சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் கிளைக்கதைகள்
(காப்பியக் கவிஞர் சொல்வதாய் அமைந்தது)
1. திருமாவளவன் கதை
தமிழ்நாட்டின் எல்லையிலே தன்னோடு எதிர்த்துப் போர்புரியும்
அரசரை மேற்குந் தெற்குமாகிய இரண்டு திசையிலும் பெறாத திருமாவளவன் (கரிகாலன்) போரிலே
கொண்ட பெருங்காதலால் வடதிசை பெருந்திசையாகையாலே பகைவர் கிடைப்பர் என்றெண்ணி அத்திசைச்
செல்வதற்கு விரும்பி வாளையும், குடையையும், முரசையும் நல்ல நாளிலே போகவிடுத்து, ‘என்
வலிமை பொருந்திய தோள் பகைவரைப் பெறுக’ என்று தான் வழிபடு தெய்வத்தை மனத்தால் வணங்கி
அவ்வடதிசை நோக்கிச் சென்ற நாளில், யாரும் அவனை எதிர்க்கவில்லை. இமயமலை வரையிலும் சென்றான்.
இமயமலை பகையாகக்
குறுக்கிட்டுத் தடுத்தது. என்று முனிந்தவன் போல் அதன் பிடரிலே தன் புலிக்கொடியை எழுதித்
தான் விரும்பிய போரைப் பெறாமல் மீண்டான்.
2.
மாலதி கதை
மாலதி என்பவள் காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்திருந்த ஒரு
பார்ப்பனி. அவளுக்கு மகப் பேறில்லை. ஆதலால், அவள் கணவள் வேறு ஒரு ஒருத்தியை மறுமணம்
செய்து கொள்ள ஓர் ஆண் மகவைப் பெற்றான். ஒரு நாள் மாற்றாள் வெளியே சென்றிருந்தாள். அப்போது
குழந்தை பசியால் அழுதது. மாலதி பசியால் துடித்த மாற்றாள் குழந்தைக்குப் பால் ஊட்டினாள்.
பால் விக்கி, அக்குழந்தை இறந்தது. அவள் மாற்றாளும் கணவனும் தன்மேல் பழி சுமத்துவார்களே
என்று பயந்தாள். பல கோயில்களுக்கும் குழந்தையுடனே சென்று புலம்பினாள். இறுதியிலே சாத்தன்
கோயிலை அடைந்து இறந்த குழந்தையைப் பிழைக்க வைக்க வேண்டினாள்.
நள்ளிரவில்
சுடுகாட்டுக் கோட்டத்திலேயுள்ள பிணம் தின்னும் இடாகினிப் பேய் ஒன்று பெண் உருவில் வந்து
மாலதியிடம் இரக்கம் காட்டுவது பொல நடித்து, மாலதியிடமிருந்த குழந்தைப் பிணத்தை வாங்கி
விழுங்கி விட்டது. அதுகண்ட மாலதி மனம் கலங்கி வாய்விட்டு அழுதாள்.
அவள் துயர்
கண்ட தெய்வச் சாத்தன் என்பான் இரக்கமுற்றான். அவள் முன் தோன்றினான். ‘நீ செல்லும் வழியில்
சோலையிலே குழந்தையை உயிருடன் காண்பாய்’ என்றான். தானே குழந்தை உருக்கொண்டு அங்குக்
கிடந்தான். மாலதி அக்குழந்தையைத் தன் மாற்றாள் குழந்தை என்று நம்பினாள். அதனை எடுத்துச்
சென்று மாற்றாளிடம் கொடுத்தாள். அக்குழந்தை வளர்ந்து கல்வி கற்றான். தந்தை, தாயார்
இறந்தபின் அவர்களுக்கான இறுதிச் சடங்குகளையெல்லாம் நிறைவேற்றினான். பின் தேவந்தி என்பவளை
மணந்து எட்டு ஆண்டுகள் இல்லறம் நடத்தினான்.
அதன் பின் ஒருநாள் அவன் தேவந்திக்குத் தன் உண்மை உருவத்தைக்
காட்டினான். தான் தீர்த்த யாத்திரைக்குப் போவதாக சொல்லித் தன் கோயிலை அடைந்தான்.
3.
வம்பர்கள் சாபம்
பெற்ற கதை
கோவலன் கண்ணகியுடன்
மதுரைக்குச் செல்லும்போது சோழநாட்டில் காவிரிப்பூம்பட்டினத்தின் புறத்தே கவுந்தியடிகளின்
துணை கிடைத்தது. அம்மூவரும் திருவரங்கத்தின் அண்மையில் ஒரு பொழிலில் வழிநடந்த களைப்புத்
தீர அமர்ந்து இளைப்பாறினர்.
