கங்கையின் கதை
நான்முகன், அவையில் தேவர்கள் சூழ வீற்றிருந்தான்.
அச்சமயம் கங்கைதேவி அந்த அவைக்கு வந்தாள். அவள் அவையினுள் நுழைந்தபொழுது காற்று கடும்
வேகத்துடன் வீசியது. அதனால் அவள் ஆடை விலகியது. அவையில் அமர்ந்திருந்த அமரர்கள் தங்கள்
கண்களை மூடிக் கொண்டனர். ஆனால் வருணன் மட்டும் கண்களை மூடவில்லை. அவன் பெரு வியப்புடன்
கங்கையை உற்று நோக்கினான். அதனை அறிந்தான் நான்முகன். சினம் கொண்ட மலரோன், வருணனை மண்ணுலகில்
மனிதனாகப் பிறக்குமாறு சாபம் இட்டான். நாணி நின்ற நங்கையாம் கங்கையை விளித்து, பூமியில்
பிறந்து வருணனை மணந்து சில காலம் வாழ்ந்தபின் மீண்டு வருக என்றான்.
வருணன் குருகுலத்தில் சந்தனு என்னும் பெயருடன்
தோன்றினான். நாட்டை ஆண்டு வருங்கால் வேட்டையில் நாட்டம் கொண்டான் சந்தனு. ஒருநாள் காடு
நோக்கிச் சென்றான். காட்டில் அலைந்து திரிந்து விலங்குகளை வேட்டையாடினான். களைப்பு
மிகவே, நீர் பருக விரும்பி கங்கையின் கரையை அடைந்தான். கங்கை அழகிய பெண் வடிவம் எழிலையும்
பேரொளியினையும் கண்ட சந்தனு அவளிடம் மயங்கினான்.
கண்களால் அவள் அழகைப் பருகினான். ‘அணங்குகொல் ஆய் மயில் கொல்’ என ஐயம் கொண்டான். கண்
இமைத்தலாலும், கால் நிலத்தில் தோய்ந்திருந்ததாலும் மண்ணகப் பெண்ணே எனத் தெளிந்தான்.
தான் பெற்ற சாபம் கழியும் காலத்தை எதிர்பார்த்திருந்த கங்கை சந்தனுவைக் கண்டு மகிழ்ச்சி
கொண்டாள். சந்தனு கங்கையிடம் தன்னை மணந்து கொள்ளுமாறு வேண்டினான்.
‘நான் செய்யும் செயல்கள் எதுவாயினும் காரணம்
கேட்காமல் பொறுத்திருக்க வேண்டும். அவ்வாறு இருப்பதாக இருந்தால் மணந்து கொள்ளத் தடையில்லை.
என்றாவது என் செயலை மறுத்துக் கூறத் தலைப்பட்டால் அன்று உன்னை விட்டுப் பிரிவேன்’ என்று
சந்தனுவை நோக்கி மொழிந்தாள். அவள் விரும்பியது போல் நடப்பதாக வாக்களித்தான் சந்தனு.
கங்கை மணம் செய்து கொள்ள இசைந்தாள். சந்தனு கங்கையை மணந்து கொண்ட செவ்வனே நாட்டை ஆண்டு
வந்தான்.
மன்மதனும் இரதியும் போல் சந்தனுவும் கங்கையும்
இல்லற இன்பம் துய்த்து வாழ்ந்தனர். மான்விழி மங்கை கருக்கொண்டாள். பத்தாவது திங்களில்
அழகிய மகவு ஒன்றை ஈன்றாள். பிறந்த குழந்தையைக் கங்கை ஆற்றில் வீழ்த்திக் கொன்றாள்.
கங்கையின் செயல் கண்டு கலங்கினான் வேந்தன். ஆனால் வாய் திறந்து ஒன்றும் கூறவில்லை.
