மாவலி மன்னன்
இராமாயணத்தில் நான்காவதாக எடுத்தாளப்படும்
கிளைக் கதை. கோசிகனுடன் தொடர்ந்து சென்ற இராம இலக்குவர் வளம் கொழிக்கும் சோலை ஒன்றைக்
கண்டார். உள்ளத்தைக் கவர்ந்த அச்சோலையின் தன்மையினைப் பற்றி அறிய விரும்பினர் இருவரும்.
கோசிகன் தான் வேள்வி செய்வதற்குத் தேர்ந்தெடுத்த இடம். காசிப முனிவன் விரதம் மேற்கொண்டு
சித்திப் பெற்ற இடம். எனவே சித்தாச்சிரமம் என்றழைக்கப்பட்டது. அதன் சிறப்பினைக் கோசிகன்
கூறினான்.
மாவலி மன்னன்
கொண்டானிற் சிறந்த தெய்வமில்லை. என்று எண்ணும்
குலமகள் சிந்தைபோல் தூய்மை நிறைந்தது சோலை. அச்சோலையில் திருமால் நூறு ஊழிக்காலம் இருந்து
தவம் செய்தான்.
திருமால் சோலையிலிருந்து தவஞ்செய்து கொண்டிருந்த
காலத்தில் மாவலி என்னும் பெயருடைய அசுரர்க்கு அரசன் வாழ்ந்தான். அவ்வசுரன் தன் ஆற்றலால்
வையகத்தையும் வானகத்தையும் வெற்றி கொண்டு கைப்பற்றிக் கொண்டான். மாவலி தெளிந்த அறிவுடையவன்.
வானவரும் செய்ய முடியாப் பெரு வேள்வி செய்ய எண்ணம் கொண்டான். வேள்வி செய்து வையகத்துப்
பொருள் யாவையும் அந்தணர்க்கு அளிக்க உறுதி கொண்டான்.
மாவலி செய்ய எண்ணியிருந்த வேள்வியைப் பற்றி
வானவர் அறிந்தார். அச்சம் கொண்டார். மாவலியால் தங்களுக்கு இன்னல் விளையுமோ என்று ஐயுற்றார்.
சோலையில் தவஞ்செய்து கொண்டிருந்த மாயனைச் சரண் அடைந்தார். தங்களை மாவலியிடமிருந்து
காக்குமாறு வேண்டினர். அஞ்சி அபயம் வேண்டிய தேவர்களுக்குத் திருமால் அருள் செய்தான்.
தேவர்களுக்கு அருள் செய்ய திருவுளம் கொண்ட திருமால் காசிப முனிவருக்கு மகனாகத் தோன்றினான்.
குறுகிய வடிவமுடன் தோன்றினான்.
மெய்யுணர்வுடையாரே அறியத்தக்க திருமால்,
சிறிய வடிவுடன் மாவலி வேள்விசெய்து கொண்டிருந்த இடத்தை அடைந்தான். வாமனனாக வந்த திருமாலைக்
கண்ட மாவலி உள்ளம் உவந்து வரவேற்றான். ‘உன்னிலும் சிறந்த அந்தணர் இல்லை. உன்னைக்
காணப் பெற்றதால் என்னிலும் சிறந்த பேறு பெற்றவர் உலகில் எவருமிலர்’ என்று புகழ்ந்துரைத்தான்
மாவலி. புகழுரை கேட்ட வாமனன், ‘உன்னிடம் வந்து இரப்போர்க்கு அவர்கள் எண்ணுவதை விட
மிகுதியாகக் கொடுப்பவனே! பெருந்தகையோனே! உன்னிடம் ஒன்றை வேண்டி வந்தவரே சிறப்புடையோர்,
மற்றவர் சிறப்பற்றவரேயாவர்’. என்று மாவலியின் கொடைச் சிறப்பைப் பாராட்டினான்.