அங்குத்
திரிந்த வம்பப்பரத்தை யொருத்தியும், அவள் காதலனான வறுமொழி தூர்த்தன் ஒருவனும், இம்மூவரையும்
கண்டு வியந்து உரையாடத் துவங்கினர். மாதவத்தாட்டியாகிய கவுந்தியடிகளைப் பார்த்து,
‘மன்மதனும், இரதியும் போன்ற இவ்விருவரும் யாவர்’ என கோவலன் – கண்ணகி எழிலில்
மயங்கி வினவினர். ‘இவர்கள் என் மக்கள்’ என கவுந்தியடிகள் கூற, ஒரே வயிற்றில்
பிறந்த ஆணும், பெண்ணும் கணவனும், மனைவியும் ஆதற்கு உரிய தகுதி பெற்றவர்களோ? என நகைத்து
வினவினர். உடனே கவுந்தியடிகள் வெகுண்டு, ‘நீங்கள் முள்ளுடையக் காட்டில் முதுநரியாக’
எனச் சபித்தனர்.
அவர்கள் நரியுருப் பெற்று ஊளையிடுவதைக் கண்ட கோவலன், கண்ணகி
இருவரும் ‘அறநெறி நீங்கிய இம்மக்கள் தகாத உரை கூறினும் இதனை அறியாமை என்று கொண்டு
அருள் செய்ய வேண்டும்’ என வேண்டினர். பிறகு ஓராண்டு கழித்துச் சாபவிமோசனம் பெறக்
கவுந்தியடிகள் அருளினார்.
4.
வனசாரிணி தோன்றிய
கதை
கோவலன், கண்ணகி,
கவுந்தியடிகள் மூவரும் மதுரையை நோக்கிச் செல்லும்போது இடைவழியில் கோவலன் நீருண்ண ஒரு பொய்கைக்குச் சென்றான். அப்போது
கானகத்தில் வாழும் வனசாரிணி என்ற தெய்வம் கோவலனைத் தன்வயப் படுத்தும் நினைவுடன் மாதவி
தோழியாகிய வயந்தமாலையின் வடிவில் தோன்றியது.
வனசாரிணி, கோவலனின்
கால்களில் விழுந்து, கோவலன் மாதவியை வெறுத்து வராமல் சென்றபின், மாதவி தன்னை வெகுண்டு
பேசிக் கைவிட்டாள் எனவும், கோவலன் மதுரைக்குப் புறப்பட்டதை அவனை எதிர்வழியில் சந்தித்தோர்
சொல்ல தான் மதுரையை நோக்கி வந்து வணிகர்களுடன் நடந்து வந்ததாகவும், அந்த தெய்வம் கூறியது.
அப்போது ‘மயக்கும் தெய்வம் ஒன்று இவ் வலிய காட்டிலே உண்டு’ என மறையவன் சொன்னதை
நினைத்தக் கோவலன் கொற்றவையின் மந்திரத்தை உச்சரித்தான். உடனே வயந்தமாலையின் வடிவிலே
தோன்றிய அத்தெய்வம் ‘யான் வனசாரிணி, உனக்கு மயக்கம் விளைவித்தேன். நின் மனைவிக்கும்,
கவுந்தியடிகளுக்கும் என செயலைக் கூறாது போய் வருக’ என்று சொல்லி அத்தெய்வம் மறைந்து
விட்டது.
5. சாலினி தெய்வமுற்ற கதை
கோவலன், கண்ணகி, கவுந்தியடிகள் மூவரும் மதுரைக்குச் செல்லும் வழியில் கொற்றவைக் கோயிலொன்றில் தங்கி இளைப்பாறியிருந்தனர். அப்போது பூசைமகள் சாலினி ஆவேசங்கொண்டு, ‘வளமான வழிப்பறி வாழ்க்கை வேண்டுமேல் தெய்வக் கொற்றவைக்குப் பலிக்கடன் செய்யத் தவறாதீர்கள்’ என்று வேடர்களுக்கு முன் வாய்முழக்கம் செய்தாள். வேடர்கள் மறக்குடியில் பிறந்த ஒரு குமரியைக் கொற்றவையாகக் கோலஞ் செய்து பலி செலுத்தினர்.
தெய்வம் ஏறிய சாலினி கணவனோடு இருந்த கண்ணகியைச் சுட்டி, ‘இவளோ, கொங்கர் போற்றும் செல்வியாவாள்! குடமலையினை ஆண்டிருப்பவளாவாள்! பாண்டியனின் தென்தமிழ் நாட்டினிலே பாவையாக விளங்குபவளாவாள்! உலகோர் செய்த தவத்தால் துளிர்த்த தவக்கொழுந்து இவள்! ஒப்பற்ற மாமணியாக இவள் ஒளிவீசுவாள்’ என்று எதிரது அறிந்து புகழ்ந்தாள்.
Comments
Post a Comment