அவளுக்குக் கொடுத்த வாக்கை நினைத்து வாளாவிருந்தான். ஆனால் அவன் நாட்டு மக்கள் கங்கையின்
செயல் கண்டு நடுங்கினர். ஈரமில்லா நெஞ்சத்தாள் ஒருத்தி தங்கள் மன்னனுக்கு மனைவியாக
வாய்த்ததை எண்ணி வருந்தினர். மங்கையர் கண் புனல் சொரிந்தது.
கங்கை எட்டாம் முறை கருக்கொண்டாள். சந்தனுவின்
மனம் சிற்றின்பத்தை வெறுத்தது. வேதனை நெஞ்சை நிறைத்தது. கங்கை குழந்தையை ஈன்றது. விரைந்து
சென்று கையில் எடுத்தான். எட்டாவது குழந்தையாவது தனக்குக் கிட்ட வேண்டும் என்ற மன உறுதியுடன்
மன்னவன் காணப்பட்டான். ‘நீ என்னை வெறுக்கினும் வெறுக்க, இப்புதல்வனை அழிக்க விடேன்’,
என்று உறுதியுடன் பற்பல கூறினான். ‘இன்று இரங்கி நிற்கும் நீ எழுவரை நான் அழித்த காலத்தில்
என் செய்தனை?’ என்றாள். அவள் செயலுக்குத் தக்கக் காரணம் இருக்க வேண்டும் என்று எண்ணியதால்
ஒன்றும் செய்யாது இருந்ததாகக் கூறினான். மேலும், அவள் செய்கைக்கு உரிய காரணத்தைக் கூறுமாறும்
வேண்டினான்.
முதற்கண் நான்முகன் அவையில் நிகழ்ந்ததையும்
நான்முகன் சாபத்தையும் நவின்றாள். வானுலகிலிருந்து வரும்பொழுது நடந்தை அடுத்துக் கூறினாள்.
சாபம் பெற்ற கங்கை மண்ணை நோக்கி வரும்பொழுது வழியில் வதங்கிய வதனத்தினரான வசுக்கள்
என்னும் தேவர் பூமியை நோக்கி இறங்கி வருவதைக் கண்டாள். கங்கையைக் கண்ட வசுக்கள் அவளை
வணங்கினர். கங்கையை நோக்கி மண்ணிடை இழியும் காரணம் எது எனக் கேட்க, தான் பெற்ற சாப
வரலாற்றை அவர்களுக்குக் கூறினாள். வரலாற்றினை அறிந்த வசுக்கள் தம் வரலாறு கூறலாயினர்.
எட்டு வசுக்களுள் முதல்வன் தன் மனைவி சொற்கேட்டு
அறிவு நீங்கப் பெற்றான். அவன் செய்த அடாச் செயலுக்கு எழுவரும் துணை நின்றனர். முதல்வன்
மனைவி சொற்கேட்டு வசிட்டன் மனையில் வாழ்ந்த காமதேனுவைக் கவர்ந்தனர் எண்மரும். நடந்ததைச்
சிந்தையில் தெளிந்தான் வசிட்டன். எனவே சினம் கொண்டான். ‘உம் பதம் இழந்து மண்ணில் பிறக்கக்
கடவீர்’ என்று சாபம் தந்தான். முனிவன் அடிகளில் வீழ்ந்து சாப விடை வேண்டினர். முனிவு
ஆறிய முனிவன், ‘பெண் சொற் கேட்டு காமதேனுவைக் களவாடிய பிரபாசனன் மண்ணில் பெண்ணின்பம்
இழந்து நீண்ட காலம் வாழ்ந்து பின் விண்ணுலகை அடைவான், பிறர் பிறந்த உடனே மீண்டும் உம்
பதம் பெறுவீர்’ என்று இரங்கிக் கூறினான். இவ்வாறு தாம் பெற்ற சாபத்தைக் கூறி வருந்தினர்
வசுக்கள். வருந்தியவர்களைச் சில வார்த்தைகள் கூறித் தேற்றினாள் கங்கை. பின், ‘நான்
பூவுலகில் குருகுலத்து அரசனை மணந்து வாழும் காலத்தில் என் வயிற்றில் நீங்கள் தோன்றுவீர்,
தோன்றியவுடன் உங்களைக் கொன்று உங்கள் சாபம் நீங்கத் துணையாவேன். பிரபாசனனை தந்தை விரும்பி
ஏற்கச் செய்து என் பிறப்பினையும் மாற்றுவேன்’ என்று உறுதி கூறினாள்.
