சிலப்பதிகாரக் கிளைக்கதைகள்
1. கவுந்தியடிகள் சொல்லும் கிளைக்கதைகள்
ந நளன் கதை
சூதாடு களத்தில் அரசினை இழந்தான் நளன். அதனால் தன் மனைவியுடன் கூடி வெம்மையான
கானகத்தை அடைந்தான். நளன் தன் மனைவியை வேண்டுமென்றே விரும்பிப் பிரிந்தவனல்லன். அவன்
மனைவியான தமயந்தி தீமையோடு வாடும் சிறுமையுடையவளும் அல்லள். அப்படியிருந்தும், அடர்ந்த
காட்டிலே தன் மனைவியை, இருளில் நடுச்சாம வேளையிலே விட்டுப் பிரிந்து சென்றான். நளன்
அவ்வாறு தன் மனைவியை விட்டுப் பிரிந்த அச்செயல் வினையால் நிகழ்ந்தது.
கண்ணகி சொல்லும்
கிளைக்கதை
1.
சிபிச் சக்கரவர்த்தி
கதை
உயர்திணை மக்களுக்கே அன்றி அவரல்லாத பிறவாகிய அஃறிணைப் பொருள்களுக்கும் குறையுணரந்து
முறை செய்த மன்னன் சிபியாவான். இச் சிபிசக்கரவர்த்தி அரசாளுகையிலட ஒரு நாள் புறா ஒன்றைப்
பருந்து துரத்த, அப்புறா சிபிமன்னனை அடைந்து அடைக்கலமாயிற்று. பருந்துக்கு உணவாக அமையவிருந்த
புறா காக்கப்பட்டது. பருந்துக்கோ பசிப்பணி நீங்கப் புலாலுணவு அளித்தல் வேண்டும். அந்நிறை,
குறையுணர்ந்த சிபிமன்னன் புறாவைக் காத்து அதனை ஒரு துலாக்கோலில் ஏற்றி அதனளவு தன் உடல்
தசையை அரிந்து பருந்துக்கு அளித்து அதன் பசியைப் போக்கினான்.
2.
ஆதிமந்தி- ஆட்டனத்தி
கதை
சோழன் கரிகாலனுக்கு ஆதிமந்தி என்னும் பெயருடைய மகள் ஒருத்தி இருந்தாள். அவள்
கல்வி, கேள்விகளில் சிறந்தவள். அவள் ஒருசமயம் தன்னுடைய கணவனாகிய சேரன் ஆட்டனத்தியோடு
கழார் என்னும் காவிரியாற்றின் துறையில் நீராடிக் கொண்டிருந்தாள். அப்பொழுது கணவனைக்
காவிரி நீர்பெருக்கு அடித்துக் கொண்டு போய்விட்டது.
ஆதிமந்தி தன்னுடைய கணவனைப் பல பக்கங்களிலும்
தேடினான். எங்கும் காணவில்லை. ‘கல்லைப் போன்ற தோளை உடையவனே! எங்கு சென்றாய்?’ என்று
கூவிக் கொண்டு கடற்கரைக்குச் சென்று அங்கு நின்றுகொண்டு புலம்பினாள். கடலானது இவளுடைய
கற்புடைமைக்கு இரங்கியது. அவனைக் கரையோரத்திற்குக் கொண்டு வந்து சேர்த்தது. கணவன் உயிர்மீட்ட
கற்பரசியாகிய ஆதிமந்தி மிகுந்த களிப்படைந்தாள். கணவனைத் தழுவிக் கொண்டு தன்னுடைய இருப்பிடம்
போய் சேர்ந்தாள்.
கற்பனைப் பாத்திரங்கள்
சொல்லும் கிளைக்கதைகள்
1.
