கங்கை
நதி தோன்றிய வரலாறு
சகரன் இரகுவம்சத்தில் தோன்றிய அரசன். அவன்
அயோத்தியிலிருந்து ஆட்சி செய்து வந்தான். சகரனுக்கு மனைவியர் இருவர். ஒருத்தி விதர்ப்ப
நாட்டு அரசன் மகள். இளையவள் காசிபமுனிவருக்கும் விந்தை என்பாளுக்கும் பிறந்தவள். பெயர்
சுமதி. விதர்ப்ப நாட்டவள் பெற்ற மகன் அசமஞ்சன் என்று அழைக்கப்பட்டான். சுமதி கருடனுக்குப்
பின் பிறந்தவள் என்பர். சுமதி வயிற்றில் தோன்றியது கரு. கருவிலிருந்து தோன்றிய பிண்டம்
வெடித்துச் சிதறியது. அறநெறி நிற்கும் அறுபதினாயிரம் மக்கள் தோன்றினர்.
மூத்தவளுக்குப் பிறந்த அசமஞ்சன் சிறுகுழந்தைகளை எடுத்து ஆற்றிலிட்டுக் கொன்று
மகிழ்ந்து வந்தான். அதனை அறிந்த சகரன் அசமஞ்சனை அருங்கானத்திற்கு ஓட்டினான். காட்டை
அடைந்த அசமஞ்சன் கடுந்தவம் இயற்றலானான். தன் தவப்பயனால் இறந்த குழந்தைகளை உயிர்ப்பித்தான்.
சகரன் மக்கள் பதினாயிரவரும் அளவில்லாத ஆற்றல் பெற்று விளங்கினர். தன் மக்களின்
வரம்பில் வலிமையைக் கண்டு மகிழ்ந்த சகரன் அசுவமேத யாகம் செய்ய விரும்பினான். அவன் எண்ணம்
அறிந்த அமரர் அஞ்சினர். தம் தலைவன் இந்திரனிடம் முறையிட்டார். இமையவர் தலைவன் மாயையால்
வேள்விக் குதிரையை பாதாள உலகில் தவம் புரியும் கபில முனிவன் இருப்பிடத்தில் ஒளித்து
வைத்தான்.
அசமஞ்சனுக்குப் பிறந்தவன் அஞ்சுமான். அஞ்சுமானே வேள்விக் குதிரைக்குப் பின்
சென்றவன். குதிரையைக் காணாது திகைத்தான். கலங்கினான். பூவுலகு எங்கணும் தேடினான். எங்கும்
தேடியும் குதிரை அகப்படாமையால் அஞ்சுமான் தன் பாட்டன் சகரனிடம் நிகழ்ந்ததைக் கூறினான்.
செய்தியறிந்த சகரன் தன்மக்கள் அறுபதினாயிரவரையும் அழைத்தான். தன் வாட்டத்தைப் போக்க
வேண்டினான். கேட்ட மக்கள் கிளர்ந்து எழுந்தனர். வடவைக் கனல்போல் சினம் கொண்டனர். மண்ணுலகில்
தேடாத இடமில்லை. பாதாளம் செல்லும் பொருட்டுப் பூமியைத் தோண்டினர். தோண்டி உள்ளே புகுந்தார்.
பாதாளத்தில் கபிலமுனிவன் பின் குதிரையைக் கண்டனர். முனிவனே குதிரையைக் களவாடியதாக முடிவு
செய்தனர். முனிவனைக் சூழ்ந்து வருத்தினர். மூண்ட சினத்தனான முனிவன் பார்வையால் சாம்பலாக
மாறினர். ஒற்றர் வாயிலாகச் செய்தி அறிந்தான்
சகரன். அவன் கொண்ட இன்னலுக்கோர் அளவில்லை. அஞ்சுமனை அழைத்தான். அடுத்து செய்ய வேண்டுவது யாதென வினவினான்.
வேள்வியை இடையில் விடுவதா என்று தயங்கினான்.
தந்தையின் கருத்துணர்ந்த தனயன் கபிலமுனிவனை அடைந்தான். அழிந்தத் தன் சகோதரர்
சாம்பல் மலைபோல் குவிந்திருப்பதைக் கண்டான். திடுக்கிட்டான். பின் முனிவனைக் கண்டான்.
வணங்கினான். வாயாரப் புகழ்ந்தான். தன்னை வணங்கியவனை நோக்கி குதிரையைக் கொண்டு செல்லுமாற
பணித்தான். அஞ்சுமான் குதிரையைக் கொணர்ந்தான். சகரன் தேவர்களுக்கு உரிய அவிர்ப்பாகம்
அளித்து, தொடங்கிய வேள்வியை முடித்தான். பின் ஆட்சியை அஞ்சுமானிடம் அளித்தான். அவன்
வானுலகு ஏகினான். சகரர் தோண்டியதால் கடல் சாகரம் என்ற பெயருடன் விளங்குகிறது.
உலகு முழுவதையும் அஞ்சுமான் ஆட்சி செய்து வந்தான். அஞ்சுமான் மரபில் சூரியன்
போல் ஒளியுடன் பகீரதன் என்பான் தோன்றினான். பகீரதன் குடிதலனைப் பருவரல் களைந்து செங்கோல்
செலுத்தி வருங்கால் வசிட்ட முனிவன் கபிலமுனிவனால் அழிந்துபட்ட பகீரதனுடைய முன்னோர்
வரலாற்றை எடுத்தியம்பினான். கேட்ட பகீரதன் முனி சாபத்தால் அழிந்தவர் அருநகரத்தில் அழுந்தாவண்ணம்
செய்யத்தக்கது உளதாயின் கூறுக என முனிவனை வேண்டினான். சகரர் உய்ய வேண்டுமானால் நெடுங்காலம்
நீ அருந்தவம் நான்முகனை நோக்கி செய்ய வேண்டும் எனப் பணிந்தான் வசிட்டன்.