தன் வரலாற்றையும், சந்தனுவின் பிறப்பினையும்,
கொல்லப்பட்ட குழந்தைகளின் வரலாற்றையும் கூறிய கங்கை, எட்டாவது மகனைத் தன்னுடன் அழைத்துக்
கொண்டு அவ்விடம் விட்டகன்றாள். தக்கப் பருவம் வந்த பின் தந்தையை அடைவான் என்று உறுதி
கூறியபின் பிரிந்தாள். கங்கையும் மைந்தனும் பிரியவே கலங்கினான் காவலன் சந்தனு. அவர்கள் நினைவாகவே ஆண்டுகளைக் கழித்தான்.
ஆண்டுகள் சில உருண்டோடின. சந்தனு மன்னன்
மீண்டும் வேட்டையில் விருப்பம் கொண்டு காட்டிற்குச் சென்றான். வேட்டைக்குப் பின் கங்கைக்
கரையை அடைந்தான். பழைய நினைவுகள் உள்ளத்தில் அலை அலையாகத் தோன்றின. மறைந்த மனைவியும்
மகனும் வாராரோ என்று எண்ணினான். பைங்கொடிப் பந்தரும், பூஞ்சோலையும் தேடியலைந்தான்.
உற்ற மனைவியும் ஒரு மகனும் பிரிந்த காலத்தை நினைந்து வாடிய முகத்தானாகக் கங்கை நீரை
உற்று நோக்கினான். அப்பொழுது ஒரு வீரன் தடந்தோளுடையவனாய்க் கையில் வில்லும் அம்பும்
தாங்கி வந்தான். வந்தவனைக் கண்ட சந்தனு, அவன் வாசவன் மைந்தனோ, விடையவன் விடலையோ என்று
வியந்தான். அங்குத் தோன்றிய தோன்றல் சந்தனுவிடம் மோகனக் கணையைச் செலுத்திப் பின் கங்கையில்
மறைந்தான். சந்தனு உணர்வற்றுத் தரையில் சாய்ந்தான்.
காதலன் அயர்வும் திருமகன் கங்கைப்புனலில்
ஒளித்ததும் கண்ட கங்கை உள்ளம் உருகினாள். மைந்தனுடன் மன்னன் முன் தோன்றினாள். அவன்
அடிகளில் வணங்கி, மைந்தனை தந்தை கையில் அளித்தாள். ‘மன்னவா! நான் கூறுவதைக் கேட்பாயாக.
இவனே உன் மைந்தன். இவன் பெயர் தேவ விரதன் என்பது. வசிட்டன் அருளால் பல்லோர் ஆய்ந்த
நூல் வெள்ளம் கரை கண்டவன். பரசுராமன் அருளால் வில்வித்தையில் வித்தகனாக விளங்குபவன்.
மிகப்பெருந்தவம் புரிந்தனை. ஆதலின் இத்தகு மகன் உனக்கு வாய்த்தான். நின்னை வெல்ல வல்லார்
இல்லை. உகப்புடன் இவனைத் துணையாகக் கொண்டு உனக்குரிய நாட்டை ஆள்க’ இதைச் சந்தனுவிற்குக்
கூறிய பின் கங்கை கங்கையில் கரந்தனள். மகனைக் கண்ட மகிழ்ச்சியில் மனைவியின் பிரிவுத்துயர்
நீங்கியவனானான். தன் மகனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டினான். அம்மகனே வீடுமன் (பீஷ்மன்).
Comments
Post a Comment