குந்தி தேவி
சூரன் என்பவன் யது குலத்தில் தோன்றியவன். அவன் மகள் பிரதை என்னும் பெயரினள்.
சூரனுடைய அத்தை மகன் குந்திபோசன். குந்திபோசனுக்குக் குழந்தைப்பேறு இல்லை. எனவே, சூரன்
தன் மகள் பிரதையைக் குந்திபோசனுக்கு அளித்தான். குந்திபோசனிடம் வளர்ந்து வந்த்தால்
பிரதைக் குந்தி என்று அழைக்கப்பட்டாள்.
ஒருநாள் துருவாச முனிவன் குந்தி போசனைக்
காண வந்தான். கழங்கு, அம்மானை, ஆடல், ஊசல் முதலிய விளையாட்டுக்களைத் துறந்தும் தன்
தோழியரை மறந்தும் குந்தி, வந்த முனிவனுக்குச் சிறு குறையுமின்றிப் பணிவிடை செய்து வந்தாள்.
தன் அறிவுத்திறனால் முனிவன் முனியாது யாவற்றையும் செவ்வனே செய்து வந்ததைக் கண்டு முனிவன் மகிழ்ச்சியடைந்தான். துருவாசன் தனக்குப்
பணிசெய்த குந்திக்கு அரியதொரு வரம் அருளினான். ”தெரிவை கேள் எனச் செவிப்படுத்து
ஒரு மறை தேவரில் யார் யாரைக் கருதி நீ வரவழைத்தனை அவரவர் நின் கரம் சேர்வர். தம்மை
ஒப்பதோர் மகவையும் தருகுவர்” என்று மறையவன் மந்திரம் சொன்னான்.
முனிவன் விடைபெற்றுச் சென்றபின் தன் செல்வமனையை
அடைந்தாள். முனிவன் அருளிய மந்திரத்தின் உண்மையைக் காண அவள் உள்ளம் விரும்பியது. நிலா
முற்றம் அடைந்தாள். சூரியனை மனத்தில் எண்ணி மந்திரத்தை ஓதினாள். அக்கணமே காய்கதிர்ச்
செல்வனும் அவள் முன் தோன்றினான். கன்னியாகிய தன்னை அணைக்க வந்த அருணனைக் கண்டு அஞ்சினாள்.
அவள் அச்சத்தை நீக்கியதுடன் மீண்டும் கன்னியாகும் வரமும் தந்தான் சூரியன். பின் அவன்
குந்தியைக் கூடினான். ஆயிரம் கரத்தோன் அணைப்பில் இன்பம் பெற்றாள் குந்தி. அருணன் அவளிடம்
விடைபெற்றப்பின் பிரிந்தான். நடந்தவெல்லாம் கனவு என்னுமாறு நடந்து முடிந்ததைக் கண்டாள்
கன்னியாம் குந்தி. அவள் கருக்கொண்டாள்.
குந்தி ஆண் மகவு ஒன்றைப் பெற்றெடுத்தாள்.
இந்திரன் முதலிய தேவர்களும் இரந்ததைக் கொடுக்கவல்ல மாமகனை ஈன்றாள். மாமணி கவச கண்டலத்துடன்
குழந்தை பிறந்தது. அருணன் அருளிய வரத்தால் மீண்டும் குந்தி கன்னியானாள். பழிக்கு அஞ்சிய
குந்தி குழந்தையைப் பேழை ஒன்றில் வைத்து ஆற்றில் செல்லவிட்டாள். கங்கை பேழையையும் அதனுள்ளிருந்த
குழந்தையையும் தன் அலையாகிய கைகளால் தழுவி எடுத்துத் தேர்ப்பாகன் ஒருவனிடம் சேர்த்தது.
அம்மகவை எடுத்தவன் அதிரதன் என்பவன். அதிரதன் மனைவி இராதை. இருவரும் அம்மகவைப் பேணி
வளர்த்தனர். அவனுக்குப் படைக்கலப் பயிற்சி யாவும் அளித்தார். படைப்பயிற்சியில் தேர்ந்தான்.
பரசுராமனிடம் வில்வித்தை கற்றான். துரியோதனனுக்குத் தக்க நண்பனாவான். துரியோதனன் தயவால்
அங்க நாட்டிற்கு அதிபதியானான். அவனே கன்னன்.
குந்தி கன்னியாக மாறிய பின் குருகுலத்தரசன்
பாண்டுவை மணந்தாள். பாண்டு பெற்ற சாபத்தின் விளைவால் பாண்டுவிற்குக் குந்தி வயிற்றில்
குழந்தைகள் பிறக்கவில்லை. துருவாச முனிவன் அருளிய வரத்தால் எமன், வாயு, இந்திரன் ஆகிய
தேவர்களைக் கூடி முறையே தருமன், வீமன், விசயன் ஆகிய மூன்று மக்களைப் பெற்றாள். பாண்டுவின்
மற்றொரு மனைவி மாத்திரி. மாத்தரிக்கும் மந்திரத்தைக் கூறினாள் குந்தி. அதன் பயனாக மாத்திரி
வயிற்றில் நகுலனும் சகாதேவனும் தோன்றினர். அசுவினி தேவர்க்கு மாத்திரியிடம் இருவரும்
பிறந்தனர்.
Comments
Post a Comment