துரோணன்
வேதங்களில் வல்ல பரத்துவாசன் கங்கைக் கரையில்
வேள்வி செய்து கொண்டிருந்தான். கங்கையாற்றில் நீராட வந்தாள் தேவ மங்கை மேனகை. அவளைக்
கண்ட முனிவன் அவள் அழகில் மயங்கினாள். ஆசை கொண்டான். அதன் காரணமாக வெளிப்பட்ட வீரியம்
துரோண கும்பத்தில் விழுந்தது. கும்பத்தில் தோன்றிய மகன் துரோணன் என்று அழைக்கப்பட்டான்.
துரோணன் வசிட்ட முனிவனை ஒத்தவன். வேதங்களை ஓதிச் சிறப்புப் பெற்றான். பரசுராமனிடம்
வில் வித்தையைக் கற்றுத் தேர்ந்தான்.
துரோணனைப் பற்றி அறிந்த வீடுமன் தூதுவன்
ஒருவனை அனுப்பி துரோணனை அத்தினாபுரிக்கு அழைத்தான். கிருபாச்சாரியாருடன் பிறந்த கிருபி
என்பவளை மணம் செய்தான். அசுவத்தாமன் என்ற அருமகனைப் பெற்றான். அத்தினாபுரிக்கு அழைத்து
வரப்பட்ட துரோணனைத் தக்க முறையில் வரவேற்றான் வீடுமன். துரோணன் தன் வாழ்க்கையில் நடந்ததொரு
நிகழ்ச்சியை வீடுமனிடம் கூறினான்.
பாஞ்சால நாட்டை ஆண்டுவந்தான் துருபதன் என்னும்
அரசன். துருபதன் இளமையாக இருந்த பொழுது துரோணனுக்கு உற்ற நண்பனாக விளங்கினான். ஏழை
அந்தணனாகிய துரோணனிடம் அளவற்ற அன்பு செலுத்தி வந்தான் துருபதன். பரசுராமனிடம் தான்
பெற்ற ஆக்கினேயாத்திரத்தை துரோணனுக்கு உவந்து அளித்தான். இரவும் பகலும் பிரியாது வாழ்ந்தனர்
இருவரும். நட்பின் மிகுதியால் ஒருநாள் துருபதன் துரோணனிடம், ஆட்சிப் பொறுப்பு என் கைக்கு
வந்ததும் பாதி நாட்டை உனக்கு அளிப்பேன் என்று கூறினான். அவன் உரைத்ததைக் கேட்ட துரோணன்
அவன் நட்பைப் பாராட்டினான். சில ஆண்டுகளில் துருபதன் ஆட்சியைப் பெற்றான்.
பொருளாசையைத்
துறந்து தவமே சிறந்த செல்வம் என மனத்தில் கொண்டு வனத்தில் வாழ்ந்தான். கிருபியை மணந்து
இல்லற நெறி நின்றான். சிவனருளால் பிறந்த மகவு, வறுமையால் வாடியது. குழந்தை ஆவின் பாலைக்
கண்டறியவில்லை. தன் நண்பன் துருபத மன்னனை அடைந்து தன் வறுமையைப் போக்க எண்ணினான் துரோணன்.
ஆனால் துருபதனோ பராமுகமாக இருந்தான். துரோணனை விளித்து நீ யார்? என வினவினான். உன்
நண்பன் என்று விடை பகர்ந்தான் துரோணன். நானோ மன்னவன், நீ முனிவன். உனக்கும் எனக்கும்
எவ்வகையில் நட்பு இருத்தல் கூடும். என்று எள்ளி நகையாடி இகழ்ந்துரைத்தான்.
துருபதனால்
இகழ்ந்துரைக்கப்பட்ட துரோணன், பாதி நாட்டைக் கொடுப்பதாகக் கூறிய நீ, சொன்ன சொல் தவறினாய்.
இப்பொழுது நான் கூறும் வாய்மை தவறாது நிறைவேற்றுவேன். நீ கூறிய படி உன் நாட்டில் பாதியைக்
கொள்வேன். நடக்கும் போரில் உன்னைத் தேருடன் கவர்வேன் என்று வஞ்சினம் சாற்றினான். தான்
கூறிய வஞ்சினம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை வீடுமனிடம் மொழிந்தான்.
துரோணன்
கூறிய வரலாற்றைக் கேட்ட வீடுமன் நூற்றுவர்க்கும், பாண்டவர்க்கும் படைப் பயிற்சி அளித்து
உன் வஞ்சினத்தை நிறைவேற்றுக என்றான். நூற்று ஐவரும் துரோணனிடம் வில் வித்தையைப் பயின்றார்.
தன் மாணாக்கருள் விசயன் வில்லாற்றல் கண்டு துரோணன் வியந்தான். ஆசானிடத்து மிக்க அன்பு
கொண்டான் அருச்சுனன். பார்த்தனே தன் ஆசான் வஞ்சினத்தை நிறைவேற்ற பார்வேந்தன் துருபதனை
வென்று தேர்க்காலில் கட்டி இழுத்து வந்து துரோணன் முன் நிறுத்தினான். அதனால் துரோணனுடைய
பேரன்பைப் பெற்றான் விசயன்.
Comments
Post a Comment