நாளங்காடி பூதத்தின்
கதை
அசுரர்கள் தேவர்களை மிகவும் துன்புறுத்தினர். இதனை இந்திரன், சோழமன்னனாகிய முசுகுந்தனிடம்
வந்து முறையிட்டான். முசுகுந்தன் இந்திரனது முறையீட்டை ஏற்று அசுரர்களைத் தாக்கி விரட்டி,
அமராபதியைப் பாதுகாத்தான். தோற்ற அசுரர்கள் ஒன்று கூடினர். முசுகுந்தன் கண்ணும் மனமும்
இருளும்படி ஒரு கணையை எய்தினர். அச்சமயத்திலே ஒரு பூதந்தோன்றி முசுகுந்தனுக்கு ஒரு
மந்திரத்தை உபதேசித்தது. அந்த மந்திரத்தால் முசுகுந்தன் அசுரர்களின் மாயத்தை நீக்கி
அவர்களை வென்றான்.
இவ்வாறு வெற்றி பெற்ற முசுகுந்தனுக்குப் பரிசாக அந்தப் பூதத்தை முசுகுந்தனுடன்
சென்று, காவிரிப்பூம்பட்டினத்தைக் காக்கும்படி இந்திரன் கட்டளையிட்டான். அந்தப் பூதமும்
காவிரிப்பூம்பட்டினத்தை அடைந்து, நாளங்காடியிலே அமர்ந்து காவிரிப்பூம்பட்டினத்தைக்
காத்து வந்தது.
2.
ஊர்வசியின்
கதை
இந்திர சபைக்கு
அகத்தியர் வந்தார். அவரை இந்திரன் வரவேற்றான். நாரதர் யாழ் மீட்ட, தோரியமடந்தை வாரம்
பாட, ஊர்வசி நடனம் ஆடினாள். அப்பொழுது இந்திரன் மகன் சயந்தனை ஊர்வசி கண்டாள். காதல்
கொண்டாள். இதனால் ஊர்வசியின் ஆடலில் தவறு நேர்ந்தது. நாரதர் வீணையும் மங்கலத்தை இழந்தது.
இது கண்டு நாரதர் வெகுண்டார். ஊர்வசியையும் சயந்தனையும் சபித்தார். ஊர்வசி மாதவியாகவும்,
சயந்தன் வேணுவாகவும் (மூங்கில்) மண்ணுலகில் பிறந்தனர். அந்த மாதவியின் பரம்பரையில்
பிறந்தவள் தான் மாதவி.
மதுராபதித்
தெய்வம் சொல்லும் கிளைக்கதை
1.
பொற்கைப் பாண்டியன்
கதை
ஒரு நாள், கீரந்தை என்னும் ஏழை அந்தணன் காசி யாத்திரை புறப்பட்டான். அவன் மனைவி
கலங்கினாள். ‘அஞ்சாதே! அரசன் நீதி உன்னைக் காக்கும்’ என்று மனைவியைத் தேற்றிச் சென்றான்
அந்தணன். நகர்ச் சோதனைக்கு வந்த மன்னன் இம்மொழி கேட்டு, அவ்வீட்டை அந்த அந்தணன் மனைவி
அறியாமலே பாதுகாத்து வந்தான். சில மாதங்கள் இவ்வாறு சென்றன.
ஒரு நாள், அவ்வீட்டினுள் பேச்சுச் சத்தம் கேட்டு, அந்தணன் ஊர்மீண்டமை அறியாத
மன்னன் கதவைத் தட்டினான். யாரோ கள்வன் என்று அந்தணன் சந்தேகம் கொண்டான். அவ் அந்தணன்
மனைவி மன்னவன் காவலைத் தூற்றி கடுஞ்சொல் விடுத்தாள். அச்சொல் பாண்டியன் நெஞ்சைச் சுட்டதாகலின்,
கதவைத் தட்டிய தன்கையைத் தானே வெட்டிக் கொண்டான். இதனால், மக்கள் தமது அருமை மன்னனுக்குப்
பொற்கை சூட்டிப் போற்றினர்.
Comments
Post a Comment