நளாயிணி
திரௌபதி
மணத்திற்காக சுயம்வரம் நடந்தது. அங்குக் கூடிய மன்னவர்கள் வானில் திரியும் எரி பன்றியை வீழ்த்தும்
வகையறியாது வாடினர். அதனை விசயன் வீழ்த்தினான். பாஞ்சாலியின் தந்தை துருபதன். பாண்டவரைத் தன் மாளிகைக்கு அழைத்துச் சென்றான். ஐவரும் பாஞ்சாலியை
மனைவியாக ஏற்றுக் கொள்வதாகக் கூறியதைக் கேட்டுத் திகைத்தான் துருபதன். பாஞ்சாலன் அவைக்கு
வந்த வியாச முனிவன் துருபதன் திகைப்பைப் போக்கும் பொருட்டு நளாயிணி வரலாற்றைக் கூறினான்.
கனவில்
தோன்றி காரிகையாம் பாஞ்சாலி பழம் பிறப்பில் நளாயணி என்னும் பெயருடன் விளங்கினாள். மௌத்கல்யன்
அவள் கணவனாக விளங்கினான். மௌத்கல்யன் தன் மனைவியின் கற்பின் உறுதியைச் சோதித்து அறிய
விரும்பினான். கிழவனாகவும், கொடிய தொழு
நோயனாகவும் தன்னைக் காட்டிக் கொண்டு நளாயிணியைத் துன்பம் செய்தான். கற்பில் வழாத
அப்பெண் எல்லாத் துன்பத்தையும் பொறுத்துக் கொண்டாள். கணவன் உண்டபின் எஞ்சிய சோற்றில் அவன் விரல் அழுகி விழவும்
அருவருப்புக் கொள்ளாது உண்பாள் அவள். கொடும் காம நோய் கொண்டு தான் விரும்பிய இன்பம் அடையப் பெறாது
துன்பம் அடைந்தாள். நளாயிணியின் பொறுமை கண்டு மௌத்கல்யன் அவளைப் பாராட்டினான். ‘வடமீனும் உனக்கு
நிகராக மாட்டாள், நீ வேண்டும் வரம் கேட்டுப் பெறுக’ என்றான்.
கணவன்
சொற்கேட்ட நளாயணி, ‘நின் நேயம் என்றும் பிரியா நலன் நேர்க’ என்று வேண்டினாள். அவள் விரும்பிய வரம் அளிக்கப்பட்டது. இருவரும் பற்பல
காலம் பல்வேறு வடிவங்களில் ஒன்றாய்க் கூடி வாழ்ந்தார். இறக்கும் காலத்தும் மீண்டும் மௌத்கல்யனே தன் கணவனாக வாய்க்க
வேண்டும் என்று விரும்பினாள். இறந்த பிறப்பில் இந்திரசேனை என்னும் பெயருடன் அவனை அடைந்தாள், அவனோ இல்லற
வாழ்க்கையை வெறுத்துத் துறவறத்தில் நாட்டம் கொண்டான். தன் எண்ணம் முற்றுப் பெற இந்திரசேனையை விட்டுப் பிரிய உறுதி
செய்தான். அறிந்த அவள்
செய்வகையறியாது திகைத்தாள்.
உமையொரு பாகனை நோக்கித் தவம் செய்யுமாறு மனைவியைப் பணித்துவிட்டு அகன்றான். அவளும் அவ்வாறே
தவம் செய்தாள். (யாகசேனன் – துருபதன் மகளாகப்
பிறந்து ஐவரை மணப்பாய் என்று மௌத்கல்யன் சபித்த பின் சிவனை நோக்கி தவம் செய்ததாக முதல்
நூல் கூறும்) தவம் செய்த
தையல் முன் சிவன் தோன்றினான். ‘கணவன் தருக’ என்று ஐந்து முறை கூறியதால் ஐவரை மணந்து இன்பம் பெறுமாறு
அருளினான் அரி.
சிவனுடைய
மொழியறிந்து கங்கையில் மூழ்கி தன்னந்தனியாக நின்று அழுதனள். கண்ணீர் விட்டுக்
கொண்டிருந்த காரிகை முன் வாசவன் வந்தான். கண்ணீருக்குரிய காரணம் யாதென வினவிக் கொண்டு அவளைக் நெருங்கினான். வந்தவனை முன்
தொடர்பால் வருக என்றனள். இந்திரன் சிவனை மதியாது சென்றதால் சிவன் சினந்தான். புவனத்து எவரும்
நகையாட இந்திரன் புலம்பி வீழ்ந்தான். விழுந்த வாசவனுக்கு ஒரு குகையுள் அடைப்பட்டிருந்த நாலு இந்திரர்களைக் காட்டினான்.
ஐவரும் இவளுக்கு கணவன் ஆவர் என்றான்
உமையொரு பாகன். அவ்வைவரே பூமியில் பாண்டவராய்த் தோன்றினர். தருமன், வீமன், நகல, சகாதேவர்
நால்வரும் பிலத்தில் அடைபட்டிருந்த இந்திரர் நால்வராவர். நெற்றிக் கண்ணனின் சினத்திற்கு
ஆளான இந்திரன் அருச்சுனன் ஆவான். அருமா தவத்தின் எல்லை கண்ட இந்திரசேனை – பாண்டவர்
ஐவரையும் மணப்பதில் பிழையில்லை என்று கூறி முடித்தான் வியாசன்.
Comments
Post a Comment