வாமனன் புகழுரை கேட்டு மயங்கிய மாவலி வாமனன் வேண்டும் பொருளைக் கேட்டுப் பெறுமாறு
கூறினான். தன் கால் அடியால் மூன்றடி மண் வேண்டும் என்று இரந்தான் வாமனன். உடனே தந்ததாக
வாக்களித்தான் மாவலி. கேட்டதைக் கொடுப்பதாக மாவலி உறுதி கூறியதைக் கேட்டதும் அருகிலிருந்த
அரசகுரு சுக்கிரன் மாவலியின் கொடையைத் தடுத்தான். ‘உன் முன்னர்க் குறளனாய் நிற்பவனை
நீ அறிந்தலை. அவன் கொண்ட தோற்றம் பொய்யானது. அண்டமும், அகண்டமும் மேனாள் உண்டவனே இவ்வடிவு
கொண்டு வந்துள்ளான். இது வஞ்சகச் செயல். அதனை நீ உணராது வரம் கொடுத்து விட்டாயே’ என்று உண்மையை மாவலிக்கு உணர்த்தினான்.
சுக்கிராச்சாரியார் சுட்டிக் காட்டிய பின்னரும் மாவலி மனம் கலங்கவில்லை. கொடுத்த
வரத்தை இல்லை என்று மறுக்கவுமில்லை. மாறாகத் தன் குருவிற்கே அறிவுரை கூறினான். என்னிடம்
இரந்து வேண்டிய நாராயணன் கை எனில் அது நான் பெற்ற பெரும் பேறாகும். தானம் அளிப்பவர்
தானம் வேண்டி நிற்பவை உறவினர் என்றோ பகைவர் என்றோ பிரித்துக் காண்பதில்லை. மேலோர் கைப்பொருள்
இருக்கும் காலத்தில் பிறர்க்குக் கொடுத்து இசை வளர்ப்பர். மறுமையில் வீடுபேறடைவர்.
அவ்வாறு கொடுப்பார்க்குக் கொடும்பகை கொடாமையேயாகும். ஈயாமையைச் சான்றோர் விலக்கினர்.
”எடுத்தொருவ ருக்கொருவ ரீவதனின் முன்னம்
தடுப்பது நினக்கழகி தோதகவில் வெள்ளி
கொடுப்பது விலக்குகொடி யோர்தமது சுற்றம்
உடுப்பதுவு முண்பதுவு மின்றியொழி யுங்காண்”
தன் உள்ளக்
கருத்தினை மாவலி சுக்கிரனுக்குக் கூறிபின் வாமனனை நோக்கி, மூன்றடி மண்ணைக் காலால் அளந்து கொள்க என்றனன்.
நெடியமால் குறிய கையில் நீர் வார்த்தான் மாவலி.
நீர் வார்க்கப்பட்டதும் வாமனன் நெடிது உயர்ந்தான்.
கண்டோர் வியக்க முண்ணும் விண்ணும் தொட நின்றான். உயர்ந்தார்க்கு உதவிய உதவி போல் உயர்ந்து
நின்றான். ஊன்றிய கால் மண்ணுலகு எங்கணும் பரந்தது. விண்ணுலகு சென்ற கால் இடம் பெறாது
திரும்பியது. மூன்றாம் அடிக்கு நிலத்திலும் வானிலும் இடமில்லை. எனவே, வரம் தந்த மாவலியின்
தலையை மூன்றாம் அடிக்கு இலக்காக்கி அவனை பாதாளத்தில் அழுத்தி வானவரைக் காத்தான். இந்திரனுக்கு
உரிய உலகை மாவலியிடமிருந்து பெற்று மீண்டும் இந்திரனுக்கு அளித்தான். பின் பாற்கடலை
அடைந்தான் பரந்தாமன். அப்பரந்தாமன் இருந்து தவம் செய்த சித்தச்சிரமத்தைத் தன் வேள்விக்கு
ஏற்ற இடமாகக் கொண்டான் கோசிகன். அதன் வரலாற்றையும் கூறி முடித்தான்.
Comments
Post a Comment