு இணையான
வேறு சில சொற்களாக, இல்லறம், இல், இல்லறம், இல், இல்லம் என்னும் சொற்களையும்,
மனையறம் மனை, வீடு, அகம், குடி என்னும் சொற்களையும் குறிப்பிடலாம்.
குடும்பம் என்பது ஓர் ஆணும் பெண்ணும்
அவர்களுடைய சமுதாய மரபுப்படி மணவாழ்வில் ஈடுபடுவதாகும். என்று பக்தவத்சலபாரதி குறிப்பிடுகின்றார்.
‘இல்’ என்னும் சொல் திருக்குறளில் பதின்மூன்று
இடங்களிலும், ‘மனை’ என்னும் சொல் மூன்று இடங்களிலும், ‘குடி’ என்னும் சொல் பதின்மூன்று
இடங்களிலும் வருகின்றது.
(குறிப்பு- இக்கட்டுரை செம்மொழி இலக்கியமும் சமூகவியல் கோட்பாடும், அறிஞர் எல்.கே.அக்னிபுத்ரன்,மணிவாசகர் பதிப்பகம், சென்னை-600 108. என்ற நூலின் கருத்துக்களைப் பயன்படுத்தியுள்ளேன். ஐயா அவர்களுக்கு நன்றி.)
Comments
Post a Comment