வசிட்டன் உரையை உள்ளத்திற்கொண்ட பகீரதன் ஆட்சியைச் சுமந்திரனிடம் ஒப்படைத்தான்.
அவன் இமயமலைச் சாரலை அடைந்தான். பதினாயிரம் ஆண்டுகள் கடுந்தவம் புரிந்தான். தவஞ்செய்து
கொண்டிருந்தவன் முன் தாமரைக் கிழவன் தோன்றினான். ஆகாய கங்கை பூவுலகில் பாய்ந்து இறந்த
சகரர்களின் எலும்புகளில் படியுமானால் ஆகாய கங்கை மண்ணில் விழுந்தால் மண்மகள் தாங்காள்.
அதனைத் தாங்கும் ஆற்றல் ஆலமர் செல்வன் ஒருவனுக்கே யுண்டு. மங்கையொரு பாகனை மனத்தில்
எண்ணி தவஞ் செய்க என்று பணித்தான் படைப்புக் கடவுள். உமையொரு பாகனை எண்ணி எண்ணலா ஆண்டுகள்
தவம் செய்தான் பகீரதன். தழல் நிறக் கடவுள் அவன் முன் தோன்றினான். அவன் கருத்தை முற்றுவிப்பதாக
மொழிந்தான். ஐயாயிரம் ஆண்டுகள் கழிந்த பின்னரே கங்கையைத் தொழும் பேறு கிட்டியது.
கங்கை ஒரு மங்கை வடிவம் கொண்டு பகீரதன் முன் வந்தாள். ‘உன் தவம் எதைக் கருதியது?
வான் கங்கை நிலத்திற்கு வரின் சிவனாலும் அவள் வேகத்தைத் தாங்குவது அரிது. சிவன் உன்னிடம்
சொன்ன சொல் விநோதமானது. உன் தவத்தில் குறையுள்ளது. அதை அறிந்து மீண்டும் கடுந்தவம்
புரிக’, என்று உரைத்தபின் மறைந்தாள். அவள் சொற்களைக் கேட்டு சோர்வடைந்தான் பகீரதன்.
மீண்டும் இரண்டரையாயிரம் ஆண்டுகள் இடையீடில்லாது நற்றவம் புரிந்தான். நிமலன் அவன் முன்
காட்சி தந்தான். கங்கையாள் கூறியதை மங்கை பங்கனிடம் உரைத்தான். அதனைச் செவிமடுத்த அரன்,
‘அஞ்சாதே! கங்கை நீர், புறத்தே சிந்தாதவாறு அடக்குவோம்.’ என்று கூறி மறைந்தான். பகீரதன்
இரண்டரையாயிரம் ஆண்டு கங்கையைக் குறித்துக் கடுந்தவம் இயற்றினான். உலர்ந்த சருகையும்,
புழுதியையும், நீரையும், காற்றையும், ஒளியையும் உட்கொண்டு முதிர்ந்த அன்பால் முப்பதினாயிரம்
ஆண்டுகள் அருந்தவம் செய்து முடித்தான்.
பிரம்மலோகமும் தேவலோகமும் அஞ்ச ஆரவாரம் செய்து கொண்டு வான் கங்கை பூமியை நோக்கி
விரைந்தாள். மங்கைபங்கன் கங்கை நீர் சிந்திடாது சடையில் கரந்தான். புல் நுனியில் காணப்படும்
பனித்துளிபோல் புனிதன் சடையில் கங்கை மறைந்ததைக் கண்டு பகீரதன் திகைத்தான். சிவனை வணங்கினான்.
சடையில் அடங்கிய வானகங்கையை பூமியில் இறங்கச் செய்தான் சிவபெருமான். கங்கை விரைந்தது.
சன்னு முனிவன் ஆசிரமத்திற்குள் புகுந்தது. வேள்வியைச் சிதைத்தது. முனிவன் முனிவு கொண்டான்.
தன் தவவலிமையால் கங்கையைக் கையில் அடங்கிப் பருகினான். அதனைக் கண்ணுற்ற பகீரதன் பருவரல்
கொண்டான். நடந்த நிகழ்ச்சியாவும் கூறி முனிவனை வணங்கினான். மனம் இரங்கிய முனிவன் கங்கையைத்
தன் காது வழியே வெளிவரச் செய்தான். குதித்தோடிய கங்கைத் தன் காது வழியே வெளிவரச் செய்தான்.
குதித்தோடிய கங்கை சகரர்களின் சாம்பலில் படிந்தது. நரகத்தில் உழன்ற சகரர் நற்கதியடைந்தனர்.
பகீரதன் அயோத்தியை அடைந்து ஆட்சி செலுத்தலானான்.
திருமால் திருவடித் தாமரையில் தோன்றி நான்முகன் கமண்டலத்தில் தீர்த்தமாகி, பகீரதன்
தவத்தால் பாருலகை அடைந்தது கங்கை. பகீரதன் முயற்சியால் மண்ணுலகை அடைந்ததால் பாகீரதி
என்னும் பெயர் பெற்றது. பின்பு சன்னு முனிவன் காது வழியே வெளிப்பட்டதால் சானவி
என்ற பெயரும் வழங்கலாயிற்று. கங்கையின் இவ்வரலாற்றைக் கௌசிகன் கூறக் கேட்ட இராமன் வியப்படைந்தான்.
கதையில் இடம் பெற்றவர் இராமன் பிறந்த இரகுவம்சத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதால்
முன்னோர் வரலாற்றை இராமன் அறிந்து கொள்ளும் பொருட்டு கூறியதாகலாம்.
Comments
Post a Comment